Friday, January 22, 2016

S.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை

இன்னிக்கி காலையில நான் வீட்டை விட்டு வெளியில வந்தபோது, எதிர்த்தாப்புல சர்ச் சுவரில், “ வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவங்களே, என்னிடம் வந்து இளைப்பாருங்கள்” அப்படினு ஒரு வசனம் பார்த்தேன். நம்மளும், ”ஏன் வருத்தப்பட்டு வேலை பார்ப்பவர்களே இங்க வந்து சிரிச்சுட்டு போங்கனு” ஒரு நகைச்சுவைப் பதிவு போடக் கூடாதுன்னு ஒரு எண்ணம். சரி பார்க்கலாம்னு சொல்லிட்டு டீவி போட்டால், ஜெயா டீவில ராமேச்சுவரம் திருக்கோவில் மற்றும் ஆண்டாள் திருக்கோவில் குடமுழுக்கை ஒரே நேரத்தில் காட்டினார்கள், அட இது என்ன புதுமை, இரண்டு கோவில் குடமுழுக்கு ஒரே நேரத்தில், அதுவும் சைவம்,வைணவம் இரண்டும் ஒரே நேரத்தில், அப்படினு ஆச்சிரியப்பட்டு பார்க்க ஆராம்பித்து விட்டேன். விளம்பர இடைவேளையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போனா, அங்க அடிக்கப் பொறந்த மாதிரியே, வார்னரும்,பிஞ்சும் நம்ம பெளலர்களை பின்னி பெடல் எடுத்துட்டு இருந்தாங்க. நம்ப பெளலர்களும் அடி வாங்க பொறந்த மாதிரியே பந்து வீசிட்டு இருந்தாங்க, பந்து வீசுவது என்றால் சும்மா பந்து போடுவது இல்லை, விக்கெட் எடுப்பதுன்னு யாரும் சொல்லித்தரலை போல. அட இது வேலைக்கு ஆவாதுன்னு சொல்லி, தூர்தர்சன் போனா அங்க P.S.L.V ராக்கெட்டில், அன்னிய நாட்டு ஆறு சாட்டிலைட்டுகளை ஒன்னா லாஞ்ச் பண்ணாங்க. நம்ப விஞ்னானிகளின் சாதனைக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு பார்த்தேன். விஞ்னாத்தில் ராக்கெட் புதுமை, அதே சமயம் குடமுழுக்கு பழமையும் கலந்த நம் பாரத கலாச்சாரம் பத்தி வியந்து விட்டேன். என்னடா இவன் நகைச்சுவைனு சொல்லிட்டு கடுப்பு அடிக்கறான்னு நினைக்காதிங்க, பதிவுக்கான பின்னனி இதுதான். சரி நம்ம வடிவேலு பாணியில் பதிவுக்கு போகலாம்.


P.S.L.V ராக்கெட் விட்டுட்டு ஒரு கூட்டம் போட்டாங்க, நானும் அதுல கலந்துக்கிட்டு ராக்கெட் விடுற செலவு எல்லாம் சொன்னாங்க. இவ்வேளோ காஸ்ட்லியா இருக்கே, இதை இன்னும் கம்மி பண்ண முடியாதான்னு யோசிச்சேன், அப்பத்தான் என் தேங்காய் மண்டையில ஒரு ஜடியா வந்துந்ச்சு. அதுதான் கம்மி செலவுல சாட்டிலைட் அனுப்பும் S.S.L.V ராக்கெட் லாஞ்சிங்க் புராஜெட். இந்த ஜடியாவோட நான் அங்க சுத்தி சுத்தி வந்தேன். அப்பத்தான் ஒரு தமிழ் நாட்டு விஞ்னானி ஒருத்தர் வந்தார். டபால்னு அவரு கால்ல போய் விழுந்தேன். அவரு டக்குனு திகைச்சு போய், இப்படி சட்டுனு கால்ல விழுறானே ஒருவேளை மந்திரியா இருப்பாரான்னு ஸாக் ஆகிப் பார்த்தார். நான் எந்திரிச்சு, சார் உங்களுக்கு என் வணக்கங்கள் என்று சொன்னேன். அவரும் பதில் வணக்கம் சொன்னார். ஏம்பா என் கால்ல விழுற தமிழ் நாட்டுல ரெண்டு பேரு கால்ல விழுந்தா பதவியாது கிடைக்கும் என் காலில் ஏன் விழுறேன்னு கேட்டார். அதுக்கு நான் சார் உங்க கால்ல மட்டும் விழவில்லை, எல்லா I.S.R.O விஞ்னானிகள் காலில் விழுந்தேன் என்று கூற அவரும் மார்கழி மாசம் பனியில் நனைஞ்ச மாதிரி புல்லரித்துப் போய், என்னப்பா வேணும்னு கேட்டார். நான் சார் எனக்கு ராக்கெட்னா ரொம்ப உசுரு, அதுனால அதைப் பத்தி எனக்கு சொல்லித் தருவீங்களான்னு அப்பாவியா கேக்க, அவரும் சந்தேகத்தோட என்ன தெரியனும் அப்படின்னு கேட்டார். சார் இந்த ராக்கெட் எப்படி அனுப்புறிங்கன்னு கேட்டேன், அதுக்கு இப்ப நான் பிஸியா இருக்கேன், நீங்க இரவு ஒரு 7.30 மணிக்கு வாங்கன்னு சொன்னார். நானும் ராத்திரி போனேன். அப்ப அவரு எனக்கு ராக்கெட் பாகங்கள், எரிபொருள், பூஸ்டர்கள்,ராக்கெட் லோட், ஆர்பிட், மற்றும் கிரையோஜெனிக் எஞ்சின் பத்தி எல்லாம் சொன்னார். நானும் எல்லாம் ஆர்வமாக கேட்டு முடித்துவிட்டு மெதுவா என் S.S.L.V புராஜெட் பத்தி சொல்ல ஆரம்பித்தேன். அவரும் ஆர்வமா நான் சொல்வதை கேக்க ஆரம்பித்தார்.
சார் இப்ப இந்த ராக்கெட் லாஞ்சில எரிபொருள் செலவைக் குறைப்பதுதான் என் திட்டம், இப்ப நீங்க இந்த மாதிரி ராக்கெட் எரிபொருள் போட்டு,அதை லாஞ்ச் பண்ணா அதை ஜியோ ஸ்டேசனரி ஆர்பிட்ல நிலை நிறுத்த சுமார் ஒரு பன்னிரெண்டு அல்லது பதிமூன்று மணி நேரம் ஆகும். அதுக்கு பதிலா நீங்க SSLV யூஸ் பண்ணினா ரொம்ப கம்மி செலவுல சுமார் மூன்று அல்லது நாலு நிமிசத்தில் நிலை நிறுத்தி விடலாம் என்றேன். அவரும் ரொம்ப ஆச்சிரியமா,  அப்படியா அப்படி ஒன்னு இருக்கான்னு சீட் நுனிக்கே வந்துட்டார். எங்க சொல்லுங்க, சொல்லுங்க சொல்லிகிட்டே இருங்கனு சொல்லி ஆர்வமாயிட்டார். நானும் SSLV பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.

