Monday, November 30, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 8

கரிமலை ஏறி இறங்கிப், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் காட்டுப்பகுதியின் வழியாக பம்பை வந்தடைந்தேம். பம்பை வந்ததும் அதில் குளிக்கச் சொன்னார்கள். பம்பையைப் பார்த்ததும் நான் ஆடிப் போய்விட்டேன். அவ்வளவு அசிங்கம். தட்சின கங்கை, புனித நதி என்று சொன்ன பம்பை கால் வைக்கக் கூட முடியாமல் இருந்தது. திருவேணி சங்கமத்தில் சங்கமம் சென்று குளித்தால் கொஞ்சம் நல்லா இருக்கும், அனால் பயண அவசரத்தில் இருக்கும் குருசாமிகள் இங்க குளிக்க சொல்லி கட்டாயப் படுத்துவார்கள். நான் கண்ணை மூடிக்கிட்டு அவசர அவசரமா மூனு முக்குப் போட்டேன். இப்போது பம்பை மிகவும் சுத்தமாக உள்ளது. நான் குறைந்தது அரை மணி நேரமாவது(எருமை மாடு மாதிரி) குளிப்பேன். குருசாமி நேரம் ஆகின்றது சாமி, வா சாமி என்று கத்தினால்தான், சாகவாசமாக கரைக்கு வருவேன். அவ்வளவு நன்றாக மலைத்தண்ணீர் சில் என்று,சுத்தமாக உள்ளது. வரும் 09.12.09 அன்று அதிகாலை ஜந்து மணியளவில் இங்கு குளிப்பேன் என்பதை நினைக்கையில் மிகவும் ஆனந்தமாக உள்ளது.

பின் பம்பா சக்தி, பம்பா பம்பா விளக்கு பூஜைகள் முடித்து, பம்பா விரிகளில், 108 விரியில் வெய்யிலில் அலைந்து பஸ்பம் எடுக்கையில் எனக்கு சிறிது மயக்கம் வருவது போல இருந்தது. ஆனாலும் சில நிமிடத்தில் சரியாகப் போயிற்று. பின் பம்பா கணபதி கோவிலிலும், நம்ம ஆளு பம்பா இராமர் சன்னதியிலும் தரிசனம் செய்து (இங்க இராமர் பெண்டாட்டியைத் தொலைத்து விட்டு தேடி வரும் சமயம் வந்த இடம், ஆதலால் என்னை மாதிரி அவரும் தனிக்கட்டையாக இருப்பார்.) அனுமார், பார்வதி, சிவன் ஆகியேரை வணங்கிப் பின்னர் செங்குத்தான, செங்குத்தான,அபாயமான நீலி மலையில் ஏறத் தொடங்கினேம். நீலி மலை, அப்பாச்சி மேடு, மற்றும் இப்பாச்சிக் குழி வரை மிகவும் செங்குத்தாகவும், பாக்கு மரத்தைப் படி போல போட்டு இருப்பார்கள். செம்மண் மலை ஆதலால் மிகவும் வழுக்கும், மழை பெய்தால் அது கடுமையான சோதனைதான். அதில் இரு கால்களையும் இழந்த ஒருவர் தன்னம்பிக்கையுடன் ஏறுவதைப் பாருங்கள்.இருபுறமும் ஆள் விழுந்தால் தெரியாத அளவுக்கு பள்ளம். படத்தைப் பாருங்கள். தரையைக் காண முடியாப் தெரியாத பள்ளம் உள்ளது. ஆள் விழுந்தால் புதரில் எங்கு இருக்கின்றார் எனபது கூடத் தெரியாது, புலிகள் மற்றும் சிறுத்தைகள் அடர்ந்த காடு ஆகும். இந்த சவுக்கு மரத்தடுப்புதான் பாதுகாப்பு, கூட்ட நெரிசலில் இதில் விழ வாய்ப்புக்கள் இருந்தது. விழுந்தும் உள்ளனர். ஆனால் இப்போது காங்கீரிட் தளத்துடன், காலை அரிக்கும் சரளைக் கற்கள் போட்டு பாதை உள்ளது. இருபுறமும் இருப்பு கைப்பிடி தடுப்புகள் அமைத்து விபத்துக்களைத் தடுத்துள்ளார்கள்.

நீலி மலை ஏறி முடிந்தது சபரி பீடம் மற்றும் சரங்குத்தி ஆகியவற்றை கடந்து சபரி மலையை அடைந்தேம். இன்று நாம் இந்த நீலி மலையில் நடந்த ஒரு அற்புதத்தைப் பார்ப்போம்.

நான் எங்க நாலவது அண்ணா மற்றும் குட்டியுடன் மூன்றாவது வருடயாத்திரைக்கு யாத்திரைக்கு மலைக்குச் சென்று இருந்தேம். அப்போது நாங்கள் 14.01.94 அன்று பெரியானை வட்டத்தில் தங்கி ஜோதி தரிசனம் செய்வது வழக்கம். அப்போது நாங்கள் மூவரும் இங்கிருந்து பம்பை ஆற்றைக் கடந்து குறுக்கு வழியில் நீலி மலை மேடான அப்பாச்சி மேட்டிற்க்கு வாட்டர் டாங்க் வழியில் பயணித்து ஜோதி தரிசனம் செய்தேம். அப்போது தரிசனம் முடிந்த அடுத்த நிமிடம் என் அண்ணா நீலி மலைப் பாதையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல முயற்ச்சித்தான். லட்சக்கனக்கான மக்கள் மலைக்கு மேலும், கீழும் நகர முற்ப்பட்டனர். இதில் ஒருபுறம் உள் சென்று மறுபுறம் நசுங்கி வெளிவர வேண்டும். நான் ஒரு அரைமணி நேரம் காத்துருந்தால் கூட்டம் குறைந்து விடும் பின் செல்லலாம் என்றேன். அவன் அப்ப கூட்டம் அதிகம் ஆகிவிடும் பேசாமல் கூட வா என்றான். நான் தான் சொல் பேச்சு கேட்டு பழக்கம் இல்லாத ஜாதி ஆச்சே. ஆதலால் "நீ வேணா போ, நான் கூட்டம் குறைந்தவுடன் வருகின்றேன்" என்றேன். அவனும் "நீ என்ன வேணா பண்ணு, உன்னை எல்லாம் சொல்லித்திருத்த முடியாதுன்னு" என் தமிழ் வாத்தியார் வாத்தியார் கணக்கா சாபம் விட்டுப் போனான்.

சிறிது நேரம் ஆக ஆகக், என் அண்ணா கூறிய மாதிரி ஜே ஜே எனக் கூட்டம் அதிகம் ஆனது, ஆனால் குறையவில்லை. நானும் இனி வேலைக்கு ஆவாது எனறு முடிவு செய்து கூட்டத்தில் நுழைந்து நசுங்கிப், பிதுங்கி மறுபக்கம் வந்தேன். வந்தவுடன் ஒரு பத்து நிமிடம் காட்டுக்குள் நடந்து இருப்பேன். அப்பத்தான் நான் செய்த தவறுகள் புரிந்தது. ஒன்று என் அண்ணாவின் பேச்சைக் கேட்டு அவருடன் செல்லாதது, இரண்டு நான் தனியாக டார்ச் லைட் எடுத்து வராதது. காட்டுக்குள் நல்ல கும் என்ற இருட்டில் மாட்டிக் கொண்டேன். மங்கலாக தெரிந்த பாதையும் இப்போது தெரியவில்லை. யாரும் நடக்காத குறுக்குத் தடம் வேறு. என்ன செய்வது என்று புரியவில்லை. நின்று சுற்றிலும் பார்க்கின்றேன். நான் கடந்து வந்த பாதை கூடத் தெரியவில்லை. அந்த இடத்தில் ஆகாயம் கூடத் தெரியாத அடர்ந்த காடு. நிலவு வெளிச்சமும் இல்லை. என் கண்களுக்கு மரங்களின் கருமையும், இருட்டும் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. யானை மற்றும் புலியின் பயம் வேறு வந்து கிலி அடிக்க ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது என்று அழாத குறை. கிரி வலம் வர்ற மாதிரி சுத்தி, சுத்திப் பார்த்தாலும் ஒரு அடிகூட வைக்க முடியாத இருட்டு. நான் கத்த ஆரம்பித்தேன். சாமி யாராவது இருக்கீங்களா? ஹலோ. ஹலோ. யாராவது இருக்கிங்களா என்று பல முறை காட்டுக் கத்து கத்தினேன். ஒன்றும் நடக்கவில்லை. இருட்டும், பயமும் என்னை மென்மேலும் மெர்சலாக்கின. நானும் பல முறை கத்திவிட்டு அமைதியானேன். என்ன செய்வது என்று புரியவில்லை. பின் நான் செய்த தவறு(மூத்தோர் சொல் கேளாமை) உணர்ந்து, பின் நான் "சாமியே சரணம் அய்யப்பா,சரணம் அய்யப்பா" என்று உரத்த குரலில் கத்த தொடங்கினேன். மூன்று முறை கத்தி இருப்பேன். அப்போது....... தொடரும். நாளைய பதிவில்.

நன்றி.

விருதுகள் அளிப்பு தொடர்ச்சி

அனைவருக்கும் வணக்கம். நான் விருது பதிவு போட்டு முடித்தவுடன், அலுவலக நேரம் முடிந்து வீட்டுக்குப் போனதும், நம்ம நிர்வாக இயக்குனர் கிட்ட இருந்து அழைப்பு(தொல்லைப் பேசி) வந்தது. தம்பி நீ இந்த கம்பெனியில் இயக்குனர் ஞாபகம் இருக்கா? , "ஓ இருக்கு சார்(நான்).
அதுக்காகத்தான் சார் நான் இராத்தியும், பகலுமா விடாம ஈ ஓட்டிக்கிட்டு இருக்கேன்" அப்படின்னு சொன்னன். அவர் சொன்னார் "அப்படின்னா நாளைக்கு நடக்கிற கூட்டங்களுக்கு வந்துடுன்னார்".
என்ன கூட்டம்ன்னு கேட்டா பொறுப்பு இல்லைன்னு திட்டுவார். ஆதலால் நானும் பதிவர் கூட்டம் மாதிரி வடை கிடைக்கும் அப்படின்னு நம்பி போய் உக்காந்தேன். அப்புறம்தான் தெரிஞ்ச்சுது அது மில்லியன் கணக்கில் டாலர் சாமாச்சாரக் கூட்டமாம். சரி டாலர் வேணுமின்னா நம்ம கிட்ட சொன்னா ஏற்பாடு பண்ண மாட்டமா? இது எதுக்கு கூட்டம் எல்லாம் அப்படின்னு யோசிச்சு நான் மெதுவா "என்ன டாலர் சார் ? முருகன் டாலரா?(பழனி) இல்லை பெருமாள் டாலரான்னு?(திருப்பதி)" கேக்க வாய் திறக்கப் போனனேன். அதுக்குள்ள அது யு எஸ் டாலர் அப்படின்னு சொல்லிட்டாங்க. அதை நான் கண்ணுல கூட பார்த்ததில்லையேன்னு வாயை மூடிக்கிட்டு வேடிக்கைப் பார்த்தேன். நிர்வாக இயக்குனர் கூட்டம்(போர்டு மீட்டிங்), வங்கிக் கூட்டம், தணிக்கையாளர் கூட்டம்(ஆடிட் மீட்டிங்) ஒரே கூட்டம் கூட்டமா போட்டு, வியாழன், வெள்ளி இரண்டு நாளும் தாளிச்சுட்டங்க. வழக்கமா இது மாதிரி கூட்டத்தில் நான் செய்யுற உருப்படியான வேலை பீர் அடிப்பது, அதுவும் மாலை போட்டதுன்னால செய்ய முடியாம எப்படா விடுவாங்கன்னு யோசிக்க வேண்டியதா போச்சு.
சனி, ஞாயிறு இரண்டு நாளும், செங்காங், யூசுன் அய்யப்பன் கோவில் பூஜை, அபிஸேகம், ஆராதனைன்னு போயி நல்லா அன்னதானம்(போனது இதுக்குத்தான்) நாலு வேளை சாப்பிட்டு வந்தேன்.

அதுனால என்னால நாலு நாளா பொட்டி தட்ட முடியவில்லை, குறிப்பா நான் விருது கொடுத்தவர்களை அழைத்துச் சொல்லும், பண்பாட்டைக் கூட நிறைவேற்ற இயலவில்லை.
என்னை உங்களில் ஒருவனாக ஏற்று நான் பதிவு இட்டவுடன் ஆதரவும், பின்னூட்டம் இட்ட, மற்றும் எனது விருதினை ஏற்ற சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான், யார், யார் வாங்கிக் கொள்ளவில்லையே, அவர்களை இன்று அழைத்து விட்டேன். தவறுதலாக நான் யாரையாது அழைக்காமல் இருந்தால் அவர்களும் தயவு செய்து எனது இந்த விருதினை ஏற்று என்னை சிறப்பிக்க வேண்டுகின்றேன். அடுத்த வரும் மூன்று தினங்களும் அளவில்லா ஆணிகள் பிடுங்க வேண்டி இருப்பதால், நான் இனி பத்து தினங்களுக்கு பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இடுவது கடினம். டிசம்பர் பதினைந்துக்குப் பின்னர் ஒட்டு மொத்தமாக படிக்கின்றேன். நன்றி. என்னுடைய எழுத்துப் பிழைகளைப் பற்றி அனைவரும் அறிவுறுத்தியுள்ளனர். இனி வரும் இடுகைகளில் நான் சரி செய்ய முற்படுகின்றேன்.(மறுபடியும் தமிழ் படிக்கனும்)

நான் அய்யப்பன் பதிவுகளை வரும் வெள்ளிக்கிழமைக்குள்(04.12.09) முடிக்க வேண்டியுள்ளதால் அதில் கவனம் செலுத்த உள்ளேன். 04.12.09 முதல் 13.12.09 நான் இந்தியாவிற்க்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஆம்மா வீடு கூட கோவில்தான, ஆதலால் அதுவும் ஆன்மீகப் பயணம் தான?. நான் செல்வதற்க்குள் பதிவுகள் மற்றும் அலுவலகப் பணிகள் பார்க்க வேண்டியுள்ளதால் கொஞ்சம் பரபரப்பாக உள்ளேன். இதுக்கு நடுவில் அண்டு இறுதிக் கணக்கு வேறு(எனக்கு ஒன்னும் தெரியாது, ஆனாலும் ஆக்டிங் பண்ணியாகனும்). ஆதலால் பதிவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளாமல் ஆதரவு அளிக்குமாறு வேண்டுகின்றேன். நன்றி.

இவர்களுக்கு நான் விரும்பி படித்து விருது அளிக்கின்றேன். +



முகவை இராம்- முகவை மைந்தன்- வெண்பா பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும், வெண்பா இயற்றுதலும், தீவிர தமிழ் ஆர்வம் உடையவர். சளைக்காமல் தூய தமிழில் பேசக் கூடியவர்.

மாரனேரி ஜேசப் பால்ராஜ்- மிக அபூர்வமாக பதிவு போடுவார். ஆனாலும் பதிவுகள் வெடி ரகம். பதிவர் கூட்டங்களில் இவரின் பங்கும், பேச்சுக்களும் முக்கியமானவை. இவர் வருசத்திற்க்கு மூன்று பதிவு மட்டும் போட்டு பதிவுலகத்திற்கு ஆற்றும் சேவைக்காக.

சிங்கை செந்தில் நாதன் - இவர் பதிவுலகிற்க்கு ஒரு வரம். தனது முடியாத உடல் நிலையில் கூட பதிவுகளைப் படித்து, பின்னூட்டம் மற்றும் விவாதங்களில் கலர்ந்து கொள்கின்றார். சிங்கைப் பதிவர்களை உற்சாகப் படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்.

லதானாந்த்- காடுகளையும், இயற்கை வளங்களையும் பற்றிக் கூறுவதற்க்காக (அதுக்காக பாம்பு பத்திப் போட்டு டிரையல் ஆக்கக்கூடாது).

மகா - சும்மா சினிமா, அனுபவம் என்று போடாமல், நமக்குப் புரியாத டெக்னிக்கிகல் டீடெய்யில் எல்லாம் அள்ளி விடுவார். அவருடைய டெக்னிக்கல் சேவைக்காக (விண்டேஸ்- 7).

திசைகாட்டியின் பொது அறிவு பதிவுகளுக்காக இந்த விருதினை நண்பர் ரேஸ்விக் அவர்களுக்கு அளிக்கின்றேன்.(எனக்கு ஒரு விக் கிடைக்குமா?)

