Monday, October 5, 2009

புரட்டாசி சனிக்கிழமையும் பச்சைமாவும்

சசிகா அவர்கள் இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை என்று ஒரு பதிவிட்டு இருந்தார். அதைப் படித்தவுடன் எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துவிட்டது. எங்க அம்மாவையும் அவர்களின் பாசம்,பக்தியை நிறைய பதிவுகள் இடலாம். அதில் ஒன்று இது.

எங்க அம்மா தன் எட்டாம் வயதில் எங்க அப்பா கூட திருமணம் ஆகி பதிமூன்று வயதில் பருவம் அடைந்த ஒரு மாதத்தில் தனிக்குடித்தனம் வைக்கப் பட்டார். அவர்களுக்கு முதல் மூன்றும் பெண் குழந்தைகள். ஆண் மகவு வேண்டி அவர்கள் நேர்ந்துகொண்ட விரதம்தான் புரட்டாசி ஒவ்வாதானம் எங்கின்ற பிச்சைமுறை. இது ஜந்து அல்லது ஒன்பது வீட்டில் அரிசி பிச்சையாக வாங்கி அதில் மாவு இடித்து பச்சை மாவு செய்து திருப்பதி பெருமாளுக்கு பூஜை செய்வார்கள். எங்க அம்மாவும் ஜந்து வீட்டில் பிச்சை எடுத்து பூஜை செய்வார்கள். அதன் பலனாக அதிகப் பட்சமான அன்பளிப்பாக அவரும் நாலு ஆண் வாரிசையும் ஒரு அசுர வாரிசையும் கொடுத்தார். அசுர வாரிசு யார்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை. குழந்தைகள் பிறந்த பின்னும் அவர் எங்களின் நலனுக்காக இந்த விரதத்தை தொடர்ந்து செய்து வந்தார். நிறையப் பேர் குடும்ப நலனுக்காக இன்றும் செய்கிறார்கள்.

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முந்திய நாளில் மாலை இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி விடும். அம்மா எங்க தெருவில் ஜந்து வீடுகளை தேர்ந்து எடுத்து என்னிடம் கூறுவார்கள். நான் அந்த வீடுகளில் சென்று அம்மா நாளை ஒவ்வாதானம் வாங்க வரும் தகவலை சொல்லிவிடுவேன். அவர்களுக்கு இது ஒவ்வெரு வருடமும் நிகழும் நிகழ்வு ஆதலால் அவர்களுக்கும் தெரியும். இப்படிதான் நான் தகவல் தொடர்பு (ஊழல் செய்யாத) மந்திரியானேன். முதல் நாள் மாலை அம்மாவின் ஒரு நூல் புடவை நனைத்துக் காயப்போட்டு எங்களைத் தொடக் கூடாது என்று கட்டளையும் போடுவார்கள். பின் மறுனாள் காலை ஏழு மணியளவில் என் தாய் குளித்துவிட்டு அந்த மடிப்புடவை கட்டி, கும்பகோணச் சொம்பு என்ற கழுத்துடைய சொம்பில் இருபுறம்மும் திருமண் இட்டு(நாமம்), அதை பயபக்தியுடன் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். ஒவ்வேறு வீட்டின் வாசலிலும் நின்று நாராயணா! நாராயணா! என்று கூவி அழைப்பார். அந்த வீட்டில் இருக்கும் பெண்களும் குளித்து தலை முழுகி எங்க அம்மாவிற்காக காத்து இருப்பார்கள். இதுல ஒரு விசயம் என்னன்னா நான் முந்திய நாள் போய் சொல்லும்போது அவர்கள் தனிவிடுப்பில் இருந்தால் (அதாங்க இயற்கை) நான் போடுவதற்க்கில்லை என்று சொல்லுவார்கள். நானும் புரியாமல் எங்க அம்மாவிடம் அம்மா அவங்க போடமாட்டார்களாம் என்று கூறிவிடுவேன்.எனக்கு புரியாவிட்டால் கூட அம்மா புரிந்துகொள்வார். ஒருமுறை ஒருவர் மொட்டையாக நான் நாளை வீட்டில் இல்லை என்று கூறிவிடு என்று சொல்ல நானும் சொல்லிவிட்டேன். மறுனாள் அவர்கள் வீட்டில் இருந்ததைப் பார்த்து நான் அம்மாவிடம் அம்மா அவங்க வீட்டுல இருந்துக்கிட்டே இல்லைனு சொல்லிட்டாங்க என்று கூற அம்மா சிரித்துக் கொண்டு மறுமொழி கூறவில்லை. ஆனாலும் நான் அவர்களிடம் சென்று "அக்கா நீங்க ஏன் வீட்டுல இருந்துக்கிட்டு இல்லைனு பொய் சொன்னிங்க"என்று படுக் என கேக்க, ஒரு நிமிடம் திகைத்துப் பின் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதை அவர்கள் எங்க அம்மாவிடமும் அக்காக்களிடமும் கூறி என்னை ஒருவாரம் கலாய்த்துவிட்டார்கள்.