நான்: சார் இதுக்கு மொதல்ல என்னை மாதிரியே ஒரு முன்று பேரை குளேனிங் எடுக்கனும், அதுவும் சேர்த்து நாங்க நாலு பேரு ஆகிடுவோம், அதுக்கு அப்புறம் ராக்கெட் கவுண்ட் டவுன் ஆரம்பிக்கும் போது எங்களையும் கவனிக்க ஆரம்பிக்கனும்,உதாரனமா இப்ப நாளைக்கு காலையில்ல லாஞ்ச் பண்னறிங்கனா, முந்திய நாள் மதியமே எங்களை ரெடி பண்ண ஆரம்பிக்கனும் என்றேன். இது வரைக்கும் ஆர்வமா கேட்ட அவர் நம்பிக்கை இல்லாம சீட்ல நல்லா உக்காந்து, இவன்  கொஞ்சம் லூசா இருப்பானோன்னு சந்தேகத்தோடு கேட்டார்.
அவர்: என்னப்பா ரெடி பண்ணனும்?.
நான்: சார் மொதல்ல காய்களில் அவரைக்காய்,பூசனிக்காய்,கொத்தவரங்காய்,குடை மிளகாய் கேரட்,பீன்ஸ்,கத்திரிக்காய் மற்றும் கிழங்கு வகையில் சேனை,உருளை,சேப்பங்கிழங்கு கருனைக்கிழங்கு மற்றும் சுண்ட வத்தல் எல்லாம் போட்டு ஒரு குண்டான் நிறைய கதம்ப சாதமும், தொட்டுக்க ஒரு தட்டு நிறைய உருளை சிப்ஸ் தரனும்.


