Tuesday, October 13, 2009

கல்யாணமாம் கல்யாணம்

பலரும் பல திருமணங்களுக்கு சென்று இருப்பார்கள், அதில் பல அனுபவங்கள் இருக்கும். அதுபோல எனக்கும் ஒரு திருமணத்திற்கு சென்ற நகைச்சுவையான பதிவு இது. நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் சமயம் எங்கள் நண்பன் ஒருவன் அண்ணாவின் திருமணத்திற்கு அழைத்திருந்தான். அவன் சொந்த ஊர் மூலனூர். நங்கள் இருப்பது தாராபுரம். ஆதலால் அவன் குடும்பத்தில் யாரையும் தெரியாது. அவன் பேருந்து நிலையத்தில் எங்களுக்காக எங்க சக நண்பனை நிற்க வைப்பதாக கூறினான். மேலும் எங்களை தாராபுரத்திற்கு வந்து அழைத்துச் செல்ல வெள்ளகோவில் செந்திலையும் அனுப்புவதாக கூறினான். நாங்களும் செந்தில் உடன் வருவதால் மேலும் பத்திரிக்கை குறைவாக இருப்பதால் மெத்த வகுப்புக்கும் ஒரு பத்திரிக்கைதான் தந்தான்.
திருமண முதல் நாள் மாலை சென்று இரவு தங்கி மறுனாள் காலை திரும்புவதாக முடிவு செய்யப் பட்டது. அதன்படி மாலை ஆறு மணிக்கு செல்லவதாக திட்டம், ஆனால் நம்ம மக்கள் சீவி சிங்காரித்து வர ஆறரை ஆகிவிட்டது.அதன்பின் கிப்ட் வாங்கி கிளம்ப ஏழு மணி ஆகிவிட்டது. எங்கள் பக்கம் அவர்கள் இன திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பு என்ற ஒன்று இல்லாவிட்டாலும் அங்கு விழா இரவு பத்து மணிக்கு ஆரம்பம் ஆகும். மஞ்சத்தண்ணிர் விடுவது, தாய் மாமன் சீர், பொட்டி மாற்றுவது((வரதட்சனை) என நிகழ்வுகள் முடிய மணி ஒன்று ஆகும். இந்த இரவு விருந்து அவர்களின் செல்வாக்கை காட்டுவதாக 32 வகையான ஜட்டங்களுடன் தடபுடலாக இருக்கும். அகவேதான் அவன் முந்திய நாள் இரவே எங்களை அழைத்தான். நாங்கள் மூலனூர் செல்ல இரவு எட்டு ஆகிவிட்டது. எங்களுடன் படிக்கும் ஜந்து நண்பர்களில் ஒருவரையும் பேருந்து நிலையத்தில் காணவில்லை. நாங்களும் செந்தில் இருக்கும் தைரியத்தில் கல்யாண மண்டபத்திற்கு செல்லத் தொடங்கினேம்.

