Wednesday, April 28, 2010

லீவ் விட்டாச்சு ஹையா லீவ் விட்டாச்சு

THERE IS GOOD NEWS FOR READERS, I WILL STOP WRITTING BLOGS DUE TO GOING BACK TO INDIA. SO NO POST HAS BEEN MADE FOR ANOTHER TEN DAYS. IN MY ABSENSE PLEASE CELEBREAT AND MADE JOLY YOURSELF. U ARE FREE FROM MY BLOG POST.

THANKING YOU FRIENDS I WILL BACK SOON.

Friday, April 23, 2010

அய்யாவாவது ஆட்டுகுட்டியாவது













நான் அடி வாங்கின கதையைக் கேட்டீர்கள், நான் வாத்தியாரிடம் அடி வாங்கிய நிகழ்வு இது ஒன்றுதான். நான் ரொம்ப சமர்த்து என்பதால் (அட நம்புங்கப்பா) இதுக்கு அப்புறமும்,சரி முன்னரும் சரி, அடி வாங்கியதில்லை. இன்னேரு சம்பவம் என் பள்ளி நாளில் என் எச்சரிக்கை மீறியதால் ஒருத்தன் தர்ம அடி வாங்கிய சம்பவம் இது. அடுத்தவன் அடி வாங்கியதையும் சொன்னால் தானே நமக்கு ஒரு ஆறுதல்.

எங்கள் பள்ளியில் ஒரு தமிழ் அய்யா இருந்தார். அவர் பெயர் இப்ராஹிம் அய்யா, நல்லா தாட்டியா, கட்ட முட்டையா இருப்பர். அவரு கை மட்டும் சும்மா சப்பாத்தி மாதிரி தடிமனா விரிந்து இருக்கும். ஒரு அறை விட்டா கன்னம் அப்படியே சிங்கார் குங்குமம் தடவுன மாதிரி சிவந்து விடும்.ஆனால் நல்ல குழந்தையைப் போல அனைவரையும் நடத்துவார். இப்ராஹிம் அய்யா கம்பராமாயணம் நடத்தினால் நாள் பூரா கேக்கலாம், அவ்வளவு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கும். சில சமயம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும்,சில சமயம் அடி பின்னிப் பொடலெடுத்து விடுவார். என் வீட்டின் மீது நல்ல மரியாதை வைத்து இருந்ததால் என்னமே இவர் என்னை அடித்தது இல்லை. அப்புறமும் கேக்கும் கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லிவிடுவேன். படிப்பிலும் குறை வைக்க மாட்டேன். ஆதலால் என்னை அடிக்கும் சம்பவம் இல்லை.

ஒரு நாள் நானும், என் நண்பனும் வகுப்புக்கு கொஞ்சம் தாமதமாகப் போனேம். அய்யா வந்துவிடுவார் என்று வகுப்புக்கு ஓடிப் போனேம். முன்னால் சென்ற நண்பன் ஓடிய வேகத்தில் வகுப்புக்குள் ஒரு கால் வைத்து விட்டான். பின்னர் அய்யா இருப்பதைப் பார்த்து நின்று " உள்ளே வரலாமா? அய்யா என்றான். எங்களுக்கு காலதாமதம் அடிப்பாரே என்ற பயம். ஆனால் அய்யா சிரித்தபடி, "அதான் திறந்த வீட்டில் வருவது போல உள்ளே வந்துட்டியே அப்புறம் என்ன உள்ளே வரலாமா? கூடாதான்னு ? உள்ள வா" என்றார். அவன் உள்ளே சென்றான். நானும் சரி கேக்காம போனா நல்லா இருக்காதேன்னு எக்யூஸ்மி சார் என்றேன். அவர் உடனே" " யேவ் அய்யிரே இந்த லொள்ளுதானே ஆகாது, தமிழ் வகுப்பில் என்ன எச்சுவுச்சு மி?, உள்ளாற வந்து தொலை என்றார். அதில் இருந்து நான் எதாவது சொல்ல எழுந்தால் எச்சுவுச்சு மீன்னு கிண்டல் செய்வார். அதில் இருந்து சில நாள் நான் பள்ளியில் எச்சுவுச்சு மி சுதாகர் ஆனேன். சமிபத்தில் ஒரு நாள் என் சொந்த ஊரில், எங்க தெரு வழியாக நடந்து சென்றார். நான் உடனே ஓடிச் சென்று அவரிடம் நலம் விசாரித்தேன். என்னைத் தெரிகின்றதா சார் என்றேன். அவரும் என்னப்பா உன்னைத் தெரியாம எப்படி இருக்கும், நீ எச்சுவுச்சு மி சுதாகர்தானே என்றார். பின்னர் என் தந்தையின் உடல் நலன் குறித்து விசாரித்துப் போனார். என்னைப் பற்றிக் கேட்டதுக்கு நான் சிங்கையில் இருப்பதைச் சொன்னேன். அவரும் எப்படியோ நல்லா இருந்தா சரி ரொம்ப சந்தோசம்பா என்றி சொல்லி மகிழ்வுடன் சென்றார். சரி, வாத்தியார் பற்றிச் சொல்லிவிட்டேன் பதிவுக்குப் போலாமா?

ஒரு நாள் எங்கள் பள்ளியில் எங்களுக்கு பி.டி கிளாஸ் வந்தது, நாங்களும் விளையாடுவதுக்காக சாட்பால் பேட் மற்றும் பந்தை எடுத்துக் கொண்டு போனேம். அப்போது பேட் என் நண்பன் கார்த்திகேய அய்யப்பன் என்பவனிடம் இருந்தது. அவன் கிரவுண்டுக்கும் நடந்து செல்லும் வழியில் பேட்டை தடி சுழற்றுவது போல சுற்றிக் கொண்டு போனான். நான் டேய் வழியில் யாராவது வருவார்கள் என்றேன். உடனே அவன் "எதுக்கு வாரானுங்க"ஓரமாப் போகச் சொல்" என்றபடி சுழற்றினான். நான் பின்னால் திரும்பிப் பார்க்கவும். கழிவறைக்காக எங்களின் பின்னால் இப்ராஹிம் அய்யா வரவும் சரியாக இருந்தது. நான் உடனே டேய் அய்யா வர்றாருடான்னு கத்தினேன். உடனே அவன் குஷியாக, "அய்யாவாது ஆட்டுகுட்டியாவது" என்று சொல்லிக் கொண்டே திரும்பாமல் சுற்றினான். நான் மறுபடியும் டேய் இப்ராஹிம் அய்யாடா என்றேன் சத்தமாக. சடக்கென்று நிறுத்தி விட்டு,சுதா சும்மா வரமாட்டியா, அய்யா அய்யா வர்றாருன்னு" என்று அவன் சொல்லி முடிப்பதுக்குள் ஒரு நாலு அறை சப்பு சப்பென்று விழுந்தது. அவன் அய்யா அய்யான்னு கத்திக் கெண்டே அறை வாங்கினான். அய்யா சொன்னார், " வழியில் சுழற்றுவது தவறு, அதிலும் இவன் அய்யா வர்றாருன்னு சொல்லியும் சுழற்றுகின்றாய்ன்னு" சொல்லி அடித்தார். அவன் அய்யா, "இவன் விளையாட்டுக்குச் சொன்னான்" என்று நினைத்தேன் என்றான். அவரும்,"அய்யாவாது ஆட்டுக் குட்டியாவது என்று வேற சொல்லுகின்றாய்,எவ்வளவு திமிர்டா உனக்கு" என்று சொல்லி,மொத்தமாக ஒரு முப்பது அறை விழுந்து இருக்கும். நானும் என் நண்பர்களும் அமைதியாய் இருந்து விட்டேம்.

