Friday, October 16, 2009

இந்த வருச தீபா வலி

எங்க வீட்டு தீபாவளின்னா ரொம்ப விஸேசமா இருக்கும். அதுக்கு ஒரு மாசம் முன்னாடியே தீபாளி கதை எல்லாம் அவுத்து விடுவேம். எங்க நண்பர்களும் வாய்க்குள்ள ஆரோப்பிளான் போறது தெரியாம கேப்பாங்க. அப்ப எனக்கு விவரம் பத்தலை. இல்லைனா எங்க வூட்டு தீபாளிக்கு காமராசர், நேரு எல்லாம் வந்தாங்க அப்பிடினு கதை விட்டுருப்பன். எல்லாம் பழைய தீபாளிக் கதையும் வரும் தீபாளி பத்தி பிளானும்தான் இருக்கும், எங்க வூட்ல தீபாவளி ஒரு ஊர்த்திருவிழா மாதிரி இருக்கும். நான் அப்பா அம்மா, இரண்டு அக்கா,இரண்டு மாப்பிள்ளைகள், நாலு அண்ணன்மார் என்று ஒரு கும்பலா இருப்போம். எங்க அம்மா சீனியாரிட்டிபடி எல்லாருக்கும் அவங்க கையால் எண்ணெய் தேய்ப்பார்கள். எங்க பெரிய அண்ணன் அப்பவே வருடா வருடம் ஜனுறு ரூவாய்க்கு டப்பாசு வாங்குவாறு. முத நாள் சாயங்க்காலம் ஆரம்பித்து மக்கா நாள் சாயங்காலம் வரை ஒரே வெடியா வெடிப்போம். அப்படி ஒரு தீபாவளி 1986 ஆம் வருடம் சேகமா ஆரம்பித்து ரொம்ப கொண்டாட்டமா முடிஞ்சது. அத உங்ககிட்ட பீலா விடுறதுதான் இந்த பதிவு.

