
இரண்டு அடுக்கு பஞ்சனை மெத்தை, குளிர்சாதன படுக்கை அறை, அலுவலகம் செல்ல குளிர் சாதனக் கார் வசதி. செல்லும் தொடர் வண்டியும், பணி புரியும் அலுவலகமும் குளிருட்டப் பட்டது.
காலை சிற்றுண்டி, மதியம் வயிறு நிறைய சாப்பாடு, இரவு சிற்றுண்டி, பார்க்கத் தொலைக்காட்சி. அருமையான வாழ்க்கை (ஒரு குறை துணை இல்லை, பரவாயில்லை), அடிக்க பீர், போகப் ஃப்ப்,பார்த்து மகிழ அழகான நிறைய ஆசியப் பெண்கள், வார இறுதிக் கொண்டாட்டம், பேசி மகிழ நண்பர்கள், நட்ப்பான சிங்கைப் மற்றும் அனைத்துப் பதிவர்கள், அன்பான பதிவுலக சகோதர,சகோதரிகள், செல்வதற்க்கு கோயில்கள், வணங்கக் கடவுள், அளவுக்கு அதிகமாக இல்லாவிட்டாலும், தேவைக்கு ஏற்ற வருமானம், என என் சிங்கப்பூர் வாழ்க்கை சுகமாகப் போகின்றது. இது அத்தனையும் அந்த அய்யன் எனக்குப் போட்ட பிச்சை(அடுத்த இடுகை). அவன் அருளால் விளைந்தவை. அவன் கொடுத்தவைகளை நான் அவனுக்காக துறக்கின்றேன். நாற்பத்தி எட்டு நாட்கள், குளிரும் தரையில் ஒரு துண்டை விரித்துப் படுக்கை. மார்கழி குளிரில், குளிரும் நீரில் அதிகாலைக் குளியல், அலையும் மனதை இழுத்துப் பிடித்துக் கட்டுப் படுத்தி, புலன் அடக்கி விரதம். காலை சிற்றுண்டி துறந்து, இரவும், பகலும் அவன் நாம சிந்தனை, அவன் புகழ்ப் பாடல்கள்கேட்டுக், கதைகள் படித்து, (இப்ப எழுதி) மனம், உடல், ஆவி என சகலமும் அவனே என்று ஆகி நான் சபரி மலை போகின்றேன். இந்த நாட்களில் நான் திரைப்படம், வார சஞ்சிகைகள், தொலைகாட்சி நிகழ்வுகள் என எதுவும் பார்ப்பது இல்லை. நான் கொட்டவன் தான், மனம் அடக்க முடியாதவன், அழகான மகளிர் எல்லாம் இரசிக்காமல் இல்லை, சூழ்னிலைக்காக பொய்யுரைக்காதவனும் இல்லை, பிறரை வஞ்சிக்காதவனும், திட்டாதவனும், கோவம் கொள்ளாதவனும் இல்லை. குடிக்காதவனும் இல்லை. இது அத்தனையும் செய்யும் ஒரு சராசரி மனிதன் தான். ஆனாலும் இவை எல்லாம் கட்டுப் படுத்தி மனம் அடக்கி, கோவம் அடக்கி, புலால், மது, மாது இல்லாமல் வாழ்வைச் சுருக்கி, உண்டி சுருக்கி, அதிகாலைக் குளியல், பூஜை, பிரார்த்தனை என ஏன் செய்கின்றேன் தெரியுமா? அது இந்த இடுகையைக் கவனமாக, தயவு செய்து, ஒருமனதுடன், அனைவரும் மனம் ஒன்றிப் படியுங்கள், படித்தால் உங்களுக்குப் புரியும், உங்களுக்கும் ஆசை வரும்.