அய்யப்பன் நல்ல சிவந்த பையன், வாங்கிய அறைகள் மேலும் அவன் கன்னத்தை நல்லா சிவக்க வைத்து விட்டது. கன்னத்தை தடவியபடி என்னைப் பார்த்தான். உடனே நான், "டேய் நாந்தான் சொன்னேன் இல்லை, அய்யா வர்ராருன்னு, அதுக்கு அப்புறம் ஏண்டா சுத்தினாய்" என்றேன். "எனக்கு என்ன தெரியும் நீ தமாசுக்கு சொன்னாய்" என்று நினைத்தேன். "இப்ராஹிம் அய்யா என்று நீ மொதல்லே சொல்லியிருக்கலாம்" என்றான். சரி சரி விடுடா என்று விளையாட கிரவுண்டுக்குப் போனேம்.

நீங்களும் எல்லாரும் ஒழுங்கா ஒழுங்கா கமெண்ட் போட்டுவிடுங்கள் இல்லை என்றால் அய்யாவிடம் சொல்லி விடுவேன். நன்றி.

Wednesday, April 21, 2010

சொல்லிச் சொல்லி அடிச்சாங்கப்பா















முஸ்கி: நம்ம பட்டாபட்டி, போன பதிவில் சார், சார் ஒரு கதை சொல்லுங்கன்னு சொன்னார். அவருக்கு குஷிப்படுத்தும் வகையில் என் அனுபவத்தைப் பதிவாய்ப் போடுகின்றேன். இது அவருக்கு இன்னமும் குஷியாயிருக்கும்.

சுதாக்குட்டி(நான்) ரொம்ப சமத்துப்பையன், (ஹலோ என்ன பிலாக் விட்டுப் ஓடிப்போறிங்க)அப்படின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லிப்பாங்க. அதுபோல படிக்கறப்ப நான் கொஞ்சம் சமத்துதான்(இப்ப இல்லை). ஆனா இப்பவும்,அப்பவும், எப்பவும் எங்கிட்ட ஒரு குறை, என்ன என்றால் யாராது தவறாக பேசினால் அல்லது எதாவது தவறு செய்தால் உடனே ஸ்பாட்டில் சட்டுன்னுகோபம் வரும். மிகவும் தன்மையாக,மென்மையாக பழகும் ஒருவனா இப்படி என்று நினைப்பார்கள். ஆனா அடுத்த பத்தாவது நிமிடத்தில் நானே போய் மன்னிப்பு கேப்பேன் அல்லது என் இப்படி செய்தீர்கள் என்று கேட்டு சரி செய்வேன். அதுக்காக எப்பவும் இப்படி வரும் முன்கோபம் என்று நினைக்க வேண்டாம், இது எப்பாது வரும் அல்லது வெடிக்கும் எரிமலை. ஆனால் சீக்கிரம் புஸ்வாணம் ஆகிவிடும். அதுக்காக நான் எல்லாரிடமும் இப்படி நடந்து கொள்ள மாட்டேன். நான் யாரை அதிகம் நேசிக்கின்றேனே அல்லது பாசம் வைக்கின்றேனே, அவர்களிடம் மட்டும்தான் இந்தக் கோபம் வெளிப்படும். இது உரிமை என்பதா அல்லது அதிக எதிர்பார்ப்பின் வெளிப்பாடா என்பது தெரியாது.நான் இப்போது இந்தக் கோபத்தைக் கட்டுபடுத்த ஆரம்பித்துள்ளேன். இப்ப பரவாயில்லை. நான் பிளஸ் ஒன் படிக்கும் போது வந்த கோபத்தில் கத்த, அது என்னை தர்ம அடி வாங்க வைத்தது. நானும் ஹீரோதான் பதிவில் இந்த பதிவு வரும் என்று சொல்லியிருந்தேன். இப்ப பதிவுக்குப் போலாம்மா?

பிளஸ் ஒன் படிக்கும் போது, காலாண்டு பரிச்சைகள் முடிந்து விடைத்தாள்கள் கொடுத்தார்கள். அது சமயம் கணித ஆசிரியர் திரு. முத்துசாமி என்னும் நல்ல மனிதர், உயர்வானவர். கண்ணியம் மிக்கவர். எங்களின் கணிதத் தாள்களைக் கொடுத்தார். அப்போது சக மாணவர்கள் எல்லாரும் கையில் ஒரு ரெட் இங்க பேனா வச்சுக்கிட்டு, அவனுகளா ஒரு டிக் மார்க் போட்டுக்கிட்டு, ஒன்னு,இரண்டு மார்க் போட்டு, சாரிடம், " சார் டோட்டல் மிஸ்டேக் என்று சொல்லி, அதிக மார்க் எடுத்தார்கள். நான் என் விடைதாளை செக் செய்த போது அதில் நாலு மார்க் கூட்டலில்(உன்மையாக) விடுபட்டு இருந்தது. நான் போய்க் கேக்கலாம் என்ற போது பெல்லும் அடித்து விட்டது. மாணவர்கள் கும்பலாய் வகுப்பில் இருந்து வெளியே போகும் போது கூட மார்க் கேட்டனர். அவரும் ஒரு சிலருக்கு போட்டுக் கொடுத்து, நடந்து கொண்டியிருந்தார். இப்படி போட்டு அவர் வெறுத்துப் போகவும், நான் போகவும் சரியாக இருந்தது. நான் கேக்க ஆரம்பிக்க, அவர் போங்கடா, போங்க, போட்டதுதான் மார்க், இனி யாருக்கும் மார்க்கை கூட்டிப் போட மாட்டேன் என்றார். தப்பாகப் போட்டுப் போனவர்களுக்கு எல்லாம் மார்க் போட்டுவிட்டு, நியாமாகப் போய்க் கேட்ட என்னை உதாசினப்படுத்தியது, திடிரென்று என்னைக் கோபப்படுத்தியது. நான் உடனே " சார் இது டோட்டல் மிஸ்டேக், நான் ஒன்னும் வேணும் என்று போட்டு வரவில்லை" என்றேன். அவரும் எதுவா இருந்தாலும் சரி இனி போட முடியாது, போட்ட வரை அவ்வளவுதான் போ என்று திரும்பி நடக்க ஆரம்பித்தார். நான் உடனே கோபமாக " போடா .......... என்று திட்டி விட்டேன். இன்று வரை யோசித்தாலும், நானா அப்படி நடந்து கொண்டேன், ஏன் அப்படி செய்தேன் என்று புரியவில்லை. என்னை நான் கட்டுப்பாடு இழந்த சமயம். அவர் காதில் விழுந்து கூட அவர் சட்டை செய்யவில்லை. ஆனால் நான் திட்டிய சமயம் என் பின்னால் வந்து கொண்டு இருந்த இராமசாமி என்ற வாத்தியாருக்கு கேட்டு விட்டது.அவர் என் பின்னால் வா என்று சொல்லி என்னை பிஸிக்ஸ் லோப்புக்கு கூட்டிச் சென்றார். அப்போது கூட என் கோபம் குறையவில்லை. (தூய தமிழ்ன்னா கட்டுரை மாதிரி இருக்கு,இனி மொக்கையாகவே, என் பாணியில் சொல்கின்றேன்.)

நானும் அவர் பின்னால் சென்றேன். அங்கு, முத்துகோபல், லோகநாதன், குழந்தைவேலு மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் இருந்தனர். (என் பழைய பதிவுகளைப் படிக்காதவர்களுக்கும், புதியவர்களுக்கும் இந்த இடத்தில் ஒன்று சொல்கின்றேன். எங்க அப்பா கல்வித்துறையில் மூத்த எழுத்தராக (சீனியர் ஹெட் கிளார்க்) பணி புரிந்து ரிடையர்டு ஆனார். அவர் ஹெட் கிளார்க் என்றாலும் மாவட்ட கல்வி இயக்குனர் கூட எழுந்து நின்று வணங்கும் வகையில் மூத்தவர்,திறமையானவர். அந்த துறையின் சட்ட நுணுக்கள் அனைத்து அறிந்தவர். பய பக்தி ஒழுக்கம் மிக்கவர். இவர் சென்றால் இயக்குனர் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டுப் பின்னர் உக்காந்து கேள்வி கேப்பதை நான் பார்த்து இருக்கின்றேன். இது மரியாதை காரணமாக வந்தது. செல்வாக்கால் அல்ல. அப்படி என்றால் எவ்வளவு சிறந்த மனிதராக இருந்து இருப்பர். என் அக்கா அந்த ஊரில் டீச்சராக இருந்தார்கள். நான் பெரிய மனுசன் ஆனது எப்படின்னு மூன்று பதிவுகளைப் படித்தல் உங்களுக்கு என் அக்காவைப் பற்றியும் தெரியும்.) சரி சொந்த புராணம் விட்டு பதிவுக்குப் போவேம்.

