Tuesday, January 26, 2010

தமிழ்க் ( குடி ) நாடு

கல் தோன்றி,மண் தோன்றாக் காலத்துத் தோன்றிய மூத்தகுடி,எங்கள் தமிழ்க்குடி,
வீரமும்,காதலும்,அன்பும்,பண்பும் காத்திட்ட குடி, எங்கள் தமிழ்க்குடி,
மனிதனாய் பிறப்பது ஒரு வரம் என்றால் அதிலும் தமிழனாய் பிறப்பது சாகவரம் போலும்.
தமிழுக்கும், தமிழ்க்குடி மகனுக்கும் உள்ள சிறப்பு யாதெனில் வீரமும் விவேகமும் ஆகும்.
நான் பிறந்திட்ட குடியும், மொழியும் என்றும் அழியாச் சிறப்பு உடையது.
அவ்வை பாட்டி கூறியது போல

நீர் உயர வரப்பு உயரும்,
வரப்பு உயர நெல் உயரும்,
நெல் உயரக் குடி உயரும்,
குடி உயரக் கோன் உயர்வான்

என்ற பாடலும் நமது முன்னேர்களின் சிறப்பு. இப்படி எல்லாம் நான் நம்ம தழிழ்ப் பாடபுத்தகத்தில்
நான் படித்துப் பெருமை கொண்டது உண்டு. இதுதான் உண்மை என்று நம்பியது உண்டு. இதுதான் நான் பிறந்த நாட்டின், எனது தாய்மொழி மக்களின் சிறப்பும் என்று உவகை கொண்டேன். ஆனால் நான் சென்ற வாரம் நம் தமிழ் நாட்டில் கண்ட காட்சிகள் பலவும் இதற்க்கு இன்னெரு அர்த்தம் உள்ளது என்று புலப்பட வைத்தது. அவை குறித்து எனது கருத்துக்கள் சில.நான் சென்ற ஊர்களான தாராபுரம்,திருச்சி,கல்பாக்கம்,சதுரங்கப்பட்டினம்,ஈரோடு,கருர்,மூலனூர்,சின்னதாராபுரம், சேலம்,செங்கல்பட்டு,தாம்பரம் மற்றும் பல்லாவரம் மட்டும் அல்லாமல் எனது பேருந்துப் பயணத்தின் போதும் வழியில் உள்ள அனைத்து ஊர்களிலும் டாஸ்மார்க் கடைகளிலும் கூட்டம் அலைமோதுவதைக் காண முடிந்தது. மக்கள் கூட்டமாய்,அல்லது தனித்தும் ரோட்டிலேயே சர்வ சாதரணமாய்க் மது அருந்துவதைக் காண முடிந்தது. டாஸ்மார்க்கின் உப தொழில்களாய் வயிற்றைக் கெடுக்கும் பாஸ்ட் புட் பிரியானிக் கடை,பானிபூரிக் கடைகள்,கறுவாடு மற்றும் பிரியானிக் கடைகளும்(சுகாதாரம் இல்லா) கூட்டம் நிரம்பிக் காணப் பட்டன.

குடிக்கத் தண்ணீர் இல்லை என்று கர்னாடகவிடமும்,கேராளாவிடமும் கேட்டு வாங்க வக்கில்லாத அரசு, மக்கள் குடிப்பதற்க்காக தாரளமாய் டாஸ்மார்க்குகளை திறப்பதைக் காண முடிந்தது. இளம் வயது முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி தெருவில் நின்று குடிப்பதையும் காண முடிந்தது. நான் முதன் முதலில் சென்னையில் வேலைக்கு வந்து குடிக்க ஆரம்பித்த போது,யாராவது தெரிந்தவர்கள் பார்த்து விடுவார்களே என்று பயந்து அல்லது வெட்கி ஒரு குற்ற உணர்வுடன் செல்வேம். இந்த குற்ற உணர்வு சில சமயம் குடிக்க விடாமல் தடுத்துக் காப்பாற்றும். ஆனால் எந்தக் குற்ற உணர்வும் அற்று பலரின் முன்னிலையில் திறந்த வெளியில் அனைவரும் சகஜமாய் குடிப்பதைக் காணும் போது தமிழ்க்குடி உண்மையில் இதுதான் என்று தெரியவந்தது. குடிப்பழக்கம் தமிழகத்தில் முன் எப்போது இல்லாத அளவிற்க்கு அதிகரித்து விட்டதும் தெரிகின்றது. இது சகஜமான விசயம் என்று எடுத்துக் கொள்ளப் படுகின்றது.

