Friday, October 9, 2009

பருப்புத் தொகையலும் புளிக்குழம்பும்

எங்க அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க, குழந்தைகள் சாப்பிடுவதால் உப்பு,காரம், புளி எல்லாம் பார்த்துப் போட்டு சமையல் பண்ணுவாங்க. எனக்கு தெரிந்து அவர்கள் உப்பு காரம் அதிகம் போட்டு சமைத்ததாக நினைவு இல்லை. அவ்வளவு பாந்தமாக சமைப்பார்கள்,என்னடா (அம்மா கோண்டு) அம்மா புராணமா பாடறானுன்னு நினைக்கிறிங்களா. சரி எங்க அம்மா சமையலில் எனக்கு மிகவும் பிடித்த ரொம்ப சுலபமான சமையல் ஜட்டங்கள் தான் இந்த பதிவு. எங்க அம்மா சில ஞாயிற்றுக் கிழமைகளில் பருப்புத் தொகையல்,புளிக்குழம்பு,சீரக மிளகு ரசம் பண்ணுவாங்க. இதுக்கு தொட்டுக்க வடகம் அல்லது இலைவடாம்ன்னு சொல்லற அரிசி அப்பளம் பொறிச்சா அன்னிக்கு சமையல் சூப்பரா இருக்கும். இது எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு. இப்ப எனது மூன்று அண்ணிகளும் நான் ஊருக்குப் போனா சமைத்து அசத்துவார்கள். சரி இப்ப எப்படி பண்ணறதுன்னு பார்க்கலாமா. முதலில் பருப்புத் தொகையலும், புளிக்குழம்பும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பருப்புத் தொகையல்:
1. துவரம் பருப்பு ஒரு பிடி(கையளவு)
2. கடலைப் பருப்பு ஒரு பிடி
3. வெள்ளுத்தாம் பருப்பு அரைப் பிடி
4. தேங்காய் அரை மூடி
5. புளி எழுமிச்சை அளவு.
6. உப்பு இரண்டு ஸ்பூன்.
7.வரமிளகாய் இரண்டு அல்லது மூன்று.
புளிக்குழம்பு:
1.புளி 100கிராம்
2.சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் கால் கிலோ,
3.கடலைப் பருப்பு ஒரு பிடி.
4.மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் இரண்டு ஸ்பூன்.
5. நல்லண்ணெய் மூன்று அல்லது நாலு ஸ்பூன்.
6. மூன்று ஸ்பூன் மிளகாய்ப் பொடி.
7.வெல்லம் எழுமிச்சை அளவு.

முதலில் பேசனில் சின்ன வெங்காயத்தை தண்ணிரில் போட்டு சில நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயத்தை தண்ணிரில் ஊற வைத்து தோலுரித்தால் கண் எரியாது.

அடுப்பில் ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நீர் கொதினிலையை அடைந்த பின் புளியை தண்ணிரில் போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விடவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி ஊறவிடவும். வெந்நீரில் ஊற வைத்தால் புளி முற்றிலுமாக கரையும், கரைப்பதும் சுலபம்.

புளி ஊறுவதற்குள் நாம் பருப்புத் தொகையல் செய்துவிடலாம். கடாயில் அல்லது வாணலியில் அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு (நல்லண்ணெய் அல்ல) எண்ணெய் காய்ந்ததும் மூன்று வகைப் பருப்பும், வரமிளகாயும், பெருங்காயமும்,புளியும் சேர்த்து வறுக்கவும். வறுத்த பின் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். அது ஆறும் போது தேங்காயை வில்லைகளாக நறுக்கி மிக்ஸியில் இட்டு துருவிக் கொள்ளவும். பின் மிக்ஸியில் இருந்து தட்டில் தேங்காய் துருவலை கொட்டிவிட்டு ஆறிய பருப்புக்களை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பருப்பு ஒரு முக்கால் பதத்திற்கு அரைத்ததும் தேங்காய்த் துருவலை விட்டு தண்ணிர் முக்கால் டம்ளர் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து, இரண்டு சுற்றுக்கள் அரைக்கவும். தண்ணிர் அளவாக இடவும். மைய அரைக்காமல் விழுது போல அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கொட்டவும். தொகைய்யலை தாளிக்க அவசியம் இல்லை,தாளித்தாலும் பரவாயில்லை. தொகையல் ரொம்ப கொட்டியாக இல்லாமலும் தண்ணியாக இல்லாமலும் ஒரு பேட்டர் போல தண்ணிர் விடவும்.இப்ப பருப்புத் தொகையல் ரெடி. இந்த பருப்புத் தொகையலை சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். அடுத்து புளிக்குழம்பு பார்ப்போம்.