இராமசாமி போயி நான் சொன்னதைச் சொல்லியவுடன் எல்லாருக்கும் ஆச்சரியம். வியந்து அல்லது அதிர்ந்து போயி என்னைப் பார்த்தார்கள், விஸ்வனாதன் மட்டும் சீக்கிரம் வந்து நீயாடா நான் எதிர்பார்க்க வில்லை என்று சொல்லி, என்ன தைரியம் இருந்தால் வாத்தியாரைத் திட்டுவாய் என்று சொல்லி அடிக்க ஆரம்பித்தார். அடின்னா, சும்மா மனுசன் ஊடு கட்டி அடிச்சார். இரண்டு கையிலும் மாறி மாறி அறைந்தார். என்னைப் பார்த்துப் பார்த்து நீயா? நீயா? எனக் கேட்டுக் கேட்டு அடித்தார். பின்னர் முட்டி போடச் சொல்லி விட்டார். அவருடன் இருந்த் முத்துகோபல் என்ற ஆசிரியர், எங்கள் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர். அவரின் மனைவி சரஸ்வதி எங்க அக்காவுடன் டீச்சராக பணிபுரிகின்றார். கம்பளியம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். இந்த முத்துகோபால் என்னை அடிக்கும் விஸ்வநாதனுக்கு தூபம் போட ஆரம்பித்தார். விஸ்வனாதனும் சொல்லிச் சொல்லி அடிக்க ஆரம்பித்தார்.

முத்துகோபால் : என்னால இன்னமும் நம்ப முடியவில்லை, இவன் பாருங்க இப்படி செய்துள்ளான். இவர் சொல்லி முடித்த உடன் விஸ்வநாதன் எழுந்து என்னை டாமார், டமார், சடார்,சடார்ன்னு ஒரு நாலு சாத்து சாத்துவார். அப்புறம் மறுபடியும் முட்டி போடனும். என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ ஆப்பிரிக்காவில் பிடித்த கருங்குரங்கைக் கூண்டுக்குள்ளாற பாக்குற மாதிரி வேடிக்கை பார்த்தார்கள். எனக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. இன்னமும் கொஞ்ச நேரம் போயி இருக்கும் முத்துகோபால் ஆரம்பித்தார்.

முத்துகோபால் : இவன் அப்பா எவ்வளவு பெரிய மனிதர், எவ்வளவு நல்லவர். டிபார்ட்மெண்டில் எவ்வளவு செல்வாக்கானவர், ஆனா இவன் பாருங்க. என்று சொல்லி முடிக்கும் முன்னர் விஸ்வநாதன் எழுந்து டாமால் டிமீர்ன்னு எனக்கு பூஜா புனஸ்காரங்களைப் பண்ணினார். திரும்பவும் முட்டி போட்டேன். ஒரு பத்து நிமிசம் போயி இருக்கும். முத்துகோபால் மறுபடியும் ஆரம்பிச்சார்.

இவன் அக்கா எவ்வளவு நல்ல டீச்சர், என்ன டோலண்ட், எவ்வளவு போல்ட். ஆனா இவன் பாருங்க இப்படி.
திரும்பியும் சாத்துமுறை ஆரம்பித்தது. டாமால் டிமீர், சார் சார்ன்னு கத்த கதற ஒரே தர்ம அடிதான். எனக்கு டப்பா டான்ஸ் ஆடியிருச்சு. திரும்பியும் முட்டி, கொஞ்ச நேரம் கழித்து,

இவன் அண்ணனுக எல்லாம் இந்த ஸ்கூலில்தான் படித்தார்கள், நல்ல பசங்க, நல்லா படிப்பர்கள், அதிலும் பெரியவன் இரங்க ராஜ் எவ்வளவு திறமை. ஆனா இவன் பாருங்க, மறுபடியும் டமார், டிமீர்ன்னு விழுந்தது. எனக்கு உள்ளுக்குள்ள உதறல், அடப்பாவிங்களா, எங்க வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்டு, இப்படி ஒவ்வெருத்தரா சொல்லி உதைத்தால், எவ்வளவு உதை வாங்குவது என்று. மறுபடியும் முட்டி.

அதுல பாருங்க, இவன் அண்ணன் இராமு ஊரிலே முதல் மாணவன், இப்ப கூட பாலிடெக்னிக்கில் மாநிலத்தில் முதல் மாணவன், ஆனா இவன். டமால், டிமீர்ன்னு விழுந்தது. என்ன தர்ம சங்கடம் பாருங்க. குடும்ப பெருமை பேசினா எல்லாருக்கும் சந்தேசம், ஆனா அன்னிக்கு எனக்கு மட்டும் அவஸ்த்தை. இன்னமும் நாலு இருக்கே அதை எல்லாம் சொல்லி உதைப்பானுங்கான்னு டவுட் வந்துருச்சு. திரும்பியும் முட்டி. இந்த வடிவேலு சொல்வாரே, அதுபோல மாத்தி மாத்தி அடி விழுந்தது.

இவன் அண்ணன் கண்ணன் கூட நல்லா படிச்சான், எவ்வளவு பிரிலியண்ட், ஆனா இவன் பாருன்னு, மறுபடியும் இடி இடிச்சு சாரல் மழை. டெல்லி கணேசை மணிவண்ணன் தெளிய தெளிய வச்சு அடிப்பாரே அது போல என் நிலைமை மேசம் ஆகிடுச்சு.

இப்படியே இவங்க சொல்லிச் சொல்லி தர்ம அடி அடி அடிப்பதைப் பார்த்த லோகநாதன் என்ற வாத்தியார், விஸ்வநாதன் கொஞ்சம் அசந்து பக்கத்து ரூமுக்குப் போன போது, என்னைப் பார்த்து ஏப்பா இப்படி எல்லாம் பண்ணுகின்றாய், படிக்கிற பையனுக்கு இது எல்லாம் தேவையா, நீ கேட்டது நியாயம் என்றாலும் இப்படி எல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்லி, என்னைப் பார்த்துப்" போ போய் முத்துசாமி வாத்தியாரிடம் மன்னிப்புக் கேள்" என்று சொல்லி வெளியே போகுமாறு தலையசைத்து சைகை செய்தார். நானும் தலை தப்பியது தம்பிரான் புன்னியம் என்று ஓடி வந்துவிட்டேன். பின்னர் முத்துசாமி சாரிடம் மன்னிப்புக் கேட்ட போது. இது எல்லாம் பெரிய விஷயமா ஸ்டுடண்ட் லைப்புல இது எல்லாம் சகஜம், ஒழுங்கா படிப்பதைப் பாருன்னு சொல்லிச் சிரிச்சார். எனக்கு சொல்லிச் சொல்லி அடித்தது வருத்தம் முத்துகோபால் மீதும் கோபம் இருந்தது. இது நடந்து ஒருவாரம் ஆகியிருக்கும். மாலை நான் கடை வீதி செல்லும் சமயம் வீட்டு வாயில் நின்ற முத்துகோபால் என்னை அழைத்து, ஏன் இப்படி செய்தாய், வாத்தியாரிடம் அவமரியாதை செய்வது மிகவும் தவறு. உன்னை ஹெட்மாஸ்டரிடம் வைத்து டீ.சீ கொடுத்து இருப்பர்கள். நாந்தான் உன் வீட்டாரைப் பற்றிக் கூறி அடியுடன் காப்பத்தினேன். இனி இம்மாதிரி செய்யாதே என்று சொல்லி, படிப்பதைப் பாரு. உங்க அண்ணன் மாதிரி நல்லா படிச்சு, நாலு மார்க் போடவில்லை என்றால் எட்டாக எடுக்க முயற்ச்சி செய் என்றார்.

