Wednesday, January 13, 2010

புளி (பழைய ) சாதம்

என்னதான் சுவையாக சமைத்துப் போட்டாலும் சில நாள் சாதம் மீதியாகிப் போய்விடுவது உண்டு. சாம்பார் அல்லது இரசம் என்று அவைகள் காலியாகி, வெறும் சாதம் மட்டும் இருந்தால்,அந்தப் பழைய சாதத்தை எப்படி ரங்கஸ்(உண்மையைச் சொன்னால் தங்ஸ்) தலையில் கட்டுவது எனபது கொஞ்சம் குடைச்சல்தான். இது மாதிரி செய்தால், மறுமுறை சாதம் மீந்தால் ரங்கஸ்(தங்ஸ்) கேக்குற அளவுக்கு நாம் சுவையாக மாற்றுவது எப்படி என்பதுதான் இந்தப் பதிவு. இது பெண்களுக்கு மட்டும் அல்ல, தனியாக சமைத்துச் சாப்பிடும் இளம் வாலிபர்களுக்கும் பயனுள்ள பதிவு. சரி நாம் புளி பழைய சாதம் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

1.பழைய சாதம்
2.புளி ஒரு உருண்டை(எலுமிச்சை அளவு)
3.மிளகாய்ப் பொடி (ஒரு ஸ்பூன்)
4.பொருங்காயத்தூள்(அரை ஸ்பூன் )
5.பெரிய வெங்காயம் 2
6.தாளிக்க - கடுகு,கறிவேப்பிலை,வெள்ளுத்தம் பருப்பு,நல்ல எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.
7.உப்பு தேவைப்படும் அளவு.
8.மஞ்சத்தூள் சிறிது.

செய்முறை :
சாதம் மீதியான உடன் (மதியம் அல்லது இரவில்) அந்த சாதத்தை ஒரு பேஸின் அல்லது பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். சாதம் இருக்கும் அளவுக்கு ஏற்பத்தான் பொருட்கள் சேர்க்க வேண்டும். இந்த புளி(பழைய)சாதம் புளியோதரைப் போல அவ்வளவு புளிப்பாக இருக்கக் கூடாது. கொஞ்சம் புளிப்பு இருந்தால் போதும். ஆதலால் ஒரு உருண்டைப் புளியைக் கொஞ்சம் தண்ணியாகக் கரைத்து, அந்த கரைசலை அடுப்பில் விட்டுக் கொதிக்க வையுங்கள்.கொஞ்சம் சூட்டின் போது அதில் சாதத்திற்க்கு போதுமான அளவு உப்பு, பெருங்காயத்தூள்,மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி ஆகியன சேர்த்துக் கொதிவிடவும். புளித்தண்ணீர் பச்சை வாசம் போய் நுரைக் கட்டியவுடன், இறக்கிச் சாதத்தில் ஊற்றிக் கலந்து ஊறவைக்கவும். இரவில் மீதியானல் காலை வரையும், மதியம் மீதியானல் இரவு வரைக்கும்,காலை மீதியானல் மதியம் அல்லது மாலை வரைக்கும் ஊறட்டும். ஒன்றும் ஆகாது.

பின்னர் சாப்பிடும் முன்,வெங்காயத்தைச் சிறிது நீளம் உள்ள துண்டுகளாக(உப்புமாவில் போடுவது போல) நறுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் நாலு அல்லது ஜந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி (நல்ல எண்ணெய் கொஞ்சம் எதிர்க்கும்.ஆனால் பிடிக்கும் என்றால் கலக்கவும், இல்லை என்றால் சமையல் எண்ணெய் போதும்),அதில் கடுகு,கறிவேப்பிலை, வெள்ளூத்தம் பருப்பு மற்றும் நறுக்கிய வெங்காயத்தப் போட்டு வதக்கவும். (மிளகாய் பொடி காரம் வேண்டாம் என்பவர்கள் புளியில் மிளகாய்ப் பொடி போடாமல், தாளிக்கும் போது இரண்டு பச்சை மிளகாயை சேர்க்கலாம்).வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய உடன் ஊறிய சாதத்தைப் போட்டுக் குழையாமல்,அடிப்பிடிக்காமல் மெதுவாக மேலும்,கீழுமாய்க் கிளறவும். சாதம் சூடு ஆனவுடன் மற்றும் நல்லாக் கலந்தவுடன் இறக்கவும். சூடு ஆறும் முன்னர் சாப்பிடவும். ஒருமுறை இது போல செய்து சாப்பிட்டால் இது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.இன்னமும் சுவை சேர்க்க வேண்டும் என்றால் கொத்தமல்லி,சீரகம் வரமிளகாய் வறுத்து அரைத்துப் பொடி செய்து,தாளிக்கும் போது கலர்ந்து கொள்ளவும். ஆனால் இதைவீட வெறும் புளியில் செய்தால் சிம்பிள் ஆகவும் சுவையாகவும் இருக்கும்.

சாம்பார் அல்லது இரசத்துடன் மதியம் சாதம் மீதியானல் அதை இரவில் பின் வருமாறு சாம்பார் சாதம்,இரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் செய்யவும்.