அவர்: அது எதுக்கு? என்றார் நம்பிக்கை இழந்தவராய்.
நான்: சொல்றேன் சார். அப்புறம் நாங்க நல்லா சாப்பிட்ட உடன் டீவி பார்த்துக் கொண்டு கொஞ்சம் கொறிக்க எதுனா சைட் டிஸ் தரனும், சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்தால், மாலையில் மறுபடியும் டீவில டிஸ்கவரி சேனல் பார்க்கும் போது, பட்டானி,மொச்சை,பாசிப்பயறு,கொண்டைக்கடலை மற்றும் காராமணி போட்டு நவதானிய சுண்டல் ஒரு தட்டு நிறைய தரனும்.
அவர் : கொஞ்சம் கடுப்பாகி, அப்புறம் என்றார்.
நான்: சார் அதுக்கு அப்புறம் ஒரு வாணலி நிறைய கேரட்,பீன்ஸ் போட்டு உருளை மசாலுடன் முப்பது அல்லது நாற்பது பூரிகள் இரவு சாப்பாட்டுக்கு தரனும்.
அவர்: கொஞ்சம் மெர்சலாகி, அப்புறம் என்றார்.
நான்: இரவு சாப்பாட்டுக்கு அப்புறம் நான் சூப்பர் சிங்கர், மேன் வெர்ஸஸ் வைல்டு, சிஜடி புரோக்கிராம் எல்லாம் டீவில பார்ப்போன் அப்ப கொறிக்க நிறைய குச்சிக் கிழங்கு சிப்ஸ்,கடலை பர்ப்பி,முறுக்கு எல்லாம் தரனும்.
அவர்: செம கடுப்பாகி, அவ்வளவுதான இன்னும் இருக்கான்னு கேக்க,
நான்: அவ்வளவுதான் சார்,அதுக்கு அப்புறம் காலை நாலு மணி வரைக்கும் தூக்கம் போட்டுட்டு, சரியா ஜந்து மணிக்கு எங்க நாலு பேரையும் ராக்கெட் கீழ சைடுல நல்லா டைட்டா கட்டி விட்டுடிங்கனா, சரியா ஜந்து மணியில இருந்து ஜந்து அரை மணியில சும்மா பத்து என்பீல்டு புல்லட் சவுண்ட்ல ஏழு போயிங் 747 விமான வேகத்துல பின்னாடி கேஸ் ரிலிஸ் ஆகும் பாருங்க, அதுக்கு அப்புறம் ரெண்டு அல்லது மூனு நிமிசத்தில் ராக்கெட் போயி ஆர்பிட்ல கரக்ட்டா சாட்டிலைட் லாஞ்ச் ஆகிடும். இதுதான் சார் என் SSLV (sudhakar Satellite launching vehicle) பிளான் என்றேன் பெருமையாக.
அவர் இதைக் கேட்ட உடனே ரொம்ப அதிர்ச்சியாகி என்னை உதைக்காத குறையா பார்த்து,உடனே இண்டர்காம் எடுத்து நம்பரைத் தட்ட ஆரம்பித்தார். நானும் சரி நம்ப புராஜெட் அவருக்கும் புடிச்சு போச்சு போல, இப்ப சக விஞ்னானிகளை கூப்பிட்டு நம்மை பாராட்டப் போறார்னு நினைத்தேன்.
அவர் இண்டர்காமில், “ ஹலோ செக்கியுரிட்டி கார்ட்ஸ் ஒரு ஆடு ஒன்னு அதுவே மஞ்சத்தண்ணி தெளிச்சு,மாலை போட்டுட்டு வந்து,என்னை வெட்டு வெட்டுன்னு சொல்லுது, நீங்க ஒரு நாலு பேரு வந்திங்கனா வெட்டறதுக்கு சுவாரஸ்யமாய் இருக்கும் என்றார். நான் ஜயோ,ஜயோ சார்னு சொல்லி வெளியில் ஓட்டம் பிடித்தேன். அதாடு என் கற்பனைக் குதிரையும் முடிந்தது.
டிஸ்கி: இப்படி நான் வெளியில் வரும் போது அங்க நம்ப கோவி.கண்ணன் அண்ணா, மாயக்கண்ணனா மாறி சிரித்துக் கொண்டு இருந்தார். ஏண்ணா நீங்க கூட என் புராஜெட் பத்தி கிண்டல் பண்றிங்களேன் என்றேன், அதுக்கு அவர் சிரித்துக் கொண்டு, இதுக்கு எதுக்கு நாலு சுதாகர், நீ ஒருத்தனே போதுமே என்றார்.


Wednesday, December 8, 2010

சபரி மலை யாத்திரை














சாமியே சரணம் அய்யப்பா !!!
நாளை இரவு (புதன்) மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் தாம்பரத்தில் இருந்து கரூர் சென்று, வியாழன் காலை எனது ஊர் தாராபுரம் சென்று, தென் தாரையில் உள்ள சின்னக் காளியம்மன் கோவிலில் இருமுடி கட்டிக் கொண்டு மலைக்கு யாத்திரை கிளம்புகின்றேன். வியாழன் இரவு எரிமேலியில் பேட்டை துள்ளி, வாவர் பள்ளிவாசலுக்கு சென்று விட்டு,


















பின்னர் வெள்ளி அதிகாலை நாலு மணியளவில் பம்பா சென்று சக்தி பூஜை முடித்து ஆறு மணியளவில் சபரி மலை ஏறும் திட்டம் உள்ளது.











சென்ற முறை நான் நாலு மணி நேர கியூ இருந்தது, இந்த முறை எப்படி என்று தெரியவில்லை, எத்தனை மணி நேரம் நின்றாலும் பரவாயில்லை, அய்யனின் தரிசனம் நல்ல முறையில் கிடைத்தால் போதும். மலை இறங்கி திருவனந்தபுரம், சுசீந்திரம், கன்யாகுமரி,திருச்செந்தூர் மற்றும் குற்றாலம் சென்று மதுரை வழியாக தாராபுரம் திரும்பும் எண்ணம் உள்ளது. எத்தனை மணி நேர கியூ மற்றும் செல்லும் இடங்களில் மழை, பாதை எப்படி உள்ளது என்று அறிந்த பின்னர் தான் மேற்க்கொண்டு பயணம் செல்ல வேண்டும். குருசாமி, முதலில் அய்யனை தரிசித்துவிட்டு, கீழே இறங்கி பின்னர் செல்லும் இடங்களைப் பற்றி பேசிக்கொள்வேம் என்று சொல்லிவிட்டார்.

நாளை இரவு கிளம்புவதற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்து கொண்டு உள்ளது, நான், என் இரண்டாவது அண்ணா மற்றும் மூன்றாவது அண்ணா, ஆக என் வீட்டில் மூவர் செல்லுகின்றேம்.வழக்கம் போல என் நண்பனும் அவனது அண்ணாக்கள் நால்வர்,உறவினர்கள் என வருடா வருடம் செல்லும் பதினைந்து பேர் செல்ல இருக்கின்றேம்.
நல்ல படியாக தரிசனம் கிடைத்து, எங்களின் யாத்திரை நல்ல படியாக முடிய அந்த கன்னிமூல கணபதியை வேண்டிக் கொள்கின்றேன்.

யாத்திரை முடிந்து திங்கள் அன்று சென்னை வந்துவிடுவேன். அடுத்த வாரம் யாத்திரை குறித்து பதிவுகள் போடுகின்றேன்.

சாமியே சரணம் அய்யப்பா!!!