இதுக்கு அப்புறம் தான் தாடித்தாத்தா சொன்னது எனக்குப் புரிந்தது.

செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்அல்லிடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்

இப்ப சரிங்களா, நீங்களும் இவன் பாருங்க இப்படின்னு ஒரு பின்னூட்டம் போட்டுக் கும்மலாம். நன்றி.

Monday, April 19, 2010

பிண்டத்தில் உருவாகி














அண்டம் சதிராட பிண்டமாய் நான்
பிண்டத்தில் குடியிருந்து பிண்டமும்
பிண்டத்தைச் சுமக்க நீரினுள்
குடியிருந்தேன் நான்.

முக்கிலும், வாயிலும் நிணமும்
நீரும் சூழ்ந்துருக்க
நாபியில் சுவாசித்துப் பிண்டமாய் நான்,
தவிக்கின்ற பிண்டமாய் நான்

கையும் காலும் சுருட்டிக் கொள்ள
அசைய முடியா சூழலில்
அசைந்தாடும் பிண்டமாய் நான்
ஓசையின்று அழும் பிண்டமாய் நான்

தவிர்ப்பு ஏறி. இடம் போதாமல்
கை,கால் அசைத்து உதைத்து
எழும்பிப் பிண்டமாய் சுழன்று
உதைத்து உதைத்து பிண்டம் வெளி வர

பனிக்குடம் உடைத்து வெளிவர
பிண்டத்தில் இருந்து உயிர்ப்பு
நிலை எய்திப் பிண்டமாய் நான்,
எடுத்துக் கொஞ்சிய கைகளில்
குழந்தையாய் நான்.

நான் வளர்ந்து,வாழ்ந்து
நரை,திரை எய்தி
மரணிக்கும் நாளது
என் மகன் இட்டான் எனக்குப் பிண்டம்
பிண்டத்தில் இருந்து உருவாகிப் பிண்டமானேன்.

Wednesday, April 14, 2010

காக்கா சுட்ட வடை

முஸ்கி : இன்று அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந் நன்னாளை நாம் சிரிப்புடன் ஆரம்பிப்போம். இந்தப் பதிவை ஒரு நகைச் சுவையாக மட்டும் படிக்கவும். நம்ம தோழி. அன்புடன் மலிக்கா ஒரு வெள்ளைக் காக்கா படத்தை வைத்து கதை எழுதுனாங்க. அதைப் படித்ததில் இருந்து எனக்கும் கதை விடனுமுன்னு, அடச்சே கதை சொல்ல ஆசை வந்துருச்சு. எனக்காக எவ்வளவே பொறுத்துக்குறீங்க, இதுவும் பொறுத்துக்குங்கே. போன பதிவில் நம்ம மங்குனி முதல் பின்னூட்டத்தில் வடை வேணுமின்னு கேட்டார். ஆதலால் இந்த வடைப் பதிவு மங்குனிக்கு சமர்ப்பணம்.




















ரெண்டு ஊருல ரெண்டு லட்சம் காக்கா இருந்ததுங்க(எத்தினி நாளிக்குத்தான் ஒரு ஊருலன்னு சொல்றது), அதுல ஒரு காக்காதான் நம்ம ஹீரோயின் வெள்ளைக்காக்கா. இவரு பார்க் ஷேரட்டான் ஓட்டல் கிட்ட ஒரு புளிய மரத்துல ஒரு ஹூபோ கட்டி வாழ்ந்துக்கிட்டு இருந்துச்சு. அந்த மரத்துக்கு அடியில ஒரு 90 வயது பாட்டி வடை சுட்டு வித்துக்கிட்டு இருந்துச்சு. தினமும் இந்தக் காக்கா அந்தப் பாட்டி கிட்டதான் கிரடிட் கார்டுல அக்கவுண்ட் வைச்சு சாப்பிடும். ஒரு நாள் நம்ம தங்கைகள் வெட்டிப் பேச்சு சித்ராவும், யாவரும் நலம் சுசியும், தங்களின் சம வயது தோழியான பாட்டியை விஜய் நடிச்ச வில்லுப் படத்துக்கு வாங்கன்னு கட்டாயமா இழுத்துக் கிட்டுப் போனாங்க. பக்திப் படமுன்னு நினைச்சு பார்த்த பாட்டி, பார்த்தவுடன் பரலோகம் போயிட்டாங்க. இது தெரியாத காக்கா மங்குனி மாதிரி மூனு நாளு பசியோட வடைக்காக காத்துக் கிட்டு இருந்தது. அப்பத்தான் சேட்டை அனுப்பின கொசு மெயிலில் விஷயத்தை தெரிஞ்சு கிட்டு, சோகத்தோட ஜலிலாக்கா சமையல் பதிவை நோட்டம் விட்டது.

அவங்க சுட்டுக்கிட்டு இருந்த கொழுக்கட்டையை அவங்களுக்கு தெரியாம சுட்டுக்கிட்டுப் போயிருச்சு. அது தன்னேட மரத்துக்குப் போயி கொழுக்கட்டையை உடைக்க முடியாம உக்காந்து இருந்தப்போ, நரியார் வந்தார். என்ன காக்கா? இப்படி முழிச்சுட்டு இருக்கேன்னு கேட்டது. காக்காயும் நான் ஜலிலாக்கா செய்த கொழுக்கட்டை எப்படி உடைப்பது என்று தெரியாமல் முழிக்கின்றேன்னு சொன்னது. உடனே நரியார் இது என்ன பிரமாதம்? அதை மரத்து மேல இருந்து தூக்கிப் போட்டினா, உடைஞ்சு போயிடும்ன்னு சொல்லிச்சு. காக்காயும் தூக்கிப் போட, அப்பக்கூட உடையாத கொழுக்கட்டையை நரி தூக்கிக்கிட்டு போயிருச்சு. காக்காயும் ஏமாந்து போயி நம்ம மேனகா அக்கா பதிவுப் பக்கம் திருடப் போச்சு.

அங்கன போன காக்கா, மேனகா 27.10.2009ல போட்டு போனியாகாத சிக்கன் தந்தூரில ஒரு லெக்பீசை லவட்டிக்கிட்டு வந்துருச்சு. அட நம்ம சமையலைக் காக்காவாது இரசிச்சு துண்ணுதேன்னு சந்தோசத்துல அக்காவும் பேசாம விட்டுட்டாங்க. காக்காயும் மரத்துல உக்காந்து பீசைச் சாப்பிடுவதா வேண்டாமன்னு மோந்து பாத்துக்கிட்டு இருந்தது. அப்ப வில்லன் நரியார் சோகமாக,ஜெய்லானி மாதிரி அப்பாவியா முகத்தை வைத்துக் கொண்டு வந்தது. காக்காயும் இன்னிக்கு எப்படியும் ஏமாறக் கூடாதுன்னு பட்டாபட்டி மாதிரி புத்திசாலியா, லெக்பீசை லெக்குக்கு நடுவில் வைத்துக் கொண்டது. இதைக் கவனித்த நரியார், சேப்டியா பண்ற இருடி கவனிச்சுக்கிறேன்னு சொல்லி, சோகமா லுக் விட்டது. இதைப் பார்த்த காக்காயும், நரியாரே இன்னிக்கு என்ன சோகமா இருக்கேன்னு கேட்டது. நரியார் அதை எப்படி சொல்வது?. பெமினா மிஸ். இந்தியா போட்டி நடக்குது. உன்னோட அழகுக்கு நீ கலந்துக்கிட்டினா, உனக்குத்தான் பட்டம் கிடைக்கும், அப்படியோ உலக அழகி,பிரபஞ்ச அழகி எல்லாம் ஆகிவிடலாமுன்னு சொன்னது. உடனே காக்காயும் மெய்மறந்து அப்படியான்னு? இரங்கமணி சொல்ற பொய்க்கு, வாய் பிளக்கும் தங்க மணி மாதிரி ஆகிடுச்சு. அப்பத்தான் நரியார், ஆனா அதுக்கு கேட் வாக் எல்லாம் போகனும், ஆனா உனக்குத்தான் சுத்தாமாத் தெரியாதேன்னு சொல்லுச்சு. உடனே டென்சன் ஆன காக்காயும், மவனே யாரைப் பார்த்து கேட் வாக் தெரியாதுன்னு சொன்னே? அந்தக் கேட்டுக்கே, கேட் வாக் சொல்லிக் கொடுத்த பரம்பரைடான்னு சொல்லி விஜயகாந்து ஸ்டைலில் லெக்கை எடுத்து வைத்தது. லெக்கை எடுத்ததும் லெக் பீசு ஸ்லிப் ஆக, நரியும் காக்காயே எத்தனை சொன்னாலும் உனக்கு எல்லாம் புத்தி வராதுன்னு சொல்லி லெக் பீசை லவட்டிக் கிட்டு ஓடிப் போச்சு.