அப்ப எங்க பெரிய அண்ணன் எங்கள் ஊரிலும், இரண்டாது அண்ணன் கல்பாக்கத்திலும், மூன்றாது அண்ணன் எங்கள் ஊரில் தையலகம் வைத்து இருந்தார். வழக்கமா எங்க பெரிய அண்ணன் எங்க எல்லாருக்கும் துணியும் பட்டாசும் வாங்கிக் கொடுப்பார். அவரே துணிக்கடைக்குப் போய் துணி எடுத்து வருவார். நாங்க எல்லாம் இருவது வயசு வரைக்கும் துணிக்கடைக்கு போனது இல்லை. அவர் என்ன வாங்கிக் கொடுத்தாலும் அதான் எங்களுக்கு புடிச்ச கலரு, டிசைன் எல்லாம். அவரும் பார்த்து உசத்தியாத்தான் வாங்குவாரு. அந்த வருச தீபாவளிக்கு எங்க இரண்டாது அண்ணன் வேலையில சேர்ந்து ஒரு வருசம் ஆகுது. அவரு பெரிய அண்ணாவிடம் நீங்க துணி வாங்கிடுங்க பட்டாசு நான் வாங்கியாரன்னு சொன்னார். பெரிய அண்ணனும் சரி என்று துணி வாங்கிட்டார். அதுக்கு முந்தின வருசம் இந்த அண்ணன் இருனூறு ரூபாய்க்கும், பெரிய அண்ணன் ஜனூறு ரூபாய்க்கும் வாங்கினாங்க. பெரிய அண்ணன் எதுக்கு இரண்டு பேரும் வாங்கனும். நீ சொல்லியிருந்தா நான் வாங்கி இருக்க மாட்டேன் என்று சொன்னதால இந்த வருசம் அட்வான்சா சொல்லிட்டார். நாங்களும் அண்ணன் சென்னையில இருந்து நிறைய பட்டாசு வாங்கி வருவார் என பக்கத்து வீட்டு பசங்களிடம் பீலா விட அவர்களும் வெடிக்கும் போது என்னை கூப்பிடனும் என்று கூட்டனி போட்டுட்டாங்க. தீவாளிக்கு ரெண்டு நாள் முன்னாடி எங்க பக்கத்து வக்கில் வூட்டுக்கு போன் வந்தது, எங்க இரண்டாது அண்ணன் டிரயின்ல ரிசர்வேசன் கிடைக்கல, பஸ் எல்லாம் புல்லாயிருச்சு அதுனால என்னால வரமுடியாதுன்னு. போன் வந்தவுடன எங்களுக்கு எல்லாம் ரொம்ப கஸ்டமாப் போச்சு. முத வருசம் அண்ணாவை விட்டுட்டு கொண்டாடுற வருத்தம். எங்க அம்மா நாலு பிள்ளைக இருந்தாலும், ஜந்துல அவன் ஒருத்தன் வருலலியேன்னு ரொம்ப கவலைப் பட்டார்கள். அன்றுமாலை எங்க பெரிய அண்ணன் எங்க சின்ன அண்ணாவிடம், இவன் பட்டாசு வாங்கி வருவதாக கூறியதால் நான் இருந்த காசுக்கு துணி எடுத்துவிட்டேன்(எல்லாருக்கும் இரண்டு செட் வாங்கியிருந்தார்) இப்ப என்ன பண்ணுவது என்று. நாங்க பட்டாசு இல்லாட்டி பரவாயில்லை, அதான் அண்ணன் இல்லையே அடுத்த வருசம் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூற, அவரும் வெளியில் சென்று விட்டார். ஒரு ஏழு மணிக்கு என் மூன்றாவது அண்ணன் ஒரு பெரிய அட்டைப் பொட்டியுடன் வந்தார். அவர் கடன் வாங்கி முன்னூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கி வந்தார். நாங்களும் அதை பிரித்துப் பார்த்துகொண்டு இருந்த பொழுது பெரிய அண்ணன் இன்னேரு அட்டைப்பொட்டியை தூக்க முடியாமல் தூக்கி வந்தார். அவரும் வழக்கம் போல ஜனூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கி வந்தார். பெரிய அண்ணன் ஏன் என்னைக் கேக்காமல் வாங்கி வந்தாய் என சின்ன அண்ணனை கேட்டு, கடன் வாங்கியதற்க்காக திட்டிவிட்டு, கடன் வாங்கி பட்டாசு வெடிக்கலைனா குறைஞ்சா போய்டும் என்றார். அவரும் கடன் வாங்கித்தான் வாங்கி இருப்பார். இப்படி எல்லாப் பட்டாசையும் மூட்டை கட்டிவிட்டு தூங்கப் போனேம். ஆனாலும் இரண்டாவது அண்ணன் இல்லாத வருத்தம் இருந்தது.