Saturday, December 4, 2010

2010தின் சூப்பர் டூப்பர் காமெடி
















என்ன பதிவு போடலாம், நில்லுங்க கொஞ்சம் சைட் டிஷ் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் எடுத்து வைச்சுக்கிறேன்.நமக்கு எல்லாம் பதிவுக்குக் கூட சைட் டிஷ் வேணும்.

கொறுக் கொறுக்,

என்ன பதிவு போடலாம், ஆங்க் இந்த மலிக்காவும், ஜலில்லாவும் நாலு கொழுக்கட்டையை யாருக்கும் தெரியாம துபாய் பார்க்குல மறைஞ்சு சாப்பிட்டாங்களே, அதை சொல்லலாமா?

கொறுக் கொறுக்,

நம்ம வெட்டிப் பேச்சு சித்ரா யு எஸ் ல நெல்லை அல்வா கிண்டறதை சி ஜ ஏ மூலமா தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு பயந்துதான் ஒபாமா இந்தியா வந்தாருன்னு உண்மையை சொல்லிரலாமா?

கொறுக் கொறுக்,

நம்ம துளசி டீச்சர் போட்ட கோயில் பதிவுகளில், எந்த கோயில் பிராசதம் நல்லா இருக்கும்முன்னு சொல்லாம மறைச்சுட்டாங்களே அதைப் பதிவா போடலாமா?

கொறுக் கொறுக்

போன தீபாவளிக்கு நம்ம மேனகா சக்கரையும், நெய்யும் போட மறந்து ஒரு மைசூர் பாகு பண்ணினாங்களே, அதை போட்டு உடைக்க முடியாமா கஷ்டப்பட்டாங்களே, அதை சொல்லலாமா?

கொறுக் கொறுக்,

ஜிலேப்பி மாதிரி வளைச்சு வளைச்சு எழுதுனா கவிதைன்னு ஹேமுவும், தமிழும், தொழில் இரகசியம் சொல்லிக் கொடுத்தாங்களே, அதைப் பதிவா போடலாமா?

கொறுக் கொறுக்,

வட கொரியா போட்ட குண்டு எல்லாம் எடுத்து, பழைய இரும்புக் கடையில நம்ம சிங்க குட்டி அய்யா போட்டுப், பொட்டுக் கடலை வாங்குனத சொல்லலாமா?

கொறுக் கொறுக்,

வர்ற சக்கரைப் பொங்கலுக்கு சக்கரையே போடாம சக்கரைப் பொங்கல் பண்ணாலாமுன்னு சுசி எடுத்த இரகசிய சபதத்தைப் போட்டு உடைக்கலாமா?

கொறுக் கொறுக்,

என்னடா பித்தன் மாலை போட்டுட்டு ஆன்மீகப் பதிவே போடலைன்னு யோசிக்கறவுங்களுக்கு, நம்ம சாமிகிட்ட டூ விட்ட விசயத்தை சொல்லலாமா?.

கொறுக் கொறுக்,

இல்லைன்னா, நம்ம பட்டாபட்டி முதல்வர் எத்தனை பொறம்போக்கு இடத்தை பட்டா போட்டாருன்னு, ஸ்பெக்ட்ரம் கணக்கா ஒரு பதிவு போடலாமா?

கொறுக் கொறுக்

அதும் இல்லைன்னா, நம்ம மங்குனி அமைச்சர், எந்த நாட்டு அமைச்சர்ன்னு கேட்டு ஒரு பொது அறிவுப் போட்டி வைக்கலாமா?.

கொறுக் கொறுக்

இல்லைன்னா, நம்ம ஜெய்லானி பத்தாங்க் கிளாஸில் பத்து வருசம் படிச்சதை பதிவா போடலாமா?

கொறுக் கொறுக்,

இது எல்லாம் வேண்டாம் நம்ம மண்டையில ஏற்கனவே முடி இல்லை, எல்லாரும் சேர்ந்து க்டுப்புல நம்ம மண்டைய ஆளாளுக்கு புடிச்சாங்கனா, அப்புறம் இருக்குற நாலு முடி கூட மிஞ்சாது, பேசாம, தொப்பையானந்தாவை வைச்சு ஒரு காமெடிப் பதிவு போட்டுருராலாம்.

கொறுக் கொறுக்,

அடச்சே இங்க தமிழ் நாட்டுல ஒருத்தர் சொத்துக் கணக்கு சொல்லி அறிக்கை விட்ட காமெடிதான் 2010 ஆம் ஆண்டின் தலை சிறந்த காமெடி, அதை வீட மிக சிறப்பான காமெடி இனிமேல வர முடியாது,
அய்யே பாவம், நம்ம கவுண்ட மணி, செந்தில்,விவேக், வடிவேலு மற்றும் சந்தானம் கூட இதை வீட எப்படிடா காமெடி போட முடியும் யோசிக்கிறாங்க.அவங்களுக்கு எல்லாம் சான்ஸ் கிடைக்காம வீட்டுக்குள்ள முடங்கிப் போய்ட்டாங்க.

கயிர முத்து அப்படியே ஷாக் ஆகி, இதைப் பாராட்டி என்ன கவிதை எழுதுறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டார்.

கொறுக் கொறுக்,

கஜினி வேற, இருக்குற கன்பியூஸ் பத்தாதுன்னு இன்னம் கன்பியூஸ் ஆகிட்டார், இதுக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தா என்ன சொல்லாம்முன்னு மண்டைய பிச்சுக்கிட்டார், பேசாம இமய மலையில வாங்குன ஊசி,பாசிதான் நம்ம சொத்துன்னு சொல்லற முடிவுல இருக்கார்.

