Monday, November 9, 2009

அவன் தான் மனிதன் - பாகம் 3

கிணற்றைப் பயமுடன் பார்த்த லஷ்மி ஒரு காரியம் செய்தாள், அப்போது ஒரு நிமிடம் தன் அண்ணன் சாமியை நினைத்து அழுத அவள், தன் கால் வரை தொங்கும் தன் அழகான கூந்தலை எடுத்து தன் தலையைச் சுற்றி மூன்று சுற்றுக்கள் சுற்றி, அது அவிழ்ந்து விடாமல் முடிச்சும் போட்ட மறு நிமிடம் கிணற்றில் குதித்து விட்டாள். குளத்திற்க்கு துவைக்கப் போய் இரண்டு மணி நேரமாக வரவில்லை என்று அத்தை தோட்டக்காரப் பொன்னையன் என்ற சிறுவனைப் போய்ப் பார்க்குமாறு அனுப்பினாள். பொன்னன் குளத்தில் காணது தேட, அவன் கிணற்றடி மேல் இருக்கும் துணி மூட்டையைப் பார்த்தான். அங்கு வந்த அவன் கிணற்றில் மிதக்கும் லஷ்மியின் பிணத்தைப் பார்த்ததும் " அம்மா! சின்னம்மா செத்துப் போய்ட்டாங்க" என்று கத்திக் கொண்டு ஓடினான். அவன் அலறலைக் கேட்ட ஊராரும் தோட்டத்திற்கு ஓடிப் போய்ப் பார்த்தார்கள். அங்கு அழகிய லஷ்மி பச்சையான கிணற்றில் தங்கமாக மிதந்து கொண்டுயிருந்தாள், அவர்களின் அன்பான லஷ்மி அவர்களையும், அவளின் பாசமுள்ள அண்ணன் சாமியையும், தம்பி மணியையும் விட்டுப் போய்விட்டாள். அவள் கொடுமைகளுக்கு எல்லாம் ஒரு விடுதலை கிடைத்தது.

பின் அது ஜமின் வீடு மற்றும் கர்ணத்தின் வீடு என்பதால் அங்கு தாசில்தார் துரையும்(வெள்ளைக்காரர்), நகர காவல் ஆய்வாளரும் வந்துவிட்டனர்.ஊரார் அவர்களிடம் கொடுமைகளைப் பத்தி புகார் செய்தனர். ஆனால் வெங்கடராமன் அவர்களை சமாதானம் செய்தான். சாமியோ தங்கையின் மரணம் பொறுக்காமல் மயங்கி விழுந்தவன் பேச வார்த்தைகள் இல்லாமல் பித்தம் பிடித்தவன் போல் ஆனான். அவன் உறைந்து மரமாய் நின்றான். அப்போது ஒரு பெண்மணியை விட்டு உடம்பை பரிசேதிப்பது என்று முடிவு ஆனது. அதன்படி பொன்னம்மா என்ற உறவுக்கார பெண் ஒருவர் லஷ்மின் கீழ் ஆடைகளை விலக்கிப் பார்த்தாள். கால் எல்லாம் புளிய விளாரால் அடிக்கப் பட்டு ரணகளமாய் இருந்தது. தொடையில் சூடு போட்ட அடையாளமும் இருந்தது. ஆனால் உறவினர்களும், மைனரும் நடந்தது நடந்து போச்சு, இனிச் சொல்லி என்ன பயன் என்றும், பொன்னம்மாவைக் காயம் ஏதும் இல்லை என்று கூறச் சொல்லி வற்புறுத்தினார்கள். அவர்களின் சொல்லுக்குக் கட்டுப் பட்ட பொன்னம்மாவும் லஷ்மியின் உடலில் காயம் எதும் இல்லை என்று சாட்சி கூற, லஷ்மியின் மரணம் தற்கொலை என்று மைனரின் செல்வாக்கால் மறைக்கப் பட்டது. குளிக்க மஞ்சள் கிடைக்காத லஷ்மியின் உடல் மாலைகளும், மலர்களும் போட்டு அழகாய் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டு இருந்தது. சாமி தன் தங்கையை பார்த்துப் பார்த்து கதறி அழுதான். பழனியில் சுற்றிய அவளின் தந்தைக்கு தகவல் தந்து அவர் வருவதற்க்குள் அவளின் பிணமும் எரிக்கப் பட்டுவிட்டது. சிறுவர்களையும் எதுவும் கூறக் கூடாது என்றும் மிரட்டப் பட்டனர்.