நாம் இப்போது சரங்குத்தி தாண்டி சபரி மலை நோக்கிப் போவேம். சரங்குத்தியில் கன்னி அய்யப்பன்மார் சரத்தை குத்தி விட்டுப் பயனிக்கும் போது, ஒரு சிறு ஏற்றம், பாதை ஏறிப் போய், இறக்கத்தில் இறங்கினால் சபரிமலை வரும். இந்த மலையைப் பார்த்தவுடன் மனம் ஆனந்தத்தில் ஆட ஆரம்பித்து விடும். மிதமான வருடும் குளிர், வெய்யில் இவற்றுடன் மலை பூராவும்
எதி
ரொலிக்கும் யேசுதாஸின் பாடல்,
கோவிலின் அற்புத தரிசனம், எங்கு பார்த்தாலும் அய்யப்பன்மார் என அந்த தோற்றமே நமக்கு ஒரு அற்புதத்தையும், ஆனந்தைத்தையும் தரும். திருப்பதி போல, ஸ்ரீரங்கம், மலைக்கோட்டைத் தாயுமானவர் சன்னதி போல, சோளிங்கர் போல, திருவண்ணாமலை போல, வெள்ளியங்கிரி மலை போல, கைலாயங்கிரி போல, பர்வதராஜ மலை போல, சபரி மலையும், எரிமலைக் குழம்பால் ஆன ஒரு காந்த மலை. மிக அதிகமான அதிர்வுகள் கொண்டது. அங்கு போனால் பிற சிந்தனைகள் ஏதும் இல்லாமல் மனம் ஆடும், அழகு, ஆனந்தம் ஒரு கோடி. கால் வலிக்க(நடுங்க), உடல் வலிக்க, மனம் சலிக்க, தொண்டை வறள, வயிறு சுருட்டிப் பிடிக்க, மலை ஏறும் நமக்கு அந்த சபரி மலை அடைந்தவுடன், சன்னிதானத்தைப் பார்த்தவுடன் ஒரு பரவசம் வரும் பாருங்கள்! அந்த உணர்வு, அந்த ஆனந்தம், அந்த மனோலயம் எங்கும் வராது. திருப்பதியில் நடக்க முடியாமல் படிகளில் ஏறி அந்த கால்வலி அல்லது காளி(காலி) கோபுரம் வந்தவுடன் ஒரு சில்லென்ற காற்றில் ஒரு பரவசம் கிடைக்கும் அல்லவா! அது போலக் கோடி இன்பம் சபரியில் கிடைக்கும். மெல்ல நடந்து கூட்டத்தில் கலர்ந்து அவன் சன்னிதானத்தை, சரண கோசங்களைக் சொல்லிக் கொண்டு போனால், அந்தப்
பதினெட்
டாம் படியில் காவல் தெய்வங்களை வணங்கி, தேங்காய் உடைத்துப் படியேறிப் போனால், அந்த சன்னிதான முழுதும் அளவற்ற அதிர்வலைகளுடன் அதிரும். நமது மனம் ஒருமிக்கும் அளவுக்கு வீரியமும், அதிர்வும் கொண்ட சிறிய தங்கக் கவசம் போட்ட கோவில் அது. மெல்ல நாம் மனதில் அமைதியும், சாந்தமும், ஆனந்தமும் கொண்டு, விழியில் சிறிது இளகிய கண்ணீருடன் கோவிலை சுற்றி வந்து அய்யனின் முன்னால் போனால் அங்கே !!!!
ஒரு குழந்தையாய், ஆசையுடன், வாஞ்சையுடன், அன்புடன், "வாப்பா, வந்துட்டியா" என ஏக்கத்துடன், நமக்காக காத்து இருப்பதைப் போல, சத் சித் ஆனந்த முத்திரையுடன், தவக் கோலத்துடன், சற்றே முகம் தூக்கிய பாவனையில், நம்மை ஏறிட்டுப் பார்ப்பதைப் போல ஒரு தோற்றம் தருவானே, அதை அனுபவித்தவர்கள், இதைப் பூரணமாக உணர்ந்தவர்கள் கண்டிப்பாய் உலகின் உள்ள அத்தனைச் சுகங்களையும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். இந்த ஆனந்தைத்தை அனுபவித்தவர்கள் விட்டில் பூச்சிகளைப் போலத்
திரும்