கிமலுக்கு அந்த பிரச்சனையே கிடையாது, எப்படியும் அவரு பேசறது யாருக்கும் புரியாது.(அவரையும் சேர்த்து).

கீரமணி வேற இதைப் பாராட்டி அறிக்கை விட ஜால்ரா கிடைக்காம கஷ்டப்படாறார்.

இப்படி ஒரே அறிக்கையில எல்லாரையும் இவரு தூக்கி சாப்பிட்டதுக்கு அப்புறம் நம்ம காமெடி எல்லாம் எடுபடாது.

கொறுக் கொறுக்,

அப்புறம் என்ன பதிவு போடலாம், பேசமா நமக்கு புடிச்ச " தொடரும்" அப்படின்னு போட்டு இதைத் தொடர் பதிவா போட்டுரலாமா?

பதிவு போடாம விட்டா, சாருஸ்ரீ, ஜனனி பர்த்டேக்கு ஸ்விட் தராம விட்ட மாதிரி நம்மளும் பதிவு போடாம விட்டுர மாதிரி ஆயிடும்

கொறுக் கொறு

அச்சேச்சே சிப்ஸ் தீர்ந்து போச்சுங்க சரி அடுத்த வாரம் வேற சிப்ஸ் வாங்கி வைச்சுப் பதிவு போடலாம்.

டிப்ஸ்: ரொம்ப நாள் ஆச்சுன்னு, சும்மா ஒரு ரவுண்ட் எல்லார் பெயரும் சொல்லிப் பார்த்தேன். அப்புறம் காஞ்சி முரளி அய்யா வேற இன்னமும் நிறையா பேரை சொல்லலைன்னு கோவிச்சுப்பார், அதுனால மீதி இருக்குறவங்க அப்புறமா ஒரு பதிவில,

வணக்கம் இது எல்லாம் சும்மா தமாசா எடுத்துக்குங்க, சிரிக்க மட்டும் சிந்திக்க அல்ல,

என்னது சின்னப்புள்ளத்தனமா? பேச்சு பேச்சா இருக்கனும், இப்படி உருட்டுக் கட்டை எல்லாம் எடுக்கக் கூடாது, வரட்டா!!!!!!.

Tuesday, November 30, 2010

முற்றாக் காமம் என்னும் என் கவிதையின் விளக்கம்



கடவுளைக் காதலிப்பது ஒரு வகை ஆன்மிகக் காமம், திருமங்கை ஆழ்வார் கண்ணனைக் காதலியாகக் கொண்டு பல பாசுரங்களைப் பாடியுள்ளார். பாரதியார் கண்ணனை கண்ணம்மாவாக பாடியுள்ளார். கண்ணதாசனும் கண்ணனனை காதலியாக படியுள்ளார். நான் கண்ணனனை காதலனாக, ஒரு குண்டலினி யோக சாதகனின் நிலையில் எழுதியுள்ளேன். முதலில் தலைப்பு முற்றாக் காமம் பற்றிப் பார்ப்போம்.

மானிடக் கலவியில் எல்லாமும் முற்றும் பெறும் காமம் தான். ஒரு முறை கிளர்ச்சி அடைந்தவுடன் அவன் காமம் முற்றும் பெறுகின்றது. பின்னர் மீண்டும் கிளர்ந்து விடும். இதுக்கு குறிப்பிட்ட கால வரையறை இருக்கும். ஆனால் பேரின்பம் என்னும் யோக சமாதி நிலை ஒரு முற்றாத தெவிட்டாத நிலை. இதுதான் முற்றாத அல்லது முடிவுறா காமம் ஆகும். ஆக இதுதான் தலைப்பு.

முன்னிரவில் நிலை கொள்ளா
தவிப்பில் வாயில் சலம் ஒழுக

வண்ணம் ஆடையது குழயக்

இது நித்திய யோகத்தில் அமர்ந்து இருக்கும் சாதகனின் நிலை ஆகும். தஞ்சை மன்னர் அபிராமியின் கோவிலுக்கு வரும் போது சுப்பிரமனியன் என்னும் அபிராம பட்டர் அமர்ந்து இருந்த நிலை. வாயில் சலம் ஒழுக, வேட்டி கலைந்தது கூடத் தெரியாமல் பித்தன் போல, பிரம்மம் என்னும் பிரகாச ஒளியை, அவர் தசிக்கும் போது, மன்ன்ர் திதி கேட்டதால் அந்த ஒளியை நிலவு என்று கொண்டு பொளர்னமி என்று கூறினார், ஆனால் அன்று அம்மாவாசை.

கண்ணாளா !!
அங்கம் கொதிக்க மோன நிலையில்
விழிபிதுங்க நின்னை எதிர்பாத்து
கண்கள் சொருக முழு இரவும்
நிலை கொள்ளாமற்க் காத்துக் கிடந்தேன்.