முதலில் வெங்காயத்தை தோலுரித்து (தோலுரிக்கும் போது சருகுகளை அதை ஊற வைத்த தண்ணிரில் போட்டால் வீடு பூர பறக்காது. பேன் காற்றில் உக்காந்து சீரியல் பார்த்துக் கூட உரிக்கலாம், இந்த தோல் தண்ணியை ரோஜா செடியில் ஊற்றலாம்). வெங்காயத்தை இரண்டு அல்லது நாலு துண்டுகளாக நறுக்கவும். நிலக்கடலை ஸ்சைசில் இருந்தால் போதும். பின் புளியை வெது வெதுப்பாக இருக்கும் போது கரைத்து கசடு வடித்து வைக்கவும். மூன்று டம்ளர் புளிக் கரைசலில் இரண்டு டம்ளர் புளிக்குழம்பிற்கும், ஒரு டம்ளர் அல்லது முக்கால் டம்ளர் ரசத்திற்கும் வைக்கவும். இப்ப அடுப்பில் வாணலி அல்லது கடாயில் மூன்று அல்லது நாலு ஸ்பூன் தாளிக்கும் எண்ணெய் விட்டு அதில் கடுகு, வெள்ளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு இட்டு தாளிக்கவும் கடுகு வெடித்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தை இட்டு வதக்கவும். கடலைப் பருப்பு வறுபட வேண்டிய அவசியம் இல்லை. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இரண்டு டம்ளர் புளித்தண்ணிரும், ஒன்னரை டம்ளர் தண்ணிரும் சேர்க்கவும், பின் அதில் இரண்டு ஸ்பூன் பெருங்காயத்தூள், இரண்டு ஸ்பூன் மஞ்சத்தூள், மூன்று(4) ஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்த்து கொதிக்க விடவும். உப்பு அளவாய் போடவும்(உப்பு கொஞ்சமாக போட்டு சாப்பிடும் போது சேர்த்துக் கொண்டால், மூன்று நாளைக்கு வைத்துக் கொள்ளலாம்).நல்ல கொட்டியாக பேட்டர் நிலைக்கு வரும் போது, வெல்லம் பொடித்துப் போட்டு கரைத்து விடவும்(வெல்லம் இல்லாவிட்டால் அஸ்கா சக்கரை இரண்டு ஸ்பூனும் போடலாம்). பின் கொஞ்சம் கொட்டியானவுடன் நல்லெண்ணெய் மூன்று அல்லது நாலு ஸ்பூன் விட்டு கொதிக்க விட்டு இறக்கவும். புளிக்காய்ச்சலை விட கொஞ்சம் இளக்கமாக இருந்தால் போதும். இப்ப சுவையான புளிக்குழம்பு ரெடி.

இந்த புளிக்குழம்பு, சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். அனைத்து பருப்புத் தொகையலுக்கும் தொட்டுக் கொள்ளலாம், அல்லது உடன் சேர்த்தும் சாப்பிடலாம். மீதி இருப்பின் தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஞாயிற்றுக் கிழமை கொஞ்சம் சேர்த்துப் பண்ணி விட்டால் புதன் கிழமை வரைக்கு சாதத்திற்கும்,கலந்த சாதத்திற்கும், டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் இது அருமையான டிஷ்.பதிவு நீளமாக வந்து விட்டதால் நாளை சளி, மூக்கடைப்பு, வாயுத் தொல்லைகளில் இருந்து காக்கும் சீரக மிளகு இரசம்(பூண்டு) பார்க்கலாம். நன்றி

9 comments:

  1. இது நல்லாருக்கு..
    உங்க அம்மாவ நீங்க நிறைய மிஸ் பண்றீங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. பித்தன்,எல்லாம் புளி புளியா இருக்கு.புளி உடம்புக்கு கூடாதுன்னு சொல்லுவாங்களே.சரியா அது?

    இண்ணைக்கு வெள்ளிக்கிழமை.உங்க அம்மா மெனு சூப்பர்.நினைச்சுகிட்டு சாப்பிட
    வேண்டிய்துதான்.உங்களுக்கே நல்லா சமையல் வருதே .அப்புறம் என்ன !

    அடுத்த கோவில் பதிவும் படித்து அறிந்துகொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  3. இந்த பதிவு நல்லாயிருக்கு.அம்மாவின் கைப்பக்குவமே தனிதான்!!

