Thursday, November 19, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 3


இரவு நான் நல்ல உறக்கத்தில் இருந்த சமயம் அதிகாலை மூன்று மணியளவில் எனக்கு பயங்கரமாகக் குளிர் எடுத்தது. எனது உடல் விழுக்கு, விழுக்கு என்று உலுக்கி எடுப்பது போல தூக்கிப் போட்டது. என் முனகல் மற்றும் அனத்தல் சத்தம் கேட்டு எழுந்த என் உடன் படுத்து இருந்த முரளி அண்ணா மற்றும் என் சித்தி இருவரும் எழுந்து விசாரித்தனர். என் பற்கள் கிட்டி என்னால் பேசக் கூடமுடியவில்லை. இரண்டு மூன்று போர்வைகள் போர்த்திக் கூட குளீர் அடங்க வில்லை. உடனே என் சித்தி கொஞ்சம் வெந்நீர் குடிக்கக் கொடுத்து, ஒரு பத்து மிளகும் கொடுத்து, மிளகைக் கடித்து நல்லா மென்று சாப்பிடச் சொன்னார்கள் (குறித்து வைத்துக் கொள்ளுங்கள், குளிர் சுரம் அடங்க நல்ல வைத்தியம்). நான் மிளகைச் சாப்பிட்டதும் அதன் காரம் மற்றும் எரிச்சலில், குளிர் அடங்கியது. பின் நல்ல காய்ச்சல் கொதிக்கத் தொடங்கியது. பின் மறுனாள் மாலை டாக்டரிடம் சென்றேன். அவர் எனக்கு 104 டிகிரிக் காய்ச்சல் இருப்பதாகவும். மலேரியா காய்ச்சல் வந்துருப்பதாகவும் கூறினார். இரத்த மாதிரி செய்து காய்ச்சலை உறுதிப் படுத்தினார். மருந்து மாத்திரைகள் தந்தார்.

அடுத்த நாள் நான் கஞ்சி குடித்து மருந்து உண்டால் வாந்தி வந்தது. காய்ச்சலும் தொடர் வாந்தியும் என்னை சிரமான நிலைக்குத் தள்ளியது. இந்த நிலையில் நான் என்னைப் பற்றி சொல்லவேண்டும். அப்போது நான் இப்ப இருக்க மாதிரி குண்டாகவும் தொப்பையுமாய் இருக்க மாட்டேன். ரொம்ப ஒல்லியா, ஒட்டடைக் குச்சி போல இருப்பேன். என் அலுவலக நண்பன் துதிதீஷ் எனக்கு வைத்த பட்டப் பெயர் ஸ்கெல்ட்டன்(எழும்புக் கூடு). என்னை இப்படித்தான் கூப்பிடுவான். நான் அவ்வளவு ஒல்லி. இதில் காய்ச்சலும் வாந்தியும் சேர்ந்து கொள்ள நான் மிகவும் சேர்ந்து போனேன். அந்த இரு நாளும் நான் பெயரளவில் அலுவலகம் சென்று மார்க்கெட் செல்லாமல் வீட்டில் இருந்தேன். உப்பு இல்லாமல் சாப்பிடும் மூணாவது நாளும் வந்தது. நான் உப்பு இல்லாமல் அரிசிக் கஞ்சி குடிக்க ஆரம்பித்தேன். நான் கஞ்சி குடித்தவுடன் மாத்திரை சாப்பிட்டால் வாந்தி வந்து விடும், எனவே என் அண்ணா முரளி சாமி என்னிடம், "சுதா இது அய்யப்பன் சேதனை என்று நினைக்கின்றேன். நாம் அவனை நம்பி மாலை போட்டேம், அவனை நம்பிப் போவேம், நீ மாத்திரைகளை சாப்பிடாதே" என்றார். நானும் காய்ச்சலுக்கு மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். டாக்டர் நான் மலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உன்மையில் நான் இருக்கும் நிலைமை அட்மிட் செய்து இரண்டு அல்லது மூன்று டிரிப்ஸ் போடவேண்டும் என்றார். நானே மருந்தும், டாக்டரிடமும் போவதைத் தவிர்த்தேன்.பின்னர் வாந்தியும் நின்றது. எனக்குப் பூஜைகளும், விபூதியும் தான் மருந்து ஆனது. காய்ச்சல் தொடர்ந்து இருந்தது. எப்படியோ அலுவலகத்தையும் விரதத்தையும் காய்ச்சல் மற்றும் குளிருடன் சமாளித்து விட்டேன். நான் மலைக்கு செல்லும் நாளும் வந்தது.