ஏமாந்து போன காக்காயும், சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல, மறுபடியும் புளிய மரத்தில் இருந்து போயி, ஒரு அகில பிரபஞ்ச புகழ் பதிவர் கிட்ட இருந்து வடையைச் சுட்டு வந்தது. மறுபடியும் மரத்துக்கு வந்த காக்காய் வடையைத் திண்பதா வேண்டாமான்னு யோசித்துக் கொண்டு இருந்தது. அப்ப கிளைமோக்ஸில் வரும் சினிமா போலிஸ் மாதிரி, கரட்டா நரி வந்தது. காக்காயும் ரொம்ப எகத்தாளமாக, நரியாரே இன்னிக்கு நீ என்னத் தந்திரம் பண்ணினாலும் பலிக்காது, வடை உனக்குக் கிடைக்காதுன்னு(தமிழரசி கவிதை மாதிரி) சொல்லிச்சு. ஆனா நரி காக்கா வடையை நீயே திண்ணுக்கே, ஆனா அதுக்கு முன்னாடி உன்னைத் திங்க உனக்குப் பின்னாடி பாம்பு ரெடியா இருக்கு பாருன்னு சொல்லுச்சு, காக்காயும் என்னது பாம்பான்னு கேட்டு ஒரு ஜம்ப் பண்ணுச்சு, வடையும் எகிறி விழ, காக்கா சுட்ட வடையை, நரியார் சுட்டுக்கிட்டு ஓடினார்.

நரி ஓடுவதைப் பார்த்த காக்காயும் கை,கால் சுளுக்குன பிரபுதேவா மாதிரி ஒரு டான்ஸ் ஆடுச்சு. ஹை ஹை ந்னு காக்காய்க்கு ஒரே குஷி. சத்தம் போட்டு சொல்லுச்சு.
"போ நரி, போ. அது அந்தக் கன்றாவி சமையல் பதிவர் பித்தனின் வாக்குல, " ஊசிப் போன வடையை ஊற வைச்சுத் தின்பது எப்படி?" அப்படிங்கிற பதிவில் சுட்டது. மக்கா நீ மட்டும் அந்த வடையைத் தின்னா, மகனே உனக்கு சங்குதாண்டின்னு" சொல்லி ஆட ஆரம்பித்தது. இப்படிக்கா காக்கா, நரிக்கு அல்வா கொடுத்தது.

டிஸ்கி: கதைன்னா ஒரு மெசேஜ் இருக்கனும், அதுனால இந்த மெசேஜை நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் விஷ்ன்னு ஒரு விரலைத் தூக்கிப் படிங்க.

" எல்லாரையும் எல்லா நேரத்திலும் எமாத்த முடியாது, அப்படி எமாத்தினாலும் அந்த அண்டவனை எப்பவும் ஏமாத்த முடியாது" இது எப்படி இருக்கு?.
காக்காய் விட்ட அடச்சே காக்காய் படம் கொடுத்த மலிக்காவிற்க்கு நன்றி.

எல்லாரும் எல்லா வளமும்,நிறைவும் பெற இனிய சித்திரைத் தழிழ் நாள் வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி.

Thursday, April 8, 2010

எங்க போயித் தொலைந்தது















வியாழக் கிழமை, இரவு மணி ஒன்பது, நான் மாலை வெளியில் சுற்றியவன் வீடு வந்து பரபரப்பாகத் தேடிக்கொண்டு இருக்கின்றேன். வீடு பூராவும் தேடுகின்றேன். எல்லா இடத்திலையும் தேடுகின்றேன். பரண், கட்டிலடியில்,புத்தக செல்ப்பில் என்று சகலமும் தேடப்படுகின்றது.

எங்க அண்ணா : என்னப்பா தேடுற,

நான் : ஒன்னும் இல்லை அண்ணா.

அண்ணன் : ஒன்னும் இல்லையா? என்ன என்று சொல்லு நானும் தேடுகின்றேன்.

நான் : இல்லை, அவரசம் இல்லை, நான் தேடிக்கொள்கின்றேன்.மனதுக்குள். (சொல்லிவிட்டு திட்டு வாங்க, நான் என்ன மடையனா?)

அண்ணன் : சரி சரி தேடிக்கே.

அண்ணன் போய் விடுகின்றார். நானும் தேடிக்கொண்டு இருக்கின்றேன். கொஞ்ச நேரம் தேடிக் கொண்டு இருக்கும் போது, மன்னி வர்றாங்க.

மன்னி : என்ன தேடுறிங்க.

நான் : ஒன்னும் இல்லை மன்னி,

மன்னி : ஒன்னும் இல்லாமையா! ஒரு மணி நேரமா தேடுறீங்க. சொல்லுங்க என்ன
தொலைச்சிங்க.

நான் : அது யுனிவர்சிட்டியில(பி.ஜி.டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மானேஜ்மெண்ட்) இருந்து புக்ஸ் கட்டு வந்தது இல்லையா? அது அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்தேன், அதைக் காணவில்லை.

மன்னி : எப்ப வந்தது? எனக்குத் தெரியாதே.

நான் : அது ஒரு ரெண்டு மாசம் இருக்கும், மொத்தம் இரண்டு பண்டில், பத்து புக் இருக்கும்.

மன்னி : அதானே பார்த்தேன். இரண்டு மாசத்துக்கு முன்னால வைச்சது, அய்யாவுக்கு இப்பத்தான் ஞாபகம் வந்துதாக்கும். நல்லாத் தேடுங்க. அப்பத்தான் புத்தி வரும். இப்ப முதலில் சாப்பிட்டு வந்து தேடுங்க. அதையாது உருப்படியா நேரத்துக்குச் செய்யுங்க.

நான் : இதே ஒரு ஜந்து நிமிசத்தில் வருகின்றேன்.

புக் கட்டுக்கள் இரண்டும் பிரிட்ஜின் பின்னாடி சந்து மூலையில் விழுந்து கிடக்கின்றது. கண்டு பிடித்து எடுப்பதைப் பார்த்து விடுகின்றார்.

மன்னி : என்னது இது? இப்படியா புக்கை மூலையில் போடுவது? இன்னமும் புக் சுத்தி இருக்குற கட்டைக் கூட பிரிக்கவில்லை, வந்து இரண்டு மாசம் ஆயிற்று. நல்லா லட்சணமா படிக்கிறீங்க.

நான் : இல்லை மன்னி, அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். அது பின்னால விழுந்து விட்டது.

மன்னி : ஆம்மா இரண்டு மாசமா விட்டு விட்டு, அய்யருக்கு இப்ப ஏன் திடிர்ன்னு ஞாபகம் வந்தது?