பழைய பழமொழிகளையும், இப்போது நடைமுறைகளையும் பார்க்கும் போது தமிழ்க்குடி என்ற வார்த்தை தப்பாக அர்த்தம் கொள்ளப்பட்டதா என ஜயம் எழுகின்றது. மளிகைக் கடையில் கூட்டம் அலைமோதும் காட்சி போய் அங்கு ஒருவர், இருவர் இருக்க டாஸ்மார்க்கிலும், பாஸ்ட் புட் கடையிலும் கூட்டம் நிற்பதைக் கண்டேன். இரண்டும் வயிற்றுக்கு ஆகாது என்ற எண்ணம் கூட இல்லாமல் அருந்தும் கொடுமையும் கண்ணுற்றேன்.எங்கும் குப்பை மயம்,சாக்கடை நீர், சுகாதாரம் அற்ற ரோடுகள், நெறிசலான ரோடுகளில் சாப்பிடும் மக்கள், சர்வம் சக்தி மயம் போல தமிழகம் எங்கும் கொசு மயம். கோவில் இல்லா, பள்ளி இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பார்கள். அது போல கொசு இல்லா ஊரைப் பார்க்க முடியாது போலும். மக்கள் சிக்கன் குனியா,டெங்கு,மலோரியா காய்ச்சலில் மருத்துவமனை வாயிலில் காத்துருக்கும் கூட்டமும் காண முடிந்தது.நான் பழைய ஞாபகத்தில் முப்பது ரூபாய்க்கு காய் வாங்க மார்க்கெட் போனேன்,ஆனால் மூன்று காய்கள் கூட வாங்க முடியவில்லை. எல்லாம் விலை ஏறிவிட்டது. கால் கிலோ ஏழு ரூபாய்க்கும் கம்மியாக எந்தக் காயும் இல்லை. என்ன கொடுமை இது. மூன்று ரூபாய் கீரைக்கட்டு கூட ஆறு ரூபாய் ஆகிவிட்டது.விலைவாசி கொள்ளை விலை விற்றாலும் டாஸ்மார்க்கில் தட்ப்பாடற்ற நிலைதான்.தமிழ் நாடு இந்த விகிதத்தில் போனால் காசுதான் முக்கியம் என்று கலாச்சாரம் பின்னால் தள்ளப்பட்டும்,பணம் இருந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற இப்போதைய பழக்கம் ஒரு கலாச்சாரமாகி விடும் அபாயம் உள்ளது.மடை திறந்த வெள்ளம் போல பாயும் சாரய சாம்ராஜ்யம் கொலை,கொள்ளை,குடும்ப பிறழ்ச்சி போன்ற அநாகரிகங்களுக்கு வழி வகுக்கும்.

ஆண்கள் குடிக்க, தாயும், பெண் பிள்ளைகளும் குடும்பம் காக்க வேலைக்குச் செல்லும் அவலமும் நடக்கின்றது. ஞாயிறு மாலை டாஸ்மார்க்கில் இருக்கும் கும்பலைப் பார்த்த நான், ஞாயிறு கூட வேனில் எக்ஸ்போட்டில் மாலை வரை வேலை செய்து களைத்து திரும்பும் இளம் வயது பெண்களைப் பார்த்ததும் வேதனையடைந்தேன். தலை நிறைய பூவும் தாவனியுமாகப் பாட்டும் கும்மாளமும் இருக்கும் இளம் வயது பெண்கள் கசங்கிய சுடிதாரில் ஒரு வித முதிர்வு தட்டி வேலையும், களைப்புமாக வீடு திருபுவதைக் காணக் கூட அந்த தந்தையின் மப்பு இடம் தாராது. தமிழ் நாட்டு மக்களை இப்போது மூன்று விதமான மயக்கங்கள் ஆட்டிப் படைக்கின்றன. ஒன்று குடி, இரண்டு போலி ஆன்மீகம், மூன்று வெற்றுப் பொழுது போக்கான திரைப்படங்கள். இவை மூன்றும் இவர்களின் முன்னேற்றதைக் கெடுத்து மூலையில் முடக்கி வைக்கின்றன.