நண்பர் ஜெட்லி அவர்களுக்கு இந்த விருதினை அட்டு படத்தைக் கூட விடாமப் பார்த்து நம்ம காசை மிச்சம் பண்ண வைக்கும் காரணத்திற்க்காக(சும்மா சொன்னேன்). முக்கியமா பொது அறிவு கட்டுரைகளுக்காக இந்த விருது வழங்குகின்றேன்.

நண்பர் சிங்கை ஜெகதீசன் அவர்களுக்கும் இந்த விருதினை சமர்பிக்கின்றேன். நன்றி.

தாங்கள் என் அழைப்பில்லாவிட்டாலும் இந்த இடுகையினை அழைப்பாக ஏற்று விருதினை ஏற்றுக் கொள்ளவும். நன்றி. மறக்காமல் இன்றைய பாகம் 8 படிக்கவும். நன்றி.

Wednesday, November 25, 2009

என் அன்புப் பரிசுகளும், விருதுகளும்













நான் வாங்கிய மூன்று விருதுகளும் என்னுடைய அன்புத்தங்கை சுசிக்கு அளிக்கின்றேன்.
நான் துளசி டீச்சரின் பதிவுகளின் இரசிகன் ஆதலால் அவர்களுக்கும் இந்த மூன்று விருதுகளையும் அளிக்கின்றேன்.
நான் மிகவும் மதிக்கும் அன்பு செலுத்தும் அண்ணன் கோ.வி. ஆரின் ஆயிரம் பதிவுகளை வாழ்த்தி
அவருக்கு இந்த மூன்று விருதுகளை அளிக்கின்றேன்.
என்னை வளர்க்கும் என் சண்டை சகோதரன் வாஆஆஆல் பையன் அவர்களுக்கு மூன்று விருதுகளும் சமர்பிக்கின்றேன்.



இன் விருதினை நான் சகோதரிகள் :
சகோதரி சந்தன முல்லை அவர்கள்,
ஜெலில்லா (இஸ்லாமிய சகோதரர்களின் விருந்து படைப்புகளுக்காக)
எழுத்தோசை தமிழரசி(கவிதை அரசி)கவிதை அருவி போல கொட்டும்.
ஹேமா(கவிதாயினி) கவிதைய எப்பவும் மண்டைக்குள்ள ஸ்டாக் வைச்சிருப்பாங்க.
கலகலப்பிரியா(நல்ல நடையில் எழுதுவார்)-
சாருஸ்ரீராஜ் - சமையலில் மிகுந்த ஆர்வமும், பதிவுகளும்
ஹை ஹீல்ஸ் ரூல்ஸ் (வின்ஸி)(பெண்ணியம் மற்றும் பெண்கள் உரிமை)
வில் டு லிவ் (ரம்யா) நல்ல எழுத்தர்
எண்ணங்கள்(கீதா சாம்பசிவம்) - இவர் கண்ணனின் கதையை மிக அழகாக சொல்லி வருகின்றார் அனைவரும் படியுங்கள்.
என் சமையல் அறையில் தெய்வசுகந்தி (கொங்கு மண்டல சமையல்களுக்காக).
மேனகா சத்தியா - சமையலில் மிகுந்த ஆர்வமும், பதிவுகளும் (இரண்டாம் முறை)
கீதா ஆச்சால் - சமையலில் மிகுந்த ஆர்வமும், பதிவுகளும் (இரண்டாம் முறை)
சின்ன அம்மினி- குளிர் தேசத்திலும் தமிழ் பரப்பும் ஆர்வம்
என் தோழி கிருத்திகா
தக்கடி நஸியா- தக்கடிக்காக
மலர் - சமையல் பதிவுகள்

மற்றும் நான் மதிக்கும் சக பதிவர்கள் :

அய்யா குடுகுடுப்பையார்,
கன்சண்ட் டுபி நத்திங்க் திரு, கிருஷ்ண மூர்த்தி,
வகுப்பறை வாத்தியார் - திரு, எம்.வி.சுப்பையா.
அத்திவெட்டி அலசல் - திரு. ஜோதிபாரதி.
அப்பாவி - முருகன்
குழலி - புருஸோத்தமன்
என்றென்றும் அன்புடன்- திரு. ஆருரான் விசுவனாதன்.
கசியும் மொளனம்- ஈரோடு கதிர்
கிருத்தியம் - தங்க முகுந்தன்,
சிங்ககுட்டி- பொருளாதாரப் பதிவுகள்.
சந்ரு,
தியாவின் பேனா- கவிதைகளுக்காக
மகாபாரதம்- டி வி ராதாகிருஷ்ணன்- இவர் மகாபாரத்தை மிகவும் அழகான நடையில் சுருக்கி கூறியுள்ளார் அனைவரும் படியுங்கள்.
நாடோடி இலக்கியன்- என் நண்பர் மற்றும் சிறந்த பதிவர்.
பித்தனின் பிதற்றல் - பித்தன்
பிரியமுடன் வசந்த் - அசத்தல் கவிதைகளுக்காக (காய் கவிதை)
புலவன் புலிகேசி அவர்கள்
மாதவிப் பந்தல் - கே. ஆர் எஸ்
வேதாந்த வைபவம்- திரு. அஸ்வின் ஜீ
டென் லீ
அப்புறம் பயணக் கட்டுரைகளுக்காக எனது அமைதியான நண்பர்திரு. ஞானப் பித்தன்(விருது கொடுத்துட்டேன், பஸ் கவிதை மாதிரி எழுதுனிங்க அப்புறம் திருப்பி புடிங்கிக் கொள்வேன்).


சகோதரி சுவையான சுவை அவர்களுக்கு இண்ட்ஸ்டிங் பிளாக் விருதினை வழங்குகின்றேன்.

இது முதல் லிஸ்ட் தாங்க. இவர்களின் பதிவுகளை நான் தினமும் படிக்கின்றேன். அடுத்த லிஸ்ட் உடன் வரும்.



டிஸ்கி: மறக்காம என்னுடைய அய்யப்பன் அற்புதம் பாகம் 7 படிக்கவும். நன்றி.

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 7

சென்னையில் எங்களின் பெரிய குருசாமி, முரளிதர சுவாமிகள், எங்களை அனுப்பும் போது முழு பயணத் திட்டத்தையும் வடிவமைத்துச் செய்ய வேண்டியவைகளையும் கூறி, நாராயண குருசாமியின் தலைமையில் அனுப்பி இருந்தார். அவரின் கூற்றுப் படி, முதல் நாள் நாங்கள் கரிவலந்தோட்டை அடையும் போது, இரவு மணி பத்து ஆகும் எனவும், அன்று இரவு அங்கு தங்கும் படியும், எக்காரணம் கொண்டும், இரவு கரிமலை ஏற வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் நாங்கள் இரவு 8 மணிக்கே கரிவலந்தோடு அடைந்தேம். குருசாமி பத்து மணிக்கு மேல் தான் ஏற வேண்டாம் என்றார். இப்ப மணி எட்டு தான, ஆதலால் நாம் தொடர்ந்து ஏறி, இரவு பத்து மணிக்குள் கரிமலை உச்சியை அடைந்து, அங்கு தங்கலாம் என முடிவு செய்து கரிவலந்தோட்டைக் கடக்க ஆரம்பித்தேம் ஆரம்பித்தோம்.

இந்தக் கரிவலந்தோடு பெயரே கொஞ்சம் டிரையலா இருக்கும். கரி= யானை, வலம்= சுற்றுதல், தோடு= பகுதி. இப்ப புரியுதா. ஏன் இரவு ஏறவேண்டாம் என்றார். அதாவது கரிமலை, பம்பை ஆகிய பகுதிகளின் அடிவாரமும், மலை ஏறாமல் மிருகங்கள் சுற்றி வரும் பகுதியும் இது ஆகும். இது போதாது என்று அங்கு உள்ள ஒரு வாய்க்கால்(காட்டாறு) சுற்றியும் போர்டு வைத்து இருப்பார்கள். "புலிகள், இராஜ நாகம் அதிகம் உலாவும் பகுதி, பக்தர்கள் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல வேண்டாம்", என்று பத்தடிக்குப் பத்தடியில பல போர்டுகள் வைத்து இருப்பார்கள். முக்குழித்தாவளத்தில் இருந்து கரிமலை ஏற்றத்தில் உள்ள மூங்கில் பள்ளம் வரை பள்ளம் உள்ள பகுதிதான் எனக்கு மிகவும் பிடித்த பகுதி. அடர்த்தியான காடு, பாதையின் இருபுறமும் ஆள் உயர புதர்கள், ஒரு யாணை நின்றால் கூடத் தெரியாத மூங்கில் மற்றும் கோரைப் புல் புதர்கள். காட்டின் உள் வெளிச்சம் படாத ஈரவாசம், பாதையில் அட்டைகள், பெரிய மரவட்டைகள் என இயற்க்கையின் அட்டகாசம் நிறைந்த பகுதி. நாங்கள் இந்த கரிவலந்தோட்டைக் கடக்க முற்ப்பட்ட போது அங்கு உள்ள நடைப் பாதைக் கடையில் சிலர் கூட்டமாக, பாதையின் ஒருபுறம் நெருப்பு வைத்தும், பட்டாசு வெடித்தும் பரபரப்பாக இருந்தனர். என்ன என்று பார்த்தால் ஒரு யாணைக் கூட்டம் ஒன்று பிளிறிக் கொண்டு மேல வந்து கொண்டியிருந்தது.இவர்கள் அதை விரட்டப் பாடுபட்டனர். நாங்கள் குருசாமி கூறிய உண்மையை உணர்ந்து, இரவு பயணத்தை முடித்து அங்கயே தங்கி விடலாம் எனவும், அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பலாம் எனவும் முடிவு செய்து, இரவு அங்குக் கடையில் உள்ள விரியில் தங்கி விட்டேம். நல்ல உறக்கம். அதிகாலை எழுந்து கிளம்பி, காலை பத்து மணியளவில் பம்பையை அடைந்தேம். பம்பை வரை எதும் பேசாமல் வந்த குருசாமி,மற்றும் சீனியர் சாமிகள், பம்பையில் நான், என் அண்ணா முரளி சாமி, மற்றும் இன்னேரு கன்னி சாமியை அழைத்து,அழைத்து, ஏன் சாமி இரவு அப்படியா தூங்குவிங்க, இரவு மறுபடியும் யாணைக் கூட்டம் வந்து, ஏறக்குறைய இருவது, முப்பது வெடிகள் வைத்துதான் போயிற்று. இது கூட தெரியாம தூங்கறிங்க, ஒருவேளை மேல வந்துவிட்டால், நாங்கள் உங்களைப் பார்ப்பதா, இல்லை ஓடுவதா? என்று கோவித்து, பின்னர் வீட்டை விட்டு, காட்டுக்கு வந்தால் கொஞ்சம் அலார்ட்டாக இருக்கனும், என்னதான் கடவுள் துணை இருந்தாலும், நாமும் விழிப்புணர்வுடன் செயல்படனும் என்றார். நாங்களும் சரணம் அய்யப்பா என்று கூறிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். சரி இங்கு நடந்த அற்புதம் என்ன என்று பார்க்கலாமா?


நான் பயண யாத்திரை கிளம்புவதற்க்காகக் காட்டில் செல்ல, புது எவரெடீ டார்ச் ஒன்றை வாங்கி இருந்தேன். ஆறு பாட்டரிகளைப் போட்டு, பெரிதாக வட்ட வடிவமாக ஒளி தரும் டார்ச் அது.மாலை நாங்கள் முக்குளித்தாவளம் வழியாக கரிவலந்தோடு வரும் போது, நான் ஆர்வத்தின் காரணமாக டார்ச்சைக் காட்டுக்குள் அடித்து வேடிக்கைப் வேடிக்கைப் பார்த்தபடி வந்தேன். பயண விதிகளின் படி டார்ச்சைக் காட்டுக்குள் அடிக்கக் கூடாது, பாதையில் மட்டும்தான் அடிக்கனும். காட்டுக்குள் அடித்தால், அந்த ஒளி மிருகங்களை ஈர்க்கும் என்பார். ஆனால் நான் அடித்து வேடிக்கைப் பார்ப்பது, பின் பாதையில் அடிப்பது என்று மாறி, மாறி செய்தேன். (மலோரியா சாமி அப்பத்தான் சேட்டை சுவாமி எனப் பெயரேடுத்தேன். இன்னமும் எங்கள் பயணக் குழுவில் என்னை சேட்டை சுவாமி அல்லது மண்டி சுவாமி என அழைப்பார்கள். நான் இது போல செய்யும் சேட்டைகளும், அதுக்கு அய்யனின் விளையாட்டுக்களும் தமாசா இருக்கும். ஒகே சுயபுராணம் நிறுத்தி மேட்டருக்குப் போவேம்). அப்படி அடிக்கும் போது என் அண்ணாவும், மத்த சாமிகளும் என்னை அடிக்க வேணாம் என்று கூறினார்கள். நான் சொன்னா கேக்கற ஆள் இல்லை அல்லவா.
குருசாமியும் இருமுறை "சாமி டார்ச்சை பாதை மாற்றி அடிக்காதிங்க" என்றார். நான் பாதையில் அடிப்பது, கல், வேர் எதுவும் இல்லை என்றால் நொடியில் காட்டில் அடிப்பது, பின் பாதையில் அடிப்பது என விளையாடி வந்தேன். பின் சிறிது தூரத்தில் என் டார்ச் அனைந்தது. நான் ஸ்பேர் புது பாட்டரிகளைப் போட்டேன். எரியவில்லை. அங்கு ஒரு கடையில் புது பல்பும் போட்டேம் எரியவில்லை. டார்ச்சை தட்டி, தலைகீழாக திருப்பி எல்லாம் செய்தேன். எரியவில்லை. பின் சமர்த்தாக என் அண்ணாவும், இன்னேரு சாமியும் அவர்கள் டார்ச்சில் அடித்து முன்னும் பின்னுமாக என்னை அழைத்துச் சென்றனர். நானும் ரொம்ப நல்ல பையனாக என் டார்ச்சை மூட்டை கட்டி வைத்து விட்டு, அவர்கள் காட்டிய பாதையில் நடந்தேன். இரவு நான் தங்கிய விரிக் காரர் டார்ச்சை முழுமையாக பரிசேதித்து விட்டு, நல்லாதான் இருக்கு ஏன் எரியவில்லை எனத் தெரியவில்லை என்றார். அதிகாலையிலும் நான் இந்த இருவரின் டார்ச் வெளிச்சத்தில் சமர்த்தாக நடந்து வந்தேன்.( நான் நல்ல பையன் தான). பின் டார்ச்சின் உபயோகம் இல்லாதால் நான் அதை எடுக்கவில்லை.

பயணம் முடிந்து வீடு வந்த நாங்கள், காலை பூஜை முடித்து, பிரசாதங்கள் அருந்தி, பயணக் கதை பேசும் போது, என் டார்ச் எரியாத விசயத்தைக் கூறினேன். என் சித்தி மகள், தங்கை லாவன்யா, " "இல்லை அண்ணா அது நல்ல எரியும்" என்று பேக்கில் இருந்து எடுத்து ஆன் செய்ய டார்ச் பளீர் என்று பிரகாசமாக எரிந்தது. எரிந்தது, நான் ஆச்சரியத்துடன் அதை வாங்கி, ஆட்டிப்பார்த்துப், பின்னர் அதன் தலையில் ரெண்டு தட்டி, ஆன் செய்தாலும் எரிந்தது. அதை என்ன செய்தாலும், குலுக்கினாலும் புது டார்ச் பிரகாசமாக எரிந்தது. நான் குழப்பத்துடன் என் அண்ணா முரளி சாமியைப் பார்க்க, அவர் சிரித்துக் கண் மூடி, "சாமி சரணம் அய்யப்பா", என்று சிரித்தார். நான் உடனே பூஜை அறைக்குள் ஓடி " சாஸ்தா அபராத இரட்சகனே சரணம் அய்யப்பா" என்று கூறி கீழே விழுந்து வழிபட்டேன். அவர் எப்போதும் போல குறும்பு சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்தார். அடுத்த பதிவில் நாம் பம்பையிலும், நீலி மலையிலும் தொடரலாம்..... தொடரும்.