நான் : (மென்னு முழுங்கி), இல்லை இந்த வார சனி,ஞாயிறு எக்ஸாம் ஆரம்பம், இந்த வாரத்தில் இருந்து ஜந்து வாரம் வீக் எண்ட் எக்ஸாம்ஸ் இருக்கு.

மன்னி : (அதிர்ச்சியாய்) "என்னது நாளாளைக்கு எக்ஸாமுக்கு, இன்னிக்கு புக்கை தேடுறீங்களா, அய்யய்யே டீ ஆர், ! (அண்ணாவை அழைப்பது) இங்க பாருங்க,நாளாளைக்கு எக்ஸாமாம் இன்னிக்கு புக் தேடுறார் துரை. (நக்கலாக).நல்லா படிக்கிறீங்க போல. உங்களுக்கு எல்லாம் எக்ஸாம் பீஸ்தான் தண்டம்.

அண்ணா : சரி விடு, அன்னிக்கு காலையில தேடாம இப்பவாது தேடுகின்றானே.

மன்னி : சரி, சரி டிபன் சூடு ஆறிவிடும், சாப்பிட்டு விட்டு படியுங்க. ரொம்ப சின்சியர்தான் நீங்கள்.

நான்: சரி என்று தட்டைப் போட்டு உக்காருகின்றேன். அண்ணா மெதுவா ஆரம்பித்து திட்டு விழுகுது.

அண்ணா : என்ன பசங்க நீங்க? ஒரு பொறுப்பு வேணாம், இப்படியா இருப்பாங்க. மத்த பசங்களைப் பாரு, வேலைக்கும் போயிட்டு என்ன அழகா படிக்கிறாங்க. நாளா நாளையிக்கு எக்ஸாமுன்னா, இன்னிக்கா புக்கைத் தேடுவாங்க. உன்னை சொல்லிக் குத்தம் இல்லைடா, உங்களைக் கவலை தெரியாம வளர்த்துட்டேம். அதுதான்.

மன்னி : சரி வளர்ற பையன், சாப்பிடறப்ப திட்டாதீங்க.

அண்ணா: என்ன வளர்ற பையன், வளராத பையன்னு,பையந்தான் வளர்றான், மூளையும் பொறுப்பும் வளர்ந்தால் தானே.

மன்னி : சரி!! சாப்பிட்டு விட்டுப் பேசுங்க, சாப்பிடும் போது பேசாதீங்க. என்ன சுதாகர், இப்படியா இருப்பது? ஒழுங்கா படிங்க. நான் டீ போட்டு பிளாஸ்க்கில் வைக்கின்றேன். இரவு படியுங்க. இந்த இரண்டு நாளாவது ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழியைப் பாருங்க.

நான் : சரிங்க மன்னி.

அண்ணா : ஆமா டீ ஒன்னுதான் குறைச்சல், சரி, சரி ஒழுங்கா படிக்கற வழியைப் பாரு. ஆபிஸிக்கு வேணா இரண்டு நாள் லீவு போட்டுக்கே.

நான் : இல்லைன்னா ! நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்.

சாப்பிட்டு முடிந்ததும், நான் மறுபடியும் தேடுகின்றேன்.

மன்னி:அதான் புக்ஸ் கிடைச்சாச்சு, அட்டையை பிரிச்சுட்டிங்களே, மறுபடியும் என்ன தேடுகின்றீர்கள்.

நான் : ஒன்னும் இல்லை,

மன்னி : ஒன்னும் இல்லை என்றால் எதே இருக்கு. சொல்லுங்க, நானும் ஹெல்ப் பண்ணுகின்றேன்.

நான் : இல்லை, நான் தேடிக்கிறேன்.

மன்னி: சும்மா சொல்லுங்க, தேடித் தருகின்றேன். தெரிந்த கதைதானே.

நான் : இல்லை அண்ணாகிட்ட சொல்லிடுவீங்க, அவர் மறுபடியும் திட்டுவார்.

மன்னி : சரி சொல்லவில்லை, அண்ணா திட்டுவார் மட்டும் தெரியுது, பொறுப்பா படிக்கத் தெரியல்லையா? சொல்ல மாட்டேன் சொல்லுங்க, என்ன தேடுறீங்க.

நான் : இல்லை, போன வாரம் ஹால் டிக்கெட் வந்தது, எங்க வைச்சேன்னு தெரியல்லை. அதான்.

மன்னி: சுத்தம்!. பெருமாளே!!!! எப்படி இப்படி இருக்கிங்க. ஹால் டிக்கட்டைக் கூட ஒழுங்க வைச்சுக்க மாட்டிங்களே. நாங்க எல்லாம் எக்ஸாம் சொன்னா போதும், சாப்பாடு எல்லாம் இறங்காது,தூக்கம் வராது. எப்படி இப்படி நெஞ்சழுத்தமா இருக்கீங்க. ஒரு பயமே கிடையாதா?

நான் : இல்லை மன்னி, இங்கதான் சோ கேஸ் மேலை வைத்தேன். காணேம்.

மன்னி : ஏன் உங்களுக்கு ஒரு செல்ப், சூட்கேஸ் எல்லாம் இருக்கு இல்லை, அதில வைக்க வேண்டியதுதானே.

நான் : இல்லை, அப்புறமா கவரை பிரிக்கலாம்ன்னு வைத்தேன். அது எங்கயே காணேம்,

மன்னி : ஆமா புஸ்தக கட்டையே இன்னமும் பிரிக்கலை. ஹால் டிக்கெட் கவரையா பிரிக்கப் போறிங்க. என்ன அவரசம் எக்ஸாம் அன்னிக்கு காலையில் தேடினால் போதும். எதுக்கும் சோ - கேஸ் அடியில பாருங்க, வேலைக்காரி கூட்டித் தள்ளியிருப்பா.

நான் : (குனிந்து எடுத்துக் கொண்டு) ஆமா மன்னி அடியிலதான் விழுந்து இருக்கு, நாளைக்குப் போயித்தான் எக்ஸாமினர் சைன் வாங்க வேண்டும்.

மன்னி : பேச்சுடா, நல்ல கவனமாத்தான் இருக்கீங்க. கஷ்டகாலம். பிளாஸ்க்கில் டீ போட்டு டேபிள்ல வைச்சுருக்கேன். தூக்கம் வந்தால் குடியுங்க. நாங்க தூங்கப் போறேம். டீ வீ பார்க்காம இந்த இரண்டு நாளாவது ஒழுங்கா படியுங்க.

அண்ணா : ஆமா இரண்டு நாள்ல படிச்சு அய்யா டாக்டர் பட்டம் வாங்கப் போறார்.இதுக்கு கட்டுண பீஸைப் பெருமாள் கோவில் உண்டியலில் போட்டா புண்ணியமாவது கிடைக்கும். சரி இப்பவாது ஒழுங்கா படி.

நான் : (ரொம்ப நல்ல புள்ளை மாதிரி) சரிங்க அண்ணா, குட் நைட் மன்னி.

இரண்டு நாளிலும், அதுக்கு அடுத்த வாரத்திலும் வந்த எக்ஸாமும் இரண்டு நாளில் படித்து. அரியர்ஸ் எதுவும் இல்லாமல் சிங்கிள் அட்டம்ப்டில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணி விட்டேன்.

மன்னி : நம்ப முடியல்லை, படிக்காம இப்படிப் பாஸ் பண்ணிருக்கீங்க, அதும் பர்ஸ்ட் கிளாஸல. வாழ்த்துக்கள். பால் பாயசம் பண்ணிரலாம். போயிப் பிள்ளையாருக்கு ஒரு ரூபாய் போட்டு,அர்ச்சனை பண்ணி வாருங்கள்.

நான் : பாஸ் பண்ணது நான், பெருமாளுக்குப் பாயசமா,பிள்ளையாருக்கு ஒரு ரூவாய்யா?

மன்னி : இந்தக் குதர்க்கம் எல்லாம் வீட்டுக்கு வெளியில பேசறதேட நிறுத்திக்குங்க. அண்ணா காதுல கேட்டா தொலைச்சிடுவார். தெரியுமில்லை. ஆமா எப்படிப் பாஸ் பண்ணீங்க? பிட்டா இல்லை காப்பியடிச்சீங்களா நம்ப முடியல்லையே.