பத் திரும்ப வருவார்கள். இருவது வருடம், முப்பது வருடம் மலைக்கு போகும் அனைவரும் இதுக்காக இந்த அனுபவத்திற்காக ஏங்கிப் போகின்றவர்கள் தான். அந்த அய்யனின் அழகு ஒரு கோடி, அதை அனுபவிக்கும் ஆனந்தம் ஒரு கோடி. (இதை எழுதும் போது கூட என் கண்கள் பணிக்கின்றன என்றால் அந்த பூரண ஆனந்த சுகத்தைக் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்). இந்த எண்ணங்களுடன் மேலே இருக்கும் படத்தை ஒரு சில நிமிடங்கள் உற்றுப் பாருங்கள் புரியும். யார் என்ன சொன்னாலும், விமர்சித்தாலும்,கவலையில்லை. எனக்கு மிக ஆனந்தம் அவனிடம் மட்டும் தான். அவனின் திருவடிதான் என் சொர்க்கம். எவ்வளவு இன்னல்கள் பட்டாலும் இந்த ஒரு அனுபவத்திற்காக வருடா வருடம் போவேன். நாம் செல்லும் போது பல பிரார்த்தனைகளுடன் போவேம். அது வேண்ட வேண்டும், இது வேண்டும்(குழந்தை,செல்வம்,பதவி,வேலை)என்று நினைத்துக் கொண்டு மலை ஏறுவேம். ஆனால் அந்த அய்யனைப் பார்ப்பது சில நிமிடங்கள்

தான் அதில் நம்மால் எதுவும் வேண்டத் தோனாமல் பார்த்துக் கொண்டே இருப்போம். நம் கண்ணில் நீர் வழிய, நாம் மனம் ஆட அவனைத் தரிசனம் செய்வேம். எதுவும் கேக்கத் தோன்றாது. அப்படியே பார்த்து வெளியே வந்தவுடன் நமக்குத் தோணும் அடாடா! இது வேண்டாம விட்டு விட்டேமே என்று கண்டிப்பாய் தோணும். ஏன் என்றால் அந்த அழகன், குழந்தை, செல்வத்தைப் பார்க்கும் போது நமக்கு நாக்கு உலர்ந்து, எதுவும் தோன்றாமல் போகும். அய்யப்பா, சரணம், சரணம் என்ற வார்த்தைகள் மட்டும் வரும். என் போன்ற சிலர் அதுவும் இல்லாமல் விழினீருடன் வறண்ட மனதுடன் எந்த சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இந்த தரிசனம் முடிந்தவுடன் சன்னதி தாண்டி வந்தால் கணபதி, நாக ராஜா தெய்வங்களை வணங்கி சன்னிதானத்தின் பின்வாசல் படிக்கட்டு வழியாக வந்தால் மாளிகைப் புற மஞ்சமாதா கோவிலும், நவக்கிரகங்களும் இருக்கும், இவைகளையும் வணங்கி வந்தால் நம் மனம் எதோ பூரண அமைதியில் இருக்கும். எதோ ஒரு பெரிய பாரத்தில் இருந்து விடுபட்டதைப் போல இருக்கும். இவை எல்லாம் நான் மிகைப் படுத்தி சொல்வதாக நினைக்க வேண்டாம். இவை அனைத்தும் பூரண உண்மை, சத்தியம், சத்தியம், சத்தியம்.
சரி,சரி ரிலாக்ஸ், இது முடிஞ்சவுடன் நமக்கு ஒரு பத்து நிமிசத்தில் பசி, ஆத்திரம், கோவம் எல்லாம் வரும் பாருங்க, எவனாது இளிச்சவாயன் கிடைச்சா, அடிப் பின்னிடலாம் . ஒரு மாதமாக அடக்கிய உணர்வுகள் எல்லாம் பீறிடும். யாராது ஒருவர் வரவில்லை, அல்லது கூட்டத்தைப் பிரிந்து விட்டார் என்றால், அல்லது ஒருவர் தவறு செய்தால் வரும் பாருங்க! கோவம். சாமி எங்க போனிங்க?, எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? என சராசரி மனிதனாகக் குதறி விடுவேம். மலை ஏறும் போதும், பயணத்தின் போதும், யாராது ஒருவர் மேலே கால் பட்டால், அல்லது இடித்து விட்டால், "சாமி சரணம்" என்றால் உடனே அவர் "பரவாயில்லை சாமி" என்று புன்னகையுடன் காட்சி அளிப்பார். அதுவே மலைக்கு போய் அய்யனைப் பார்த்து திரும்பும் போது, அல்லது அய்யனைப் பார்த்தவுடன் இடித்தால் உடன் வெடிப்பார், "சாமி பார்த்து சாமி, ஆள் இருக்குறது கூட தெரியவில்லையா" என்பார். சில சமயம், சில குருப்களில் மலையில் தகராறு கூட வரும். இத்தனையும் இந்த பயணத்தின் அற்புதம். மனம் தனது குணங்களில் மாறி, மாறி பயணிப்பதும் இந்த மலையாத்திரையில் தான். இதை உணர்ந்து நாம் இறங்கும் போது சரி, வாழ்க்கையிலும் சரி, மனதையும், கோபத்தையும் கட்டுப் படுத்துவது நல்லது. வாழ்க்கையில் ஏறி, இறங்கும் போது கூட நாம் ஒரு நிலையில் இருப்பது அவசியம்.