நான் மூன்று நாள் உப்பு இல்லாமல் சாப்பிட்டு, இருமுடி கட்டும் நாள் அன்று , காலையில் இருந்து நீர் ஆகரம்(பால்,டீ,இளனீர்) மட்டும் குடிப்பேன். பின்னர் மாலையில் கட்டுக் கட்டி வைத்த பின்னர் தான் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்தேன். காலை பத்து மணியளவில் நான் எங்கள் வீட்டின் அருகில் இருந்த வங்கிக்குச் சென்று பணம் எடுத்து கால் சட்டைப் பையில் வைத்து விட்டு, கணக்கு புத்தகத்தில் சரியாகப் பதிந்துள்ளார்களா எனச் சரி பார்க்க பாஸ்புக்கை விரித்தேன். மறு நிமிடம் நான் கண்கள் இருள, தலை சுற்றி மயக்கம் போட்டுக் கீழே விழுந்தேன். வங்கியில் உள்ளவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் என் அண்ணாவின், நண்பர் ஒருவர் என் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பினர். பின் ஸோடாவும் கொடுத்தார்கள். நான் இன்று கட்டுக் கட்டுவதால் உப்பிட்ட ஸோடாவைக் குடிக்க மாட்டேன் என்று கூறி, தண்ணீர் மட்டும் அருந்தி, கொஞ்ச நேரம் என் உடல் நடுக்கம் போக அமர்ந்தேன். அருகில் இருந்தவர்கள் எல்லாம் இந்த உடல் நிலையில் எப்படி மலைக்குப் போவார் என்று கிசு கிசுக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் கொஞ்ச நேரத்தில் மெல்ல எழுந்து, என் வீடு வந்து படுத்துக் கொண்டேன். அதற்க்குள் நணபர் மூலமாக தகவல் அறிந்த என் இரண்டாவது அண்ணா (இராமு) மற்றும் முரளியண்ணா இருவரும், என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லி, யாத்திரைக்கு தேவையான பொருள்களை வாங்க ஆரம்பித்தார்கள். என் உடம்பு தொடர்ந்து நடுங்கிக் கொண்டியிருந்தது. மாலை கட்டுக் கட்டும் சமயமும் வந்தது. நானும், முரளியும் கன்னி சாமி ஆதலால் எங்களின் கட்டு முதல் கட்டாக இருந்ததால் அத்தனைக் கூட்டமும் என்னை ஆச்சரியத்துடன் வேடிக்கைப் பார்த்தது. இவ்வளவு காய்ச்சல் மற்றும் நடுக்கத்துடன் கட்டும், நான் எப்படி மலைக்குப் போவேன் என்று ஆச்சரியப் பட்டார்கள். நான் கட்டுக் கட்டிவிட்டு ஒரு வித மயக்கத்தில், நடப்பது என்ன என்பது புரியாமல் கோவில் தூணில் சாய்ந்து உக்காந்தேன். வந்த கூட்டம் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துவிட்டு என் காலில் விழுந்து சென்றது. என் வாய் மட்டும் விடாமல் சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா என்ற சரண கோசத்தை முணு முணுத்த வண்ணம் இருந்தது. என் இரண்டாவது அண்ணா, அண்ணி, என் இரு சித்திகள், மற்றும் சித்திகளின் மகன், மகள்கள், என் அண்ணாவின் நண்பர் சீனு அண்ணா என அனைவரும் என் பக்கத்தில் கவலையுடன் நின்றனர்.