அங்கு நிலையத்தின் முன் உள்ள கல்யான மண்டபத்தை அடைந்ததும் முன்னால் நின்றவர்களிடம் ஸ்ந்தனமும் பன்னீரும் தெளித்தார்கள் நாங்களும் பொட்டு வைத்துகொண்டு கனகராஜ் என கேக்க அவர்கள் உள்ள இருக்கார் போங்கள் என்றார். நாங்களும் பலியாடுகள் மாதிரி உள்ள போய் உக்காந்தோம். அங்க வேற நிறைய பெண்கள் செட்டாக இருக்கும் எங்களை திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதில் என்னை ஒரு பெண் பார்க்க ஜாயாவும் சும்மா லுக் விட்டுகொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் அந்த பெண் அருகில் வந்து நீங்க மஞ்சு மிஸ் தம்பியா? மிஸ் எப்பிடி இருக்காங்கா என்றாள். நான் அசடு வழிய நல்லா இருக்காங்க என்று கூறிப் போச்சுடா இவங்களால நாம ஊரு விட்டு ஊரு போய் கூட சைட் அடிக்க முடியலை என்று மனதுக்குள் நினைத்து தலைகுனிந்து அமர்ந்தேன். பின் ஒருவர் வந்து சாப்பிட வாங்க வாங்க என்று கையப் புடிச்சு இழுக்காத குறையா கூப்பிட்டார். நாங்களும் சாப்பிட போகும் போது எங்க நண்பர்களின் ஒருவன் கேட்டான் டேய் நம்ம வந்து பத்து நிமிசம் ஆகுது. எங்கடா நம்ம ஜந்து நண்பர்களில் ஒருவரைக் கூட காணம் என்றான். அதுக்கு இன்னேருவன் மாப்பிள்ளை வீட்டார் எல்லாம் கோயிலுக்கு போயிருக்காங்க, நம் நண்பர்களும் அங்கதான் இருப்பாங்க என்று பேசிக் கொண்டே சாப்பாட்டு அறையில் வந்தேம். அங்கு நாங்கள் வரிசையாக அமர்ந்தேம். இலை போட ஆரம்பித்தார்கள். அப்போது செந்தில் ஒருமாதிரியா கோழித் திருடன் போல விழித்துக் கொண்டு இருந்தான். நான் அவனிடம் என்ன என்று கேக்க அவன் எனக்கு கனகுவின் இருவீட்டாரும் பழக்கம், ஆனா இங்க யாருமே தெரிந்த முகமாக இல்லை என்றான். எனக்கு பகீர் என்றது. நான் மெதுவாக என் பக்கத்தில் அமர்ந்து இருந்தவரிடம் கனகு அண்ணன் கல்யாணத்தை பற்றி விசாரிக்க அவர் சிரித்துக் கொண்டே அது பேருந்து நிலையத்திற்கு பின்னால் உள்ள மண்டபம்பா!! இது பக்கத்தில இருக்க மண்டபம் என்றார். இதற்க்கு இடையில் இலையில் இரண்டு இனிப்பு, மிக்ஸர், மூன்று பெரியல்,அவியல்,கூட்டு என்று பரிமாற ஆரம்பித்து விட்டார்கள். நான் என் நண்பர்களிடம் மண்டபம் மாறி வந்ததைக் கூற, அவர்கள் யாராது கண்டு பிடித்துக் கேட்டால் அசிங்கம் அதுக்கு முன்னாடி எந்திரிச்சுப் போயிறாலாம் என முடிவு செய்து அனைவரும் ஒன்றாக எழுந்தோம். அங்கு பந்தி கவனித்துக் கொண்டு இருந்த பெண்ணின் தந்தை சாப்பிட உக்காந்தவர்கள் எழுவதைப் பார்த்து பதறி ஓடிவந்தார். அவர் என்னப்பா எந்திரிச்சுட்டிங்க உக்காந்து சாப்பிடுங்க என்றார். நாங்க ஆளுக்கு ஒரு காரணம் சொல்ல ஆரம்பித்தோம். அவர் எங்களை சாப்பிட வைப்பதில் குறியா இருந்தார். நான் உடனே கொஞ்சம் கூச்சத்துடன் மெதுவாக மண்டபம் மாறிய விசயத்தை சொல்ல ஒரு கணம் திகைத்த அவர் உடனே அதுனால என்ன உக்காந்துட்டு எந்திரிச்சா அது எங்களை அவமானப் படுத்துவது போல அதனால சாப்பிட்டு விட்டுப் போங்க என்றார். நாங்க தர்ம சங்கடத்தில் நெளிய அவர் எங்களின் தோளைப் பிடித்து அமுக்கி உக்காந்து சாப்பிடச் சொன்னார். அவரின் அன்புக்கும் அவியலின் ஆசைக்கும் உட்பட்டு கூச்சத்துடன் செந்திலை முறைத்து சாப்பிட உக்காந்தேம்.நாங்கள் பெண்ணின் தந்தை பெருந்தன்மையுடன் நடந்ததால் இந்த் கிப்ட்டை பெண்ணுக்கு கொடுத்து விட்டுப் போவேம், நாளைக் காலை வேறு கிப்ட் வாங்கி அங்க கொடுப்போம் என்ற முடிவுடன் சாப்பிட ஆரம்பித்தோம். நாங்கள் குனிந்த தலை நிமிராமல் வெக்கத்துடன் சாப்பிடும் போது ஒரு குரல் கேட்டது.