டிஸ்கி : எனக்கு விருது அளித்து கொளரவித்த சுவையான சுவை சகோதரிக்கு நன்றி. நான் எப்பவும் ஒன் வே டிராபிக் மாதிரி, வாங்கற பழக்கம் தான், கொடுக்கற பழக்கம் இல்லை. வரவு மட்டும் தான் செலவு இல்லை. ஆனால் இந்த தொடர் முடிந்ததும் நான் வாங்கிய விருதுகளை பகிந்து அளிக்கின்றேன். சுசி அழைத்த தொடர் பதிவும் போடுகின்றேன். எனக்கு நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்கள் மிகவும் பெரிய விருது ஆகும். நன்றி. குறைகளை என்னிடமும், என் எழுத்துக்கள் நல்லா இருந்தால், உங்களுக்கு பிடித்து இருந்தால் சக பதிவர்களிடமும் படிக்கச் சொல்லவும். இதுவே தாங்கள் அளிக்கும் மாபெரும் விருது ஆகும்.

Tuesday, November 24, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 6

அதிகாலை நாலு மணிக்கு குளித்து, தர்மசாஸ்தா கோவிலிலும், வாபர் பள்ளிவாசலிலும் வணங்கிப் பின்னர், ஒரு கடையில் டீ அருந்திப் பெரு வழி யாத்திரை(56 கிலோமீட்டர் மலைப் பாதை) தொடங்கினனேம். எரிமேலியில் தரிசனம் முடித்து, எங்க குருசாமி, டீக்கடையில் பெருவழியில் செய்யவேண்டிய கடமைகள், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பற்றிக் கூறி, உடன் வரும் சாமிகளுடன் இணைந்து, இருவர் அல்லது மூவர் கூட்டாகச் செல்லும் படி அறிவுறுத்தினார். காளை கட்டி சென்று அவருக்காகக் காத்து இருக்கும்படி கூறிவிட்டு, எங்களின் தலையில் பள்ளிக்கட்டை ஏற்றிவிட்டார்.இது வரை உடல் முடியாத எனக்கு உடம்பில் யாத்திரை தொடங்கியது முதல் அசைக்க முடியாத பலம் வந்தது. உடல் வலி, காய்ச்சல், குளிர் எதுவும் தெரியவில்லை, என் கால்கள் என்னையும் அறியாமல் வேகமாக நடக்கத் தொடங்கின. காலை ஜந்தரை மணி அளவில் பேருர் தோட்டை அடைந்து அங்கு மீனுக்குப் பொரிப் போட்டு அய்யனை வணங்கிப் பின்னர் காளை கட்டி நோக்கி நடந்தோம்.

காளை கட்டி என்பது ஈசன் மற்றும் அம்மன் கோவில் ஆகும். இங்கு அதிர் வேட்டு வழிபாடு மற்றும் பாடல், மைக் சவுண்ட் ஸ்ர்வீஸ் இடைவிடாமல் ஒலிக்கும். காளை கட்டி இடம், அழுதா, கரிமலை, முக்குழித்தாவளம் போன்ற இடங்களின் ட்ரையாங்கிளில் அமைந்து இருக்கும் இடம். இங்கு வேட்டு வைத்தால் அது இந்த மூன்று இடங்களில் எதிரோலிக்கும். ஆகவே பாதையில் மிருகங்கள் வராமலிருக்க, டிசம்பர் 23 தொடங்கி, ஜனவரி 14 வரை வேட்டும், பாட்டும் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டு இருக்கும். அழுதா நதிக்கரையிலும், அழுதை மலையின் மீதும் அய்யப்பன் மகிஷியுடன் போரிடும் சமயம், சிவனும், பார்வதியும் தங்களின் காளை வாகனதை இங்கு கட்டி விட்டு,சண்டையைப் சண்டையைப் பார்த்தாக ஜதீகம். எனவே இந்த இடம் காளை கட்டி என அழைக்கப் படும். இந்த இடத்திற்க்கு நானும் எனக்கு இணையாக நடந்த ஒரு சென்னை எலட்க்டிரீசியன் சாமி ஒருவரும் மற்றவர்களைக் காட்டிலும் ஒன்றரை மணி நேரம் முன்னாடி வந்தோம் என்றால் நான் நடந்த வேகம் மற்றும் எனது பலம் பற்றி கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கு குருசாமி வந்ததும் ஈசனை வழிபட்டுப் பின் அழுதா நோக்கி நடந்தோம். இது வரை கொஞ்சம் சுமாரான சாலை வசதி இருந்தது இனி மலைப்பாதை. குத்துக் குத்தாக கற்கள் இருந்தன.(இப்ப அழுதா வரைக்கும் ரோடு போட்டு விட்டார்கள்). அப்படி செல்லும் போது என்னுடன் வந்த சாமி, திடிர் என்று அய்யப்பா என்று நின்றார். பின் நானும் நிற்க அவர். சாமி இது வரைக்கும் உங்களுக்கு சேதனை, இனி எனக்கு என்று காண்பித்தார். தன்னுடையக் காலைக் காண்பித்தார்.அதில் நடுவிரல் கல்லில் அடிபட்டு சிறிது தோல் கிழிந்து இருந்தது. அவர் சொன்னார், "பாருங்க சாமி இனி இதே இடத்தில் மறுபடியும் அடிபடும், வேண்டுமானால் பாருங்கள்" என்றார். ஆனாலும் எனக்கு இணையாக நடந்து வந்தார். மீண்டும் ஒரு அரைமணி நேரப் பிரயானத்தில் அவர் தயங்கி நின்றார், இம்முறை அவரின் அதோ இடத்தில் மீண்டும் அடிபட்டுக் கொஞ்சம் தோல் நன்றாக பிய்ந்து இரத்தம் வந்தது. இரத்தம் வந்த இடத்தில் விபூதியை எடுத்து அப்பிவிட்டுச் சொன்னார் "சாமி இனி என்னால் உங்களின் வேகத்திற்க்கு இணையாக வரமுடியாது" என்றார். நான் என் வேகத்தைக் கஷ்டப்பட்டு மட்டுப் படுத்தி அவருக்கு முன்னால் செல்வது, பின் நிற்பது, அவர் வந்தவுடன் மீண்டும் அதுபோல செல்வது என்று அவருடன் அழுதை வந்து அடைந்தேன்.

புண்ணிய நதி அழுதை, அழுதா நதியே சரணம் அய்யப்பா என்று வணங்கிய அழுதை வரும்போது போது நண்பகல் இரண்டு, எங்கள் ஆட்கள் வரும் போது மூன்று. குருசாமி அழுதையில் மூழ்கி கல் எடுத்து வாருங்கள் என்றார். நானும் குளிக்கும் முன்னர் அழுதையில் பல் விளக்க பிரஷ் எடுத்துக் கொண்டு பல்லைத் தேய்த்தேன். குருசாமியும், மற்ற சீனியர் சாமிகளும் என்னை, "சாமி என்ன பண்ணறிங்க" என்றார்கள், நான் "பல்லுத் தேய்க்க வேண்டும் என்று சொல்ல, தேய்ங்க, தேய்ங்க" என்று ஒரு மாதிரி நக்கலாக சிரித்து சொன்னார்கள், நான் புரியாமல் முழித்து, பின் ஆற்றில் இரு கைகளிலும் நீர் எடுத்து வாய் கொப்பளிக்க எடுத்தவன். ஒரு கணம் திகைத்துப் பின் தண்ணீரை அப்படியே ஆற்றில் விட்டேன். நான் முழிப்பதைப் பார்த்துச் சிரித்த கரையில் நின்ற சாமிகள். "என்ன சாமி பல் விளக்க வில்லையா" என்று சிரித்தார்கள். ஆம் அந்த தண்ணீர் முழுதும் மனித மல வாடை வீசியது. நான் ஆற்றில் இருந்து கரைக்கு ஓடி வந்து விட்டேன். வறண்ட காலம் ஆதலால் முழங்கால் அளவு ஓடிய தண்ணீரில் பல லட்சம் பக்தர்கள் கால் கழுவி, ஆற்றின் கரைகளில் அசுத்தம் செய்வதால், தண்ணீர் பூராவும் மல வாடை அடித்தது. நான் பாட்டிலில் உள்ள குடினீர் எடுத்து வாய் கொப்பளித்து, பின்னர் தான் கேட்டேன் அந்த அறிவிப்பை, அய்யப்ப சேவா சங்கமும், தேவஸ்தானமும் மைக்கில் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள், "தண்ணீர் மாசுபட்டு விட்டதால் யாரும் குடிக்கவே அல்லது வாய் கொப்பளிக்கவே வேண்டாம் என்றும், பக்தர்கள் குடிக்க தண்ணீர் அவர்களிடம் வாங்கிக் கொள்ளவும்" என்று. நான் கிளம்ப ஆயத்தம் ஆக, குருசாமி, "என்ன சாமி மூட்டை கட்டுகின்றீர்கள், போய் ஆற்றில் மூழ்கி கல் எடுத்து வாருங்கள்" என்றார். நான் "சாமி இந்த தண்ணியிலயா" என்றேன். அவர் "ஆமாம் சாமி போய் தண்ணீரில் மூழ்கி, கல்லிடும் குன்றில் கல் போட, கல் எடுத்து வாருங்கள்" என்றார். நானும் நாலு கன்னி சாமிகளும் வேறு வழியில்லாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு முங்கிக் கல் எடுத்து வந்தோம். அது வேற மூனு தடவை முங்கனும்(சாஸ்த்திரம் கண்டுபுடிச்சவனை உதைக்கனும்) என்று படுத்தி எடுத்துவிட்டார்கள். நான் பின் கரைக்கு வந்து என் பாட்டிலில் இருந்த நீரைத் துண்டில் நனைத்து உடல் பூராவும் துடைத்தேன். அப்பவும் வாடை அடிக்கற மாதிரி ஒரு கலக்கம். அடுத்த ஒரு கிலோமீட்டர் மலை ஏறும் வரைக்கும் நான் மேந்து மேந்து பார்த்துக் கொண்டு நடந்தேன். வாடை அடிக்கவில்லை என்றாலும் அந்த அசூசை அடங்க நேரம் ஆனது. குருசாமி என்னிடம் "என்ன சாமி புது தெம்பு வந்துருச்சு போல, இனி எல்லாருடன் சேர்ந்து வாருங்கள்" என்றார். நானும், அழுதை ஏறினால் ஏறினால் முட்டி பிதுங்கி விடும் என்றும், அழுதை ஏறக் கண்ணில் நீர் வரும் என்றும் சொல்லும், செங்குத்தான செம்மண் அழுதை மலைப் பாதையில் வேகமாக ஏறத் தொடங்கினேன். இந்த அழுதை மலைப் பாதை என்பது மழைக்காலங்களில் தண்ணீர் வடியும் பாதை ஆதலால் ஒழுங்கற்றும் பல இடங்களில் முழங்கால் முழங்கால் அளவு அரித்தும், உயரமாகவும்,பாதை அரித்தும் இருக்கும். ஏறுவது மிகக் கடினம். செம்மண்பாதை வறண்டு மண்துகளுடன் கண்ணாடி போல வழுக்கும். கொஞ்சம் கவனம் இல்லாவிட்டால் முழங்கால் சில்லி பெயர்ந்து விடும். இந்த பாதையில் அந்த அய்யனின் அற்புதத்தால் நான் சிட்டாக பறந்து ஏறிக் கொண்டு இருந்தேன். எந்த முரளி அண்ணாவிடம் என்னை நின்று நிதானமாக என்னைக் கூட்டி செல்லும்படி பலரும் கூறினார்களே, அவர் என்னிடம் அங்கு கெஞ்சிக் கொண்டு இருந்தார், சாமி வேகமா போகாதிங்க, எங்களால் வரமுடியவில்லை என்று. குருசாமியும் என்னிடம் சாமி நின்று போங்கள் என்று கூற ஆரம்பித்து விட்டார். ஆனாலும் எதோ ஒரு சக்தி, தேடுதல் என்னை அவனிடம் காற்றாய் இழுத்தது. நான் எல்லாரையும் வீட முன்னால் சென்று ஒரு பாறையில் அமருவேன், இவர்கள் அருகில் வந்தால், அல்லது இவர்கள் தலை தெரிந்தால் மீண்டும் நடந்து எல்லாருக்கும் முன்னால் சென்றேன். சென்னையில் இந்த சாமி எப்படி மலை ஏறும் என்றும், என்னை, என் விரதத்தைப், பக்தியைத் தவறாக பேசியவர்கள் எல்லாம் அங்க என்னிடம், எனக்கு ஒரு பட்டமும் கொடுத்து கெஞ்சினார்கள், "மலோரியா சாமி, வேகமாப் போகாதீங்க, போகதீங் எங்களால் வரமுடியவில்லை என்றார்கள். என் கண்கள் அந்த அய்யனின் அற்புதத்தை நினைத்துக் கண்னீருடன்(ஆனந்தக் கண்ணீர்) ஆனந்தமாக அய்யப்பா அய்யப்பா என்று கூறியபடி பித்தனைப் போல ஏறினேன். எந்தக் கஷ்டமும் இல்லாமல், மிகப் பரசவமாக ஆனந்த மனோலயத்தில் மலை ஏறினேன். கல்லிடும் குன்றில் கல்லைப் போட்டுப் பின்னர் அழுதா உச்சி, அழுதா இறக்கம், முக்குழித்தாவளம் வந்து, அங்கு முருகன், பிள்ளையார், சிவன் மற்றும் விஷ்னு கோவிலில் சாமி கும்பிட்டு கரிவழந்தோட்டை அடைந்தோம். இந்த கரிவழந்தோட்டில் தான் அய்யன் அடுத்த அற்புதத்தை நிகழ்த்தினான். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்..... தொடரும். நன்றி.

டிஸ்கி: நாலு வருடங்களுக்கு முன் என் இரண்டாவது அண்ணாவைப் பெரு வழியில் அழைத்து சென்ற போது, அழுதா முழுதும் மிகவும் சுத்தமாகவும், தண்ணீர் மிகவும் கண்ணாடி போல அற்புதமாகவும் இருந்தது. இப்போது அங்கு கரைகளில் கழிவறைகள் கட்டிப் மிகத் தூய்மையாக பராமரிக்கின்றார்கள். நானும் அண்ணாவும் அழுதையில் ஆனந்தமாக அரைமணி நேரம் குளித்தோம். நன்றி.

Monday, November 23, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 5




நாங்கள் சோட்டானிக்கரை தரிசனம் செய்வதற்க்கு முன்பாக குருவாயுர் சென்று இருந்தேன். அந்த மாயக் கண்ணனை, குழந்தையை அனைவரும் தரிசனம் செய்து இருப்பீர்கள், ஆதலால் விவரிக்க வில்லை. சோட்டானிக்கரை தரிசனம் முடித்து, எரிமேலிப் பயணம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். அன்று குறுகலனான ரோடுகளாலும், மக்கள் கூட்டம், பயண பேருந்து நெருக்கம் என ஜந்து மணி நேரம் ஆனது. நான் களைப்பு மற்றும் காய்ச்சல் உடன் பயணம் செய்தேன். புதிய இடங்களை பார்ப்பதால் கொஞ்சம் அசதி தெரியவில்லை. என்னடா இவன் அற்புதம் அது இதுன்னு சொல்லிட்டு, இப்படி உடம்பு சரியில்லை, காய்ச்சக் குளிறுன்னு கடுப்படிக்கிறான்னு கடுப்பாகி விடாதீர்கள். நம் கட்டுரையில் இனிதான் சூடும் சுவையும் ஆரம்பம். எரிமேலி வரும் வரைதான் ஒரு பக்தனின் பொறுப்பு, எரிமேலியில் இருந்து சன்னிதானம் சென்று திரும்புவது அந்த அய்யனின் பொறுப்பு. ஆதலால் அந்த அய்யனின் திருவிளையாடல்கள் இனிதான் ஆரம்பம்.

நாங்கள் எரிமேலி செல்லும் போது இரவு ஏழு அங்கு சென்றவுடன், எரிமேலி பேட்டை துள்ளும் நிகழ்ச்சிக்காக உடல் முழுதும் கலர் பொடிகளை தூவிக்கொண்டும், இடுப்பில் வேப்பிலை, அசோகா இலைகளை கட்டிக் கொண்டும், ஆதிவாசிகள், மற்றும் வேடர்களைப் போல வேடமிட்டு தெருவில் தாள வாத்தியத்துடன், சாமி திந்தகத்தோம், அய்யப்ப திந்தக்த்தோம்
என ஆடிப்பாடி சரண கோசம் இட்டு ஆடிப் பேட்டை துள்ளினேம். இது எதற்காக என்று புரிய நாம் எரிமேலியின் வரலாற்றைப் பார்க்கவேண்டும்.