கள்ளு இறக்கிக் குடிக்கும் காலத்தில் மக்கள் குடிக்கு அடிமையாகி விடுவார்கள் என்று பகுத்தறிவு பகலவன் தந்தை ஈ.வே.ரா பெரியார் அவர்கள் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். இன்று குடிப் பழக்கத்திற்க்கு எதிரான போராட்டமோ,விழிப்புணர்வு இயக்கங்களே எனக்குத் தெரிந்து இல்லை. அவரின் இயக்கங்கள் இப்போது தேவனாதனின் லீலைகளை கண்டு களித்துப் பேசி இன்புற்றுக் கொண்டு இருக்கின்றன. அவர்கள் ஆட்சியாளர்களுக்குப் பயந்து உண்மையை உரைக்காமல் பெரியாரின் அற்புதமான ஜாதிய எதிர்ப்பு, தீண்டாமை,கள் மற்றும் மது ஒழிப்புப் போராட்டங்களை மறந்துபோய், வெறும் கோசங்களாய், இப்போது இல்லாத அல்லது அடங்கிப் போன பார்ப்பன எதிர்ப்பு மற்றும் கடவுள் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் கட்சிக் காசைக் கொள்ளையடிக்கின்றனர். உண்மைப் பெரியாரின் தொண்டர்கள் தீண்டாமைக் கொடுமை செய்யும் அனைத்து மேல் சாதி வர்க்த்தையும், குடி மற்றும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவார்கள். ஆனால் இப்போது எதிர்க்காத அல்லது எதிர்ப்புத் தெரிவிக்காத பார்ப்பனர்களையும் அல்லது வந்து எதிர்க்க மாட்டார் என்ற தைரியத்தில் கடவுளையும் மட்டும் எதிர்க்கின்றார்கள். டாஸ்மார்க்கிலும் இன்ன பிற சுகாதரம்,மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக இவர்கள் போராட மாட்டார்கள்.இந்த உண்மைகளை நான் ஏன் என்று கேட்டால் சில பதிவர்கள் என் பிறப்பின் வர்ணம் பார்ப்பார்கள்.

குளிரும்,பனியும் கொட்டும் மேலைனாடுகளில் ஜீரணம் மற்றும் கதகதப்பான வார்ம்-அப்புக்காக விஸ்கியும்,வோட்காவும்,வைனும் குடிக்கும் பழக்கம். சூடூ அதிகம் உள்ள இந்தியாவிலும் குடிப்பழக்கம் அதிகரிப்பது ஆபத்தான அல்சர் மற்றும் குடல் கான்சர் வியாதிகளையும் அதிகப்படுத்தும். லெப்டே பைரஸிசஸ் என்னும் குடல் அல்லது ஈரல் சுருக்க நோய் பெருமளவு மக்களைத் தாக்கக் கூடும். பீர் அடிப்பது ஒரு சகஜமான விசயம் என்று பள்ளி மாணவர்கள் பருவத்தில் தொடங்கி விடலைப் பசங்களைக் கெடுக்கின்றது.இது கல்லூரி அல்லது வாலிப பருவத்தில் மற்ற ஹாட் ஜயிட்டங்களைக் சுவைக்க வைக்கும் என்று அறியாதவர்களாய் உள்ளனர். எனது இந்த பதிவைப் படிக்கும் பலர், இது அந்தக் காலத்தில் இல்லையா, சேமபாணம் என்ன?சுராபாணம் என்ன? என்று எல்லாம் பின்னூட்டம் இடக்கூடும் ஆனாலும் அந்தக் காலத்தில் மறைந்து,மறைந்து குடிப்பார்கள்.குடிகாரர்கள் சமுகத்தினாலும்,நல்லவர்களாலும் ஒதுக்கப் படுவார்கள். இப்போது குடிக்காதவர்களை வித்தியாசமாக பார்க்கின்றார்கள்.இன்னும் ஒரு பின்னூட்டம் இடுவார்கள் நீ என்ன யோக்கியமா, நீ குடிக்கவில்லையா, ஆட்டம் போடவில்லையா, என்றும் கேக்கலாம், ஆனால் இந்தப் பதிவு வரும் தலைமுறை மற்றும் சமுதாய கலாச்சாரம் குறித்த பயம் மற்றும் அதன் நன்மை குறித்த பதிவுதான்,தனிப்பட்ட தாக்குதல் அல்ல. மொத்தத்தில் குடி என்ற சொல் அடையாளம் மாறிப் போய்விட்டது. தமிழகம் முழுவதும் குடிப்பழக்கம் சர்வ சாதரணமாய் உள்ளது. ஒரு வெட்கம்,அச்சம்,நாணம் அல்லது உடல் நலன் பற்றிய விழிப்புனர்வு சுத்தமாய் இல்லாது போய்விட்டது. தமிழக அரசு டாஸ்மார்க் மூலம் சத்தம் இல்லாமல் ஒரு மகத்தான சாதனை புரிந்துள்ளது. உன்னாவிரதம் இருக்காமல், யாருக்கும் கடிதம் எழுதாமல் தமிழ் நாட்டைத் தமிழ்க் குடி நாடு என்ற பெயர் மாற்றப் புரட்சி செய்துள்ளனர். இதுக்கும் ஒரு பாராட்டு விழா எடுத்தால் நன்றாக இருக்கும். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும்,அதை ஆதரரிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தப் பாராட்டுப் பெருந்தும். பொதுவாக மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் கம்யூனிஸ்டுகள் கூட டாஸ்மார்க்கும், அதிகரித்து வரும் குடிப்பழக்கத்திற்கு எதிராய் குரல் எழுப்பாதது வேதனை.
நமது நாட்டிற்கு மீண்டும் ஒரு காந்தி,வினேபாபா, தந்தை பெரியார் பிறந்துதான் இந்த கள்ளூன்னாமையை வற்புறுத்த வேண்டும் போல உள்ளது. நன்றி. அடுத்த பதிவில் நம் நாட்டில் இருக்கும் அடுத்த மனம் மயக்கியான ஆன்மீகப் புரட்டல் களை எழுத உள்ளேன், நன்றி.

