Monday, December 28, 2009

வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 4

கைதட்டி சுனையில் அருகில் இருக்கும் தங்கும் குடிசையில் முக்கால் மணினேர தூக்கத்திற்க்குப் பின்னர் நாங்கள் சீதாவனம் அல்லது வீபூதி மலை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம். இதற்கு இடையில் வருவதுதான் வழுக்குப் பாறை என்னும் மலை. ஒரு அடர்ந்த காட்டை உடைய மலையின் சரிவில் உள்ள பாறை முடிவுதான் இந்த வழுக்குப் பாறை. பெயருக்கு ஏற்ற சரிவும், வழவழப்பும் கூடியது இந்தப் பாறை. மரங்களற்று பெரிய பாறையில் சிறிய அளவில் படிகள் போன்று செதுக்கிய அமைப்பை உடையது. என் தந்தையார் சென்ற காலத்தில் இந்தப் படிகளும் இருக்காதாம். பாறையைப் பற்றித் தவழ்ந்து ஏறவேண்டுமாம். இப்போது படிகள் இருந்தாலும் கவனமாக ஏறவேண்டும். ஒரு பக்கம் காடுடன் கூடிய பாறைச் சரிவும், மறுபுறம் அடர்ந்த காடும் உடையது. இந்தப் பாறையில் வழுக்கி விழுந்து,சரிவில் உருண்டால் நாம் நேராக குறுக்கு வழியில் சிவபதவி என்னும் கையாலாய மலையை அடைவேம். அப்படி போவது நல்லது அல்ல என்பதால் நாம் கவனமாக நடப்போம்.

இந்தப் பாறையைக் காலையில், அல்லது மாலையில் கடப்பது சுலபம். வெய்யிலில் ஏறினால் கால் கொப்பளித்து விடும். மழை பெய்யும் போது வழக்கும் தன்மையுடையது. இரவில் ஏறும் நாங்கள், இறங்கையில் காலை பத்து மணிக்கு முன்னர் இந்த இடத்தைக் கடந்து விடுவோம். மிக கவனமாக குச்சி ஊன்றி ஏறவேண்டும். ஏறுவதைக் காட்டிலும் இறங்குவது மிகக் கடினம். குச்சியை நன்றாக, அழுத்தமாக ஊன்றி இறங்க வேண்டும். இது மிக செங்குத்தாக ஒரு இருபது படிகளும், பின்னர் சற்று சமதரையாக படிகளும் இருக்கும். படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால்,படத்தில் முன்னால் இறங்கிய மனிதர்கள் எவ்வளவு சிறியதாக காட்சியளிக்கின்றார்கள் என்பதில் இருந்து பாறையின் இறக்கத்தைக் காணலாம். இந்த இடத்தைக் கடந்து சிறிது தூரம் மலை ஏறினால் நாம் சீதாவனத்தை அடையலாம். இந்த இடம் சீதாவனம் என்று அழைக்கப்படும் காரணம் எதுவும் தெரியாது. தென்றுதொட்டு வரும் பெயர்.ஆனால் வீபூதி மலை என்று அழைக்கப்படும் காரணம். இந்த மலையில் மண்ணை சிறிது கிளறி விட்டுப் பார்த்தால் வெள்ளை ஜிப்சம் மண் கிடைக்கும். இதை அந்தக் காலத்தில் வீபூதியாக மக்கள் எடுத்துச் செல்வார்கள். மருத்துவ குணம் உடையது.