நான் : மன்னீயீயீ!! எனக்கு பிட்டு காப்பி அடிப்பது எல்லாம் புடிக்காது. இது மார்க்கெட்டிங் பேப்பர்ஸ்தானே. நான் செய்யும் வேலை அதுதானே. அப்புறமும் எல்லா சப்ஜெட்டும் நான் யூஜில படித்ததுதான். நிறைய கேஸ் ஸ்டடிதான் கொடுப்பாங்க,கவனமா எழுதினா போதும், பால் பாயசத்திற்கு தேங்கஸ் மன்னி.

மன்னி : சரி மொதல்ல கோவிலுக்குப் போயிட்டு வாங்க,உங்க அண்ணா அன்னிக்கே என்ன சொன்னார் தெரியுமா?, அவன் சொந்தமா எழுதி பாஸ் பண்னீருவான், ஆனா முன்னாலேயே படித்து நல்ல மார்க் எடுத்தா குறைஞ்சா போயிடுவான் என்றார். இப்ப அவருக்கும் சந்தேசம்.

டிஸ்கி : சித்ரா செல்பேனைத் தொலைத்து விட்டு, தேடிய பதிவால் வந்த கொசுவத்திப் பதிவு இது. உங்களுக்கும் கொசுவத்தி சுத்துமே,அப்ப பதிவா போட்டு விடுங்கள். இந்தப் பதிவைப் போடுகின்றேன் என்று சொன்னதும் சித்ரா என்ன சொன்னாங்க தெரியுமா?

// சித்ரா, இனி நீ செல் போன் தொலைப்பே? தொலைப்பே? தொலைப்பே? தொலைச்சாலும், பதிவு போட்டு உலகத்துக்கு, குறிப்பாக அன்னாச்சிக்கிட்டே சொல்லுவே? சொல்லுவே? சொல்லுவே?..... அவ்வவ்வ்வ்வ்........ //

கொஞ்சம் பெரிய பதிவாய் போய்விட்டது,பொறுமையாய் படித்த அனைவருக்கும் எனது நன்றி.

Monday, April 5, 2010

போலி அல்ல நிஜம்.


சங்கு,சேகண்டியின் சத்தம் மெல்லியதாக அழுவதைப் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. ஒரு மூலையில் முத்து வாயில் துண்டை வைத்து சோகத்தின் பிம்பமாக அமர்ந்து இருந்தான். ஆண் என்றாலும் தந்தை என்பதால் அழுது,அழுதுஅவன் கண்கள் வீங்கி இருந்தன. வாசலில் பாடை செய்வதில் மும்முரமாக இருந்தார்கள் உறவினர்கள். சர சரமாய்த் பூக்கள் தொடுத்து பாடை உருவாகிக் கொண்டு இருந்தது. முத்துவின் ஒரே மகன் செல்வம் இறந்து கிடந்தான். அவனின் இறுதி யாத்திரை தான் தயாராகிக் கொண்டு இருந்தது. பக்கத்தில் கிழித்துப் போடப்பட்ட கந்தலாய் கிடந்தாள் குருவம்மா. செல்வத்தின் தாய் அழுது அழுது கண்கள் வற்றிப் போயி மனமும் கன்றிப் போனது. அழுகவும், கத்தவும் திரணியற்றுப் போயிருந்தாள். உற்றாரும் உறவினரும் அழுது ஒப்பாறி வைத்துக் கொண்டு இருந்தார்கள். இது எதுவும் தெரியாமல் சன்னாமாய் ஒளிர்ந்து கொண்டு இருந்தது தலைமாட்டுத் தீபம்.

நல்லா ஆடி ஓடி விளையாடிக் கொண்டு இருந்த மகன், காய்ச்சல் என்று மருத்துவ மனைக்குப் போனாள். டாக்டர் கொடுத்த மருந்து அலர்ஜியாகி விட்டது, உடல் முழுதும் நீலம் பார்த்து வீங்கி இறந்து விட்டான் மகன். டாக்டர் மருந்தைக் குத்தம் சொன்னார். மருந்துக் கடைக்காரன் டாக்டரைக் குத்தம் சொன்னார். யாரைக் குத்தம் சொல்லி என்ன பயன். பெற்ற ஒரே மகனே செத்த பின்னர். அழக்கூடத் தெம்பு இல்லாமல் எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னு போட்டேங்களே என்று புலம்பிக் கொண்டு மட்டும் இருந்தாள். பெரியோர்களும்,மற்றேரும் ஆறுதல் சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன் போனது போனதுதானே.

சரி நடந்தது நடந்துருச்சு, இப்படியே மூலையில் உக்காந்து அழுதா போனது வந்துருமா? அடக்கத்துக்கு ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று சொல்லி ஊர் பெரிசுகள். பந்ததிற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்தது. செல்வத்தின் உடலை அழுது கொண்டே குளிப்பாட்டினார்கள். புது பண்ணாடை போட்டு அலங்காரித்து,மாலைகளுடன் சடலம் பாடையில் கிடத்தி வாய்க்கரிசியும் போடப்பட்டது. எல்லாரும் சுத்தி முடித்து பாடையை எடுத்து சவ வண்டியில் வைத்து ஊர்வலம் புறப்படத் தயாராயிற்று.முத்துவும் கொள்ளிப்பானையை எடுத்துக் கொண்டு ஒரே மகனுக்குக் கொள்ளி வைக்க ஊர்வலம் போகத் தயாராய் முன்னால் வந்தான். சங்கு முழங்கி வாண வேடிக்கையுடன், ஒப்பாரிகள் முழங்க ஆரம்பம் ஆகியது. அது வரை ஒதுங்கி இருந்த குருவம்மா பித்துப் பிடித்தவளைப் போல முன்னால் வந்தவள் எட்டி முத்துவின் தோள் துண்டை முறுக்கிப் பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல கத்தத் தொடங்கினாள்.

" அடப்பாவி மனுசா! அநியாயமாய் என் புள்ளையைக் கொன்னு போட்டியே? நீ உருப்படுவியா? இந்த வேலை வேண்டாம், விட்டு விடுன்னு எத்தனை தடவை சொன்னேன், கேட்டியா? என்னை மாதிரி எத்தினி பேரு பெத்த புள்ளைங்க இல்லாமத் தவிக்கிறாங்களே!

நான் போக விடமாட்டேன். இனிமே இந்த நாசம் புடித்த கன்றாவி வேலைக்குப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு, இல்லைனா உன்னைப் போக விடமாட்டேன் என்று அடம்பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல வெறித்தாள். உடைந்து அழுத முத்து

"இனி கோடி ரூவாய் கொடுத்தாக் கூட இந்த பாவம் புடிச்ச வேலையைச் செய்ய மாட்டேன் குருவம்மா, பணத்துக்காகப் பாவம் பண்ண மாட்டேன். இது செத்துப் போன என் புள்ளை மேல சத்தியம்" என்றான் அழுது வெடித்த குரலில்.

தீர்மானமாக நடக்க ஆரம்பித்தான் சுடுகாட்டை நோக்கி. என்ன செய்வது அவன் மகனின் மீது வைத்து இருந்த அன்பு போலியானது அல்லவே, அவன் போலிக் கம்பெனியின் சேல்ஸ் ரெப்பாய் விற்ற மருந்துகளைப் போல.