    ReplyDelete
  4. தல கலக்குறிங்க!

    இனிமே சமையல் நம்ம கண்ட்ரோல் தான்!

    ReplyDelete
  5. //ஞாயிற்றுக் கிழமை கொஞ்சம் சேர்த்துப் பண்ணி விட்டால் புதன் கிழமை வரைக்கு சாதத்திற்கும்,கலந்த சாதத்திற்கும், டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம்//

    அண்ணே,

    உங்க வீட்டுக்கு சாப்பிட வந்தால் எத்தனை நாளைக்கு முன் செய்தது என்று கேட்டுட்டுத்தான் சாப்பிடனும் போல

    ReplyDelete
  6. // இது நல்லாருக்கு..
    உங்க அம்மாவ நீங்க நிறைய மிஸ் பண்றீங்கன்னு நினைக்கிறேன். //
    உண்மைதான் ஆனாலும் கடமை, வாழ்க்கைனு ஒன்னு இருக்கே. நன்றி சுசி.
    // பித்தன்,எல்லாம் புளி புளியா இருக்கு.புளி உடம்புக்கு கூடாதுன்னு சொல்லுவாங்களே.சரியா அது?

    இண்ணைக்கு வெள்ளிக்கிழமை.உங்க அம்மா மெனு சூப்பர்.நினைச்சுகிட்டு சாப்பிட
    வேண்டிய்துதான்.உங்களுக்கே நல்லா சமையல் வருதே .அப்புறம் என்ன ! //
    நன்றி ஹேமா. நான் எங்க இரண்டாம் அண்ணி பிரசவத்துக்காக ஒரு வருடம் சென்னையில் இருந்தார். அப்ப அவங்க சொல்லிக் கொடுத்த சமையலை நான் எங்க அண்ணனுக்கு கல்பாக்கத்தில் செய்துகொடுத்தேன். இதுதான் நம்ம சமையல் வரலாறு.
    // இந்த பதிவு நல்லாயிருக்கு.அம்மாவின் கைப்பக்குவமே தனிதான்!! //
    நன்றி மேனகாசத்தியா. இது மாதிரி நிறைய இருக்கு. படித்து ஆதரவு தாருங்கள்.
    // தல கலக்குறிங்க!

    இனிமே சமையல் நம்ம கண்ட்ரோல் தான்! //
    ஆமா தலைவா இன்னும் நிறைய விசயம் இருக்கு.
    // அண்ணே,

    உங்க வீட்டுக்கு சாப்பிட வந்தால் எத்தனை நாளைக்கு முன் செய்தது என்று கேட்டுட்டுத்தான் சாப்பிடனும் போல //
    பயப்படாதிங்க ஜயா, தைரியமா வாங்க. எங்க வீட்டுல எல்லாம் அளவா பண்ணுவாங்க, மீந்து போன எங்க அம்மா எல்லாத்தையும் வேலைக்கார அம்மாவுக்கு கொடுத்துடுவாங்க. அதுனால தைரியமா வாங்க. நான் மூனு நாளைக்கு சொன்னது வேலைக்கு போற பெண்மணிகளுக்கு. நன்றி.
    அனைவரின் ஆதரவுக்கும் தோழமைக்கும் நன்றி.

    ReplyDelete
  7. //பயப்படாதிங்க ஜயா, தைரியமா வாங்க. எங்க வீட்டுல எல்லாம் அளவா பண்ணுவாங்க, //

    அண்ணே, நான் உங்க வீடுன்னு சொன்னது உங்க பேச்சிலர் வீட்டை.

    ReplyDelete
  8. ஓ உங்கம்மாவின் கை பக்குவமா ம்ம் சூப்பர் காம்பினேஷன்.

    இது துகையல் நாங்க வெள்ளை வாயு கஞ்சிக்கு செய்து சாப்பிடுவோம்.
    பிரமாத விளக்கம் சொல்லி அசத்தி இருக்கீங்கல்.
    தமிலிழில் சம்மிட் செய்யலலையா?

    படமும் போட்டால் நல்ல இருக்கும்

    ReplyDelete
  9. தங்களின் கருத்துக்கு நன்றி. இது எங்க அம்மாவின் கைப்பக்குவம்தான். அவர்கள் எல்லாம் ஊரில் இருக்கின்றார்கள். நான் சிங்கப்பூரில் தனிமையில் இருக்கின்றேன். ஆதலால் படம் போட முடியவில்லை. நன்றி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.