இந்த எரிமேலியில் தலைப் பாறக்கோட்டை என்ற இடத்தில் ஒரு வேடவர் மூப்பன்(பெரியவர்,தலைவர்) இருந்தார். இவர் அய்யப்பன் குருகுல வாசம் செய்யும் போது அவரால் மிகவும் மதிக்கப் பட்டவர், இவர் இந்தப் பகுதியின் தலைவர். பேட்டை சாஸ்தா கோவிலின் எதிர்ப்புறம் இந்த தலைப்பாறை மூப்பனும், அய்யப்பனும் சந்தித்த போது அமர்ந்து பேசிய பாறை இன்னமும் உள்ளது. பக்கதர்கள் இந்த பாறையைத், தலைப் பாறைக்கோட்டை மூப்பனாக வணங்குகின்றார்கள். இந்த பேட்டை சாஸ்தா கோவிலில் சாயமிட்டு கிளம்பி ஆடிப்,பாடிக் கொண்டு கொண்டு நாம் பேட்டை துள்ளலாம். நாம் அடுத்து ஆடிக்கொண்டு போகுமிடம் அய்யப்பனின் நண்பரும், உயிர்த்தோழனுமான, முகமதியர் வாவரின் பள்ளிவாசல். இந்த வாவர் ஒரு பெரும் கடல் கொள்ளைக்காரன், சிறிய கப்பலில் வந்து அருகில் உள்ள நாடுகளை கொள்ளையடிப்பது வழக்கம். பந்தளத்தின் சிறப்பைக் கேள்விப் பட்டு, அங்கு கொள்ளையடிக்க வந்த வாவரை அய்யப்பன் எதிர்கொண்டு பேரில் தோற்கடித்தார், பின்னர் தன் அஷ்டமா சித்திகளைக் காட்டி, வாவரின் அன்புக்குப் பாத்திரமானார். வயதில் மூத்தவரான வாவர், அய்யனின் அழகு, வசிகரம், அமைதி, ஆற்றல் ஆகியவற்றைக் கண்டு வியந்து அவரின் தொண்டன் மற்றும் நண்பரானார். இந்த வாவரின் பள்ளிவாசல்தான் நாம் அடுத்து தொழும் இடம்,

அனைத்து கடவுளும் நம் கடவுளே. வாருங்கள் தொழுவேம் இங்கு,


















பள்ளிவாசலில் தொழுது விட்டு நாம் அடுத்து செல்வது அய்யனின் எரிமேலி ஸ்ரீதர்மசாஸ்தா கோவில், இது அந்த அய்யனின் முன் அவதாரமான ஸ்ரீதர்ம சாஸ்தா, இங்கு பூரணா, புஷ்கலா என்னும் இரு மனைவியுடன் காட்சி அளிக்கின்றார். பாண்டிய தேசத்தின் பூரணா மற்றும் காசிராஜன் மகளான புஷ்கலை ஆகியோருடன் விளங்குகின்றார். இதனால்தான் நாம் அய்யப்பனை காசி, இராமேஷ்வரம்,மலையாளம், பாண்டி அடக்கியாள்வபர் என்று கூறுகின்றேம். இந்த எரிமேலி தர்ம சாஸ்தா கோவிலில் வந்து பேட்டை துள்ளும் நிகழ்வு இக்கோயிலுடன் முடிகின்றது. இனி பேட்டை துள்ளும் கதையைப் பார்ப்பேம். முன்பு ஒரு சமயம் உதயணன் என்னும் மிகவும் மேசமான கொள்ளைக்காரன் இங்கு கரிமலை, உச்சிப்பாறை, உடும்பாறை ஆகிய மலை இடங்களில் இருந்து கொண்டு, திடீர்த் திடீர் எனத் தாக்கி செல்வம், பெண்கள் ஆகியேரைக் கவர்ந்து சென்றான். இந்த உதயணன் ஸ்ரீதர்ம சாஸ்தா வழிபாட்டுக்கும் இடையூறாக இருந்தான். ஆகவே அய்யப்பனின் படைகள், வாவர், தலைப் பாறைக்கோட்டை மூப்பன், கரிமலைக் கோட்டை அதிபதி கியேர் துணையுடன் காட்டுவாசிகளைப் போலவும், ஆதிவாசிகளைப் போலவும் மாறுவேடமிட்டு, ஆடிப்பாடி உதணயனன் இருக்கும் இடத்திற்க்கு சென்று, வாவர் உதயணனைக் கொன்றார். வாவர் உதயணனைக் கொன்று வெற்றியுடன் திரும்புகையில் அவனின் படைத்தளபதி ஒருவன் மறைந்து இருந்து கட்டாறி வீசிக் கொன்றான். வாவரின் ஆத்மாவை அய்யப்பன் தவத்தில் அமரப் போகும் சமயம், அய்யப்பன் வாபரையும் தம்முடன் மேட்சமடையுமாறு கூற வாபர் அதை (அனுமார் போல ) மறுத்து எரிமேலியில் வந்து பேட்டை துள்ளி ஆடி, தம்மை வணங்கும் பக்தரை நல்ல படியாக சபரி மலை சன்னிதானம் கொணர்ந்து விடும் பொறுப்பு தன்னுடையது என்றும், தான் அய்யப்ப பக்தருக்கு சேவை செய்ய விரும்பி எரிமேலியில் தொடர்ந்து இருக்க விரும்புதாகவும் கூறினார். பேட்டை துள்ளி முடிந்ததும், ஸ்ரீதர்ம சாஸ்தாவை வணங்கிப் பின், வாவரின் பள்ளிவாசல் வந்து வணங்கிப் பெருவழிப் பயணம் ஆரம்பிக்க வேண்டும். வாவரின் பள்ளிவாசலும், ஸ்ரீஎரிமேலி தர்மசாஸ்தா கோவிலும் எதிர் எதிரில் இருக்கும் படத்தைக் காணலாம். வாவருக்காக அய்யன் இங்கு தர்மசாஸ்தா கோலத்தில் உள்ளார்.


இந்த நிகழ்ச்சியை ஞாபகப் படுத்தும் முறையில் தான் இந்த பேட்டை துள்ளூம் நிகழ்வு பக்தர்களால் நடத்தப் படுகின்றது. பல தூர தேசங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்த்தர்களுக்கு இந்த பேட்டை துள்ளும் நிகழ்வு ஒரு வார்ம் அப் என்றால் அதில் சந்தோகம் இல்லை. நான் இந்த பேட்டை துள்ளும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு குளிர் காய்ச்சலுடன் ஒரு கடையின் வாசலில் இரவு முழுக்க அமர்ந்து கழித்து அதிகாலை நாலு மணி அளவில் குளித்து கோவிலுக்கும், பள்ளிவாசலுக்கும் சென்று வழி பட்டு பேருர்த்தோடு நேக்கி நடந்தோம். நாமும் தொடரில் நடப்போம்....... தொடரும்.

டிஸ்கி: இந்த பேட்டை துள்ளும் நிகழ்வை முடித்துப் பின் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலின் முன் உள்ள வாய்க்காலில் குளிக்க வேண்டும். நான் முதன் முறை போனபோது அங்கு குளிக்கப் போன நான் அதிர்ந்து நின்று விட்டேன். காரணம் அது வறண்ட காலம், முங்கால் அளவு தண்ணீரைத் தோக்கி வைத்திருந்தார்கள். பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாயமிட்டு குளிப்பதால்,அந்த தண்ணீர் திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவு போல கலர் மாறி மிகவும் அசுத்தமாக இருந்தது. நான் இதில் குளிக்கனுமா என கேக்க, குருசாமியும் மற்றவரும், "ஆமா சும்மா குளி சாமி" என்று கூற நான் அந்த வாய்க்காலில் குளித்தேன். பின் கரையில் இருந்த ஒரு குடினீர் குழாய்யின் நீரில் துண்டை நனைத்து என் உடல் பூராவும் துடைத்து விட்டேன். ஆனாலும் உடல் பூராவும் சேறு நாற்றம் போல ஒரு அருவெறுப்பு ஒரு மணி நேரத்திற்க்கு இருந்தது. இப்போது அந்த வாய்க்காலில் ஒரு மடை அணை கட்டி தினமும் புதிய தண்ணீர் எப்போதும் இருப்பது போலச் செய்வதால், தண்ணீர் சுத்தமாகவும், பின்னர் எரிமேலியில் பல இடங்களில் தண்ணீர் குழாய் அமைத்து இருபத்தி நாலு மணி நேரமும் தண்ணீர் வருவதால், இப்ப இந்த பிரச்சனை இல்லை. நன்றி.

Friday, November 20, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 4


இரவு முழுக்க பயணம் முடித்துக் காலை சோட்டானிக்கரை வந்தேம். அங்கு வந்ததும் எனக்கு சிறிது தெம்பு வந்தாற்ப் போல ஒரு உற்சாகம். ஆனாலும் உடம்பில் ஒரு வித களைப்பு இருந்தது. அங்கு குளியலறை ஒன்றிக்குச் சென்ற போது குழாய் மட்டும் தான் இருந்தது. வாளியோ அல்லது மோந்து குளிக்க சொம்போ கிடையாது. நான் வருவது வரட்டும் எனக் காய்ச்சலுடன் குழாயைத் திறந்து விட்டு அதன் அடியில் உக்காந்து குளித்தேன். நல்லா சில்லென்ற தண்ணீர் குளீருட்டியது. இனி கோவிலுக்குப் போவேம்.

இந்த பகவதி கோவில் எனக்குப் பிடித்தமான கோவில்களில் ஒன்று. மிக அதிகமான,அழுத்தமான அதிர்வலைகளைக் கொண்டது. கோவிலினுள் ஒரு இனம் புரியாத சந்தோசமும், பயமும் இருக்கும். ஒரு மனதில் கும்மென்ற உணர்வு பரவக் காணலாம். இந்த கோவிலில் இராஜராஜேஸ்வரி தானாக வந்து குடியேறியதாக சொல்வார்கள். இங்கு அம்மன் சிலை என்று ஒரு உருவ அமைப்பு பாறையில் ஒழுங்கற்றுக் காணப்படும். இது சுயம்பு என்றும், யாரும் இதனை வடிக்கவில்லை என்றும் கூறுவார்கள். இந்த சிலையமைப்பு இருக்கும் பாறையின் மீது தங்க கவசம் சார்த்தி அலங்காரம் செய்யப் படுகின்றது. இந்த கோவிலின் கூரை தங்கத்தால் வேயப் பட்டுள்ளது. அம்மன் என்றாலும் தேவி நாராயணி என்று அழைக்கப் படுகின்றாள். இந்த அம்மனுக்குக் காலை சரஸ்வதி அலங்காரமும், நண்பகல் பத்தரகாளி அலங்காரமும், இரவு துர்க்கை அலங்காரமும் செய்யப்படும்.

அம்மே நாராயணி, தேவி நாராயணி
தேவீ நாராயணி, பத்ரி நாராயணி
என்ற துதிபாடல் கோவில் முழுக்க கேக்கலாம். நாமும் பாடப் பாட நம் மனது பூரண அமைதியடைகின்றது. ஆனா இந்தக் கோவிலில் கொஞ்சம் அக்கம், பக்கம் பார்த்து தான் நடக்கனும், ஆமாங்க கோவில் பூராவும் மன நிலை தவறியவர்கள் (பைத்தியம்) இருப்பார்கள். நம்மை சுற்றி நடந்து கொண்டும் பாடியும், தனக்குள் பேசியும் இருப்பார்கள். நாம கொஞ்சம் கவனித்துப் போனால் நல்லது. முதலில் கோவிலின் நுழைவு வாயில் பின் கொடிக்கம்பம் என்று ஆரம்பித்து கோரளக் கோவில்களுக்கே உரிய வீடு போன்ற அமைப்பில் நுழைந்தால் சிறிய சன்னிதியில் பெரிய அம்மன் சும்மா தக தக என ஜொலிப்பதைக் காணலாம். அம்மன் கொள்ளை அழகு என்றாலும் மனதில் கொள்ளை பயத்தையும், தெளிவையும் தருவாள். மனம் இலேசனவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் இங்கு பூஜையின் போதும், வழிபாட்டின் போதும் தானாக அழுவார்கள். அவர்கள் கண்ணில் அவர்கள் அறியாமல் தண்ணீர் தாரையாக கொட்டும்.
கோவிலின் மூல விமானம் தங்கத்தில் சூரிய ஒளியில் ஜொலிப்பதைக் காண்பதும் ஒரு அழகு. நான் இங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து தியானிப்பதும் உண்டு. நல்லா மனதை ஒருமுகப் படுத்தும், அதி தீவிர அதிர்வலைகள் கொண்ட கோவில்.


இந்தக் கோவிலின் கீழ் இறங்கி வந்தால் ஒரு அம்மன் சன்னதி உண்டு. பயப்படாதீர்கள் இந்த சன்னதி முன் தான் பேயோட்டுவார்கள். பெண்கள், அண்கள் எனப் பேய் பிடித்துருக்கும் அனைவரும் இந்த சன்னதி முன்னர் தலைவிரித்து கோலமாக நின்று சுழற்றி ஆடுவதைப் பார்க்க ஒரு கிலி வரும். இதற்க்கு முன்னர் ஒரு வீடு போன்ற தாழ்வாரத்தில் இருட்டடிச்சாப் போல ஒரு கோவில் கிணறு இருக்கும். இங்கு குளிக்க வைத்துதான் பேயோட்ட அழைத்துச் செல்வார்கள். இங்கு சாமி தரிசனம் செய்து நாங்கள் அய்யப்ப யாத்திரையின் தொடக்க இடமான எரிமேலிக்குப் பயணம் யணம் செய்தேம். பஸ்ஸில் குளிரும் காய்ச்சலும் என்னுடன் வந்தன.



பேயோட்டும் அம்மன் கோவில்





நான் சபரி மலை சென்ற பத்து முறைகளில் எட்டு முறை குருவாயுரும், இந்தக் கோவிலும் சென்று உள்ளேன். எங்க வீட்டில் திருத்தல யாத்திரையாக இருமுறை இங்கு வந்துள்ளேம். ஒரு முறை நானும் என் நாலவது அண்ணா மற்றும் என் உறவினன் மற்றும் நண்பன் குட்டி மூவரும் சபரி மலை செல்கையில் இந்த கோவிலுக்கு வந்தோம். அப்போது மதியம் பத்திர காளி அலங்காரம் செய்வதற்க்காக கோவிலின் நடை சாத்தப் பட்டிருந்தது. நாங்கள் கருட கம்பத்தின் அருகில் நின்று கோவில் கதவுகள் திறப்பதற்க்காக காத்துக் கொண்டு இருந்தேம். நாங்கள் நின்று கொண்டு இருந்த இடத்தில் ஒரு கேரளா நடுத்தர வயது பெண்மனி அவர்களின் சம்பிரதாயப் படி தலை சீவி உடை உடுத்து கைகளை கூப்பியபடி நின்று பாடலைப் பாடிக் கொண்டுருந்தார். நல்ல லட்சனமான முகமும்,உடையும் பெரிய இடத்துப் பெண் போல இருந்தது. இவர் என் அண்ணா பக்கத்தில் நின்று பாடிக் கொண்டியிருந்தார். எனக்கு இந்த கோயிலில் கொஞ்சம் முன் அனுபவம் இருந்ததால் நான் குட்டியை கொஞ்சம் யாரும் சுற்றி இல்லாத இடமாக நிற்க்ச் சொன்னேன். அவனும் என் அருகில் நின்றான். என் அண்ணா கோவிலின் கதவுகளைப் பார்த்தவாறு நின்றான். நான் அவனிடன் கண்ணா இங்க கோவில் கதவு திறந்தவுடன் பலரும் ஆடுவார்கள், பார்த்து ஜாக்கிரதையாக இரு. பயப்படாதே என்றேன். அவன் என்னை அலட்சியமாக பார்த்து " கோயிலுக்கு வந்தா சாமி கும்பிடரதைப் பாரு. யாரு ஆடுன்னா என்ன" என்றான். நானும் சரி உன் இஷ்டம் என்றேன்.


மட்ட மத்தியானம், நண்பகல், மற்றும் உக்கிரமான பத்திரகாளி அலங்காரம் வேறு. நான் முன்னேச்சிரிக்கையாய் தள்ளி நின்றேன். கோவிலின் கதவுகள் திறந்தன. அவ்வளவுதான், மிகுந்த சத்தத்துடன் என அண்ணாவின் அருகில் பக்தியாய் நின்ற பெண் பயங்கரமாய் அலறி ஆட ஆரம்பித்தாள். பாடலுடன் குதித்தாள். தலைமுடியை பயங்கரமாய் சுற்றி ஆடினாள். என் அண்ணா பயந்து பின் வாங்கினான். என்னடா இப்படி என்றான். " நான் தான் சொன்னேன் அல்லவா? நீ என்னமே டயலாக் எல்லம் விட்டாய்" என்று சிரித்தேன். அவனுக்குப் பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. இப்ப அவனுக்கு கல்யானம் ஆகி இரு குழந்தைகளும் பிறந்து விட்டன.இன்னமும் அவன் இந்தக் கோவில் உள்ளே வரமாட்டான். கேட்டால் அங்க போனா எனக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விடும் என்பான்.

