Wednesday, October 14, 2009

மசாலாப் பொரியும், மசாலா முறுக்கும்.

மசாலா பொரியும் மசாலா முறுக்கும். இது எங்கள் ஊர் தாராபுரத்தில் மட்டும் விற்க்கும் ஒரு திண்பண்டம். இது 18 மனை கோமுட்டி செட்டியார்கள் எனப்படும் வணிக மக்களால் செய்து சாப்பிடும், விற்க்கும் பொருள். இதை விற்கும் பல கடைகள் இருந்தாலும் மூன்று கடைகள் மிகவும் பிரபலம். அதில் அய்யப்பன், சிவராமன் என்பவர்களிடம் எங்க மூன்றாவது அண்ணன் கேட்டு எங்கள் வீட்டில் செய்து சாப்பிடும் ரெசிப்பி. ஞாயிறு மாலைகளை சுவையுள்ளதாக்க உங்களுக்காக நான் பதிவு இடுகின்றேன். தவறாமல் முயற்ச்சிக்கவும்.

தேவையான பொருள்கள் :
1. பொரி (உப்பு கம்மியாக இருந்தால் நலம். )
2. காரா பூந்தி 100 கிராம்.
3.சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் 10,
4.வரமிளகாய் 6,
5.தனியா அல்லது கொத்தமல்லி ஒரு பிடி,
6.எலுமிச்சை 1,
7. தேங்காய் கால் மூடி.
8.தட்டுவடை (சன்னமானது)
9. அச்சு முறுக்கு
10.தேங்காய் எண்ணெய் 50மில்லி,
11.ஓமப்பொடி,
12.சீரகம் ஒரு ஸ்பூன்.
13.பாசிப்பருப்பு சுண்டல்50கிராம், (தேவைப்பட்டால்) கொஞ்சம்.
14.பெருங்காயம் அரை ஸ்பூன்.

செய்முறை : மசாலா காரப்பெரி:
முதலில் எழுமிச்சம் பழத்தை வெட்டி ஒரு டபராவில் அரைடம்பளர் தண்ணிரில் பிழியவும், சின்னவெங்காயத்தை தோலுரித்து நாலாக நறுக்கி, அதனை சிறு சிறு துண்டுகளாக்கி அதனை எழுமிச்சைத் தண்ணிரில் ஊறப் போடவும். இந்த வெங்காயமும், தண்ணிரும் தான் நமது பொரிக்கு சுவை சேர்க்கும். பின் வரமிளகாய், தனியா, பெருங்காயத்தூள்,சீரகம், குறைவான உப்பு (பொரியில் இருக்கும்) அனைத்தையும் மிக்ஸியில் இட்டு மைய அரைக்கவும். கொட்டியாக விழுதுபோல் இருக்கவேண்டும். தேங்காயை பத்தைகளாக நறுக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு தட்டில் தேங்காய்த் துண்டுகளைத் தனியாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் 50கிராம் பாசிப்பருப்பு சுண்டல் பண்ணவும். அவ்வளவுதான் செய்யவேண்டிய வேலை, இனி பொரி கலக்கும் முறையைப் பார்ப்போம். பொரியை மொத்தமாக கலந்தால் விரைவில் ஊறிவிடும். ஆதலால் ஒவ்வெருத்தருக்கும் தனித்தனியாக கலக்கவும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றார்போல காரம் கலக்க வசதியாக இருக்கும். கலந்து முடித்தவுடன் ஒரு கப்பில் ஸ்பூன் போட்டு சாப்பிட கொடுக்கவும். ஊறிவிட்டால் நல்லா இருக்கும், ஆனாலும் சுவை மாறிவிடும். சரி கலக்க போலாம்மா?.

முதலில் ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் பொரி இரண்டு பிடி (முக்கியமாக பொரியில் கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்) போட்டு அதனுடன் இரண்டு அச்சு முறுக்கு, இரண்டு தட்டு வடையை கையால் சிறியதாக உடைத்துப் போடவும். பின் ஒரு ஸ்பூன் தேங்காய் துண்டுகள், ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு சுண்டல், அரைப்பிடி பூந்தி போட்டு இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கலக்கவும், நல்ல கலந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் கார விழுதும் கொஞ்சம் எழுமிச்சைவெங்காயத் தண்ணிரும்(ஒருஸ்பூன்) விட்டு நல்லா கலக்கி ஒரு சிறிய தட்டு அல்லது கப்பில் போட்டு அதன் மீது சிறு வெங்காயத்துண்டுகளைப் தூவிப் பின் ஓமப்பொடியும் தூவி சாப்பிடக் கொடுங்கள். சிறு குழந்தைகளுக்கு காரம் போடாமல் அல்லது அரைஸ்பூன் காரம் போட்டுக் கொடுக்கலாம். தட்டுவடையும் அச்சு முறுக்கும் கிடைக்காவிட்டால் மிக்ஸர் சேர்த்துக் கொள்ளவும்.