சாமி முற்றிலும் செயல் இழந்து போனான், அவன் என்ன பேசுவது என்று புரியாமல் திக்பிரமை அடைந்தவன் போல ஆனான். திரும்பி வந்த துரைசாமி கத்திக் கூச்சல் போட்டும், நிலைமை கைமீறிப் போய்விட்டது. மைனர் செல்வாக்கில், துரைசாமியாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.
சொத்துக்களைக் கேக்க 25 ஏக்கரா காட்டில் 8 ஏக்கராவும், 20 ஏக்கரா தோட்டத்தில் 8 ஏக்கராவும், ஜமின் வீட்டில் குதிரை மற்றும் மாடுகள் கட்டும் காலியிடமும் இவர்கள் பங்குகாக தரப்பட்டது. துரைசாமியின் பெரிய அண்ணன் சித்ராவுத்தன் பாளையம் கர்ணம் அவர்களின் வீடு தாராபுரத்தில் இருந்தது, அதன் பக்கத்தில் துரைசாமிக்கும் ஒரு காலியிடம் இருந்தது, அங்கு ஒரு வீடு கட்டி, அங்கு வந்துவிடுமாறு சொல்ல துரைசாமியும் இனி சொத்துக்கள் தனக்கு தேவை இல்லை, நான் வாழ்ந்து காட்டுகின்றேன் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு தன் இரு மகன்களுடன் தாராபுரம் வந்தார். வந்தவருக்கு அந்த தாசில்தார் துரை அவர் பழைய கர்ணம் வேலை சிறப்பாக செய்ததால் குண்டடம் கிராம கர்ணம் வேலை கொடுத்தார். தாராபுரத்தில் தன் கையாலயே செம்மண்ணும் செங்கலும் கொண்டு ஒரு சின்ன வீட்டைக் கட்டி அதில் மகன்களுடன் வசிக்க ஆரம்பித்தார். சாமியும், மணியும் தாராபுரத்தில் படிக்க ஆரம்பித்தனர். தோட்டமும் காடும் பொன்னையனிடம் குத்தைக்கு கொடுத்து, இவர்கள் குருப்பனாய்கன் பாளையம் போவதைத் தவிர்த்தனர்.

அத்தைக்காரி இந்த சத்தம் சந்தடி எல்லாம் அடங்கியவுடன் தன் மகனுக்கு இன்னேரு இடத்தில் இருந்து மணமுடித்தார். அவர்களின் வாழ்வும் நன்றாக போயிற்று. வந்த மணமகளும் மைனருடன் குடும்பம் நடத்தி வந்தாள். அவர்களின் இல்லறத்தின் சான்றாக வந்தவளும் ஒரு நல்ல ஆண்மகவைப் பெற்றுக் கொடுத்துவிட்டு பிரசவத்தில் இறந்து போனாள். மைனர் மறுபடியும் தனிமரமானார்.