தொடந்து சாதகம் செய்யும் யோகனின் உடல் நெருப்பு போல உஷ்ணம் கொதிக்கும், ஆதலால் மார்கழி குளிரும் தெரியா வண்ணம் ஆடையற்றுக் கிடப்பான், நடு இரவில் குடம் குடமாய் தண்ணி கொட்டுவான். தன் சூட்டை அடக்க முடியாமல் தவிக்கும் சாதகனின் நிலை இதுதான். தக்க குருவின் வழிகாட்டுதல் இருந்தால் தான், சாதகன் தன் நிலையில் இருந்து வெளி வர முடியும். இல்லை என்றால் சாதகன் பைத்தியம் ஆகிவிடுவான். உடல் உஷ்ணம் பொறுக்க முடியாமல் பலமுறை அபிராம பட்டர் இரவுகளில் பலமுறை காவிரியில் குளித்து உள்ளார். எனது இந்த நிலையில் இருந்து வெளிவர நீ வேண்டும் என்று முழு இரவும் காத்துக் கிடந்தேன்.
கண்ணாளா !!
என் சித்தம் குளிர
கட்டியணைத்து சத்தத்தில்
கலவி புரிந்து உச்சத்தின்
மோன நிலையில் நித்தமும் இட்டு
கிடத்த வாராயோ!.

சித்தம் குளிர -- சித் தம் அதாவது எண்ணம், மனம், உடல் இச்சைகள், சுருக்கமாக சொன்னால் எண்ண அலைகள். சத்தத்தில் கலவி புரிந்து என்பது -- சத் ஆன்மா, ஆன்மாவில் கலவி புரிந்து, அதாவது சத்- சித் கலவி என்பது ஆனந்தம், சத் சித் ஆனந்தம். சத்சித்தானந்தம் என்னும் பரவச நிலையைக் குறிக்கும். பொதுவாக மனிதர்களுக்கு ஆர்கஸம் என்னும் உச்சம் மட்டும் தான் கிட்டும், அதுவும் எல்லாக் கலவியிலும் கிட்டாது. ஆக உச்சத்தில் மோன நிலை என்பது உச்சத்தைக் காட்டிலும் மேன்மையான சாந்த நிலை, அல்லது பரிபூர்ண இறை நிலையைக் குறிப்பது, இந்த நிலை தொடர்ந்து இருக்க கடவுளை வேண்டுவது.

கண்ணாளா !!
கட்டியது கட்டியபடி கிடக்க
பிடித்த பிடி பிடிமாறாமல் இருக்க
என்னை விட்டு அகலா இருந்து
பாம்பாக பின்னியிருந்து
உச்சத்தின் உச்சத்தில்
முற்றாக் காமத்தில் ஆழ்த்தாயோ!.


எந்த நிலையில் சாதகன் இருந்தாலும், அந்த நிலையில் அப்படியே சாதகன் பிரமத்தில் நிலைத்து இருப்பது. சுவாமி விவேகானந்தர், இரமணர் போன்றேர் பல நாட்கள் குகைகளில் இப்படி இருந்துள்ளனர். தன் மீது கொசுக்கள் ஒரு போர்வை போல கடிக்கும் நிலையில் கூட விவேகானந்தர் பல நாட்கள் தியானத்தில் இருந்துள்ளார். எறும்புகள் கடிப்பது கூட தெரியாமல் இரமணர் இருந்துள்ளார். இவர்களின் உச்ச நிலை யோகத்தில் பினைந்து இருக்கும் நிலையை விளக்கியுள்ளேன்.

கண்ணாளா !!
நின் அமுதம் வாயமுதம் உண்டு
மாங்காய் பாலும், தேங்காய் பாலும்
புளித்ததடா! தெவிட்டாத என்
பாலில் என்னை களிப்பாயோ!,


குதம்பை சித்தரின் பாடலில் ஞானப்பால் எனக்கிருக்க மாங்காய் பாலும் தேங்காய்ப் பாலும் எனக்கு எதுக்கடி என்னும் பாடலைத்தான் நான் தெவிட்டாத ஞானப்பால் வேண்டும் என்றும் மாங்காயும் , தேங்காயும் புளித்து(சலித்து) விட்டது என்று குறிப்பிட்டேன். பரமாத்மாவின் லீலைகளில் இருக்கும் ஜீவாத்மாக்களான கோபியர்களின் நிலையில் இருந்து, கண்ணனின் வாயமுதம் என்னும் கீதையை பருகியதால் மற்ற விஷயங்கள் புளித்து விட்டது என்னும் பொருள்.
கண்ணாளா !!
என்னை விட்டு அகலா
நித்திய மோகத்தில் ஆழ்த்தி
முற்றா என் காமத்தை
கரையேற்ற வாராயோ!.

கண்ணா என்னை ஆள்பவனே என்னை கைவிடாது நித்திய சுகமான உன் அனுக்கிரகத்தில் என்னை ஆழ்த்தி என் பிரம்மம் என்னும் யோகத்தை முடித்தி என்னை இறை நிலை கொண்டு செல்ல வரமாட்டாயா.
இதுதாங்க நான் எழுதிய கவிதையின் பொருள். பக்தி யோகமும், சாங்கிய யோகமான குண்டலினியும் ஒரு மிக்ஸிங் போட்டுள்ளேன்.இப்ப மறுபடியும் கவிதையைப் படித்தால் புரியும்.

இந்த பாடலை சரியாக இறைப் பிரேமம் என்று கணித்த கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கு நன்றி.

நன்றி.

Saturday, November 27, 2010

முற்றாக் காமம் !!













கண்ணாளா !!
நின்மேல் முற்றாக் காமத்தில்
முன்னிரவில் நிலை கொள்ளா
தவிப்பில் வாயில் சலம் ஒழுக
வாடிக் கிடந்தேன்.

கண்ணாளா !!
அங்கம் கொதிக்க மோன நிலையில்
விழிபிதுங்க நின்னை எதிர்பாத்து
கண்கள் சொருக முழு இரவும்
நிலை கொள்ளாமற்க் காத்துக் கிடந்தேன்.