சாம்பாரை ஒரு பச்சை மிளகாயைக் கையில் கிள்ளிப் போட்டுச் சூடு செய்து, சாதத்தில் கலந்து கொள்ளவும். இரசத்தில் ஒரு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போட்டு நல்ல தளர்க்கப் பிசைந்து(கையால்), பிசையும் போது மிளகாயை முழுதுமாகப் பிசையாமல்,காரம் உரைக்கும் அளவுக்கு மெதுவாக பிசையவும். பிசைந்த இரசம் சாதத்தை அடுப்பில், தணலை ஸ்ம்மில் வைத்து சூடு செய்யவும். கொஞ்சம் சாதத்தில் தயிர் உப்புப் போட்டுப் பிசைந்து, அதில் கடுகு, கறிவேப்பிலை, மோர்மிளகாய் வத்தல் அல்லது மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து,சாதத்தில் சேர்த்து கலக்கவும். சாம்பார் சாதம்,இரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் ரெடீ. இதுபோல பழைய சாதங்களைக் கலர்ந்து தொட்டுக்க அப்பளம்.வடாம் மற்றும் ஊறுகாயுடன் தந்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

டிஸ்கி: 1.இது இரவில் சாப்பிட்டால் தூங்கும் போது சிலருக்கு சிறிது வயிறு பொருமல் ஏற்படும். இரவு மீதியான சாதத்தில் காலை சாப்பிடுவது சரி. எனக்கு காலை நீராகம்(ஊறுகாய் அல்லது மாவடுவுடன்) அல்லது இது போல செய்து சாப்பிடுவதுதான் மிகவும் பிடிக்கும். நன்றி.
2. கவனம் : புளி(பழைய) சாதத்தில் உப்பு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சரியான அல்லது குறைவான அளவில் சேர்த்தால் தான் சுவை சரியாக இருக்கும்.
3. எல்லாரும் பொங்கல் செய்ய பதிவு போட்டால் நான் பழைய சாதத்திற்க்குப் பதிவு போடுகின்றேன். என்ன செய்ய நான் தான் பித்தன் ஆயிற்றே. அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
" பொங்கிடும் பானையைப் போல உங்களின் இல்லத்தில் மங்களம் யாவும் பொங்கிட,
பொங்கும் உவகையுடன் வாழ்த்தும் உங்களின் அருமைச் சகோ.சுதாகர்."
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களுடன் நன்றிகளையும் கூறிக்கொள்ளும் சுதாகர்.

"பொங்கலோ பொங்கல். பொங்கலோ பொங்கல்"

16 comments:

  1. Supera than yosikireenga.Naan satham meethi irunthal athai pongala seythuduven.

    ReplyDelete
  2. //தனியாக சமைத்துச் சாப்பிடும் இளம் வாலிபர்களுக்கும் பயனுள்ள பதிவு.//

    அப்போ.. இது என் போன்ற தனியாக சமைத்து சாப்பிடாத இளம் வாலிபர்களுக்கு கிடையாது.

    ReplyDelete
  3. புளி சாத வாழ்துக்கள், ஸாரி,

    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. டிரை பண்ணிட்டாப்போச்சி.....எதுக்கும் இன்ஷூர் பண்ணி வைக்கவா பித்தன் அவர்களே....

    ReplyDelete
  5. எனக்கு பு(லி)ளி சாப்பிடுவதென்றால் கிலியாதான் இருக்கும்.

    பொங்கல் வாழ்துகள் சகா

    ReplyDelete
  6. வீட்ல எனக்கு பொங்கல் அன்னைக்கு புளி சாதம் கெடச்சா அத அப்டியே உங்களுக்கு கொடுத்திடுவேன் ஹிஹிஹி .....

    ReplyDelete
  7. அட இந்த விஷயத்திலும் கலக்குறீங்களே. ஹ்ம்ம். சூப்பர்.

    ReplyDelete
  8. //சாதம் மீந்தால் ரங்கஸ் கேக்கும் அளவுக்கு நாம் சுவையாக மாற்றுவது எப்படி//

    ரங்க்ஸ் கேட்பதெல்லாம் அந்த காலம்!

    தங்ஸ் தான் இப்போ கேட்பார்கள்!

    ReplyDelete
  9. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ரொம்ப நல்ல ஐடியா

    எங்க அம்மா சாதம் மீதியானால் தண்ணீர் விட்டு காலையில் மோர், சின்ன வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி தழை சேர்த்து கரைத்து அதுக்கு மசால் வடை தொட்டு சாப்பிட கொடுப்பாங்க.


    நீங்கள் சொல்வது போல் தான் இரவே புளிபோட்டு ஊறவைத்து காலையில் தாளித்து சாப்பிடுவோம்.

    ReplyDelete
  10. அண்ணா முக்கியமானத சொல்லாம விட்டுட்டீங்களே :((

    ஆபீஸ்ல இருக்கும்போது அதுவும் நேரம் 14:20 க்கு இத படிக்க கூடாதுன்னு ஒரு முன் குறிப்பு போட்டிருக்கலாம்ல..

