Monday, March 8, 2010

ஒப்புதல் வாக்கு மூலம் பதின்ம வயது தொடர் - 2


தியேட்டர் உள்ளார வரைக்கும் ஒரு ஆர்வத்துல போயிட்டு, அப்புறம் கட் அடித்து வந்த ஒரு தர்ம சங்கடமும்,குற்ற உணர்வும் என்னை படம் பார்க்க விடவில்லை. நான் மிகவும் அவஸ்த்தையாக, டேய் வாடா வீட்டுக்குப் போகலாம் என்று முனக ஆரம்பித்தேன். கம்மர்கட்டும், மாங்காயும் வேற தீர்ந்து போச்சு,(வந்த வேலை முடிஞ்சுது), நான் நண்பனிடம் வாடா வீட்டுக்குப் போகலாம்(ஆத்தா வையும், வீட்டுக்குப் போகனும் என்று பதினாறு வயதினிலே சப்பானி ஸ்டைலில் ) என்று தொல்லை தர ஆரம்பித்தேன். படத்துல வேற, மந்திரவாதி,பூதம் எல்லாம் வர ஆரம்பிச்சுது,எனக்கு பயம் ஒன்றுக்குக் இரண்டாக சேர்ந்து கொண்டது. நான் தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பித்தேன். என் நண்பன் தொல்லை தாங்க முடியாமல், "நீ வேணா வீட்டுக்குப் போடா" என்றான். என்னை தியேட்டரின் வெளியில் கொணர்ந்து விட்டவன்,உன்னை எல்லாம் கூட்டி வந்தேன், பாரு காசு தண்டம் என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு,திரும்பவும் உள்ளே போய்விட்டான். மீதம் இருந்த ஜவ்வு மிட்டாயை வாயில் அதக்கிய படி வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்தாலும் ஒரு குற்ற உணர்வுடன்,கம்முன்னு திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி இருந்தேன். எப்பவும் பள்ளி விட்டு வந்தா கலகலப்பாக இருக்கும் நான்,சும்மா இருப்பதைப் பார்த்து உடம்பு சரியில்லையா என,என் இரண்டாம் அக்கா விசாரிக்க,நான் கடகடவென நடந்தைச் சொல்லி முடித்தேன்.அவர்களும் சரி இனிமே பள்ளிக்குப் போன பாடம் படித்து வரணும், இப்படி போகக் கூடாது என்றார்கள்.நான் படுக்கென்று,அக்கா நான் கிளாஸிக்கு மட்டம் போடுல,இலக்கிய மன்றக் கூட்டத்தில் தான் போனேன் என்றேன்.என் அக்கா சிரித்துக் கொண்டு,"சரி இனிமே எங்க போனாலும் வீட்டுல சொல்லிட்டுத்தான் போகனும்,இல்லைன்னா எல்லாரும் தேடுவேம் இல்லையா" என்றார்கள். நானும் "சரி இனிமே எங்க போனாலும் சொல்லிட்டுப் போறேன்" என்று சொல்லி, நிம்மதியாக சாப்பிட்டுத் தூங்கினேன்.

இனி நான் மூன்றாவது முறையாக தர்ம அடி வாங்கிய சம்பவம் சொல்கின்றேன். 1983 அப்ப இந்தியா உலக கோப்பை வென்ற சமயம்,நாங்க எல்லாம், பம்பரம், கில்லி,தடி, கபடி போன்ற விளையாட்டுக்களைக் விட்டு, கையில் முள்ளுக்குச்சி ஸ்டெம்பும், ரீப்பர் கட்டை பேட்டும், இரப்பர் பாலுமா, வேகாத வெய்யிலில்,முகம் கருவழியக், காடும், மேடும் கிரிக்கெட் ஆடுன காலம். ஸ்ரீகாந்த்,கபில், விவ் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரினிட்ஜ்(எனக்கு புச்ச ஆளு), டேவிட் பூன், ஆலன் லாம்ப், வாசிம் அக்ரம், மியாண்டட்,வாசிம் பாரி, அஸாருத்தின் போன்ற ஆளுக தான் எங்க கடவுள்கள். எங்க டீமில் எல்லாருக்கும் ஒரு கிரிக்கெட்டர் பெயர் வைத்துக் கொள்வேம். நான் முதலாவதாக இறங்கி, விளையாடுவதால் எனக்கு கார்டன் கிரினிட்ஜ் பெயர் பட்டமாக வந்தது. இப்படி நான் பிளட்சர், கோரி,கீரேக்சாப்பல், ரிச்சி, மல்கம் மார்சல்,ஆண்டி இராபர்ட்ஸ்,வெங்சர்க்கார்,குண்டப்பா விஸ்வனாத், கிர்மானி கூட எல்லாம் கிரிக்கெட் ஆடி இருக்கேன். இப்படி காலம் போயிட்டு இருக்கறப்பதான் பத்தாம் வகுப்பு பரிட்சை வந்ததால், ஸ்டெடி ஹாலிடேஸ் விட்டதுல இருந்து நான் கிரிக்கெட் ஆடவில்லை. பரிட்சைகளும் வந்தது. நான் திங்கள் முதல் வியாழன் வரை தமிழ்,வரலாறு & புவியல் மற்றும் ஆங்கிலப் பரிட்சைகளை எழுதிவிட்டேன். இனி வெள்ளி,சனி முடிந்து திங்களும், செவ்வாயும்தான் பரிட்சை.கணக்கும்,சயின்ஸும் தான் பாக்கி, அப்பத்தான் வியாழன் காலை பரிட்சை எழுதி விட்டு வந்த நான்,நண்பர்கள் ஒரு மேட்ச் இருக்கு,ஓபனிங் விளையாட ஆள் இல்லை என்று வற்ப்புறுத்திக் கூப்பிட்டதால, எனக்கும் டச் விட்டுப் போச்சு என்று ஆடப் போயிட்டேன்.