டிஸ்கி : இந்தக் கதைக்கான வித்து நம்ம வெட்டிப் பேச்சு சித்ராவால் அளிக்கப்பட்டது. பதிவு போட மனம் இல்லாமல் உக்காந்து இருந்த போது, அண்ணாச்சி போலி மருந்து தொடர்பா உங்க பாணியில் ஒரு கதை போடலாமே என்று சொல்லிய மறுகணம் உருவாகிய கதை இது. பாராட்டு தங்கை சித்ராவிற்கும், நீங்க திட்டினா அது எனக்கும் சாரும். நன்றி

Thursday, April 1, 2010

விளக்காடும் விநாயகர்


இது ஆன்மீகக் கட்டுரை அல்ல. இதுவும் ஒரு மொக்கைதான். இது உண்மையாக நடந்த சம்பவம். நான் பத்தாம் கிளாஸ் படித்த போது நடந்தது. படித்தபோது என்பதை வீட, நண்பனுடன் படிக்கின்றேன் என்று சொல்லி விளையாடப் போயிருவேன். அவன் வீட்டின் அருகில் அதிகம் வெளியில் தெரியாமல் ஒரு குட்டிப் பிள்ளையார் கோவில் இருக்கும். ஆறடி அகலமும்,எட்டடி நீளமும் கொண்ட ஒரு இருட்டுக் காங்கீரிட் கட்டிடத்தில்,பல வீடுகளுக்கு இடையில் இருக்கும்.ஆரவாரம் இல்லாத,கூட்டம் வராத கோவில் அது. காலையில் மட்டும் ஒரு புண்ணியவான் வந்து கோவிலைத் திறந்து, ஒரு குடம் தண்ணிய புள்ளையாரு மேல ஊத்தி,ரெண்டு வாழைப்பழம் வைச்சு பூசை பண்ணிப் பூட்டிப் போனால், அடுத்த நாள் தான் திறப்பார். கூட்டமும் இல்லாமல் படையல்,பூஜைகள் போன்றவை இல்லாமல்,ஒரு அழுக்கு வேஷ்டி, துண்டுடன்,என்னை மாதிரியே இருக்கும் ஏழைப் பிள்ளையார் அவர். கோவில் முன்னால் ஒரு திண்ணை இருக்கும். அதில் எப்பவும் குடிமகன்கள் கண்கள் சிவந்து, புகைப் பிடித்துக் கொண்டு உக்காந்து இருப்பாங்க. இவங்கதான் புள்ளையாருக்கு கம்பனி கொடுப்பவர்கள். (அட பேச்சுத்துணைக்கு அய்யா)


இப்படி இருக்கும் போது ஒரு நாள் தான் அந்த அதியசத்தைக் கவனித்தார்கள். பிள்ளையாரின் முன்னால் ஒரு சர விளக்கு,இரும்பு சங்கிலியில் கட்டித் தொங்க விட்டுருக்கும்.அது காலையில் மட்டும் ஏற்றப்படும். அந்த விளக்கு மெல்லியதாக தானக ஆடத் தொடங்கியது. ஒரே சீரான அசைவில் ஆடத் தொடங்கியது. முதலில் பார்த்தவர் அடுத்தவரிடம் சொல்ல, பின்னர் ஊர் பூராவும் பரவத் தொடங்கியது. எல்லாரும் அதிசயமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். பிள்ளையாரும் போமஸ் ஆகிவிட்டார். எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தார்கள். விளக்கை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனாலும் விளக்கு மெதுவாக ஆடிய வண்ணம் இருந்தது. ஊர் பூராவும் பேச்சு பரவியதால் எல்லாரும் கும்பலாக,அந்த அதிசயத்தைப் பார்க்கத் தொடங்கினர்கள்.கூட்டம் வர ஆரம்பித்ததும், பலரும் பல காரணங்களைச் சொல்ல ஆராம்பித்தார்கள். மக்கள் சூடும் சுவையுமாகப் பேச ஆரம்பித்தார்கள். ஆளாளுக்கு ஒரு காரணமும் கதையும் சொன்னார்கள்.

கூட்டத்தில் ஒரு பெண்மணிக்கு அருள் வந்து, பிள்ளையாரை யாரும் கவனிப்பது இல்லை,அதுனால கோபத்தில் இருக்கார்.ஆதலால் தான் விளக்கு ஆடுகின்றது எனக் கூறக் கோவில் களை கட்டியது. கோவிலுக்கு வெள்ளையடித்து,முன்புறம் பந்தல் போடப்பட்டு, வாழைத் தோரணம்,மாவிலை, மைக் செட் எல்லாம் அமர்க்களப்பட்டது. விளக்காடும் விநாயகர் என்று டைட்டில் வேற கொடுத்துட்டாங்க. பிள்ளையாரைத் தரிசிக்க நிறைய பெண்மணிகள் கோவிலுக்கு வர,ஊர் திரண்டு அமராவதி ஆற்றில் இருந்து ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்து திருமஞ்சனம்,ஆராதனை என்று அமர்க்களப் பட்டது. புது வேஷ்டி,புது துண்டு என கனேஷ் கலக்க ஆரம்பிச்சுட்டார். நிறைய கூட்டமும்,பலூன் கடைகளும்,கோலங்களும், சுண்டல்களும் எனக் கோவில் களை கட்டியது. அன்று மாலைதான் விளக்கு ஆடுவது நின்றது. பிள்ளையாரின் கோபமும் குறைந்ததாக அனைவரும் பேசிக் கொண்டார்கள். பூஜைகள்,கூட்டம் எனத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஊர் பூராவும் இதுதான் பேச்சு.

இரண்டு நாள்தான் இந்தக் கூத்து நடந்தது. இரண்டு நாள் கழித்து மீண்டும் விளக்கு ஆட ஆராம்பித்தது. மக்கள் குழம்பிப் போயினர். விளக்கு ஆடும் மர்மம் ஏன் என்று தெரியவில்லை. பூஜைகள் தொடர்ந்தன. பின்னர் சிலர் விளக்கு ஆடும் மர்மத்தை கண்டு பிடிக்க முயற்ச்சி செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட சமயம் விளக்கு ஆடிப் பின்னர் நின்றதையும் குறித்துக் கொண்டார்கள். அப்புறமாகக் காரணத்தையும் கண்டு பிடித்தார்கள். கோவிலின் பின் புறம் ஓட்டினார் போல நாலு பில்டிங் தள்ளி புதுசா ஒரு மாவு மிஷின் கடை ஒன்று திறந்தார்கள். அங்கு மாவு மிஷின் ஓடும் போது எல்லாம் அந்த கட்டிட அதிர்வில் விளக்கு ஆடுவதையும், மிசின் நின்றால், விளக்கு நிற்பதையும் கண்டறிந்தனர். காரணம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் எல்லாருக்கும் சப் என்று போனது. அவனவன் பிழைப்பைப் பார்க்கப் போனார்கள். அதுக்கு அப்புறமும் ஒரு வாரம் கூட்டம் வந்து போனது, இறுதியில் சுத்தமாகக் குறைந்து பேனது. பிள்ளையாரும் அதுக்கு அப்புறம் பழையபடி, அழுக்கு வேஷ்டிப் பிள்ளையார் ஆகிவிட்டார். மறுபடியும் அவருக்கு குடிமகன்கள் மற்றும் புகைப் பிடிப்பர்வர்கள் தான் துணை.
இது நடந்து ஒரு வாரம் கழித்து சர்ச் வாசலில் உள்ள மேரி மாதா படத்தில் இரத்தம் வழிகின்றது என்று ஒரு பரபரப்புக் கிளப்பினார்கள்.பின்னர் அதுவும் அடங்கியது. என்ன பண்ணுவது கடவுள் என்றாலும் நம்ம மக்கள் மாய மந்திரம்,அதிசயம் மாதிரி ஜோப்படி வித்தை எதாவது செய்தால் தான் கடவுள் என்று ஒத்துக் கொள்வார்கள் போல.

டிஸ்கி: எனக்கு கடந்த ஒருவார காலமாக வைரல் பீவர் வந்து போனது. இப்ப பரவாயில்லை. ஆனாலும் ஜலதோசமும்,கடுமையான உடல் வலியும் உள்ளது. இப்ப மூனு நாள் வார இறுதி விடுமுறை வருகின்றது. அதுனால நல்லா ரெஸ்ட் எடுக்கப் போறேன். திங்கள் சந்திப்போம். நன்றி.