Monday, October 5, 2009

தர்ம அடி வாங்கியது

நான் ஏழாம் வகுப்பு படித்த சமயம் நடந்த சம்பவம், இது நான் செய்யாத தவறுக்கு உதை வாங்கியது. அப்போது எங்கள் வீட்டில் எங்க இரண்டாவது அக்கா திருமண நிச்சயதார்த்தம் நடந்த சமயம் எங்க வீட்டிற்கு உறவினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். நான் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தேன். அப்போது எங்க பெரியப்பா ஒருவர் தனக்கு பொடிமட்டை வாங்கி வருமாறு என்னிடம் இரண்டு ரூபாய் கொடுத்தார். அப்போது டி.ஏ.ஸ். கோபால் பட்டணம் பொடி பாக்கு மட்டையில் சுற்றி வரும்.

நானும் என்னுடைய புல்லட்டை காலில் ஒரு உதை உதைத்து கையை முறுக்கி வாயில் சவுண்ட் கொடுத்து ஓடத்தொடங்கினேன். அப்ப எல்லாம் எதாது கடைக்கு அனுப்பினால் ஒரு கையில் காசு வைத்துக் கொண்டு, இன்னேரு கையால் வண்டியோட்டுவது போல் பண்ணிக் கொண்டு ஓடுவது பழக்கம்,இல்லாவிட்டால் வாயில் டெக், டெக் என சவுண்ட் கொடுத்து குதிரையில் போவது பழக்கம். நானும் நாலனாவிற்கு பொடி மட்டை வாங்கிக் கொண்டு மீதி ஒன்னேமுக்கால் ரூபாயை கையில் பொடிமட்டையுடன் வைத்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். வந்து என் பெரியப்பாவிடம் பொடி மட்டையும் மீதி சில்லறையும் தந்தேன். தரும்பொழுது பார்த்தால் என் கையில் ஒரு ரூபாய் காயின் ஒன்றும், எட்டனா காயின் ஒன்றும் தான் இருந்தது. நாலானாவைக் கானவில்லை. நான் திரு திரு என முழித்து மீதி சில்லறையக் என் பெரியப்பாவிடம் கொடுத்தேன். அவர் பொடி போடும் பரவசத்தில் என் சில்லறைய எண்ணாமல் பையில் போட்டுக் கொண்டார் நானும் அங்கிருந்து விளையாட ஓடிப்போய் விட்டேன். ஆனால் இதை சற்றுத் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த எங்க பெரிய அண்ணன் என்னை வீட்டின் பின்பக்கம் அழைத்தார். நானும் சந்தோசமாகப் போனேன்.

அவர் அங்க வந்தவுடன் எங்கடா அந்த நாலனா என்றார், நான் எனக்கு தெரியவில்லை என்றேன்,அடுத்த நொடி அவர் கை என் கன்னத்தை பதம் பார்த்தது. அந்த அடியில் நிலை குழைந்த நான், அதிர்ந்து போய் நிற்க, நீ வாங்கி சாப்பிட்டால் ஒத்துக்கோ, பொய் சொல்லாதே என்றார்.நான் புரியாமல் நிற்க அவர் மீண்டும் அடித்தார். நான் தெரியவில்லை என்றும் காணாமல் போய்விட்டது என்றும் கூற எனக்கு பல அடிகள் அடித்தார். நான் மீண்டும் மீண்டும் பொய் கூறுவதாக அவர் நினைத்து கடுமையாக அடித்தார். நான் தெரியவில்லை என்பதை மீண்டும் கூறின்னேன். அவர் மற்ற பைசா எல்லாம் இருக்கும்போது அதுமட்டும் எப்படி காணாமல் போகும் என்று கேட்டு நான் பொய் கூறுவதாக கூறி மீண்டும் அடித்தார். நான் தெரியவில்லை என்பதைச் சத்தியம் செய்தேன். அப்போதும் அடிவிழுந்தது. அப்போது அங்கு வந்த என் அம்மாவிற்கு என்னைஅண்ணன் அடிப்பதைப் பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது. என் அண்ணாவை சபையில் அழைக்கின்றார்கள் நீ போ என்று அனுப்பி என்னை அருகில் வைத்து என்ன நடந்தது என்று கேட்டார்கள் நானும் சொன்னேன். அதற்கு சரி நீ அழாதே நான் அப்புறம் அவனை விசாரிக்கறன். நி போய் விளையாடு என்று கூறி என் கண்களை துடைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.