மாலை ஆறறை மணி இருக்கும், நான் வீட்டுக்குத் திரும்பி வந்த போது, என் பெரிய அண்ணா அலுவலத்தில் இருந்து திரும்பி வந்து இருந்தார். நான் விளையாடப் போனது தெரிந்ததும்,கோபித்தார். நான் பரிட்சை திங்கள்தான்,வெள்ளி மற்றும் சனி,ஞாயிறு படிக்கின்றேன் என்று பதில் சொல்ல,"ஏன் துரை இன்னம் கொஞ்சம் கூடப் படிச்சா குறைஞ்சா போயிடுவிங்கன்னு" உனக்கு கணக்கு வேற வீக்கு,என்று உதைச்சார்.நான்,"இல்லைன்னா ஓபனிங் ஆட ஆள் இல்லைன்னு கூப்பிட்டாங்க அதான் போனேன்னு சொல்ல,ஆமா இவரு துரை போய் விளையாடுல்லைன்னு லார்ட்ஸில் எல்லாரும் கவலைப்பட்டாங்களான்னு கேட்டு உதை விழுந்தது.அப்ப பிலிப்ஸ் ரோடியோ வந்த சமயம், அந்த ரோடியோவின் வயர் பிளக்கை இரண்டையும் கையில் பிடித்துக் கொண்டு, வயரில் அடித்தார். முதுகில் சட்டையும் மீறி வயரின் தடம் பதிந்து விட்டது. அப்போது என் அம்மா ஓடி வந்து அண்ணாவை இப்படியா கண்ணு முன்னு தெரியாம அடிப்பாய் என்று கூறி என்னைத் தடுத்து சமையலறைக்குக் கூட்டிச் சென்றார். (இதுலையும் என்ன கொடுமை என்றால் அப்ப இந்தியா, இங்கிலாந்து மேட்ச் டீ வீ யில ஓடிக்கொண்டு இருந்தது).இப்படி நான் அல்லது என் மூன்றாவது,நாலவது அண்ணா அடி வாங்கினால் வீடு கொஞ்ச நேரம் அமைதியா,இறுக்கமாக இருக்கும். நாங்கள் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிப்பது போல, பாவலா செய்வேம். கொஞ்ச நேரம் கோவத்துடன் அமைதியாயிருக்கும் அண்ணா, பின்னர் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே போய்க், கடையில் வடை, போண்டா எல்லாம் வாங்கி வந்து கொடுப்பார்.சாப்பிடும் போது வருந்திக் கெஞ்சாத குறையா, "ஏண்டா இப்படிப் பண்கின்றீர்கள், உங்களை என்ன வேலைக்குப் போ!, சம்பாரி,லாட்டிரி டிக்கெட் விக்கப் போன்னா சொல்றேம். படிக்கத் தானே சொல்றேம். ஏண்டா புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்க" என்று சொல்வார். இதுதான் நான் வாங்கிய இறுதி தர்ம அடி.