சரி நாம் மீண்டும் அடுத்த பாகத்தில் எரிமேலியில் இருந்து யாத்திரையைத் தொடர்வேம்..... தொடரும். நன்றி.

Thursday, November 19, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 3


இரவு நான் நல்ல உறக்கத்தில் இருந்த சமயம் அதிகாலை மூன்று மணியளவில் எனக்கு பயங்கரமாகக் குளிர் எடுத்தது. எனது உடல் விழுக்கு, விழுக்கு என்று உலுக்கி எடுப்பது போல தூக்கிப் போட்டது. என் முனகல் மற்றும் அனத்தல் சத்தம் கேட்டு எழுந்த என் உடன் படுத்து இருந்த முரளி அண்ணா மற்றும் என் சித்தி இருவரும் எழுந்து விசாரித்தனர். என் பற்கள் கிட்டி என்னால் பேசக் கூடமுடியவில்லை. இரண்டு மூன்று போர்வைகள் போர்த்திக் கூட குளீர் அடங்க வில்லை. உடனே என் சித்தி கொஞ்சம் வெந்நீர் குடிக்கக் கொடுத்து, ஒரு பத்து மிளகும் கொடுத்து, மிளகைக் கடித்து நல்லா மென்று சாப்பிடச் சொன்னார்கள் (குறித்து வைத்துக் கொள்ளுங்கள், குளிர் சுரம் அடங்க நல்ல வைத்தியம்). நான் மிளகைச் சாப்பிட்டதும் அதன் காரம் மற்றும் எரிச்சலில், குளிர் அடங்கியது. பின் நல்ல காய்ச்சல் கொதிக்கத் தொடங்கியது. பின் மறுனாள் மாலை டாக்டரிடம் சென்றேன். அவர் எனக்கு 104 டிகிரிக் காய்ச்சல் இருப்பதாகவும். மலேரியா காய்ச்சல் வந்துருப்பதாகவும் கூறினார். இரத்த மாதிரி செய்து காய்ச்சலை உறுதிப் படுத்தினார். மருந்து மாத்திரைகள் தந்தார்.

அடுத்த நாள் நான் கஞ்சி குடித்து மருந்து உண்டால் வாந்தி வந்தது. காய்ச்சலும் தொடர் வாந்தியும் என்னை சிரமான நிலைக்குத் தள்ளியது. இந்த நிலையில் நான் என்னைப் பற்றி சொல்லவேண்டும். அப்போது நான் இப்ப இருக்க மாதிரி குண்டாகவும் தொப்பையுமாய் இருக்க மாட்டேன். ரொம்ப ஒல்லியா, ஒட்டடைக் குச்சி போல இருப்பேன். என் அலுவலக நண்பன் துதிதீஷ் எனக்கு வைத்த பட்டப் பெயர் ஸ்கெல்ட்டன்(எழும்புக் கூடு). என்னை இப்படித்தான் கூப்பிடுவான். நான் அவ்வளவு ஒல்லி. இதில் காய்ச்சலும் வாந்தியும் சேர்ந்து கொள்ள நான் மிகவும் சேர்ந்து போனேன். அந்த இரு நாளும் நான் பெயரளவில் அலுவலகம் சென்று மார்க்கெட் செல்லாமல் வீட்டில் இருந்தேன். உப்பு இல்லாமல் சாப்பிடும் மூணாவது நாளும் வந்தது. நான் உப்பு இல்லாமல் அரிசிக் கஞ்சி குடிக்க ஆரம்பித்தேன். நான் கஞ்சி குடித்தவுடன் மாத்திரை சாப்பிட்டால் வாந்தி வந்து விடும், எனவே என் அண்ணா முரளி சாமி என்னிடம், "சுதா இது அய்யப்பன் சேதனை என்று நினைக்கின்றேன். நாம் அவனை நம்பி மாலை போட்டேம், அவனை நம்பிப் போவேம், நீ மாத்திரைகளை சாப்பிடாதே" என்றார். நானும் காய்ச்சலுக்கு மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். டாக்டர் நான் மலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உன்மையில் நான் இருக்கும் நிலைமை அட்மிட் செய்து இரண்டு அல்லது மூன்று டிரிப்ஸ் போடவேண்டும் என்றார். நானே மருந்தும், டாக்டரிடமும் போவதைத் தவிர்த்தேன்.பின்னர் வாந்தியும் நின்றது. எனக்குப் பூஜைகளும், விபூதியும் தான் மருந்து ஆனது. காய்ச்சல் தொடர்ந்து இருந்தது. எப்படியோ அலுவலகத்தையும் விரதத்தையும் காய்ச்சல் மற்றும் குளிருடன் சமாளித்து விட்டேன். நான் மலைக்கு செல்லும் நாளும் வந்தது.

நான் மூன்று நாள் உப்பு இல்லாமல் சாப்பிட்டு, இருமுடி கட்டும் நாள் அன்று , காலையில் இருந்து நீர் ஆகரம்(பால்,டீ,இளனீர்) மட்டும் குடிப்பேன். பின்னர் மாலையில் கட்டுக் கட்டி வைத்த பின்னர் தான் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்தேன். காலை பத்து மணியளவில் நான் எங்கள் வீட்டின் அருகில் இருந்த வங்கிக்குச் சென்று பணம் எடுத்து கால் சட்டைப் பையில் வைத்து விட்டு, கணக்கு புத்தகத்தில் சரியாகப் பதிந்துள்ளார்களா எனச் சரி பார்க்க பாஸ்புக்கை விரித்தேன். மறு நிமிடம் நான் கண்கள் இருள, தலை சுற்றி மயக்கம் போட்டுக் கீழே விழுந்தேன். வங்கியில் உள்ளவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் என் அண்ணாவின், நண்பர் ஒருவர் என் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பினர். பின் ஸோடாவும் கொடுத்தார்கள். நான் இன்று கட்டுக் கட்டுவதால் உப்பிட்ட ஸோடாவைக் குடிக்க மாட்டேன் என்று கூறி, தண்ணீர் மட்டும் அருந்தி, கொஞ்ச நேரம் என் உடல் நடுக்கம் போக அமர்ந்தேன். அருகில் இருந்தவர்கள் எல்லாம் இந்த உடல் நிலையில் எப்படி மலைக்குப் போவார் என்று கிசு கிசுக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் கொஞ்ச நேரத்தில் மெல்ல எழுந்து, என் வீடு வந்து படுத்துக் கொண்டேன். அதற்க்குள் நணபர் மூலமாக தகவல் அறிந்த என் இரண்டாவது அண்ணா (இராமு) மற்றும் முரளியண்ணா இருவரும், என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லி, யாத்திரைக்கு தேவையான பொருள்களை வாங்க ஆரம்பித்தார்கள். என் உடம்பு தொடர்ந்து நடுங்கிக் கொண்டியிருந்தது. மாலை கட்டுக் கட்டும் சமயமும் வந்தது. நானும், முரளியும் கன்னி சாமி ஆதலால் எங்களின் கட்டு முதல் கட்டாக இருந்ததால் அத்தனைக் கூட்டமும் என்னை ஆச்சரியத்துடன் வேடிக்கைப் பார்த்தது. இவ்வளவு காய்ச்சல் மற்றும் நடுக்கத்துடன் கட்டும், நான் எப்படி மலைக்குப் போவேன் என்று ஆச்சரியப் பட்டார்கள். நான் கட்டுக் கட்டிவிட்டு ஒரு வித மயக்கத்தில், நடப்பது என்ன என்பது புரியாமல் கோவில் தூணில் சாய்ந்து உக்காந்தேன். வந்த கூட்டம் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துவிட்டு என் காலில் விழுந்து சென்றது. என் வாய் மட்டும் விடாமல் சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா என்ற சரண கோசத்தை முணு முணுத்த வண்ணம் இருந்தது. என் இரண்டாவது அண்ணா, அண்ணி, என் இரு சித்திகள், மற்றும் சித்திகளின் மகன், மகள்கள், என் அண்ணாவின் நண்பர் சீனு அண்ணா என அனைவரும் என் பக்கத்தில் கவலையுடன் நின்றனர்.

இந்த நிலையில் ஒரு சிலர் நான் விரதம் சரியாக இருந்திருக்க மாட்டேன் என பேசியதும் காதில் கேட்டது. அது இன்னமும் என் கவலையை அதிகப் படுத்தியது. என் குழந்தைப் பருவத்தில் இருந்து, நான் மிகவும் ஆசையாக இருந்து, மாலையிட்டு, விரதமும் இருந்து வருகின்றேன். எனக்கு ஏன் இந்த சேதனை என்று அழாத குறையாக மனதில் நினைத்துக் கொண்டேன். என் இரண்டாவது அண்ணா என்னிடம் மெல்லக் குனிந்து கேட்டார். "சாமி உங்களால முடியுமா? போவிங்களா? இல்லைன்னா கட்டுக் கட்டிட்டிங்க இருமுடி வேனா முரளிசாமிகிட்ட கொடுத்து அனுப்பி விடலாம்" என்றார். நான் உறுதியாக, " இல்லையண்ணா நான் போய் விடுவேன்" என்றேன் நடுங்கிக் கொண்டு. எங்க அண்ணா மன்னி மற்றும் உறவினர்கள் அனைவரும் முரளிசாமிகிட்ட ஒரே புத்திமதி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் முரளி சாமியிடம் பொறுமையாக என்னை கூட்டிச் செல்லும்படியும், என்னால் நடக்க முடியாவிட்டால் இருந்து கூட்டிச் செல்லும் படியும் அறிவுறுத்தினார்கள். குருசாமியிடமும் மற்ற சாமிகளிடமும் என்னை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார்கள். கூட்டத்தில் சிலர் பேசிய விதம் என்னுள் மிகுந்த சங்கடதைக் கொடுத்தது, ஆனால் கண்டிப்பாய்ப் போக வேண்டும், போய்ச் செத்தால் கூட பரவாயில்லை என்ற வைராக்கியத்தைக் கொடுத்தது. பின்னர் நாங்கள் இரவு சென்னையில் இருந்து முத்துனகர் விரைவு உந்தியில் எர்னாகுளம் நோக்கிச் சென்றேம். இரவு இரயிலில் எனக்கு குளிரும் மயக்கமும் வந்தது. என் போர்வை, எங்க முரளியண்ணா சாமி போர்வை,குருசாமி போர்வை போர்த்திக் கூட எனக்கு குளிர் அடங்காமல் காய்ச்சலும் வாட்டியது. குருசாமி எனக்கு காஞ்சிபுரம் மிளகு இட்டிலி கொடுத்தார். மிகவும் சுவையான அந்த இட்டிலி சாப்பிட்டது, எனக்கு வாந்தி வந்தது. இரயிலில் வாஷ்பேசின் அருகே வாமிட் பண்ணும் போது கதவு திறந்து இருந்ததால், குளிர் காற்றுப் பட்டு மயக்கம் வந்தது. நான் இரயிலின் வெளியில் விழாமல் இருக்க வாஷ்பேசினைக் கையில் இறுகப் பிடித்துக் கொண்டு, முரளி சாமியை அழைக்கும் வண்ணம் "சாமி, சாமி" என்று கத்தினேன். அப்போது அருகில் இருந்த சாமி ஒருவர் நான் சாய்வதைப் பார்த்து, நான் இரயிலில் இருந்து வெளியில் மயங்கி விழாமல் காப்பாற்றினார். முரளி சாமியும் ஓடி வந்து என்னை கைத்தாங்கலாக பிடித்து என்னைப் படுக்கையில் படுக்க வைத்தார். எனக்கு போர்வைகளைக் கொடுத்து குருசாமியும், முரளிசாமியும் குளிரில் குறுகி உக்காந்து வந்தனர். மறுனாள் எர்ணா குளம் சென்று பின் சோட்டானிக்கரை பகவதி கோயிலுக்குச் சென்றேம்....... பயணம் தொடரும், வாருங்கள் யாத்திரை செய்வேம். நன்றி.

Wednesday, November 18, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 2



சாமியே சரணம் அய்யப்பா.

எங்க பெரிய அண்ணா மாளிகைபுறத்து மஞ்சமாதா கோவிலில் சாமி கும்பிட்டுத் திரும்புகையில் கருவறையில் இருந்து எடுத்து வந்த தீபாராதனைத் தட்டு குருக்கள் பக்தர்களுக்குக் காட்டிவிட்டு திரும்பும் அவரின் கற்பூர நெருப்பு தவறுதலாக, எங்க அண்ணாவின் இடதுகை புஜத்தில் பட்டுவிட்டது. நல்லா சிவபெருமான் நெற்றிக்கண் மாதிரி அழுத்தமாக நீளவாக்கில் சூடு பட்டது. அங்கு கோவில் பூஜாரி எண்ணெய்யும், விபூதியும் குழைத்து இட்டு, கவலைப் படாதே, இது நல்லதுக்கு என்று நினைத்துக் கொள் என்றார். எங்க அண்ணா வீடு திரும்பி மருத்துவத்தில் காயம் குணமானது. இது நடந்தது 1983ஆம் வருடம். அன்றிலிருந்து இன்று வரை எங்க அண்ணாவிற்க்கு தொடந்து வந்த வலிப்பு வருவதில்லை. இது எதிர்பாராமல் நடந்த விபத்து மாதிரி என்றாலும், அந்த அய்யனின் கருனைக்கு ஈடு இல்லை. இது நடந்து பின் எங்க அண்ணா தொடர்ந்து ஒன்பது வருடங்கள் மலைக்குப் போனார்.

நான் கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து ஒரு பிரபலமான பெரிய நிறுவனத்தில் விற்பனை மற்றும் உதவிப் பிரதினிதியாக பணி புரிந்த சமயம். நான் என் சித்தியின் (அம்மாவின் தங்கை) வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தேன். ஒரு நாள் மாலை பணி முடித்து வந்த போது எங்க சித்தி மகன் முரளியண்ணா என்னிடம், சுதா இந்த வருடம் நாம் மலைக்குப் போலாம்மா என்றார். எனக்கு மிகவும் வேண்டிய நாராயண குருசாமி போறார். அவருடன் போலாம்மா என்றார். எனக்கு அப்படியே கொள்ளை சந்தோசம். நான் உடனே எங்க அப்பா,அம்மா, பெரிய அண்ணா மற்றும் இரண்டாவது அண்ணாவின் சம்மதத்தைப் பெற்று, நானும், அவரும் 1991அம் வருடம் மாலையணிந்தேன். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்னையில் கழித்தேன். அப்போது நாங்கள் பழைய வண்ணையில் உள்ள தியாகராயா கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். எங்கள் வீடு இந்த மைதானத்தின் பின்புறம் தான் இருந்தது.

மாலையிட்ட பின் ஒரு நாள் எங்கள் டீம் ஆடுவதை வேடிக்கைப் பார்க்க மைதானத்திற்க்கு சென்றேன். அப்போது அவர்கள் என்னை லெக் அம்பயரிங் பண்ணச் சொல்ல, நானும் அங்கு இருந்த ஒரு சிறு சைக்கிளில் உக்காந்து கொண்டு எங்கள் டீமுக்கு லெக் அம்பயரிங் பண்ணிக் கொண்டு இருந்தேன். அப்போது பக்கத்து பிட்ச்சில் ஆடும் ஒருவன் அடித்த சாட்டில் கார்க் பால் பேட்டில் இருந்து நேராக என் தாவாக் கொட்டையில்(முகவாய்) அடித்தது. அப்படியே கன்னத்தை பிடித்து அமர்ந்த எனக்கு தலை சுற்றியது, கண்கள் இருட்டியது. நான் இரண்டு கைகளையும் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு சரணம் அய்யப்பா என்று கத்தினேன். மறு நிமிடம் நான் சகஜ நிலையடைந்தேன். எனக்கு வலியே, வீக்கமே எதுவும் தெரியவில்லை. பந்து வந்த வேகமும், அடித்த சத்தமும் கேட்டு பயந்த பக்கத்தில் இருந்த அனைவரும், நான் சகஜமாக எழுந்ததைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டனர். மாலை வீட்டுக்கு வந்த முரளி சாமி (அண்ணா) என்னிடம் சாமி மாலை போட்டுட்டு விளையாட எல்லாம் போகாதிங்க, என்று சொல்லி அன்று புரசைவாக்கத்தில் ஒரு வீட்டு பூஜைக்கு அழைத்துச் சென்றார்.