    சொன்ன விதத்தில ரொம்ப பசிக்குது.. :))

    ReplyDelete
  11. பொங்கல் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  12. பொங்கல் வாழ்த்துக்கள். நாங்க இதே புளி(பழைய) சாதத்தை கொஞ்சம் வேற மாதிரி செய்வோம். அது ஒரு பதிவு போட்டர்லாம். உங்க ஊரு ஆளுக்கு ரொம்ப பிடித்தது.

    ReplyDelete
  13. நல்ல ஐடியா!! பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நன்றி விஜி, பொங்கல் பண்ணினால் மட்டும் பத்தாது. அதை எங்களுக்கும் பார்சல் அனுப்பவும்.
    நன்றி அறிவிலி, தனியா ஓட்டல்ல வித,விதமாக சாப்பிடுகின்றேம்ன்னு கொஞ்ச நாளைக்கு சந்தோசப்படுங்கள். அப்புறம் உங்களுக்கு இந்த மாதிரி சாதம் கண்டிப்பா கிடைக்கும்.
    நன்றி சங்கர், தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    // டிரை பண்ணிட்டாப்போச்சி.....எதுக்கும் இன்ஷூர் பண்ணி வைக்கவா பித்தன் அவர்களே.... //
    நன்றி தமிழரசி, நல்லா இருக்கும், கண்டிப்பா செய்யுங்க, இன்ஷீர் எதுக்கு புளி சாதத்துக்கா? நம்மை எதுவும் ஒன்றும் செய்யாது.
    நன்றி வேடிக்கை மனிதன், பு(லி)ளி என்றால் தமிழ்னாட்டில் பலருக்கும் பயம்தான்.
    நன்றி மகா, பொங்கல் அன்னைக்கு புளிசாதம் கண்டிப்பா பண்ண மாட்டாங்கன்னு உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?
    நன்றி நவாஸுதீன், என்ன இப்படி சொல்லிட்டிங்க, என்னுடைய சமையல் பதிவுகளில், மசால பொரி,கடலை மசால், வெள்ளரி மசால் எல்லாம் படித்துச் செய்து பாருங்கள்.
    நன்றி வால்ஸ், நீங்கள் சொல்வது உண்மை, நான் பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்.
    // எங்க அம்மா சாதம் மீதியானால் தண்ணீர் விட்டு காலையில் மோர், சின்ன வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி தழை சேர்த்து கரைத்து அதுக்கு மசால் வடை தொட்டு சாப்பிட கொடுப்பாங்க. //
    ஆகா ஆகா படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகின்றது ஜலில்லா, பழைய சாதமும் சின்ன வெங்காயமே நல்ல காம்பினேசன், அதுல மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை வேறா. சூப்பர். நல்லா வயிறு நிறைய குடித்து(சாப்பிட்டு) விட்டு, அப்படியே ஒரு ஒருமணி நேரம் வேப்ப மர காற்றில், கயித்துக் கட்டிலில் தூக்கம் போட்டா என்ன சுகம். ஆகா ஆகா. ஜலில்லா கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டீர்கள்.
    நன்றி சுசி, ஆகா மத்தியான 2.20 வரைக்கும் சாப்பிடாமல் பதிவு படித்தால், வயிறு என்னத்துக்கு ஆகும். நான் சாப்பிட்டுக் கொண்டே பதிவுகள் படிப்பது வழக்கம்.
    நன்றி சிங்ககுட்டி,
    நன்றி தெய்வசுகந்தி, நாங்க எல்லாம் வித விதமா தின்பதில் பலோ ஆளுங்க. அதோ சமயம் பாராட்டுவதில்லும் பஞ்சம் வைக்க மாட்டேம். பதிவு போடுங்க காத்துள்ளேம்.
    நன்றி சுவையான சுவை, என்ன ஆச்சரியம், இன்று கடைசி பின்னூட்டமா, என்ன வேலைங்களா?
    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  15. ருசியான சாதவகைகளெல்லாம் செய்கிறீர்களே.

    எங்கள் வீட்டிலும் முன்னர் சாதம் மிஞ்சினால் புளிச்சாதம் தான் செய்வோம்.

    ReplyDelete
  16. அக்கார வடிசல் நெத்துன்னு தான் இருக்கு.

    அதில் நான் கீழே நோட்டில் போட்டு இருந்தேனே படிக்கலையா. இதற்கு முன்று கரண்டி நெய் தேவை படும் நான் முன்று மேசை கரண்டி தான் ஊற்றி உள்ளேன் என்று போட்டு இருந்தேன/ இன்னும் குழைவா வந்தால் நல்ல இருக்கும்/

    (ஆமாம் பழைய சாதம் என் அப்பா தான் ஞாயிற்று கிழமை ஆனால் அதில் நான் சொன்ன எல்லா கலவையையும் சேர்த்து கரைத்து கொடுப்பார்.)

    அது ஒரு நாள் சாப்பிடனும் என்றே சாப்பிடுவோம்/

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.