" என்ன குட்டி நீ மட்டும் வந்திருக்க ரங்கராஜ் வருலையா? " என்று, நான் நிமிர்ந்து பார்க்க அங்க எங்க பெரிய அண்ணன் நண்பர் மணியண்ணா நின்று கொண்டியிருந்தார். நான் மிரண்டு அவரிடம் மண்டபம் மாறுன விசயத்தை கூற அவர் சிரித்து பரவாயில்லைப்பா என் தங்கச்சிக்குத் தான் கல்யாணம், உங்க அண்ணன் வர்றதா சொல்லியிருந்தார். தயக்கப் படாமல் சாப்பிடுங்க என்றார். எங்க அண்ணன் வருவார் என்றவுடன் எனக்கு திக் என்றது. அவியல் ஆசை விட்டுப் போய்விட்டது. (இதுக்கு முன்னாலயே மூனு தடவை கேட்டு வாங்கி சாப்பிட்டேன்.). நாங்கள் அவசரமாக சாப்பிட ஆரம்பிக்க மணியண்ணன் என்னுடன் பேசுவதைப் பார்த்த பெண்ணின் தந்தை அருகில் வந்து என்ன மணி இவங்களை தெரியுமா என விசாரிக்க, அவர் என்னைக் காட்டி இது நம்ம ஆர் ஜ இரங்க ராஜ் கடைசித் தம்பி என்றார். பெண்ணின் தந்தை சிரித்து அப்புறம் என்னப்பா இது நம்ம வீட்டு கல்யாணம் கூச்சப் படாமல் சாப்பிடுங்க என்று கூறி இலையில் சாப்பாட்டை கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். நானும் இதுதான் சாக்குனு அவியலை நாலாது முறை வாங்கி சாப்பிட்டேன். ஆனாலும் எங்க அண்ணன் வருவதுக்குள்ள எஸ் ஆகவேண்டும் என அவசர அவசரமாக வயிற்றில் இடம் இல்லாத அளவுக்கு கட்டி விட்டுப் பின் கை அலம்பி வந்தோம். முதல் வேளையாக பெண்ணிடம் போய் கிப்ட் கொடுத்துவிட்டு, போட்டாப் படிச்சு, பெண்ணின் தந்தையிடமும், மணியண்ணாவிடமும் கூறி வெளியே வந்தோம். சரியாக வாசலை அடையும் போது எங்க அண்ணா உள்ள வந்தார். என்னிடம் இங்க எங்கடா நீங்க? என்று கேக்க நான் மென்னு முழுங்கி மண்டபம் மாறிய விசயத்தை கூறினேன். அவர் சிரித்து பின் " நீயும் உன் நண்பர்களும் உருப்படியா ஒரு காரியமும் பண்ண மாட்டிங்களா " எனக் கேட்டுவிட்டு உள்ளே போனார். எனக்கு நிம்மதியா மூச்சு வந்தது. என் நண்பன் ஒருவன் என் அருகில் வந்து மெதுவான குரலில் என்னிடம் கேட்டான். என்னடா உங்க அண்ணன் நம்மளை உருப்படியா ஒன்னும் பண்ண மாட்டிங்களானு கேக்கறார், உள்ள மூக்கு முட்ட சாப்பிட்டமே அது என்ன? என்றான், அந்த பரபரப்பிலும் நாங்கள் சிரிக்க ஆரம்பித்தோம்.

7 comments:

 1. அங்க கூட உங்களால சைட் அடிக்க முடியலையா? என்ன கொடுமை சுதா இது.

  கும்பலா உக்காந்து நீங்க முழிச்சதையும் நாலு தடவை கட்டோ கட்டுன்னு கட்டினதையும் படிக்கவே சிரிப்பா இருக்கு. பாத்திருந்தா?

  ReplyDelete
 2. ரொம்ப சுவராஸ்யமா இருந்தது பித்தன்!!

  ReplyDelete
 3. //அவர் சிரித்து பின் " நீயும் உன் நண்பர்களும் உருப்படியா ஒரு காரியமும் பண்ண மாட்டிங்களா " எனக் கேட்டுவிட்டு உள்ளே போனார்.//

  ஏன் நீங்க புளொக்கர் எழுதுறது உங்க அண்ணாக்குச் சொல்லலியா.அது உருப்படியான காரியம்தானே !

  அழகா உங்க அனுபவத்தை எழுதியிருக்கீங்க.சிரிச்சு சிரிச்சுப் படிச்சேன்.அவியல்ன்னா அப்பிடிப் பிடிக்குமா !அந்த அவியல் எப்பிடிப் பண்றதுன்னு சொல்லித் தாங்களேன்.

  ReplyDelete
 4. கண்டிப்பா எழுதுறன். அவியல் செய்முறை எனக்கு தெரிந்தாலும், அவியலுக்கு அரைக்கும் மசாலா எனக்கு தெரியாது. என் இரண்டாவது மன்னி(அன்னி) அருமையாக சமைப்பார்கள். அவர்களிடம் கேட்டு எழுதுகின்றேன். நன்றி ஹேமா. நான் பிளாக் எழுதுவது எங்க வீட்டில் இதுவரை யாருக்கும் தெரியாது.

  ReplyDelete
 5. நன்றி, திருமதி கல்யாணி, நன்றி சுசிதங்காய், நன்றி மேனகா

  ReplyDelete
 6. இது மாதிரி நடந்துள்ளதாக எனது தந்தை கூறி உள்ளார்

  ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.