இதற்காக நம் மக்கள் அங்கு தோண்டித் தோண்டி அந்த மலை மிகவும் குண்டும் குழியுமாக இருக்கும். மழையில் அரித்து அங்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆதலால் மிக கவனமாக நடக்க வேண்டும்.கொஞ்சம் தடுமாறினாலும் கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொள்ளும். ஒருபுறம் அடர்ந்த காடும், மறுபுறம் அபாயமான மலைச் சரிவும் கொண்டது. மிகப் பெரிய பாறைகளை கொண்ட வளைந்து வளைந்து ஏற்றம் மற்றும் இறக்கங்களைக் கொண்ட சீதாவனத்தைக் கடந்தால் வருவது ஆண்டி சுனை. இந்த சீதாவனத்திலும், அண்டிசுனை, சுவாமி மலையின் அடிவாரத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் தான் வீரப்பனைத் தேடி அதிரடிப் படையினர் முகாம் அமைத்து இருந்தார்களாம். தமிழர் இயக்கத் தீவீரவாதி மாறனைக் கைது செய்ததது இந்தச் சீதாவனத்தில் என்ற தகவலும் உண்டு. சீதாவனம் குளிரும், வெய்யிலும் உடைய அற்புதமான காலனிலை உடையது. இங்கும்,அடுத்து வரும் ஆண்டிசுனை, சுவாமிமலை அடிவாரப் பகுதியிலும் இந்திய காட்டெருமைகள் அதிகம் காணப் படும். காட்டெருமைகள் வந்தால் நாம் பல்லி அல்லது சிலந்தி போல அங்கு இருக்கும் பிடிமானம் இல்லாத பெரிய பாறைகளின் மீது ஏறினால் உயிர் தப்பலாம். இல்லாவிட்டால் தப்பிக் கூட வழி கிடையாது. ஆனால் இதுவரை யாரும் இந்த மலையில் வனவிலங்குகளால் தாக்கப் பட்டது கிடையாது.

இதற்கும் ஆண்டி சுனைக்கும் இடைப் பட்ட பகுதியில் அந்த மலைவாசிகளின் கடைகள் இரண்டு அல்லது மூன்று இருக்கும்.இந்த கடைகளில் ஜாதிக்காய்,ஜவ்வாது,வேங்கை போன்ற மூலிகைப் பொருட்களும், மூலிகை மரங்களின் வேர்கள், கட்டைகள் விற்பார்கள். மூலிகை லோகியங்கள், மற்றும் வேங்கை மரத்தின் பால் என்னும் மை போன்ற பிசினை விற்பார்கள். இந்த வேங்கை மரத்து பிசினால் குழந்தைகளுக்கு மையிட்டால் குழந்தைகளுக்கு வியாதி, காத்துக் கருப்பு எதுவும் அண்டாது என்ற நம்பிக்கை உள்ளது. நாங்களும் எங்க அண்ணாவுன் குழந்தைக்கு வாங்கி வந்தோம். நாங்கள் இரவு வேளையில் அங்கு சென்ற போது, அவர்கள் வளர்க்கும் நாய்கள் குரைத்துக் கொண்டு கடைகளுக்குப் பின்னால் கூட்டமாக ஓடியது. நாங்கள் புதியவர்களான எங்களைப் பார்த்துக் கொண்டு ஓடியது என்று நினைத்துக் கொண்டு, கூலாக பேசிக் கொண்டு நடந்தோம். இதை அடுத்து உள்ள ஒரு இடத்தில் நாங்கள் கொஞ்சம் அமர்ந்து களைப்பாறியும் நடந்தோம். ஆனால் அடுத்த நாள் காலையில் நாங்கள் இந்த இடத்திற்க்கு வரும் போது, நாய்கள் சர்வ சாதரனமாகப் பார்த்து விட்டுத் தூங்கியது. நான் வியப்புற்று கடைக்காரரிடம் கேட்டபோது. அவர் சிரித்துக் கொண்டு சொன்னார். அது அப்ப காட்டுக்குள் காட்டெருமைகள் கூட்டம் வந்தது. அதுனாலதான் நாய்கள் அவைகளை துரத்திக் கொண்டு ஓடியது. இங்கு நாய்கள்தான் அவைகளிடமும், செந்நாய் கூட்டத்திடமும் எங்களுக்குப் பாதுகாப்பு என்றார். நான் அவைகள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டபோது அவர், அவைகள் மிகப் பலமும், கோபமும் உடையது. மனிதர்களை அவற்றிக்குப் பிடிகாது. இந்தக் கடைகளை எல்லாம் நொடியில் முட்டி உடைத்து விடும். நாங்கள் ஓடிப் போய் பாறைகளில் ஏறினால் மட்டும் உயிர் பிழைக்கலாம் என்று கூறினார். நான் அங்கு தங்கிய விசயத்தைக் கூறியபோது, அவர் இதுவரை பக்தர்கள் யாரையும் அவைகள் முட்டவில்லை. அது உங்கள் கண்ணிலும் படாது. இது எல்லாம் ஈசனின் அருள் என்றார். அவ்வளவு அடர்ந்த காட்டில் எனது மூன்று வருடப் பயணங்களின் போது, நான் பாம்பு அல்லது எந்த மிருகத்தையும் கண்டதில்லை என்பதை நினைக்கும் போது இது இறையருள் தானே. அடுத்த பதிவில் நாம் ஆண்டி சுனை பற்றிப் பார்ப்போம். நன்றி.