என்னை இதுவரை யாரும் இப்படி அடித்தது இல்லை, என் ஆசிரியர்கள்,அப்பா அம்மா என என்னை கொஞ்சியவர்கள் தான் அதிகம், ஆதலால் நான் ஒன்றும் புரியாமல் உக்காந்து இருந்தேன். அதை வீட அந்த காசு எப்படிப் போனது என்பது எனக்கு குழப்பத்தை தந்தது. விழா முடிந்தவுடன் அனைவரும் போய்விட்டார்கள். மீண்டும் என் அண்ணன் என்னை விசாரிக்கத் துவங்க மெல்ல விசயம் எங்க இரண்டாம் அக்காவிற்கு தெரிந்தது. என் சிவந்து வீங்கிய கன்னத்தை பார்த்த அக்கா மிகுந்த கோபம் கொண்டு எங்க அண்ணாவை சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியே எடுத்து இருந்தாலும் நாம் பொறுமையாகச் சொன்னால் புரிந்துகொள்வான் என்று அவரை சத்தம் போட்டார்கள். நான் தெரியவில்லை என்று கூறி நின்றேன். அம்மாவும் அக்காவும் அண்ணாவை மாத்தி மாத்தி திட்ட அவர் கோபத்தில் சட்டையை மாட்டிகொண்டு வெளியே சென்றுவிட்டார். பின் அக்கா எனக்கு ஆறுதல் கூறி அவர் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டார். நான் தலையணையை நனைத்து தூங்கிப் போனேன். நான் தூக்கத்தில் கூட பினாத்தியதாக மறுனாள் எங்க அம்மா எங்க அண்ணாவைத் திட்டினார். எங்க அண்ணா எப்படிப் பட்டவர் என்றால்,

எங்க அண்ணா மிகவும் நல்லவர், பாசமிக்கவர், அன்பு செலுத்துவதில் அவருக்கு நிகர் கிடையாது ஆனால் அவருக்கு படிப்பும், ஒழுக்கமும் ரொம்ப முக்கியம். இதில் தவறு செய்தால் அவருக்கு வரும் கோபத்தை அளவிட முடியாது, கையில் என்ன கிடைத்தாலும் அடிப்பார்.எங்களை அடித்துவிட்டு அவர் வருத்தப் படுவார். கொஞ்ச நேரம் கழித்து உங்களை என்ன வேலைக்குப் போ, சம்பாரி என்றா சொல்லுறம், படி, ஒழுங்கா இருக்கதான் சொல்லறம், அதை ஏன் செய்ய மாட்டிங்க என்று புலம்புவார். கொஞ்ச நேரம் வீடு அமைதியாக இருக்கும், பின் எங்க அண்ணா எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டுபோய் வடை,பஜ்ஜி, போண்டா வாங்கி வருவார். அப்போதும் கவலையுடன் ஏண்டா படிக்க மாட்டிங்க? படிங்கடா என்று கூறுவார்.நான் இந்த அடி வாங்க மாட்டேன்.நான் கொஞ்சம் சுமாரா படிச்சு அறுபது எழுபது மார்க் வாங்கிவிடுவேன். எங்க மூன்றாவது அண்ணா படிப்புக்காவும், நாலாவது அண்ணா அவர் பெயருக்கு ஏத்த மாதிரி(கண்ணன்) செய்யும் குறும்புக்காகவும் அடி வாங்குவார்கள். நான் இந்த மொதல் அடிக்கு அப்புறம் மொத்தம் நாலு முறைதான் அடி வாங்கியுள்ளேன். அவையும் பதிவில் வரும். சரி இப்ப நம்ம கதைக்கு வருவம். இப்படி நாலு நாளைக்கு அப்புறம் நான் கடைக்குப் போய் திரும்பி வரும் சமயம் ஓடி வரும்போது தான் கவனித்தேன். என் கையில் சுண்டுவிரலுக்கும் மோதிர விரலுக்கும் நடுவில் இடைவெளியில் நாலானா மாட்டிக் கொண்டு இருந்தது. எனக்கு புரிந்தது, என் கை ஓட்டக் கை ஆதலால் நாலானா சிறியது என்பதால் விழுந்துவிட்டது என்று.