மறுனாள் காலை ஜந்தரை மணிக்கு எங்க வீட்டில் சத்தம் கேட்டு முழித்துப் பார்த்தேன். எங்க இரண்டாவது அண்ணன் ஒரு பெரிய சூட்கேஸ் மற்றும் இரண்டு லெதர் பேக்குடன் வந்துருந்தார். அவர் பஸ் மாறி மாறி மிகுந்த சிரமப்பட்டு வந்ததாக கூறினார். அவரின் லக்கேஜ் முழுக்க துணிகளுக்கு இடையில் பூராவும் பட்டாசுகள். ரெட்போட் பட்டாசுகள் பண்டல் பண்டலாய் வாங்கி வந்தார். லஷ்மிவெடிகள் ஜந்து பண்டல். பாம் பாக்ஸ் ஜந்து டஜன் என்று ஒரே வெடி மயம். அவரிடம் பெரிய அண்ணன் ஏண்டா இவ்வளவு பட்டாசு வாங்கியிருக்க எவ்வளவு எனக்கேக்க அவரும் ஆயிரத்து இருனூறு ரூபாய்க்கு வாங்கியதாக கூறினார். பெரியண்ணன் ஏன் வீண் செலவு என்று கூற அவரும் நம்ம மூனு அக்காமாருக்கும் கல்யாணம் பண்ணிட்டம், கடனும் எல்லாம் அடைச்சாச்சு, இன்னி பசங்கதான் இன்னும் இரண்டு வருசத்துல எல்லாரும் வேலைக்கு போய்டுவாங்க. எனக்கும் மத்தியரசில் கைனிறைய சம்பளத்துடன் வேலை. நம்ம பெரிய குடும்பம் இனி தலை நிமிர்ந்தாயிற்று. ஆதலால் நிறைய வெடித்து சந்தோசமா இருப்பம் என்றார். நீங்க ஏன் பட்டாசு வாங்கினிங்க என்று அவர் கேக்க, உன் போன் தான் எனக் கூற அவரும் நீங்க எல்லாம் இல்லாம நான் தனியா இருக்கனும் அது இல்லாம நான் ஒரு வாரத்துக்கு முன்னால பட்டாசு வாங்கிட்டேன், ஆதலால் கஸ்டப் பட்டாவது போயிறலாம் என்று கிளம்பி வந்தேன் என்றார். நாங்க வீட்டின் வாசலில் பட்டாசு காயப் போட்டிருந்தது பார்த்து பக்கத்து வீட்டார் அனைவரும் ஆச்சரியப் பட்டனர். தெருவில் செல்லும் சிலர் கடை என நினைத்து விலை கேக்க, நான் இது நாங்க காயப் போட்டுருக்கேம் என்று கூற. இவ்வளவு பட்டாசா! என வியந்தனர். அன்னைக்கு பூரா எங்க பெரியண்ணன் எங்க அம்மா அக்காவுடன் மிக்ஸர், பலகாரம் என அமர்க்களப் படுத்த நாங்க பட்டாசை மறுபடி மறுபடி பார்த்துக் கொண்டு இருந்தேம். மாலை சரியாக எட்டுமணிக்கு வெடிக்க ஆரம்பித்த நாங்கள் அடுத்த நாள் இரவு பத்து மணிவரை வெடி வெடி என்று வெடித்தேம். எங்க தெருவில் அனைவரும் என்ன பட்டாசு குடேனையே வெடிக்க வச்சுட்டிங்க என கிண்டல் பண்ணினார்கள். அப்படியும் வெடித்து முடியாமல் கார்த்திகை பண்டிகைக்கு கால்வாசியை ரிசர்வ் செய்தேம்.

ஊரு கண்ணு மொத்தமும் பட்டுதே என்னமே தெரியலை, அடுத்த வருடம் எங்க பெரியண்ணன் கல்யாணமாகி புது மாப்பிள்ளையாய் மாமனார் வீடு போனார். அதற்கு அடுத்த வருடம் இரண்டாவது அண்ணன் என்று இதுவரை மொத்தக் குடும்பமும் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடவில்லை. போன வருடம் தீபாவளியை கொண்டாடலாம் என நினைத்தபோது எங்க அப்பா மறைந்தார். இந்த வருடம் நான் இங்கே சிங்கையில் தனியாக இருக்கின்றேன். வழக்கம்போல் அன்னைக்கும் ஓட்டல் சாப்பாடுதான். அடுத்த வருட தீபாவளியையாவது மொத்த குடும்பமும் இணைந்து கொண்டாடவேண்டும். மொத்தத்தில் தனிமையில் எனக்கு இந்த வருடம் எனக்கு தீபா வலிதான்.

உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நன்றி.

4 comments:

  1. /எங்க வீட்டு தீபாவளின்னா ரொம்ப விஸேசமா இருக்கும். //

    என்ன தீபாவளிக்கு பொங்கல் செய்விங்களா!?

    ReplyDelete
  2. தீபாவளிக்கு எல்லோருக்குமே ஒவ்வொரு வலி இருந்திட்டுத்தான் இருக்கு.எப்பிடினாலும் அது வருது போகுது.வந்திட்டுப் போகட்டும்.நினைவு கொள்ளுவோம்.சந்தோஷமாக இருப்பதாய் திருப்திப்பட்டுக்கொள்வோம்.

    ReplyDelete
  3. அருமையான பீலா பதிவு ..ஸாரி ஸாரி ...அருமையான பதிவு :-))

    ReplyDelete
  4. உண்மையிலியே வருத்தமாக இருக்கு. நண்பர்கள் யாரும் உங்களைத் தீபாவளிக்கு அழைக்கலியா.
    குடும்பத்திலிருந்து பிரிந்து இருப்பது பண்டிகைக் காலத்தில் மிகவும் கஷ்டம்.
    நிலைமை மாறும் உங்களுக்கும் திருமணம் நடக்கும்.

    அம்மாவை மறக்காமல் அம்மாவோடு கொண்டாடுங்கள்.:)

    உங்கள் தீபாவளிகள் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.