இந்த நிலையில் ஒரு சிலர் நான் விரதம் சரியாக இருந்திருக்க மாட்டேன் என பேசியதும் காதில் கேட்டது. அது இன்னமும் என் கவலையை அதிகப் படுத்தியது. என் குழந்தைப் பருவத்தில் இருந்து, நான் மிகவும் ஆசையாக இருந்து, மாலையிட்டு, விரதமும் இருந்து வருகின்றேன். எனக்கு ஏன் இந்த சேதனை என்று அழாத குறையாக மனதில் நினைத்துக் கொண்டேன். என் இரண்டாவது அண்ணா என்னிடம் மெல்லக் குனிந்து கேட்டார். "சாமி உங்களால முடியுமா? போவிங்களா? இல்லைன்னா கட்டுக் கட்டிட்டிங்க இருமுடி வேனா முரளிசாமிகிட்ட கொடுத்து அனுப்பி விடலாம்" என்றார். நான் உறுதியாக, " இல்லையண்ணா நான் போய் விடுவேன்" என்றேன் நடுங்கிக் கொண்டு. எங்க அண்ணா மன்னி மற்றும் உறவினர்கள் அனைவரும் முரளிசாமிகிட்ட ஒரே புத்திமதி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் முரளி சாமியிடம் பொறுமையாக என்னை கூட்டிச் செல்லும்படியும், என்னால் நடக்க முடியாவிட்டால் இருந்து கூட்டிச் செல்லும் படியும் அறிவுறுத்தினார்கள். குருசாமியிடமும் மற்ற சாமிகளிடமும் என்னை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார்கள். கூட்டத்தில் சிலர் பேசிய விதம் என்னுள் மிகுந்த சங்கடதைக் கொடுத்தது, ஆனால் கண்டிப்பாய்ப் போக வேண்டும், போய்ச் செத்தால் கூட பரவாயில்லை என்ற வைராக்கியத்தைக் கொடுத்தது. பின்னர் நாங்கள் இரவு சென்னையில் இருந்து முத்துனகர் விரைவு உந்தியில் எர்னாகுளம் நோக்கிச் சென்றேம். இரவு இரயிலில் எனக்கு குளிரும் மயக்கமும் வந்தது. என் போர்வை, எங்க முரளியண்ணா சாமி போர்வை,குருசாமி போர்வை போர்த்திக் கூட எனக்கு குளிர் அடங்காமல் காய்ச்சலும் வாட்டியது. குருசாமி எனக்கு காஞ்சிபுரம் மிளகு இட்டிலி கொடுத்தார். மிகவும் சுவையான அந்த இட்டிலி சாப்பிட்டது, எனக்கு வாந்தி வந்தது. இரயிலில் வாஷ்பேசின் அருகே வாமிட் பண்ணும் போது கதவு திறந்து இருந்ததால், குளிர் காற்றுப் பட்டு மயக்கம் வந்தது. நான் இரயிலின் வெளியில் விழாமல் இருக்க வாஷ்பேசினைக் கையில் இறுகப் பிடித்துக் கொண்டு, முரளி சாமியை அழைக்கும் வண்ணம் "சாமி, சாமி" என்று கத்தினேன். அப்போது அருகில் இருந்த சாமி ஒருவர் நான் சாய்வதைப் பார்த்து, நான் இரயிலில் இருந்து வெளியில் மயங்கி விழாமல் காப்பாற்றினார். முரளி சாமியும் ஓடி வந்து என்னை கைத்தாங்கலாக பிடித்து என்னைப் படுக்கையில் படுக்க வைத்தார். எனக்கு போர்வைகளைக் கொடுத்து குருசாமியும், முரளிசாமியும் குளிரில் குறுகி உக்காந்து வந்தனர். மறுனாள் எர்ணா குளம் சென்று பின் சோட்டானிக்கரை பகவதி கோயிலுக்குச் சென்றேம்....... பயணம் தொடரும், வாருங்கள் யாத்திரை செய்வேம். நன்றி.

7 comments:

 1. ரொம்ப த்ரில்லா இருக்கு அண்ணா... ஐயப்பன் விளையாட்டு...

  ReplyDelete
 2. உண்மைதான் சுசி, தொடர்ந்து படித்தும், மனதுக்குள் வணங்கியும் வாம்மா. ரொம்ப நல்லது.

  ReplyDelete
 3. நண்பர்கள் கவனத்திற்கு

  HOME | Tamil | SEO Submit
  Video Search | Top Blogs | Trends | Blog | Video | Images | India News

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.