அங்கும் ஒரே கூட்டம், வெறுப்பாக இருக்கும், எங்க பார்த்தாலும் நம் சாமிகள் செய்யும் அசிங்கம், சன்னிதானத்தில் கூட பிக்பாக்கெட் அடிப்பார்கள். சண்டை, முட்டி மோதுவார்கள். ஓடுவார்கள், இடித்துத் தள்ளி மலை ஏறுவார்கள். எல்லா இடத்திலும் சத்தம் சண்டை, குப்பை என பலதும் இருக்கும். கஷ்டப் பட்டு காசு சேர்த்து, கடும் விரதம் இருந்து போகும் நம் சாமிகளை பெரும்பாலும் மலையாளிகள் ஒரு மனிதர்களாகக் கூட மதிக்க மாட்டார்கள். நம்மைப் பட்டி(நாய்), பாண்டி(திருடன்), ஏடா, போய்க்கே என்று அவமரியாதையாக நடத்துவார்கள். அங்கு இருப்பர்வர்களுக்கு, சபரி மலை செல்லும் ஊர்களில் வாழும் அவர்களுக்கு இந்த சாமிகள் தான் வருமானம். வெறும் இரப்பர் எஸ்டேட் தான் தொழில். ஆனால் இந்த இரண்டு மாசமும் நல்லாக் காசு பார்ப்பார்கள். ஆனாலும் கூட காசு கொடுக்கும் நம் சாமிகளை மதிக்க மாட்டார்கள். அவர்களைச் சொல்லியும் தப்பில்லை. இங்கிருந்து போகும் சாமிகள் திரும்பி வரும் போது செய்யும் சேட்டைகள் பல. அவர்கள் மலையில் அல்லது பக்கத்து ஊர்களில் வாழும் ஒரு அமைதியான, இயல்பான வாழ்க்கை இவர்களால் பாதிக்கப் படும், நினைத்த இடத்தில் சாப்பிடுவார்கள், சாப்பிட்ட குப்பைகளை போடுவார்கள், எங்கும் சத்தமும், இரைச்சலும் போடுவார்கள். கடையில் திருடுவார்கள், முக்கியமாகப் பெண்களிடம் அத்து மீறுவார்கள். இது எல்லாம் அவர்களைத் தமிழ் நாட்டுக்காரன் என்றால் வெறுப்புக் கொள்ள வைக்கும். அனால் ஒரு சில மனமடக்கா ஆசாமிகள் செய்யும் இந்தக் காரியங்களால் எல்லா சாமிகளும் இந்தத் தொல்லைகள் அனுபவிக்க வேண்டியுள்ளது.
இத்தனை கஷ்டம் இருந்தாலும், உதாசீனப் படுத்தினாலும், அய்யப்பன் என்ற ஒரு ஆனந்தத்தில்,சங்கமிக்க அத்தனையும் மறந்து போகும். எத்தனை முறை பார்த்தாலும், அனுபவித்தாலும் சலிக்காத அழகன் அவன். குழந்தை முகமும், அரவனைக்கும் பாங்கும் சொல்ல, சொல்ல தீராதவை. நான் அவனிடம் வேண்டுவது மாடமாளிகை, கூட கோபுரம், பட்டி நிறைய பசுமாடு, தொட்டில் நிறைய செல்வம், காடு, கானி, அளவற்ற செல்வமும், ஆஸ்திகளும் அல்ல. என் வாழ் நாள் முழுதும் அவன் தரிசனம் வேண்டும். ஒரே ஒரு முறை எப்படியாவது அவன் தரிசனம் நேரில் பெறவேண்டும். என் தவம், விருப்பம் எல்லாம் இதுதான். நான் அந்த அய்யனிடம் வேண்டுவது, மூப்பு வந்து, நடை தளந்து, பார்வை குறைந்து என்ன கஷ்டம் வந்தாலும் என் ஆயுள் காலம் முழுதும் நான் உன் சன்னதி வரவேண்டும். அந்த பாக்கியம் ஒன்று போதும். என்னால் எவ்வளவு வருடம் வர முடியுமே அத்தனை வருடங்கள் தவறாது நான் உன் சன்னிதானம் வரவேண்டும், உன் தரிசனம் பெற வேண்டும். என் இந்த பிறவி முடியும் முன்னர் ஒரே ஒரு முறை உன் தரிசனம் நேரில் பெற வேண்டும். இது மட்டும் நிறைவேறி விட்டால் எனது இந்த ஜென்மம் நிறைவேறி விடும். இனி ஒரு ஜென்மம் கூட வேண்டாம் அய்யனே. இது போதும் எனக்கு. இந்த ஒரு வரம் மட்டும் எனக்குத் தா அய்யப்பா!. அது போதும். சாமியே சரணம் அய்யப்பா என்று கூறி இந்த தொடரை முடிக்கின்றேன். ஆனாலும் தை மாதம் மகர விளக்கு பூஜை முடியும் வரை இந்தத் தொடரின் சில பகுதிகள் அப்ப அப்ப வெளி வரும். நன்றி.
டிஸ்கி : நீங்கள் மிக சாதரனமான மனனிலையில், வேறு சிந்தனை இல்லாமல், இந்த தொடரை ஆரம்பத்தில் இருந்து இடைவிடாமல் கவனமாக ஒரு முறை படித்தால், உங்களுக்கு சபரி மலை போய் வந்த திருப்தியும், ஆசையும் கிடைக்கும் என்று நம்புகின்றேன். படித்துப் பார்த்து கருத்துக் கூறவும். நன்றி.