தாராபுரம் வந்த சாமி அந்த தெரு முழுதும் தன் உறவினர்கள் ஆதலால் நடந்ததை கொஞ்சம் மறந்து படிப்பில் கவனம் செலுத்தினார். துரைசாமி குண்டடம் சென்றுவிட்டதால் பெரியப்பாவும் சித்தராவுத்தன் பாளயம் கர்ணமும் ஆன அவர்களின் வீட்டில் சென்று படிக்க ஆரம்பித்தான். அப்போது குழந்தை இல்லாத அவர்கள் சாமியையும் மணியையும் தங்களின் குழந்தைகளாக பாவித்தனர். பெரியம்மா சாமியிடம் அளவு கடந்த பிரியம் வைத்து இருந்தாள். அப்போது அவர்கள் கர்ப்பமும் தரிக்க, சாமி தங்களின் வீட்டுக்கு வந்த நேரம்தான் குழந்தை வந்தது என்று ஆனந்தப் பட்டு, சாமியை ஒரு நிமிடம் கூடப் பிரியாமல் இருந்தாள். இப்படியாக சாமியின் வாழ்க்கை போயிற்று. அப்போது அந்த தெருவில் இருந்த காரத்தொழுவு கர்ணம் மகன் வரதராஜன் என்பரும் சாமியின் நண்பர் ஆனார். இந்த வரதராஜனுக்கு நகைச்சுவை என்பது கைவந்த கலை. அவர் பத்து நிமிடம் பேசினால் அத்தனை நிமிடமும் அங்கு உள்ளவர்கள் கண்டிப்பாய்ச் சிரிப்பார்கள். அவருடன் இணைந்ததால் சாமியும் பழைய கவலைகளை மறந்து வரதராஜனுடன் நட்பாய் இருந்தான். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாய் இணைந்து இருந்தனர். மெல்ல சாமியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கலாயிற்று. ஆனாலும் அதிலும் வரதராஜனுக்கும், சாமிக்கும் ஒரு குறை இருந்தது அது...... தொடரும்.


டிஸ்கி : இந்த பதிவைத் திருத்திக் கொடுத்த எனது சகோதரி மகள் மற்றும் என்னை ஊக்குவிக்கும் நண்பி பத்து என்னும் பத்மஜாவிற்கு நன்றி.

10 comments:

  1. தன் தலையைச் சுற்றி மூன்று சுற்றுக்கள் சுற்றி, அது அவிழ்ந்து விடாமல் முடிச்சும் போட்ட மறு நிமிடம் கிணற்றில் குதித்து விட்டாள்/////////////
    அட கடவுளே!!!!!!!!!!!


    அடுத்தது எப்போ???

    ReplyDelete
  2. நன்றி கிருத்திகா. அடுத்த பதிவு நாளை இடுகின்றேன். இன்னமும் நாலு நாளில் தினம் ஒரு இடுகை மூலம் தொடரை முடிக்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு..சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க..

    ReplyDelete
  4. இப்ப நான் என்ன செய்ய!?

    ReplyDelete
  5. //வரதராஜனுக்கும், சாமிக்கும் ஒரு குறை இருந்தது அது...... //

    உங்களுக்கும் ஒரு குறை இருக்குண்ணா... சரியான இடத்தில கொண்டாந்து போடுறீங்க பாருங்க ஒரு தொடரும்.... அதான்...

    சும்மா சொன்னேன் :))) நல்ல எதிர்பார்ப்போட முடிக்கிறீங்க

    ReplyDelete
  6. romba naala unga pathivu padikiren.pathil poda ninaithu maranthudaren.supera irukku unga nadai and kadhai.

    ReplyDelete
  7. கதையின் விறுவிறுப்புக் கூடுது.

    ReplyDelete
  8. இனிமேல்தான் சுவையான பாகங்கள் வர உள்ளன. தொடந்து ஆதரவு தாருங்கள்.

    நன்றி சுவையான சுவை,மேனகா சத்தியா,சுசி,ஹேமா மற்றும் விஜி.

    நன்றி விஜி தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும்.

    // இப்ப நான் என்ன செய்ய!? //
    வால்ஸ் எனது ஆரம்பம் முதல் நீங்கள் எனக்கு வழிகாட்டி, அதை தொடர்ந்து செய்யுங்கள். அது போதும் எனக்கு. நன்றி வால்ஸ்.

    ReplyDelete
  9. very sad.....!

    டிஸ்கி : இந்த பதிவைத் திருத்திக் கொடுத்த எனது சகோதரி மகள்


    ....அதானே பார்த்தேன், எழுத்து பிழை ஒண்ணு கூட இல்லாமல், ரொம்ப சரியா வார்த்தைகள் இருக்கு என்று. அண்ணா, This makes lot of difference in the narration of the story. புதுசா போடுற இடுகைகளும் இப்படி செக் பண்ணிடுங்க.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.