நாங்கள் இருவரும் கன்னிசாமி என்னும் முதல் வருட சாமிகள் ஆதலால் நாங்கள் எங்கள் வீட்டில் கன்னி அய்யப்ப பூஜையும், அன்னதானமும் வைத்து இருந்தேம். எங்கள் வீட்டு பூஜை முரளி(தனலஷ்மி வங்கி) குருசாமியின் தலைமையில், நாராயண குருசாமியால் நடந்தது. பூஜை முடியும் சமயம் நான் முரளி குருசாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவும், கன்னி மூல கணபதியின் படத்தில் இருந்து பூ கீழே விழவும் சரியாக இருந்தது. உடனே அவர் என்னிடம் உனக்கு கன்னி மூல கணபதியின் அருள் கிடைத்து விட்டது. நீ இருமுடி கட்டும் மூன்று நாளைக்கு முன்னால் இருந்து உப்பில்லாமல் சாப்பிட்டு வா, கட்டு கட்டி முடித்ததும், பின்னர் சாப்பிடு என்றார். நானும் சரி என்று கூறி ஆசிவாதம் வாங்கிக் கொண்டேன். எங்களின் சபரிமலை யாத்திரைக்கான வாரமும் வந்தது. என்னுடைய கன்னி யாத்திரைக்கு இன்னும் ஜந்து நாள்கள் தான் பாக்கி இருந்தன. சரியாக ஜந்து நாள்களுக்கு முன்னர் இரவு நான் நல்லா உறங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு..... தொடரும். நன்றி.

Tuesday, November 17, 2009

மென்மையான ஆப்பம்

சுவையான மென்மையான ஆப்பம் வித்தியாசமான செய்முறையில் கூறுவதாக சொல்லியிருந்தேன் அல்லவா. அது எப்படினு பார்க்கலாமா? அட ஒன்னும் கஷ்டம் இல்லிங்க நீங்க வழக்கமா அரைக்கறது கூட ஒரு சின்ன வேலை செய்தா போதும். சரி மாவு அரைப்பது எப்படி என்று பார்க்கலாமா?

தேவையான பொருட்கள் :
1. புழுங்கல் அரிசி 3 டம்ளர்.
2. வெந்தயம் அரைப்பிடி(கைப்பிடியளவு)
3.உளுந்து ஒரு பிடி.
4. இளனீர் ஒன்று.

அரிசியை உளுந்து வெந்தயம் கலர்ந்து ஒரு நாலு அல்லது ஜந்து மணி நேரம் ஊறவைத்து இளனீர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். இளனீர் தேங்காய் இளம் வழுக்கையாக இருந்தால் மாவில் போட்டும் அரைக்கலாம். இல்லை என்றால் வெறும் இளனீர் விட்டு அரைக்கவும். இது மாவு அரைப்பதற்க்கான செய்முறை. மாவை பாத்திரத்தில் எடுக்கவும். இனி தான் நம்ம டெக்னிக் பண்ண வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு கரண்டி மாவு எடுத்து ஊற்றி, அந்த மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து நல்ல கூழ் காய்ச்சுவது போல அடுப்பில் வைத்து காய்ச்சவும். இராகி கூழ் காய்ச்சுவது போல காய்ச்ச வேண்டும். இந்த கூழ் சிறிது சூடு தணிந்தது அரைத்த மாவில் போட்டுக் கலர்ந்து வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.மாவு சிறிது புளித்தவுடன் ஆப்பம் ஊற்றினால் சுவையான ஆப்பம் ரெடீ. கூழ் காய்ச்சி செய்து பாருங்கள். மறக்காமல் பின்னூட்டம் இடவும்.

இந்த ஆப்பத்திற்க்கு தேங்காய்ப் பால் மற்றும் குருமா உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி.
ஆப்பம் தேங்காய் பால் செய்வர்கள் எனக்கும் அனுப்பி வைக்கவும். நன்றி.

அய்யப்பனின் அற்புதங்கள்


இன்று இனிய நாள், என் மனதுக்கு மிகுந்த சந்தோசம் தரும் நாள். ஆம், தமிழ் மாதம் கார்த்திகை ஒன்றாம் நாள் தான், எங்களின் பிறந்த நாளை வீட சந்தோசம் தரும் நாள். ஆம் நாங்கள் அந்த கலியுக வரதன், கண் கண்ட தெய்வம், எங்கள் அய்யப்பனைக் காண சபரிமலை யாத்திரைக்காய் மாலையிடும் அருமையான நாள். இன்று முதல் நான் சுகங்களைத் துறந்து, தரையில் படுத்துறங்கி, காலை சிற்றுண்டி தவிர்த்து ஒரு முனிவரைப் போல, சாதுவைப் போல, சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளும் விரத ஆரம்ப நாள். இந்த வருடம் நான் எனது பதினேராம் மலையாத்திரை மேற்கொள்ள உள்ளேன். அந்த கன்னிமூல மகா கணபதியும், காந்தமலை பகவானும் எந்த விக்கினமும் இன்றி எங்களின் யாத்திரையை நிறைவேற்றித் தருமாறு பிரார்த்திக்கின்றேன்.

என் வாழ்க்கையில் தாராபுரத்தில் உள்ள காடு ஹனுமந்தராய சுவாமியும்(எனது முதல் பதிவு), அய்யப்பனும் என் கண் கண்ட தெய்வங்கள். என் வாழ்வில் வரும் இன்பம்,துன்பம் ஆகிய எல்லாவற்றிக்கும் இவர்கள் தான் பொறுப்பு. பல முறை என் வாழ்வில் பல அற்ப்புதங்களை இவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். அதிலும் அய்யப்பன் என் தோழனாக, கடவுளாக, குருவாக, வழிகாட்டியாக இருந்து வழினடத்துபவர். அவர் நான் ஒவ்வெரு முறை மலையாத்திரை முடிந்தவுடன், என் வாழ்க்கையை உயர்த்தியும், மாற்றியும் உள்ளார். அவரின் மலையாத்திரை பயணத்தையும், அவரின் அற்புதங்களையும் தொடராக எழுத உள்ளேன். தங்களின் ஆதரவும் கிடைக்கும் என கண்டிப்பாக நம்புகின்றேன். வாருங்கள் நாம் நமது யாத்திரையைத் தொடங்கும் முன்னர் என்னைப் பற்றியும் எனது நம்பிக்கை பற்றியும் ஒரு சிறு அறிமுகம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

என் சிறு வயதில் என் வீட்டின் பின்புறம் ஒரு முருகன் கோவில் உள்ளது. அங்கு அய்யப்பன் பஜனை, இருமுடிக்கட்டு முதலிய பூஜைகள் நடக்கும். நான் இந்த பூஜைகளில் சென்று கலந்து கொள்வேன். அப்போது இருந்து எனக்கு அய்யப்பன் மீது ஒரு தீராத பக்தி இருந்தது. அந்த பூஜைகளும், பாடல்களும் எனக்கு மிகுந்த சிலிர்ப்பைக் கொடுத்தன. நான் பள்ளியில் நாலாவது படிக்கும் சமயம் எனக்கு பிரேமானந்தன் என்ற நண்பன் அறிமுகம் ஆனான். அவன் தாத்தா அய்யப்பமலைக்குப் பக்தர்களை அழைத்துச் செல்லும் குருசாமி. அவர் தலைமையிலும் இந்த முருகன் கோவிலில் பூஜைகளும்,அன்னதானமும்(ரொம்ப முக்கியம்) நடக்கும். நான் இந்த பூஜைகளில் ஆர்வமுடன் கலர்ந்து கொண்டேன். அந்த வருடம் நானும் போக மிக ஆசைப் பட்டேன். ஆனால் எங்கள் வீட்டில் தகுந்த துணை இல்லாமல், அடுத்தவர்களை நம்பிப் போகக் கூடாது என்று கூறிவிட்டனர். அதனால் என் ஆசை மனதளவில் மட்டும் இருந்தது. அனாலும் எல்லா வருடமும் அய்யப்ப பூஜைகள் நடந்தால், அது யார் செய்யும் பூஜையாக இருந்தாலும் நானும் போய் அமர்ந்து கொள்வேன். இப்படி போகும் காலத்தில் தான் அந்த அய்யப்பன் எங்கள் வீட்டில் ஒரு அற்புதத்தை நடத்தினான். அது

எங்க பெரிய அண்ணா சாலை ஆய்வாளராக, நெடுஞ்சாலைத் துறையில் இணைந்தவுடன் அவருக்கு சேலம் கல்வராயன் மலைப்பகுதியில் வாய்ப்புக் கிடைத்தது. அவரும் ஒரு வருட காலம் அங்கு பணியாற்றினார். அப்போது காட்டுக்கொசுக்கடியினாலும், சரியான வசதியின்மையாலும் மலோரியாக் காய்ச்சல் கண்டது. இந்தக் காய்ச்சலும் அவருக்கு விட்டு விட்டு வந்தது. அண்ணா ஈரோட்டுக்குப் பணி மாற்றம் செய்துப் பின்னர் தாராபுரத்திற்க்கும் பணி மாற்றி வந்துவிட்டார். ஆனாலும் மலோரியா மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்தது.முறையான மருத்துவத்தாலும் மாத்திரைகளாலும் ஒரு வழியாக காய்ச்சலில் இருந்து விடுபட்டார். ஒரு நாள் அலுவகம் சென்ற அவர் மதியத்தின் போது தலையில் கட்டுடன், இருவருடன் கைத்தாங்கலாக வீடு வந்து சேர்ந்தார். என்ன என்று கேட்ட போது வேலையின் போது திடீர்னு ஒரு சத்தத்துடன் மயங்கி விழுந்து, தலையில் அடிபட்டது எனவும் கூறினார்கள். பின்னர் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட், ஸ்கேன் என்று எல்லாம் செய்ததில் டாக்டர் அவர் மலோரியாவிற்காக, அதிகமாக சாப்பிட்ட குளேரோகுயின் மாத்திரைகள் அவருக்கு நரம்புத்தளர்ச்சியை உண்டு பண்ணி, அதன் காரணமாய் வலிப்பு வந்ததாக கூறினார். பின்னர் அவருக்கு அதற்க்கு சிகிச்சை தரப்பட்டது.

அனால் இந்த வலிப்பு அவருக்கு எப்பவும் வராது, சரியாக டிசம்பர் மாதம், முதல் வாரத்தில், ஆறு அல்லது ஏழு தேதிகளில் தான் ஒரு முறை மட்டும் வரும். இப்படி போகையில் ஒரு நாள் எங்கள் வீட்டின் அருகில் உள்ள குருசாமி ஒருவர் அவரை சபரிமலை சென்று வருமாறு கூறினார். அதுவும் எப்படித் தெரியுமா?அந்த வருடம் இந்த வலிப்பு வந்த மறுனாள் இவர் கவலையுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கையில் எதிரில் மிதிவண்டியில் வந்த குருசாமி(தெரிந்தவர் என்றாலும் மிகுந்த பழக்கம் இல்லை) ஆவேசம் வந்தவர் போல சைக்கிளை நிறுத்தி எங்க அண்ணன் சட்டையைப் பிடித்து அடிப்பவர் போல" நீ மலைக்கு போ, போ என்று கத்தியுள்ளார், பின் வண்டியை எடுத்து சென்று விட்டார். எங்க அண்ணாவும் இதை வீட்டில் கூற சரி அடுத்த வருடம் மலைக்குச் செல்லாம் என கூறி, அடுத்த வருடம் எங்க அண்ணா அவரின் நண்பர்களுடன், லாரி ஓனர் சேகர் மற்றும் இலைக்கடை குணாவுடன் சேர்ந்து மாலையிட ஆற்றுக்குச் சென்றார்கள். அங்கு இவரை மாலையிட வந்த குருசாமியும் அவர்தான். அண்ணா அவரிடம் கூற அவர் எனக்கு அன்னைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. வீட்டிற்க்கு வந்து யோசித்துக் கூட எனக்குப் புரியவில்லை, நானும் அதன்பின்னர் மறந்து விட்டேன் என்றார். மாலையிட்ட அந்த வருடமும் அவர் குளியறையில் மயங்கி விழுந்தார். அதற்கு அடுத்த வருடமும் பூஜை செய்யும் போது மயங்கி விழுந்தார். மூன்றாம் வருடம் அவருக்கு மயக்கம் வருவது போல தோன்றவே அவர் படுத்துக் கொண்டார். ஒரு மூன்று மணி நேரம் படுத்திருந்த அவர் பின் கண்விழித்தார். அந்த வருடம் மலைக்குச் சென்ற அவர் என் மூன்றாவது அக்காவின் திருமணத்திற்க்காக வேண்டி மாளிகைப்புறத்தம்மன் மஞ்சமாதா கோவிலில் பூஜை முடித்து சாமி கும்பிடும் சமயம் ஒரு சிறு விபத்து ஒன்று நடந்தது அது....... தொடரும்.


டிஸ்கி: இந்த அழாகான படத்தைத் தன் பதிவில் இட்டு, எனது பதிவுக்கும், என் கணினித் திரைக்கும் இட உதவி செய்த அய்யா தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி.

Monday, November 16, 2009

சுவையான பாகற்க்காய் பொரியல்

என் பதிவைப் படிக்கும் அனைத்து பதிவர்களும், சகோதர சகோதரிகளும் எல்லாரும் ரொம்ப நல்லவங்க. நான் என்ன தப்பு பண்ணாலும் கண்டுக்காம உட்டறாங்க. அல்லது என் மீது இருக்கும் நம்பிக்கையால் கவனிப்பது இல்லை என்று நினைக்கின்றேன். அல்லது என் இராசி நான் தப்பா சொன்னாக் கூட எல்லாரும் பாராட்டுவாங்க போல. அவியல் பதிவைப் படித்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள். ஆனா நான் அந்த பதிவில் மூன்று தவறுகள் செய்து இருந்தேன்.
அந்த மூன்று தவறுகள் என்ன என்றால்,

1. அரைக்கும் போது காரத்திற்க்கு மூன்று பச்சை மிளகாய் போடனும். (காரத்திற்க்கு நான் ஒன்றும் சொல்லவில்லை என்ற சந்தோகம் யாருக்கும் வரவில்லையா?)
2. முதலில் காய்களின் மீது உப்பு. மஞ்சத்தூள் தூவும் போது வாசனைக்கு ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் தூவவேண்டும்,
3. கடைசியாக கொஞ்சம் கடுகை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் தாளித்துக் கொட்டவேண்டும்.

இந்த மூன்றும் நான் அவியல் பதிவில் திருத்தி விட்டேன்,நீங்கள் இந்த முறையில் செய்யும் போது மீண்டும் படிக்கவும். (என்ன சுசி,சத்தியா இதுக்கு எல்லாம் தோப்புக் கரணம் போடச் சொன்னா அழுதுருவேன், ஆமாஆஅ.) தவறுகளுக்கு மன்னிக்கவும் நன்றி. இன்னிக்குப் பதிவுக்குப் போகலாம்.

நிறையப் பேருக்கு பாகற்காய்ன்னா பிடிக்காது, அதிலையும் சமைத்து விட்டால் குழந்தைகளையும், ரங்கமணிகளையும் சாப்பிடக் கெஞ்சனும். காரணம் கசப்புதாங்க.
கொஞ்சம் கசப்பு இல்லாமல் சுவையாக சமைத்தால் அவங்களே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அதுக்கான பதிவுதான் இது. இந்த முறையில் அனைவரும் ஏற்கனவே சமைப்பார்கள். இரத்த அழுத்தம், இரத்த சுத்தி மற்றும் சாக்கரை வியாதிக்கு மருந்தான பாகற்காய் ரொம்ப நல்லது. அதை சாப்பிடாமல் விடலாமா?. ஆதலால் சுவையாக சமைத்து உண்பது எப்படி என்று பார்க்கலாம். இது எனக்கு ரொம்ப பிடித்த பொரியல், ஆதலால் தான் இந்த பதிவு.

தேவையான பொருட்கள் :

1.பாகற்காய் கால் கிலோ,
2. பெரிய வெங்காயம் மூன்று,
3. தக்காளி இரண்டு,
4. மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் அல்லது காரத்திற்க்கு ஏற்ப,
5. உப்பு தேவைக்கு ஏற்ப,
6.பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்,
7.மஞ்சத்தூள் ஒரு ஸ்பூன்,
8.புளித்தண்ணீர் அரை டம்ளர்,
9.வெல்லம் அல்லது அஸ்கா இரண்டு ஸ்பூன்.
10. எண்ணெய் நாலு ஸ்பூன்.