இது எல்லாம் நடந்து முடிந்து நான் கல்லூரி இறுதியாண்டு தொடங்கும் சமயம், எங்க அண்ணாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்க்கு முன்னால் எங்களை அழைத்த அண்ணா, இதுவரைக்கும் உங்களை எல்லாம் கஷ்டப் பட்டு படிக்க வைத்தேம். நீங்களும் நால்லாப் படிக்கின்றீர்கள். விரைவில் வேலைக்கு வந்து விடுவீர்கள். இனி நான் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன். இனியும் இன்னேருத்தி முன்னாள் நான் உங்களை எல்லாம் அடித்துத் திருத்தினால் நல்லா இருக்காது. நீங்களா விரைவில் படித்து, வேலைக்கு வாங்க என்றார். நாங்களும் சரி என்றேம். அதில் இருந்து இன்னை வரைக்கும் எங்க அண்ணா எங்களை திட்டியதே அல்லது அடித்ததே இல்லை. பாசமிக்க எங்க பெரிய அண்ணா சொல்வதை நாங்க நாலு தம்பிகளும் மீறுவது இல்லை. திருமணம் முடிந்த பிறகு எங்க மன்னியிடம் இந்தக் கதைகள் சொல்லப் பட்ட போது, அவர் ஆச்சரியமாக "இப்படி எல்லாமா அடிப்பீங்க" என்றார். அதுக்கு அவர் என்ன பண்றது, பெரிய குடும்பம், அன்றாட வாழ்வும், கல்யாணக் கடனும் இருக்கும் போது கஷ்டப் பட்டு படிக்க வைத்தால் குறும்பு பண்ணுகின்றார்களே என்ற கோபம், ஆத்திரமா வரும். கோபத்தில் அடித்து விடுவேன்,அப்புறம் நானும் வருத்தப் படுவேன் என்றார். ஆனால் என் தம்பிகள் ஒரு நாளும் ஏன் அடிச்சிங்கன்னே அல்லது ஒரு நாளும் எதிர்த்துப் பேசியதே இல்லை என்றார் பெருமையாக. இதுதாங்க எங்க குடும்பம். என் அப்பா,இரண்டாவது அக்கா(டீச்சர்), மற்றும் என் அண்ணாக்கள் இருவரின் உழைப்பும்,ஊக்கமும்தான் நடுத்தர வர்க்கமான எங்களின் குடும்பத்தை எதே ஊரார் பாராட்டிச் சொல்லும் அளவுக்கு உயர்த்தியது. தொடரை முடிக்கலாம்ன்னு பார்த்தா முடியாது போல இருக்கு. பதிவு பெரிதாக இருப்பதால் அடுத்த பதிவில் பெண்கள் என்னை கும்மியடித்த சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கின்றேன்.

9 comments:

  1. ””வானத்தை போல”” கதை போல இருக்கு.

    ReplyDelete
  2. கும்மி காட்சியை படிக்க ஆவலுடன் வெய்ட்டிங்கு :))

    ReplyDelete
  3. //இதுதாங்க எங்க குடும்பம். என் அப்பா,இரண்டாவது அக்கா(டீச்சர்), மற்றும் என் அண்ணாக்கள் இருவரின் உழைப்பும்,ஊக்கமும்தான் நடுத்தர வர்க்கமான எங்களின் குடும்பத்தை எதே ஊரார் பாராட்டிச் சொல்லும் அளவுக்கு உயர்த்தியது.//

    இப்படி பழைய சம்பவத்தை நினைத்து பார்ப்பவர்கள் இன்று இல்லை அண்ணா.. உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன்..

    ReplyDelete
  4. அண்ணாச்சி அண்ணாச்சிதான். தர்ம அடி(கள்) வாங்கியதை கூட எவ்வளவு பெருமையாக சொல்லி அசத்தி இருக்கார். அடுத்த பதிவு கும்மி, சீக்கிரம் வரட்டும்.

    ReplyDelete
  5. உண்மைதான் ஜெய்லானி அவர்களே, எனக்கும் அந்த படத்தைப் பார்க்கும் போது பழைய நினைவுகளால் விழியேரம் கண்ணீர் வந்தது. நன்றி.
    நன்றி எல். கே.
    நன்றி சைவ கொத்து பரோட்டா,
    நன்றி திவ்யா ஹரி,
    நன்றி சித்ரா, பெருமைதான் சித்ரா, நம் வாழ்க்கையில் எவ்வளவு சிரத்தையுடன் அவர்கள் வளர்த்து இருக்கின்றார்கள்.

    அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  6. சுவாரஸ்யம்... சூர்யவம்சம் :-)

    கணக்குல வீக்கா இருந்து இப்போ கணக்கு சம்பந்தமா வேலை... இதெப்படி... சூப்பரு...

    ReplyDelete
  7. அடி வாங்கிய கதையையும் ஒளிக்காமல் சொல்லீட்டீங்களே அப்ப நீங்கள் ரொம்ப நல்லவரு

    ReplyDelete
  8. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்னு சொல்வாங்களே :-)

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.