டிஸ்கி : இன்று இந்தியக் (குடி)யரசு தினம் ஆதலால் அனைவருக்கும் (குடி)யரசு தின வாழ்த்துக்கள். நன்றி.

14 comments:

 1. ஊருக்கு போய் வந்தாலே உடனே வீரமாக அது சரி இல்லை இது சரி இல்லைன்னு பதிவு போடுறாங்க சார்.

  ரஜினி பாணியில் சொல்வதென்றால் அவர்களை
  உதைக்க வேண்டாமா ?
  :)

  ReplyDelete
 2. நமது நாட்டிற்கு மீண்டும் ஒரு காந்தி,வினேபாபா, தந்தை பெரியார் பிறந்துதான் இந்த கள்ளூன்னாமையை வற்புறுத்த வேண்டும் போல உள்ளது. நன்றி. அடுத்த பதிவில் நம் நாட்டில் இருக்கும் அடுத்த மனம் மயக்கியான ஆன்மீகப் புரட்டல் களை எழுத உள்ளேன், நன்றி.
  .........அண்ணாச்சி, தமிழ் "குடி" மக்களை குறித்த பதிவு, நல்லா இருக்குங்க. ஆன்மீக ஆய்வு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. டாஸ்மாக்கால் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படுவது உண்மை தான்! ஆனால் கள்ளு நீங்கள் சொல்லும் மூத்த குடி தான், பல நூற்றாண்டுகளாக இருக்கிறது!
  அவற்றால் பொருளாதார பிரச்சனையும் இல்லை, பெரிய உடல்நல கேடும் இல்லை!

  அவ்வையார் சொல்லிட்டாரு, காந்தி சொல்லிட்டாரு, பெரியார் சொல்லிட்டாருன்னு எல்லாம் ஏத்துக்க முடியாது,

  இந்த மூணு பேரு குடிக்கலைங்கிரதுக்காக குடிக்கிற மத்தவங்கல்லாம் கேனப்பயலுகளா!?

  குடி கட்டுபாட்டிற்கு வரணும்னா, அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும்!

  ReplyDelete
 4. //காந்தி,வினேபாபா, தந்தை பெரியார் பிறந்துதான் இந்த கள்ளூன்னாமையை வற்புறுத்த //

  Chitra,

  Do not make the mistake of clubbing a twit and swine like EVR with the likes of great personalities like Vinoba Bhave and Gandhi.EVR himself was a drunkard and amassed wealth through cheap means.