கண்ணாளா !!
கொதிக்கும் உடம்பில
மார்கழி குளிரும் தெரியா
வண்ணம் ஆடையது குழயக்
உள்ளம் கல்லாக
அதிகாலைக் கிடந்தேன்

கண்ணாளா !!
என் சித்தம் குளிர
கட்டியணைத்து சத்தத்தில்
கலவி புரிந்து உச்சத்தின்
மோன நிலையில் நித்தமும் இட்டு
கிடத்த வாராயோ!.

கண்ணாளா !!
கட்டியது கட்டியபடி கிடக்க
பிடித்த பிடி பிடிமாறாமல் இருக்க
என்னை விட்டு அகலா இருந்து
பாம்பாக பின்னியிருந்து
உச்சத்தின் உச்சத்தில்
முற்றாக் காமத்தில் ஆழ்த்தாயோ!.

கண்ணாளா !!
நின் அமுதம் வாயமுதம் உண்டு
மாங்காய் பாலும், தேங்காய் பாலும்
புளித்ததடா! தெவிட்டாத என்
பாலில் என்னை களிப்பாயோ!,

கண்ணாளா !!
என்னை விட்டு அகலா
நித்திய மோகத்தில் ஆழ்த்தி
முற்றா என் காமத்தை
கரையேற்ற வாராயோ!.

டிஸ்கி : சும்மா எப்ப பார்த்தாலும் இந்த ஹேமுவும், தமிழரசியும் காதலும் சோகமும் கலர்ந்து கவிதை எழுதி டார்ச்சர் தர்ராங்க.
நம்மளும் எத்தனை நாளைக்கித்தான் பொறுத்துக் கொள்வது, வடிவேலு ஸ்டைலில் நாங்களும் கவுஜ எழுதுவேம், எங்களுக்கும் எழுத தெரியும்ன்னு கூவி
எல்லாரும் நல்லா பார்த்துக்குங்கே நானும் ஒரு கவுஜ போட்டிருக்க்கேன்.
எல்லாரும் காதல், நட்பு, சோகம் என்று தொடுவார்கள், ஆனால் காமத்தைத் தொட்டால் இமேஜ் குறித்து பயப்படுவார்கள், ஆனால் நாந்தான் வித்தியாசமான பைத்தியம் ஆயிற்றே, கொஞ்சம் அதிகமாக காமத்தைத் தொட்டுள்ளேன். படித்து விட்டு புரிந்ததால் விளக்கவும், கோபப்பட்டால் திட்டவும், அடிக்கவும், ஏன் காறித்துப்பக் கூட உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் உங்களின் கருத்தை மட்டும் சொல்லாமல் போகாதீர்கள்.
சொல்ல விருப்பம் இல்லாவிட்டல் வந்ததுக்கு அடையாளமாக ஸ்மைலி போடவும், கோபம் என்றால் திட்டுவதின் அடையாளமாக -- போடவும்.

இந்தக் கவுஜையின் விரிவு அடுத்த வாரம் அடுத்த பதிவில்.

அய்யா சிங்கக்குட்டி அவர்களே நான் எத்தனை வருடம் மலைக்குப் போனாலும் கன்னிச்சாமிதாங்க. குருசாமி அளவுக்கு பக்குவம் இல்லை.உங்களின் வாழ்த்துக்கு நன்றி.

சென்ற பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி, கோபமோ அல்லது வருத்தமோ இல்லை பாராட்டோ! எனக்கு வேண்டியது உங்களின் பின்னூட்டங்கள் தான்.
பின்னூட்டங்கள் மூலம் உங்கள் கருத்துக்கள்தான் என்னை செதுக்கும் உளி.

நன்றி நன்றி.

Tuesday, November 23, 2010

கார்த்திகை தீபங்களின் திருனாள்

ஸ்வாமியே ஸரணம் அய்யப்பா, இந்த முறையும் மாலை போட்டாகி விட்டது, அந்த அய்யனை தரிசிக்க ம்லை யாத்திரை போகப் போகின்றேன்.

சென்ற முறை அய்யப்பன் தொடரில் கொஞ்சம் கணக்கு தப்பா நான் பதினேரம் வருடம் என்று சொல்லிவிட்டேன், பின்னர் உடன் வரும் நண்பர்கள்தான் திருத்தினார்கள், சென்ற வருடம் சென்றது பதினாலாம் வருடம், இந்த முறை பதினைந்தாம் வருட யாத்திரைக்காக மாலை இட்டாகி விட்டது. பூஜை, கோவில் மற்றும் அலுவலகம் என நல்லா பொழுது போகின்றது. இந்த வருடம் கார்த்திகை தீப பண்டிகைக்கு எங்கள் வீட்டில் இருந்தேன், அவல் பொரி உருண்டை, கடலை உருண்டை, அப்பம், அதிரசம், பொரி உருண்டை என்று பல திண்பண்டங்கள் செய்து இருந்தார்கள். எங்கள் வீட்டு கார்த்திகை தீபங்களை உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்,
































எங்கள் வீட்டு ஹாலில் தீபங்களை வைத்து ஏற்றி பின்னர் பூஜை செய்து விளக்குகளை வாசல் மற்றும் பால்கனியில் வைப்போம். அரசாங்க குவாட்டர்ஸ் ஆதலால் பால்கனியில் இடம் கொஞ்சம் சின்னதாக இருக்கும்.விளக்குகளை வைத்த பின்னர் தீபாவளியின் போது கார்த்திகைக்கு என்று எடுத்து வைத்த பட்டாசுகள் மற்றும் புஸ்வாணங்களை விடுவேம். பின்னர் செய்த நொறுக்கு தீனிகளை பக்கத்து வீடுகளில் உள்ள அனைவருக்கும் கொடுத்து, நாங்களும் உண்போம்.