இப்படி அனைவரின் வீட்டில் இருந்து பெறப்பட்ட அரிசி எங்க வீட்டில் இருக்கும் ஒருபடி அரிசியுடன் சேர்த்து ஒருமணி நேரம் ஊறவைத்து அரிசி மாவாக இடிப்பார்கள். பின் அதனுடன் வெல்லம்,ஏலக்காய் தூள், தேங்காய் துருவல்,பச்சை கற்பூரம் மற்றும் நெய் விட்டு பிசைந்து மாவு ஆகப் பிடிக்கப்படும். அதன் மேல்பகுதியில் குழியிட்டு அதில் நெய் சேர்த்து நெய்த்திரியுடன் பற்ற வைக்கப்பட்டு பூஜை செய்வார்கள், பாசுரங்கள், திருப்பாவை, பல்லாண்டு மற்றும் சிறிய இராமர் பாட்டு எல்லாம் எங்க அம்மா மனப்பாடமாக சொல்லுவார். பின் பூஜை முடிந்தவுடன் அந்த மாவுவிளக்கு மலைஏறுவதற்காக(அனைவதற்காக) நான் அதன் அருகில் உக்காந்து இருப்பேன். பின் அந்த மாவைப் உதிரியாக்கி இன்னமும் கொஞ்சம் நெய் மற்றும் தேங்காய் துருவல் விட்டு அதனை சிறு சிறு வாழை இலைகளில் இட்டு பக்கத்து வீடுகளில் கொடுக்கச் சொல்லுவார். நான் கொடுத்துவிட்டு வந்த (வீட்டுல இல்லைனு பொய் சொன்ன அக்கா வீட்டில் குடுக்க மாட்டேன் என்று மறுத்தது) பின்னர்தான் எங்களுக்கு மாவு கிடைக்கும். பின்னர் அன்று பொங்கல் இட்டு மதியம் பூஜையும் சாப்பாடும் கிடைக்கும். பொதுவாக எங்க வீட்டில் எல்லா சனிக்கிழமையும் காலை யாரும் சாப்பிட மாட்டார்கள். இது என் பசுமை மாறா நினைவுகளில் ஒன்று. இன்னமும் எங்க அம்மா எடுத்த ஒன்று இப்போது எங்க அண்ணிமார்கள் எடுக்கின்றார்கள்.நாராயணா, நாராயணா என்று கூறி பதிவை முடிக்கின்றேன். நன்றி.

பி கு: நான் அந்த அக்காவிடமும் புரியாமல் அடுத்த வருடம் நீங்க கண்டிப்பா வீட்டில் இருந்து அரிசி போடவேண்டும் எனக் கூற அவர்களும் உன் வாய் மூகூர்த்தம் நான் இருந்து போடுறன் என்று சொல்லி எனக்கு சிறிது கண்ணிருடன் முத்தமிட்டார்கள். எனக்கு பிள்ளையிலாத அவர்களின் வார்த்தைகள் புரியாவிட்டாலும் அடுத்த வருடம் போடுவார்கள் என சந்தோசமாக ஓடி வந்துவிட்டேன். அடுத்த வருடம் எங்க அம்மா அவர்கள் வீட்டில் போய், நாளைக்கு அம்மா அவர்கள் வீட்டிற்கு வரமாட்டார்கள், அடுத்த வருடம் வருவதாக சொல்லச் சொன்னார்கள். நானும் புரியாமல் கவலையாய்ப் போய்ச் சொன்னபோது அவர்கள் ரொம்ப சந்தோசத்துடன் சிரித்துக் கொண்டு சரி என்றார்கள். எனக்கும் புரியாமல் எங்க அம்மாவிடம் கேக்க அவர் நிறைமாத கர்ப்பினியும் தீட்டுதான் என்று கூறிவிட்டார்கள். எனக்கு புரியாததால் மண்டை ஆட்டிக்கொண்டு மாவு திங்க ரெடி ஆகிட்டடேன்.

2 comments:

  1. உங்கள் பதிவு அருமையாக இருக்கு.இதன் மூலம் தெரியாத விஷயங்களையும் தெரிந்துக் கொண்டேன்.இன்னும் நிறைய எழுதுங்கள் ப்ரதர்!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி. நான் இன்று இதுவரை நீங்கள் செய்து சாப்பிட்டு இராத ஒரு புதுவகை டிஸ் ஒன்றை எனது முதல் சமையல் பதிவாக போடவுள்ளேன். படித்து முயன்று பாருங்கள். தங்கள் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.