  ReplyDelete
 5. ///நமது நாட்டிற்கு மீண்டும் ஒரு காந்தி,வினேபாபா, தந்தை பெரியார் பிறந்துதான் இந்த கள்ளூன்னாமையை வற்புறுத்த வேண்டும் போல உள்ளது////

  முக்கியமான விசயத்தை மறந்துட்டீங்க தலைவரே!!
  பகுத்தறிவு பகுத்தறிவு என்று பேசும் பல அறிவுஜீவிகள் தான் இன்று டாஸ்மாக் வாடிக்கையாளர்கள். உண்மையிலேயே கடவுள் பக்தி உள்ளவர்கள்,வீட்டிலேயே சிலை (சாமி போட்டோ) வைத்து பூஜை செய்பவர்கள் இந்த விசயத்தில் மிகககுறைவுதான்.
  நமது (தமிழ்) நாட்டில் எப்போது கூட்டுக்குடித்தனம் குறைந்ததோ அப்போதே நல்லகுணநலன்கள் (தனி மனித)போய்விட்டது.
  பெத்த அப்பன் சொல்லி கேட்காத பிள்ளையா யார்யாரோ சொல்லிக்கேட்கும்.
  உங்கள் பதிவை படித்துவிட்டு 2 பேர் திருந்தினால் ஒரு ஊரே திருந்தியதற்கு சமம்.

  ReplyDelete
 6. நாளுக்கேத்த நல்ல பதிவு அண்ணா.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. மன்னிக்கவும் கோவி அண்ணா இது வீரமான பதிவு அல்ல, மக்கள் கூட்டம் கூட்டமாக குடிப்பதால் நெந்து போன பதிவு. நன்றி.
  நன்றி சித்ரா,
  நன்றி வால்ஸ், நானும் கள்ளுக்கு ஆதரவாளன் தான். நான் குறிப்பிட்டது அந்தக்காலத்தில் நடந்து போல ஒரு மது விழிப்புனர்வு இயக்கம் வராதா என்பதுதான்.

  வாங்க பெயர் சொல்ல விரும்பா நண்பரே. நீங்கள் பெரியாரை தப்பாக புரிந்து கொண்டீர்கள். அவர் கடவுளையே அல்லது மதக்கோட்பாடுகளையே எதிர்க்கவில்லை. கடவுளின் பெயரால் மனிதனை ஒதுக்கினால் அந்த கடவுளை உதை என்றார். மதத்தின் பெயரால் மனிதனுக்குள் பிளவு வருது என்றால் அந்த மதம் தேவை இல்லை என்றார். என்னைப் பெறுத்தவரை பெரியார் ஒரு மகான். பெரியார் ஒரு வைணவர். அவருக்கு சொந்தமாக ஒரு கோவிலும்,அந்தக் கோவிலுக்கு இன்னும் பெரியாரின் குடும்ப சொத்தில் இருந்து மானியமும் அளிக்கப் படுகின்றது. இதை பெரியார் நிறுத்தவில்லை. அவரும் சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைத்துள்ளார். அவருக்கு பின்னால் வந்த கபோதிகள் தான் அவரின் கருத்தை தவறாக பார்ப்பன எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்புக்கு உபயோகப் படுத்தினார்கள். நன்றி.

  வாங்க ஜய்லானி, தங்களின் கருத்துக்களில் ஓரளவு நியாயம் உள்ளது. ஆனாலும் கோவில்கள் என்பது சக்தி வாய்ந்த ஜீவ மண்டலங்கள். அவை ஒழுங்காக நிறுவப் பட்டு, முறையாக பராமரிக்கப் பட்டால் பயன் தரும். ஆனால் மக்களை கவருவதற்க்காக காம்பளக்ஸ் கோவில் மற்றும் நடைபாதை அடைத்துக் கட்டப்படும் தெருக் கோவில்கள் பெரும்பாலும் சுயனலத்திற்க்குதான் பயன்படுகின்றன. இது குறித்து பின்னர் பதிவு இடுகின்றேன். கூட்டுக் குடித்தனம் குறித்து தங்கள் கருத்துக்கள் உண்மையே ஆனாலும் புரிந்துணர்தலுடன் நடத்தப் படும் குடித்தனங்கள் மட்டும் வெற்றி பெறுகின்றனர். அடங்கிப் போகும் குடித்தனங்கள் தோல்வியில் தான் முடிகின்றது. நல்ல கருத்துக்கள் நன்றி.


  நன்றி சுசி, வாழ்த்துக்கும் வரவுக்கும்.

  ReplyDelete
 8. கண்ணைக் குருடாக்கினால் என்ன? அதான் தொலைக்காட்சிப்பெட்டி வூட்டுவூட்டுக்குக் கொடுத்தாச்சுல்லே?

  டாஸ்மாக்தான் கோடிகோடியா பணம் கொண்டுவந்து கொட்டும் தொழிலாம். அரசு இதை விடவே விடாது. இதைவிட்டா...... இலவச அரிசிக்கு நம்ம பாட்டனா காசு கொடுப்பாரு?

  மூணுதலைமுறையைச் சீரழித்த இவுங்க கொளுகையை... அடச்சீ...த்தூ...............