டிஸ்கி : அடுத்த பதிவில் நான் எனக்கு ஏற்ப்பட்ட வித்தியாசமான ஒரு அனுபவத்தை,ஏறக்குறைய நான் செத்துப் பிழைத்த கதையைக் கூறுகின்றேன். நன்றி.

6 comments:

  1. தமிழில் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பதிவுகள் மிகக் குறைவுதான்! பதிவர்கள் அதிகம் பயணம் செய்யாத பாதையும் இது தான் என்று நினைக்கிறேன். கடைசியாக கோவி கண்ணன் தன்னுடைய லண்டன் பயணத்தைப் பற்றிய பதிவுகளாக எழுதியதைப் படித்தேன். சுற்றுலாவாகப் போகும் போது எழுதுவதும், ஒரு ஆன்மீக அனுபவத்தை வேண்டிப் போகிற பயணமும் மேலோட்டமாக ஒன்று போலத் தெரிந்தாலும், கொஞ்சம் வேறுபட்டவை.

    வெள்ளியங்கிரிப் பயணம் பற்றிய பதிவுகள் நல்ல முறையில் வளர்ந்துகொண்டிருக்கின்றன. மறுபடியும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். எழுத்துப் பிழைகளைத் தவிர்த்துக் கொள்வதில், இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது, இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் மேலே, என்ன விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளப் போகிறோம் என்பதைத் திட்டமிட்டுப் பகுதி வாரியாகப் பிரித்து எழுதுங்கள்.அப்படி முழுமையான விவரங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும்போது, இன்னும் ஒரு வருடமோ அதற்கும் பின்னாலோ வந்து படிக்கும்போது கூட, பயனுள்ளதாக இருக்கும்!

    புதுவருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆசிரியர் அவர்களே....
    தங்களின் பயணக்கட்டுரை 1, 2 படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. (3, 4 படிக்க முடியவில்லை). நாங்கள் 25 நபர்கள் (மெப்கோ) திட்டமிட்டபடி வெள்ளி (25 டிசம்பர்) கிளம்பி சனிக்கிழமை அதிகாலை கோவிலை அடைந்தோம். காலை 7.30 மணிக்கு (4இட்லி மட்டும் சாப்பிட்டு) ஏற ஆரம்பித்து 11.30 மணிக்கு (ஒரே தம்மில் , ஓய்வெடுக்காமல) வெள்ளியங்கிரீச்ரரை தரிசனம் செய்தோம். மதியம் 12.15 க்கு உச்சி காலை பூசை தரிசனம் செய்தோம். (அங்கே சிறு பெண்குழந்தைகளின் இசையுடன் கூடிய கும்மி நடனத்தை ஆண்டவன் சன்னிதானத்தின் முன்னிலையில் கண்டு பரவசமடைநேதோம்.
    பிறகு மாலை 1.15 மணிக்கு இறங்க ஆரம்பித்து 4.15 மணிக்கு அடிவாரம் வந்தடைந்தோம் எல்லாம் வல்ல வெள்ளிங்கரீச்வரர், மனோன்மனி அம்மாவின் ஆசியினால்....
    உங்கள் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. (ஒரே சிரமம் என்னவெனில் உங்கள் பேச்சை கேட்டு காலை 4 இட்லி மட்டும் அளவோடு சாப்பிட்டு ஏறியதால் ஆறாவது மலையை கடந்தவுடன் பசி கண்ணை சொறுகியது. வேறு எதுவும் சாப்பிட கொண்டு செல்லவில்லை.. பிறகு சாமியிடன் கொடுப்பதற்கு கொண்டு சென்ற 2 கிலோ சீனியில் 250 கிராம் சாப்பிட்டவுடன் உயிர் வந்தது. பிறகு ஏழாவது மலையை ஏறினோம்.)மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.....இதே போல் வேறு மலைக் கோவில் பற்றிய பயணக் கட்டுரைகளையும் எழுதவும்......இந்த தொடரையும் ஆவலோடு படிக்கின்றோம்....கசேந்திரன் (மெப்கோ)