பாகற்காயை ஒன்று அல்லது ஒன்றை அங்குல நீளமூம், மெல்லியதாகவும் நறுக்கவும். வெங்காயத்தை நாலா நறுக்கிப் பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை எட்டுத்துண்டுகளாக நறுக்கவும். இவைகளை நறுக்கி முடித்த பின், ஒரு வாணலியை அடுப்பில் இட்டு நாலு ஸ்பூன் எண்ணெய் விட்டு (எண்ணெய் அதிகமாக ஊற்றவும், வத்தக்குழம்பிக்கு ஊற்றுவது போல.) கடுகு, மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் விட்டு தாளித்துப் பின் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கும் போது தக்காளியும் இட்டு வதக்கவும். இவை சிறிது வதங்கியவுடன் நறுக்கிய பாவற்க்காயை போட்டு ஒரு களறுக் களறிப் பின் அதில் புளித்தண்ணீர் அரைடம்ளர் ஊற்றிப் பின் மிளகாய்த்தூள், உப்பு, சக்கரை அல்லது வெல்லம் போடவும்.(எலுமிச்சை அளவு வெல்லம் பொடித்துப் போட்டால் சுவையாக இருக்கும் இல்லாவிட்டால் அஸ்கா இரண்டு ஸ்பூன் போடவும்). இதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு தட்டைப் போட்டு மூடிவிடவும். கவனிக்கவும் தண்ணீர் மீது எண்ணெய் மிதக்க வேண்டும்.
இருபது நிமிடங்கள் கழித்துத் தட்டை எடுத்து விட்டு தண்ணீர் ஆவியாகும் வரை விட்டுப் பின் பாகற்காயை இலேசாகக் கிளறவும். முக்கியமாகப் பாகற்காய் எண்ணெய்யில் சுருள வதங்கவேண்டும். எண்ணெய்யில் சுருள வதங்கினால் தான் அந்தக் கசப்பு குறையும். கொட்டியானவுடன் எண்ணெய் அதிகாமாக இருந்தால் கொஞ்சம் வடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அல்லது ஹாட் பேக் டப்பாவில் போட்டு மூடிவையுங்கள். எண்ணெய்யுடன் இருந்தாலும் சாதத்தில் இந்த பொரியலை பிசைந்து சாப்பிடலாம்.

இந்த பொரியலை சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம் அல்லது சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். எனக்கு சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் பிடிக்கும். நன்றி.

டிஸ்கி : நாளை சுவாஸ்யமான அனுபவ பதிவு ஆரம்பம்( ரம்பம்). பதிவர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகின்றேன்.

Friday, November 13, 2009

ராணி என் மகாராணி - மஜா கவிதை

சில்லென்று மணக்கும் மல்லிகையைத்
தலையில் சூட்டி,அள்ளி அனைத்து
ஆதரவாய் கரம் கேத்து மகிழ
வரும், ராணி என் மகாராணி,

ஜாதி மல்லியின் வாசத்தில்
நீ ஒரு உயர் ஜாதி என
உன் பாதம் தாங்கி அழகு பார்க்க
வரும், ராணி என் மகாராணி,

செண்பகமே மணம் வீச
உன் கூந்தல் என் முகத்தில்
அலைபாய,ஆனந்தமாய் நான்
மயங்க, ராணி என் மகாராணி,

காம்பு தாங்கா ரோஜப்பூ
உன் கூந்தலின் ஓரத்தில்
அழகு சேர்க்க, நான் மயங்கி
நிற்க, ராணி என் மகாராணி,

முல்லை மலரனிந்து சிங்காரித்து
முத்து பல் வரிசையில்
நீ சிரிக்க, நான் இரசித்து
மகிழ, ராணி என் மகாராணி,

மெட்டு அவிழ்ந்த தாமரை போல
கட்டு அவிழ்ந்த காமத்தில் மயங்கி
மார்கழி குளிர் போக அனைத்து
விழி நீருடன் இருமனமும் கலர்ந்து
இருக்க, ராணி என் மகாராணி

தாழம்பூ மயக்கத்தில் பினைந்திடும் பாம்புகளாய்
நாம் இருக்கும் நாள்,எந்த நாளே
நீ வரும் நாளும்,எந்த நாளே
ராணி என் மாகாராணி.

டிஸ்கி: கவிதையைப் படித்து யாரும் தப்பா எடுத்துக்காதிங்க. நம்ம அறிவு அப்ப அப்ப இப்படித்தான் கிளைவிடும்.
கொஞ்ச நாளா தனிமை ரொம்ப பேரடிக்குது. அதுனால எங்க வீட்டுல ஒரு தங்க மணியைப் பார்க்க சொல்லிவிட்டேன். அடுத்த ஜீன் அல்லது ஜூலையில் மோளம் கொட்டியிரலாம் என்று ஆசை.
இம்ம் தங்கமணி வந்து இதைப் படித்து உதைக்கப் போறா. உதை வாங்க நானும் ரெடீய்ய்ய்ய்ய்.
நன்றி.

திருட்டுச் சோறு

எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் நான் எப்பவும் இரண்டாம் வரிசை பெஞ்சு மாணவன். என் கல்லூரி நாட்களில் நான் மூன்றாம் வகுப்புப் பிரிவின்(மூன்றாவது பீரியட்)போது தமிழ் அல்லது ஆங்கில வகுப்பில் இறுதி வரிசைக்குச் சென்று விடுவேன். ஏன் தெரியுமா அங்குதான் பெஞ்சுக்கு அடியில் வெளி ஊர்களில் இருந்து வரும் மாணவர்களின் சாப்பாட்டு பாக்ஸ் வைத்துருக்கும். நான் அந்த பாக்ஸை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து(திருடி) கொஞ்சம் சாப்பிட்டு விடுவேன். சாப்பாடு நல்லா இருந்தா முக்கால்வாசி எடுத்துச் சாப்பிட்டு விடுவேன். நண்பர்களும் சாப்பாடு கம்மியாக இருந்தால், நான் தான் சாப்பிட்டேன் என்று விட்டு விடுவார்கள். இது பல நாள்கள் நடந்தது. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், திருட்டுச் சாப்பாடு தனி சுவைதாங்க. நான் வகுப்பில் அனைவரின் அன்புக்கும் உரியவன் என்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

ஒரு நாள் வெள்ளிக்கிழமை நான் மூலனூர் சி.கார்த்திகேயன் என்பவன் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டேன். சாம்பார் சாதம் சுவையாக இருந்தது. நானும் முக்கால் வாசி சாப்பாட்டைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டேன். பின் என் வீட்டுக்குச் சென்று மதிய உணவை ஒரு கட்டுக் கட்டி விட்டு கல்லூரிக்கு வந்தேன். அப்ப நண்பர்கள் அனைவரும் மரத்தடியில் நின்றிருந்தார்கள். நான் அவர்கள் அருகில் சென்றதும், கார்த்தி என்னிடம் "சுதா என் சாப்பாட்டை நீயா சாப்பிட்டாய்" எனக் கேக்க, நான் ஆமா கார்த்தி இன்னைக்கு "உன் சாப்பாடு சூப்பர்" என்றேன். அவன் "அய்யோ! அய்யோ! அதையா சாப்பிட்டாய்? என சத்தமாகக் கேட்டான். நானும் புரியாமல் ஆமாம் என்று மகிழ்ச்சியாக கூற. அவன் "டேய் அது கறிக்குழம்புடா எனவும், போச்சு அய்யர்வாள் கறி சாப்பிட்டுட்டார்" எனக் கிண்டல் செய்தான். அவன் சொன்னதும், என் நண்பர்கள் கார்த்தி, செந்தில், கனகு, முகுந்தன், இராமச்சந்திரன், ஸ்ரீனிவாசன்,சக்திவேல், குப்புசாமி,வாசு மற்றும் மணி அனைவரும் என்னை நல்லா ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள். எல்லாரும் இதுதான் சமயம் என்று அவர்களுடன் தோழிகள் உமா மகேஷ்வரி,கண்மணி,பாரதி,பெஸிலியா,சுசிலா,மல்லிகாவும் சேர்ந்து கொண்டார்கள். சுதா வேணும்னா சொல்லு, நாங்க செய்து எடுத்து வர்றேம்ன்னு அவங்க ஒரு பக்கம். ஏறக்குறைய மொத்த வகுப்பும் நான் கறிக்குழம்பு சாப்பிட்ட விசயத்தை வைத்து என்னை நல்லா கும்மு,கும்முனு கும்மி எடுத்தார்கள். நான் அழாத குறை. கார்த்தியிடம் டேய் நிசமா சொல்லு அது கறிக்குழம்பா எனக் கேக்க அவனும் ஆமாம் என்றான்.

மதியம் ஆரம்பித்த இந்த ஓட்டுதல் மாலை மூன்று மணி வரை தொடர்ந்தது. பின் என் முகம் வாடியதைப் பார்த்த கார்த்தி, என்னிடம் கவலைப் படாத சுதா அது சாம்பார்தான் என்று கூறினான். பின் நான் நம்பாமல் பார்க்க, வகுப்பு இடைவேளையின் போது அவன் எல்லார் முன்னிலையிலும் எழுந்து நின்று, எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை கறி செய்ய மாட்டார்கள் என்றும், அதுவும் இது ஆடி மாதம் என்பதால் கண்டிப்பாகக் கறி சமைக்க மாட்டார்கள். எனவே சுதா சாப்பிட்டது சாம்பார் சாதம்தான் என்றும் கூறினான். நானும் ஒரு வழியாக சமாதானம் ஆனேன். அப்புறம் முகுந்தன் என்னிடம் மாலை கல்லூரி விட்டு திரும்பும் போது தனியாகச் சொன்னான். "டேய் அவங்க வெளியூரில் இருந்து காலை ஏழு மணிக்கே சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விடுவார்கள். மதியம் இந்த டப்பா சாப்பாடுதான். விட்டால் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பித்தான் சாப்பிடுவார்கள். நீ எடுத்து சாப்பிட்டால் அவர்கள் பட்டினி தான் இருக்கனும், அல்லது மாலை அவர்களுக்கு பசி எடுக்கும் என்றான். அப்போதுதான் எனக்கு நான் விளையாட்டாகச் செய்த தவறு புரிந்தது. அது முதல் நான் சாப்பாட்டு டப்பாவை எடுத்து சாப்பிடும் பழக்கம் நின்றது.

ஒரு மூனு நாள் கூட ஆகியிருக்காது, செந்திலும், கார்த்தியும் என்னிடம் கவலையாக, "சுதா நாங்க விளையாட்டாதான் சொன்னேம். நீ எப்பவும் போல சாப்பிடு" என்று சொன்னார்கள். நான் கோவித்து சாப்பிடுவதை நிறுத்தியதாக நினைத்தார்கள். நான் அவர்களிடம் "இல்லைடா நீங்க பசியுடன் இருப்பீர்கள் என்று முகுந்தன் கூறினான்". ஆதலால் தான் சாப்பிடவில்லை என்றேன். அதற்கு அவர்கள் "சுதா நீ சாப்பிட்டாதான் எங்களுக்கு சந்தோசம், சாப்பிடு ஆனா கொஞ்சமா சாப்பிடு" என்றார்கள். நான் என் நண்பர்களின் அன்பில் உருகிப் போனேன். அது முதல் வாரத்தில் என்றாவது ஒரு நாள் நான் அவர்களில் ஒருவர் சாப்பாடை அல்லது எல்லார் சாப்பாட்டிலும் கொஞ்சம் எடுத்து சாப்பிடுவது வழக்கம். அவர்களும் என்னிடம் டேய் எங்க வீட்டுல கறி என்று கொணர்ந்தால், முன் கூட்டியே சொல்லுவது வழக்கம். அல்லது ஸ்பெசலாக(கம்பங்க களி மாதிரி) எதாவது கொணர்ந்தால் சுதா இது வைத்திருக்கேன் எடுத்துக் கொள் என்பார்கள்.

ஒரு நாள் சாப்பிடும் சமயம் நான் எங்க அம்மாவிடம் இந்த கதையைக் கூற, அவரும் எல்லாரும் நல்ல பசங்க ஒரு நாள் அவங்க எல்லாரையும் நம்ம வீட்டுக்குச் சாப்பிட கூப்பிடு என்றார். நானும் நண்பர்களை எங்க வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து அளித்தேன். அதில் கார்த்திக்கு மட்டும் என்னிடம் ரொம்ப கோவம். நானும் ஏண்டா என்று விசாரிக்க அவன் சிரித்துக் கொண்டு இவ்வளவு நல்லா, சுவையா உங்க வீட்டில் சமைக்க, நீ எப்பிடிடா எங்க சாப்பாட்டை சாப்பிடுற? என்றான். நண்பர்கள் அனைவரும் பாராட்டிச் சென்றனர். இந்த கார்த்தி தற்போது காவல் துறையில் பணி புரிகின்றான். அவன் கோவை டவுன் ஹால் காவல் நிலைய துணை ஆய்வாளராக பணி புரிந்த போது சந்தர்ப்ப சூழ்னிலை காரணமாக நான் அவனிடம் ஜம்பது ரூபாய் கடன் வாங்கினேன். மறுமுறை கோவை சென்றால் அவனிடம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் விதி என்னைச் சென்னைக்கு மாற்றிப் பின் சிங்கப்பூருக்கும் மாற்றியது. இப்போ அவன் எங்கு உள்ளான் என்பது எதுவும் தெரியாது. நான் மட்டும் அவனுக்கும், அவன் போட்ட சாப்பாட்டுக்கும், கொடுத்த ஜம்பது ரூபாய்க்கும் கடங்காரனாய் உள்ளேன். அந்த நல்ல நண்பர்கள் தொடர்பும் இப்போது இல்லை. ஆனாலும் ஒரு நாள் கார்த்தியை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி.

டிஸ்கி:
1.ஒரு பதிவரின் பின்னூட்டத்தில் மேனகா சத்தியா தன் தோழிகளுடன் கூட்டாஞ் சேறு சாப்பிட்டதாக போட்ட பின்னூட்டதைப் படித்ததின் விளைவுதான் இந்த பதிவு. இந்த பதிவைப் படித்து திட்டவும், ஆட்டோ அனுப்புவதாக இருந்தால் அவருக்கு அனுப்பவும் நன்றி.

2.சனி ஞாயிறுக்கும் சேர்த்து இரு பதிவுகள். அவியல் பதிவையும், இந்த பதிவையும் படித்துப் பின்னுட்டம் இடுங்கள் நன்றி. மகிழ்வான வார இறுதிக்கு வாழ்த்துக்கள்.

சுவையான அவியல்

அவியல் அனைவரும் செய்வதுதான், ஆனால் நான் முன்னர் சொன்ன மாதிரி, நான் வித்தியாசமான வகைகளை, வித்தியாசமாக, சுவையாகச் செய்வதுதான் என் முறை. இந்த அவியலையும் வித்தியாசமான முறையில், வித்தியாசமான செய்முறையில் சொல்லுகின்றேன். செய்து பாருங்கள் கண்டிப்பாய் நல்ல பாரட்டுக்கள் கிடைக்கும். அவியலில் ரொம்ப முக்கியம் காய் நறுக்குவதுதான். காய்கள் ஒன்றை அங்குல(அல்லது இரண்டு) நீளமும், முக்கால் அங்குல அகலமும் கொண்ட நல்ல சைஸில் நறுக்கினால் காய் அழியாது, குழையாது. ஆதலால் நான் முதலில் காய் நறுக்குவதைத் தான் சொல்லப் போறன். ஒகே பதிவுக்குள்ள போலாம்மா.

தேவையான பொருட்கள் :
காய்கள் :
வெள்ளைப் பூசனி ஒரு பத்தை, மஞ்சப் பூசனி ஒரு பத்தை, பீன்ஸ் கொஞ்சம், கொத்தவரங்காய் கொஞ்சம், முருங்கைக்காய் இரண்டு, உருளைக் கிழங்கு மூன்று, சேனைக் கிழங்கு கால் கிலோ, சேப்பங்கிழங்கு நாலு. கத்திரிக்காய் கால் கிலோ, காரட் நாலு,தக்காளி மூன்று, இன்னமும் சோவ் சோவ்(பெங்களூர் கத்திரி) போன்ற காய்கறிகள், உங்களுக்கு பிடித்தமான காய்களைச் சேர்க்கலாம். முள்ளங்கி, பீட்ரூட், வெண்டைக்காய்,பாகற்காய் போட்டால் அவியலின் நிறம், சுவை கெட்டுவிடும் ஆதலால் இவை நாலு தவிர மீதம் கிடைக்கும் காய்களைச் சேர்க்கலாம். சரியா?