  ReplyDelete
 9. //குடி உயரக் கோன் உயர்வான்//

  அது மட்டும் தான் நடக்குது ...

  ReplyDelete
 10. //இந்தப் பதிவு வரும் தலைமுறை மற்றும் சமுதாய கலாச்சாரம் குறித்த பயம் மற்றும் அதன் நன்மை குறித்த பதிவுதான்//

  //இப்போது குடிக்காதவர்களை வித்தியாசமாக பார்க்கின்றார்கள்//

  நல்ல பதிவு நண்பா.. வலிக்கின்ற உண்மை.. ஆனால் அதை கூட புரிஞ்சிக்காம (நீங்க சொன்ன மாதிரி) பின்னூட்டத்துல (வீரமான பதிவுன்னு) கேள்வி கேட்க ஆள் இருக்காங்க பாருங்க.. பிரபு மாதிரி, "என்ன கொடுமை சார் இதுன்னு" தான் கேட்க தோணுது..

  //வால்பையன் said...
  இந்த மூணு பேரு குடிக்கலைங்கிரதுக்காக குடிக்கிற மத்தவங்கல்லாம் கேனப்பயலுகளா!?
  குடி கட்டுபாட்டிற்கு வரணும்னா, அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும்!//

  வால்பையன் சார்.. குடிக்கிறவங்க எல்லாம் அப்போ புத்திசாலின்னு சொல்ல வர்றீங்களா?
  டாஸ்மாக்கை மூடினால் வேற எங்கயும் வாங்கி குடிக்க மாட்டாங்களா? கட்டுப்பாட்டிற்கு வர வேண்டியது டாஸ்மாக் இல்ல குடிக்கிறவங்க மனசு..

  ReplyDelete
 11. சமூக விழிப்புணர்வு பற்றிய அவசியமான பதிவு.

  ReplyDelete
 12. //குடிக்கிறவங்க எல்லாம் அப்போ புத்திசாலின்னு சொல்ல வர்றீங்களா?//

  குடியை வைத்து ஒருவர் புத்திசாலி அல்லது நல்லவர் என்று முடிவு செய்ய முடியாது என்று சொல்ல வருகிறேன்!

  //டாஸ்மாக்கை மூடினால் வேற எங்கயும் வாங்கி குடிக்க மாட்டாங்களா? கட்டுப்பாட்டிற்கு வர வேண்டியது டாஸ்மாக் இல்ல குடிக்கிறவங்க மனசு.. //

  இருந்தால் தானே குடிப்பதற்க்கு!

  ReplyDelete
 13. திவ்யா ஹரி, கோவி அண்ணன் எனக்கு மிகவும் பழக்கம். ஆதலால் கிண்டல் பண்றார். வேற ஒன்னும் இல்லை. நாங்க அப்ப அப்ப கருத்து மோதலில் முட்டிக் கொள்வது வாடிக்கை. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். குடிக்கிறவங்க மனசு மாறவேண்டும் என்ற எண்ணம் சரி. அதற்க்குதான் விழிப்புணர்வு இயக்கங்கள் வரவேண்டும்.

  நன்றி மாதேவி.

  வாங்க டீச்சர் ஏன் இவ்வளவு கோபம். அவங்களை திட்டி ஒரு பிரேயஜனமும் இல்லை. அவங்களுக்குத் தேவை காசும் பதவியும்தான். நன்றி டீச்சர்.

  வால்ஸ், இப்ப உடனே டாஸ்மார்க்கை மூடினால் அல்லது ஒயின்ஷாப்களை மூடினால், நாட்டில் கள்ளச்சாரயமும், அதன் சாவுகளும் கூடும். ஆதலால் டாஸ்மார்க் வேலை நேரம் மாற்றம் (மாலை 6 முதல் 10 வரை) மற்றும் 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு விற்பனை இல்லை எனபது போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம். குடிகாரன் குடியை உடனடியாக நிறுத்த முடியாது. என்னை மாதிரி கட்டுப்பாடுகள் வைத்துக் குறைத்து நிறுத்தலாம். நன்றி வால்ஸ்.

  ReplyDelete
 14. //பகுத்தறிவு என்று பேசும் பல அறிவுஜீவிகள் தான் இன்று டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்.//

  அரிய கண்டுபிடிப்பு!

  நான் பார்த்து பாரில் முக்கால்வாசி பேர் பட்டையும், கொட்டையுமா தான் வர்றானுங்க!

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.