    ReplyDelete
  3. very interesting waiting for next episode!!

    ReplyDelete
  4. ரொம்ப வித்யாசமான பயணம்.. தொடரட்டும் அண்ணா.

    ReplyDelete
  5. நன்றி, கிருஷ்ண மூர்த்தி அய்யா, நான் இன்னமும் முயற்ச்சி செய்து தவறுகளைக் குறைக்கின்றேன்.
    தங்களின் ஆலோசனைகளுக்கு நன்றி.
    நன்றி இராஜேந்திரன், வெள்ளியங்கிரி,சபரிமலை,திருவண்ணாமலை போன்றவை ஒரு நாளில் அதுவும் மூன்று மணி நேரத்தில் முடித்து விடுவது முடியும், ஆனால் இழப்பு நமக்குத்தான். ஏறக்குறைய கடல் மட்டத்தில் இருந்து ஜந்து முதல் ஆறாயிரம் அடிகள் சென்று வருவது நமக்கு தூய ஆக்ஸிஜனையும், நல்ல இயற்க்கை காட்சிகளையும் தருவது மட்டும் அல்லாமல் மனதுக்கு சாந்தமும்,இதமும் தரும். அதை விடுத்து ஒரு பயணம் போவது போல செல்வது நன்மை பயக்கா.
    நான் தங்களை குற்றம் செல்லவில்லை.தாங்கள் சென்ற பயணக் குழு அவ்வாறு அந்த இடத்தின் மகிமை பற்றி முற்றிலும் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார்கள். இந்த கட்டுரையின் இறுதி பகுதிகளையும்,அதில் வரும் படங்களையும் பாருங்கள் நீங்கள் பார்க்க மறந்து என்ன என்று புரியும்.
    நான் கால் வயிறு என்பது ஏற உதவும் என்பதால், என் பேச்சைக் கேட்டு கால் வயிறு சாப்பிட்ட நீங்கள் ஏன் நான் சொன்ன மாதிரி, குட்டே பிஸ்கட் மற்றும் குளுக்கோஸ் எடுத்துக் கொள்ளவில்லை. குளுக்கோஸ் இருந்தால் சுவாமி மலை ஏற மிகவும் வசதியாக இருக்கும். குட்டே பிஸ்கெட் ஆண்டி சுனையில் சாப்பிட்டு, அரைபாட்டில் ஆண்டிசுனை தீர்த்தம் குடித்தால் வயிறு நிறைந்து இருக்கும். அடுத்த தடவை செல்லும் போது, இந்தக் கட்டுரையில் உள்ள மாதிரி பயணம் மேற்க்கொள்ளுங்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மலை ஏற ஆரம்பித்து அதிகாலை சூரிய உதயத்தின் போது தரிசனம் செய்யவும். அதுதான் அந்த மலையின் சிறப்பு. நன்றி.
    நன்றி சுசி.
    நன்றி சுவையான சுவை.

    ReplyDelete
  6. நீங்கள் அங்கு மலை ஏறும் போது என்ன என்ன எடுத்து சொல்லனும் என்று தனி பேராவா போட்டு பெரிய எழுத்தில் காட்டி இருக்கலாம் இட்லி பசி தாங்குமா?

    இரவில் அங்கு எல்லோரும் செல்வதை பார்த்தால் பாதையும் ரொம்ப பயமாக இருக்கு.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.