நன்றி.

Friday, November 19, 2010

குழாயடிச்சண்டை















எனக்கு திடிர்ன்னு பல வருடங்களுக்கு முன்னர் பழைய வண்ணாரப் பேட்டையில் கார்ப்பேரசன் குழாயடிச்சண்டை பார்த்தது ஞாபகம் வந்தது. அதை பதிவர்கள் கிட்ட பகிர்ந்துக்காலம் என்ற எண்ணம். டீசண்டான பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம். தெருவில் குழாயடியில் நிகழம் இரு பெண்களின் சண்டைக் காட்சிகளை மனதில் கொள்ளவும்.

அடியே, நாங்க நிக்கறது தெரியலை, குடத்தை தூக்கிட்டு முன்னால போற பெரிய துரைசானி இவ.

ஆமா இவ பெரிய மயிறு, இவ நிக்கறான்னு நாங்க ஒதுங்கனுமாக்கும்,

அடியே யாரைப் பார்த்து மயிறுன்ற உன் லட்சணம் தெர்யாதாக்கும், ஊரே நாறுது,

ஆமாண்டி நாதாரி, என் கதை ஊரு நாறுது, நீ மட்டும் என்ன உசத்தியாக்கும், ஒன்னும் தெரியாத என் புருசனை மயக்கி முந்தானையில முடிஞ்சு வைச்சுக் கிட்டியே.

அடியே பல்லை பேத்துப் புடுவேன். அவனை அடக்கத் தெரியல்லை, என் கிட்ட வந்து ரவுசு உடாதே.நீ என்ன யோக்கியமாடி நீயுதான் என் புருசன் கிட்ட பல்லை இளிக்கிற.

ஆமாண்டி நான் இளிச்சா அவனுக்கு புத்தி எங்க போச்சு, ஊராறிஞ்ச நாதாரி என்னைப் பத்திப் பேசாதடி

அடியே நான் ஊராறிஞ்சா? நீ என்ன உலகம் அறிஞ்சவளா.....

பொறம் போக்குக் கழுதை வாயாப் பார்த்தியா என்ன பேச்சுப் பேசறா, அவுசானிக் கழுதை.

ஏய் மரியாதையாப் பேசு, என்ன வுட்டா வாய் நீளுது, அறுத்துப் போடுவேன் அறுத்து நாதாரி நாயே.........

அடியே யாரைப் பார்த்து மரியாதை தெரியாதுன்னு சொல்ற. மரியாதை கொடுப்பதில் நாந்தான் நம்பர் ஒன்னு, நீ மூடிக்கிட்டுப் போடி.......

இப்படியா இந்த் சண்டை பலரின் அந்தரங்கத்தை தெருவில் வைத்து விமர்சனம் செய்யப் பட்டது.இருவரின் கணவன்மாரும் தங்களின் மனைவியரின் சண்டை சாமார்த்தியத்தை மாற்றி மாற்றி புகழந்து கொண்டார்கள். தெரு சணம் பூராவும் வேடிக்கை பார்த்தது இவ சரியா அவ சரியா என விவாதம் பண்ணிக் கொண்டது,
நடுனிலையான என்னை மாதிரி சிலர் கருமமடா சாமின்னு தலையில் அடித்துக் கொண்டது.

ரொம்ப முக்கியமான டிஸ்கியோ டிஸ்கி:---

இது நான் பார்த்த தெரு சண்டைதாங்க, நீங்க பாட்டுக்கு இங்கன ஒருத்தர் அய்யோ ஸ்பெக்ட்ரீம் ஸ்பெக்ட்ரிம்னு அறிக்கை விட, அதுக்கு பதிலுக்கு உன்னைப் பத்தி தெரியாதான்னு, டீன்ஸி,டீன்ஸி கேஸுல மாட்டுன ஆசாமிதான நீ என்று கேக்கறதும், பத்திரிக்கைகள் அதை பெரிதாக, பெருமையாக விளம்பரம் செய்ய, மக்கள் பொழுது போவதற்க்காக பேப்பரை படித்து விவாதம் செய்வதையும்.

பாராளுமண்ற குழுவுக்கு எதிர்க்கட்சிகள் இரகளை பண்ணும் காட்சிகளையும், அதுக்கு எதியுரப்பாவை இராஜினமா பண்ணச்சொல்லி ஆளுங்கட்சி கத்துவதையும் நினைத்துக் கொண்டால் அதுக்கு நான் பொறுப்பு அல்ல.

மூணவது தெரு முச்சந்தியமன் மேல சத்தியமா. மங்குனி சாட்சியா நான் தெரு சண்டையத்தான் எழுதினேன். நீங்களாக எதாவது கற்பனை பண்ணிக் கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல.

என்னங்க பதிவு கொஞ்சம் கேவலமா இருக்கா, மன்னிச்சுகுங்க, இதுக்கு மேல அழகா விமர்சனம் பண்ண எனக்கு தெரியல்லை.

டிஸ்கி: எனது முந்தைய பதிவுக்கு பலரும் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி. நேரம் கிடைக்காததால் பதில் அளிக்க முடியவில்லை. அனைவருக்கும் எனது நன்றிகள்.