மசாலா காரமுறுக்கு:
பாத்திரத்தில் பூந்தியும், மூன்று அச்சு முறுக்கு மூன்று தட்டு வடை பொடித்துப் போட்டு கார விழுது,வெங்காயத் தண்ணீர், பாசிப்பருப்பு தேங்காய் எண்ணெய், தேங்காய் துண்டு போட்டு நல்லாக் கலந்து, அதன் மேல் வெங்காயத்துண்டுகளையும் ஓமப்பொடியும் தூவினால் மசால கார முறுக்கு ரெடி. பொரி கலக்கும் முறையும் இதுவும் ஒன்னுதான் ஆனால் பொரிக்கு பதிலாக முறுக்கும் தட்டுவடையும் அதிகமாக போடவேண்டும்.

வேண்டுகோள்:
சாப்பிட சுவையாக இருக்கும், சாப்பிடும் போது இன்னமும் சாப்பிடவேண்டும் போல ஆசையாக இருக்கும், அதுக்காக டிபன் மாதிரி சாப்பிட்டால் மறு நாள் பின் விளைவுகள் இருக்கும். ஆதலால் ஒரு கப் பெரியும் ஒரு கப் மசாலா முறுக்குடன் நிறுத்திக் கொள்ளவும். நான் இந்த பொரி சாப்பிட்ட சுவையான ஒரு அனுபவத்தை (அவஸ்த்தை) நான் இன்று பதிவாக (நகைச்சுவை) போடுகின்றேன். படிக்கவும். நாளை மிகவும் சுவையான அருமையான எளிதான வெள்ளரிப் பிஞ்சு மசாலவைப் படிக்கவும், செய்யவும் மறந்துவிடாதீர்கள். நன்றி.

9 comments:

  1. இதுவும் எனக்கு இல்ல....
    ஆனா படிக்கவே சாப்பிடனும்னு தோணுது.

    ReplyDelete
  2. நிறைய வகைகளை இழக்கின்றிர்கள். ஆனாலும் என்ன சென்னை வரும்போது ஒட்டு மொத்தமாக செய்து பார்த்துவிடுங்கள்.

    ReplyDelete
  3. நல்ல சூப்பாரான மாலை நேர சிற்றுண்டி, இது என்ன பேல் பூரி மாதிதி வருது, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பேல் பூரியில் பொரி குறைவாக இருக்கும். காரம் இருக்காது. இதில் காரம் இருக்கும். பொரி அதிகம் போடவேண்டும். இது காரப்பொரி வகையை சார்ந்தது. நன்றி.

    ReplyDelete
  5. ஓ அப்படியா , எல்லா பொருளும் கைவசம் இருக்கும் போது செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி சகோதரி. கண்டிப்பாக செய்துபாருங்கள். அதனுடன் வெள்ளரிப் பிஞ்சு மசாலாவையும் செய்து பாருங்கள். நன்றி.

    ReplyDelete
  7. உங்கள் சமையல் குறிப்புகள் நன்றாக உள்ளன. மண் மனம் மாறமே எழுதுறீங்க. தட்டுவடை, வெள்ளுதம்பருப்பு, அஸ்க்க சக்கரை, மசாலா பொரி இந்த வார்த்தைகள் எல்லாம் படிக்கும்போது 25 வருடம் நாடு விட்டுவந்து மறந்துபோன உணவுகளை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.

    கடந்த ஆயுத பூஜை நாளில் ஒரு நாள் ஈரோடு, பவானி பயணமாக வந்தேன். இரவு Le Jardin உணவகத்தில் குழி பணியாரம், கம்பு தோசை, பால் பொங்கல் என ஈரோடு உணவு வகைகளை சாப்பிட்டோம், என்ன ஒரு ருசி. மண் மனம் அங்கேயும் தவழ்ந்தது.

    அது சரி உங்கள் சமையல் பின்னணியில் உள்ள அம்மா நன்றாக இருக்காங்களா?

    வாழ்துக்கள் தலைவரே.உங்கள் நட்ற்பணி தொடரட்டும்.

    துபாயில் இருந்து உடுமலை அப்துல்.

    ReplyDelete
  8. நன்றி அப்துல், நான் கூட உடுமலைப் பக்கம் தாராபுரம்தான்.

    ReplyDelete
  9. சூப்பராக இருக்கின்றது மாசலா பொரி & முருக்கு...கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டியது தான்...அருமை...

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.