உடனே வீட்டிற்கு வந்தவுடன் எங்க அண்ணாவிடம் பரபரப்பாக நான் அண்ணா இன்று என் கையில் நாலானா விழப் பார்த்து புடித்துக் கொண்டேன், என எப்படி விழுந்து இருக்கும் என்று செய்து காட்டினேன். அவரும் சரி ஏன் கையில வச்சுகிட்டுப் போற சட்டை அல்லது டிராயர் பாக்கெட்டில் வை, இரண்டாவது ஓடிப் போகதே நடந்துபோ என்று கூறி என் முதுகில் தடவிக் கொடுத்தார். அதன் பின் நான் பைசாவை டிராயரில் வைத்துக் கொண்டு போனாலும், ஓடிப் போவதை அதாது என் பைக் அல்லது குதிரையில் ஓடிப்போவது தொடர்ந்தது. இந்த நிகழ்விற்கு பிறகு நான் பொய் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்கு பிறந்தது.

6 comments:

  1. தங்கள் எழுத்துநடை மிகவும் நன்றாகயிருக்கு.உங்கள் அண்ணன் உங்கள் மீது கொண்டிருக்கும் பாசமும் அவர்மீது நீங்க கொண்ண்டிருக்கும் பாசமும் இந்த பதிவில் அழகா சொல்லிருக்கிங்க.உங்கள் அன்பு மேலும் சிறக்கட்டும்...

    ReplyDelete
  2. அருமை சுதாண்ணா.. (இப்டி கூப்பிடலாமா??)

    //நானும் என்னுடைய புல்லட்டை காலில் ஒரு உதை உதைத்து கையை முறுக்கி வாயில் சவுண்ட் கொடுத்து ஓடத்தொடங்கினேன். //

    அப்டியே என்னையும் உங்க ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டீங்க.

    ReplyDelete
  3. nalla irudhudunga padhivu..

    adhuvum vandi otti konde povathu varuthu ellam.. pazhaya ninavugalai kilariyathu... :)

    sila samayam naam seiyatha thavarukku thandanai perum podhu kastamaaga irukku..

    oru chinna vendukol... padhivukalai konjam idaiveli vittu pottal padhipatharku elithaaga irukkum anna... :)

    ReplyDelete
  4. மிக்க நன்றி. இனி தினமும் ஒரு பதிவு மட்டும் போட முயற்சிக்கின்றேன்.

    ReplyDelete
  5. // அருமை சுதாண்ணா.. (இப்டி கூப்பிடலாமா??) //

    தாராளமாக நல்லா சத்தமாக கூப்பிடும்மா!!!. எனக்கு மூத்த மூன்று சகோதரிகள்தான் உள்ளனர். தங்கை இல்லை என்ற குறை தீரும் இல்லையா? மிக்க சந்தோசமடைகின்றேன். நான் இப்ப சிங்கையில் உள்ளேன். நான் ஊருக்கு போகும் போது வாம்மா அழைத்துச் செல்லுகின்றேன். நல்ல அமைதியான ஊர் அது.

    ReplyDelete
  6. // அப்டியே என்னையும் உங்க ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டீங்க//
    இம் பின்னாடி என் சட்டைய புடிச்சுக்கிட்டு ஒடிவாங்க, பின்னால வர்றவங்களும் சவுண்ட் கொடுக்கனும் அதான் ஆட்டத்தின் ரூல்ஸ்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.