அரைக்க :
தேங்காய் ஒன்று அல்லது ஒரு மூடி,
சீரகம் மூன்று ஸ்பூன்,
சின்ன வெங்காயம் ஒன்று,
பூண்டு மூன்று பல்.
பச்சை மிளகாய் மூன்று.

தேங்காய் எண்ணெய் மூன்று ஸ்பூன்.

முதலில் கத்திரிக்காயை நாலா வெட்டி சிறு சிறு துண்டுகள் ஆக்கவும், நீரில் இடவும்.கிழங்கு வகைகளை உருளைக்கிழங்கை பெரியதாக இருந்தால் எட்டாகவும், சிறியதாக இருந்தால் நாலாகவும் வெட்டவும். சேனைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டாக ஒன்றை அங்குல நீளமும், முக்கால் அங்குல அகலமும் கொண்ட துண்டுகளாக நறுக்கவும். காய்கள் எல்லாம் ஒரே அளவில் நறுக்கவும், சேப்பங் கிழங்கையும்,காரட்டையும்,பூசனிகளையும்(கொஞ்சம் பெரியாதாக) இது போல நறுக்கவும். பீன்ஸ், கொத்தரவங்காய் போன்றவற்றை ஒன்றை அங்குல நீளம் இருக்குமாறும், முருங்கைக் காய் இரண்டு கனுக்கள் நீளம் இருக்குமாறு நறுக்கவும். நறுக்கிய காய்களைத் தனித் தனியாக வைத்துக் கொள்ளவும்.

செய்முறை :
ஒரு அகலமான வாணலியில் முதலில் அடிப்பகுதியில் வேகக் கடினமான காய்கறிகளான கிழங்குகள், பீன்ஸ், காரட், முருங்கைக்காய் மற்றும் அதிக நேரம் வேகும் காய்களைப் போட்டு, அதன் மேல் சீக்கிரம் வேகும் காய்களான கத்தரிக்காய்,பூசணிகள், தக்காளி மற்ற காய்களும் இட்டு அதில் தேவையான அளவு உப்பு,பெருங்கயாத் தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள்(கொஞ்சமாக தூவவும்,அவியல் கலர் மாறிவிடும்) தூவிப் பின்னர் முக்கால் டம்ளர் தண்ணீரைத் தெளித்த மாதிரி ஊற்றவும். (முக்கிய கவனம்: அடிப்பகுதியில் இருக்கும் காய்கள் மட்டும் தண்ணீரில் மூழ்கலாம். காய்கள் முழுதும் மூழ்கும் வண்ணம் தண்ணீர் ஊற்றக் கூடாது). இனி மிதமான(மீடியம்) சூட்டில் அடுப்பை வைத்து ஒரு தட்டைப் போட்டு வாணலியை மூடி வைக்கவும். ஒரு முப்பது நிமிடங்கள் சூடு ஆகட்டும். (கவனிக்கவும் காய்களைக் களறக் கூடாது, அப்படியே மூடிவிடுங்கள்). அதற்க்குள் அரைத்து விடுவேம்.

அரைக்கும் பொருள்களான தேங்காய், தேங்காய் அளவு காய்களைப் பொறுத்து, நிறைய காய்கள் இருந்தால் ஒரு காயும், அளவாய் இருந்தால் ஒரு மூடியும் போதும். தேங்காயை முதலில் துருவல் செய்து அதில் மூன்று ஸ்பூன் சீரகம், தோலுரித்த ஒரு சின்ன வெங்காயம், மூன்று பல் பூண்டு,பச்சை மிளகாய் ஆகியன சேர்த்து மைய அரைக்கவும். நீர் அதிகம் விடாமல் விழுது போல அரைக்கவும். இப்பத் தட்டை எடுத்துப் பார்த்து காய்கள் வெந்துருக்கும் அளவைச் சேதிக்கவும். பின் இந்த விழுதை அந்த காய்களின் மீது கொட்டிப் பின் விழுது அரைத்த மிக்ஸி ஜாரில் ஒரு அரைத் தம்ளர் நீர் விட்டு அலம்பி, அந்த நீரைக் காய்களின் மீது தெளிக்கவும். காய்கள் ஏற்கனவே வெந்துருந்தால் அரை டம்ளரும், இன்னமும் வேக வேண்டியிருந்தால் முக்கால் டம்ளர் தண்ணீரும் விடவும். இப்பவும் களறக் கூடாது. காய்கள் ஏற்கனவே வெந்து இருந்தால் விழுது இட்டு பத்து நிமிடமும், காய்கள் இன்னமும் வேகவேண்டியிருந்தால் இருபது நிமிடமும் சிம்மில் வைத்துத் தட்டை மூடி சூடு செய்யுங்கள். இருபது நிமிடங்கள் கழித்து தட்டை எடுத்துவிட்டு, மிகவும் மெதுவாகவும், பொறுமையாகவும், மேலும் கீழுமாய் விழுது நல்லா கலக்கும் வண்ணம் களறி விடவும், களறுவதற்கு அப்பளம் பெரிக்கும் சட்டுவதைப் பயன்படுத்தலாம்(ஓட்டைக் கரண்டி). காய்கள் சிதையா அல்லது உடையா வண்ணம் பக்குவமாக கிளறவும். பின் தண்ணீர் இஞ்சும் சமயம் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்கள் தேங்காய் எண்ணெய்யில் வதங்கும் வண்ணம் மெதுவாக கிளறி, கொட்டியாகி,வாசம் வந்ததும் இறக்கி வைக்கவும். இப்ப அவியல் ரெடீ.

இந்த அவியலை சாதம், அடைதோசை போன்றவற்றிக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த அவியல் நல்லா ஆறியதும், இந்த அவியலில், அப்ப சாப்பிடத் தேவையான அளவு மட்டும் எடுத்து, உறைந்த, அதிகம் புளிக்காத தயிரில் சிறிது தண்ணீர் விட்டு,(தயிர் கொட்டியாக இருந்தால் தண்ணீர் விடவும், இல்லை என்றால் வெறும் தயிரில்) காய்களைப்(அவியல்) போட்டு கலர்ந்து கொள்ளவும்.மிச்சம் இருக்கும் தயிர் சேர்க்காத அவியல் மீதியை பிரிஜ்ஜில் வைத்து விடவும்.பின் உபயேகப் படுத்தும் முன்னர் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்யலாம்.உப்பு கம்மி என்றால் தயிரில் உப்பு சேர்க்கலாம். இறுதியாக கடுகு மட்டும் தேங்காய் எண்ணெய்யில் தாளித்துக் கொட்டவும்.

இதில் வித்தியாசம் என்ன என்றால் அவியலில் சின்ன வெங்காயமும் பூண்டும் சேர்ப்பதுதான். இவை சாப்பிடாதவர்கள் சேர்க்காமலும் செய்யலாம். செய்முறையில் காய்களைத் தனித்தனியாக வேக வைக்க அவசியம் இல்லை. காய் நறுக்குவதுதான் சிரமம். மற்றபடி இது போல செய்தால் அவியல் செய்வது சுலபம். செய்து பார்த்துவிட்டு சொல்லவும். தக்காளி போட்டால் நல்லா இருக்கும் போடாவிட்டாலும் சரி. நன்றி.

டிஸ்கி: அடுத்த திங்கள் பதிவில் நாம் வித்தியாசமான செய்முறையில் மிகவும் சாப்ட்டாகவும், சுவையாகவும் ஆப்பம் செய்வதைப் பார்ப்போம். நன்றி.

சகோதரியும், கவிதாயினியும் ஆன ஹேமா அவர்கள் நான் கல்யாணமாம் கல்யாணம் பதிவில் எனக்கு அவியல் பிடிக்கும் என்று நாலு முறை சாப்பிட்டுக் கூறியதால் அவியல் அவ்வளவு பிடிக்குமா? என்று கேட்டு பதிவிட சொல்லியிருந்தார். ஆகையால் இந்த பதிவு ஹேமா ஸ்பெசல்.

Thursday, November 12, 2009

அவன் தான் மனிதன் - நிறைவு

அத்தையின் மரணம் நடந்து சில வருடங்கள் கடந்தன. மைனரின் மகன் பெரியவன் ஆனான். அவருக்கு சாமியின் மூத்த மகளை மைனர் பெண் கேட்க, சாமியின் மகளுக்கும் விருப்பம் இல்லை. மறுபடியும் அந்த குடும்பத்துடன் சம்பந்தம் செய்ய சாமிக்கும் விருப்பம் இல்லை. மைனர் அரசுப் பணியாசிரியை ஒருவருக்குத் தன் மகனை மணம் செய்வித்தார். கொஞ்ச காலம் கழித்து, நல்ல வாட்ட சாட்டமான மைனருக்கு வந்தது இரத்தப் புற்று நேய். அந்தக் காலத்தில் புத்து வியாதிக்கு மருந்து கிடையாது. இப்போது செய்வது போல இரத்த மாற்று சிகிச்சையும் கிடையாது. மைனர் இரத்த வாந்தி எடுத்து இருமி, இருமிச் செத்தார். ஒரு குவளை தண்ணீர் குடித்தாலும் அதே அளவு இரத்த வாந்தி எடுப்பார். மிகவும் மெலிந்து, அமிழ்ந்து, படுத்த படுக்கையாய் பல நாட்கள் கஷ்டப் பட்டு இறந்தார்.

மைனரின் மகனும் நல்லவர். ஆனாலும் குடி அவரைக் கெடுத்தது. தன் சொத்துக்களில் பாதியைக் குடித்து அழித்தார். அவரின் மனைவி அவரிடம் இருந்து விலகிப்,பணியின் காரணமாக தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் பின்னலாடை நகரில் குடி பெயர்ந்தார். கொஞ்ச காலத்தில் அவரும் மறைந்தார். அவரின் மனைவி இந்த சொத்து வந்த கதை எல்லாம் கேள்விப் பட்டு, நிலங்கள் அனைத்தையும் விற்று விட்டு நகரில் குடியேறிவிட்டார். என் சித்தப்பாவும் பொன்னையாவிற்குச் சொத்துக்களை விற்றார். பாப்பா அத்தை மட்டும் தனது சகோதரனுடன் ஜமின் வீட்டில் வசித்து வந்தார். என் அப்பா அத்தையின் வருமானத்துக்காகத் தன் நிலங்களை பாப்பா அத்தையின் பராமரிப்பில் கொடுத்தார். அத்தையின் மறைவுக்குப் பின் பொன்னையனும் மறைய, அவரின் மகனுக்கு எங்கள் பங்கு நிலங்களை என் அம்மாவின் வற்புறுத்தலின் காரணமாய் விற்றார். இப்போது எல்லாரும் எல்லா சொத்துக்களும் விற்ற நிலையில் யாருமின்றி அந்த ஜமின் வீடு மட்டும் பூட்டி இருக்கின்றது.

என் தந்தைக்கு பிரச்சனைகள் வந்த போது எல்லாம், தன் தங்கை கனவில் வந்து ஆறுதல் கூறியதாக என் தாயிடம் சொல்லியுள்ளார். பல சமயங்களில் அவருக்கு கனவில் செய்தி சொல்லியுள்ளார். அவர் தனது 73 மூன்றாம் வயதில் இரட்டை ஹிரண்யா அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது அவருக்கு இரத்த அழுத்தம் தொடர்ந்து 180 முதல் 145 வரை இருந்தது. அவருக்கு உறங்க காம்போஸ் மருந்து டிரிப்ஸ் மூலம் கொடுக்கப் பட்டது. நானும் என் அண்ணாக்களும் அவர் உறக்கத்தில் அவர் கையை ஆட்டி விடாமல் பிடித்துக் கொண்டு இரவும் பகலும் கண்விழித்துக் காத்து இருந்தோம். அப்போது நான் ஒரு கையில் புத்தகமும், மறு கையில் அப்பாவின் கையையும் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன். அப்போது ஒரு ஹீம்ம்ம் என்று சத்தத்துடன் எழுவது போன்ற அசைவு அவரிடம் காணப் பட்டது. நான் பயத்தில் அப்பா, அப்பா என்று அவரை உலுக்க, அவர் கண் விழித்த அவர் சிரிப்புடன் என்னிடம் "அம்மா எங்க?" என்று கேட்டார். நான் வெளியில் அமர்ந்த அம்மாவை அழைக்க, என் அம்மாவிடம் எங்க அப்பா குழந்தையைப் போல சிரித்துக் கொண்டு சொன்னார். "கனவில் லஷ்மி வந்தாள்,அவள் என்னிடம் "அண்ணா நீ கவலைப் படாத உனக்கு இன்னமும் நாள் இருக்கு, நீ நல்லா இருப்பாய் என்று கூறிச் சென்றாள்" என்று முகமலர்ச்சியுடன் கூறினார்.அடுத்த இரு நாளில் அவர் பூரண குணம் பெற்று வீடு திரும்பினார்.

தன் பதிமூன்று வயதில் மணம் புரிந்து,பதினேட்டு வயதில் இல்லறம் தொடங்கிய சாமி. தொடர்ந்து 73 மூன்று ஆண்டுகள் என் தாயை விட்டு பத்து நாட்கள் கூட பிரிந்து இருந்ததில்லை. வீட்டின் அவரின் எல்லா வேளையும் அவரே செய்வார். எங்கள் வீட்டில் சாதம் சமைத்தவுடன், சாப்பிடுவதற்கு முன் அந்த சாதத்தை பெருமாளுக்கு நிவேதனம் செய்து,காக்கைக்கும் ஒரு பிடி வைத்து, பின்னர் சாப்பிடுவதுதான் வழக்கம். அதாலால் எங்கள் வீட்டில் தினசரி குளித்து விட்டுதான் சமைப்பது வழக்கம். அதுபோல குளித்து விட்டு பின் தண்ணீர் எடுப்பதும் வழக்கம். என் தந்தைதான் பெருமாளின் திருனாமங்கள் கூறியவாறு தண்ணீர் பிடிப்பார்.தண்ணீர் எடுத்த உடன் காப்பி குடித்து பின்னர் ஒரு மணிணேரம் பூஜையில் ஈடுபடுவது அவர் அன்றாட வழக்கு. நல்ல திடமான ஆரோக்கியத்துடன் தனது 89 வயது வரை வாழ்ந்த அவர், கடந்த 2008 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி காலை வழக்கம் போல நாராயணா, நாராயணா என்று உச்சரித்தவாறு குளித்த அவர் திருமண் என்று அழைக்கும் நாமம் இடுவதற்க்காக தலை நிமிர்ந்த அவர் தடுமாறி மயங்கினார். என் அம்மா அவருக்கு காப்பி எடுத்து வந்தவர் அதை மேஜையில் வைத்து விட்டு அவரை "என்னங்க" என்று தாங்கிப் பிடிக்க முடியாமல் அப்படியே படுக்க வைத்தார். அப்போது அவரை மருத்தவமனையில் சேர்க்க தலையில் ஸ்கேன் செய்ய வேண்டும் எனவும் கோவை அழைத்துச் செல்லவும் கூறினார்கள். கோவை பி எஸ் ஜீ மருத்துமனையில் அவருக்கு மூளையின் மத்திய நரம்பு மண்டல முக்கிய நரம்பான சென்ரல் வெரிக்குலர் நரம்பு வெடித்து மூளையில் மொத்தம் 16 இடங்களில் இரத்தம் கட்டியுள்ளதால் அவருக்கு மூளைச்சாவு ஏற்ப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரின் உடல் உறுப்புகள் தொடர்ந்து செயல் புரிகின்றன. எப்போது மரணம் சம்பவிக்கும் எனத் தெரியாது என்றனர். வலி, வேதனை என்று எந்த உணர்வுமில்லாமல் கேமாவில் இருந்த அவருக்கு தூக்கத்தில் இருதய வலி வந்து மறுனாள் உயிரிழந்தார்.பதிமூன்று வயதில் ஆரம்பித்து 73 மூன்று ஆண்டுகள் மணவாழ்வில் அவருடன் சில நாட்கள் கூட பிரியாமல் வாழ்ந்த என் அம்மா இப்போது பேரன், பேத்தி என்று எங்களுடன் இருந்தாலும் வருத்ததுடன் இருக்கின்றார். ஒரு நல்ல மனிதரைப் பத்தி உங்களுடன் பகிர்ந்து கொண்டது எனக்கு மிக்க சந்தோசம். விடாது படித்து ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது அடுத்த விறு விறுப்பான அனுபவத் தொடர் வரும் செவ்வாய், கார்த்திகை முதல் நாள் அன்று தொடரும். அதுவும் அற்புதமான என் சொந்த வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைக் கொண்ட தொடர். அதற்க்கும் இது போன்ற ஆதரவு அளித்து உற்சாகப் படுத்துமாறு வேண்டி நன்றியுரைகின்றேன். நன்றி. சுபம்.