Tuesday, March 9, 2010

ஒப்புதல் வாக்குமூலம் பதின்மம் தொடர் - நிறைவு


நான் எட்டாவது படிக்கும் சமயம் எனது நண்பன் பிரபாகரனின் வீட்டில் பொழுதைப் போக்குவேன், கலந்து படித்தல் மற்றும் விளையாடுதல் ஆகியன இருக்கும். அவனின் அம்மா எங்கள் இருவரையும் நல்லாக் கவனித்துக் கொள்வார்கள். நாலு குடும்பங்கள் ஒன்றாக இருக்கும் கூட்டுக் காலனி அது. பிரபாகரன் அம்மா, ஜெயா அக்கா,வசுமதி அம்மா மற்றும் யசோதா அம்மா (ஜெயாக்காவின் அம்மா) ஆகியோர் அமர்ந்து ஒன்றாகக் கதை பேசிக் கொண்டு இருப்பார்கள். தொலைக்காட்சிகள் வராத சமயம் அது. கூடிப் பேசுதல் மட்டும்தான் அவர்களின் பொழுது போக்கு. இப்படிப் பேசும் போது சில சமயம் நான் மாட்டிக் கொள்வேன். அப்போது ஜெயா அக்காவிற்க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டுருந்தார்கள். அது பற்றியும் பேசுவார்கள்.

பிரபாகரன் அம்மா : சுதா நீ யாரைடா கல்யாணம் பண்ணிக்குவ?

நான் : நான் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்.

வசுமதி அம்மா: ஏண்டா யாரையும் கல்யாணம் பண்ணிக்கலைன்னா, யார் உனக்கு சோறு ஆக்கிப் போடுவா?

நான் : எங்கம்மா சாப்பாடு போடுவாங்க.

யசோதா அம்மா : அவங்க எத்தனை நாளுக்குத்தான் போடுவாங்க, நாளைக்கு நீ யாரையாது கல்யாணம் பண்ணித்தானா ஆகனும்.

நான்: அது அப்ப பார்ப்போம், நான் எங்க அக்கா பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன். ஆனா அவளுக்கு சமைக்கத் தெரியாது.

பிரபாகரன் அம்மா: அது சரி, அய்யா ரெடியாத்தான் இருக்காரு.

ஜெயாக்கா : டேய் நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோடா, நான் நல்லா சமைப்பேன்.

நான்: ஹிகும் மாட்டேன். நான் கல்யாணம் பண்ணவே மாட்டேன்

வ அம்மா : ஏண்டா அக்காவை உனக்கு பிடிக்காதா.

நான் : ரொம்ப பிடிக்கும், ஆனா அவங்க பெரியவங்க.

ஜெயாக்கா : டேய் பரவாயில்லைடா,

பி அம்மா: பாருடா அவளே சொல்லிட்டா, பேசாம கல்யாணம் பண்ணிக்கடா?

ய அம்மா : ஆமாண்டா எனக்கும் மாப்பிள்ளை பார்க்கின்ற வேலை மிச்சம்.

நான் : சரி நான் வேலைக்கு போய்ட்டு, அப்புறமா ஜெயாக்காவைக் கல்யாணம் பண்ணிக்குறேன்.

வ அம்மா: டேய் அதுக்குள்ள அவளுக்கு வயசு ஆகிவிடும்.

நான் : பரவாயில்லை, இப்பக் கல்யாணம் பண்ணினா அப்புறம் மளிகை சாமான் வாங்க முடியாது.

பி அம்மா: டேய் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போற.

நான் : படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்குவேன்.

வ அம்மா: அப்புறம்,

நான் : நான் சம்பாதித்துக் கொடுப்பேன், ஜெயாக்கா எனக்கு சமைத்துப் போடுவார்கள்.

ஜெயாக்கா : டேய், புடவை துணி மணி எல்லாம் வாங்கித் தரமாட்டாயா?

நான் : ஓ நிறைய வாங்கித் தருவேன்,

பி அம்மா: அப்புறம் என்ன ஜெயா, பிரச்சனை இல்லை. (அக்காவின் முகத்தில் வெட்கம்).

ய அம்மா : டேய் என் பொண்ணைக் கட்டனும்னா நிறைய சீர் எல்லாம் செய்யனும்.

நான் : ஓ நான் நிறைய சம்பாதித்து செய்யறன்.

வ அம்மா: ஒன்னும் பிரச்சனை இல்லை, டேய் கல்யாணம் பண்ணினா மத்த வேலை எல்லாம் செய்யனுமே.

நான் : அது ஒன்னும் பிரச்சனை இல்லை, எங்க வீட்டுல மாதிரி, வேலைக்காரி வச்சுக்கலாம்.

பி அம்மா : ஜெயா, பையன் எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கான்.

ஜெயாக்கா : போங்க அக்கா, நீங்க ஒன்னு.

ய அம்மா: டேய் என் பொண்ணை கண்ணு கலங்காம காப்பாத்துவாயா?

நான் : இம்ம் சூப்பரா வச்சுக்குவேன்.

பி அம்மா : ஆகா இப்பவே ரெடியா இருக்கான். ஆமாண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டா இராத்திரி எல்லாம் இவகூடத்தான் இருக்கனும் தெரியுமில்லை.

ஜெயாக்கா : அக்கா! பிளிஸ், என்னது விவஸ்த்தை இல்லாமல்.

நான் : அது எல்லாம் முடியாது, நான் எங்க அம்மா பக்க்தில் தான் தூங்குவேன்.

வ அம்மா : அது எப்படிடா, கல்யாணம் பண்ணினா இவகூடத்தான் இருக்கனும். இப்ப நாங்க எல்லாரும் அம்மா கூடவா இருக்கின்றேம்.

நான் : அது எல்லாம் தெரியாது, நான் அம்மாவின் பக்கத்தில் தான் இருப்பேன்.

பி அம்மா : போச்சுடா, அப்படி எல்லாம் கூடாது, நீ அக்கா கூடத்தான் இருக்கனும், அப்புறம் மத்த வேலை எல்லாம் யாரு பார்ப்பாங்க.

நான் : அப்புறம் என்ன?. சாப்பிட்டாத் தூங்க வேண்டியதுதான, அவங்க, அவங்க அம்மாகிட்ட தூங்கட்டும், நான் என் அம்மாவிடம் தூங்குவேன்.

வ அம்மா : அது எப்படிடா, கல்யாணம் பண்ணினா இவகூடத்தான் தூங்கனும்.

நான் : சரி அப்படின்னா, நான் எங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வந்து தூங்கறேன்.

வ அம்மா : அப்புறம் என்ன ஜெயா! நல்ல நாளு பார்க்க வேண்டியதுதான்.

ஜெயா அக்கா : சீய் சும்மா இருங்க அக்கா, சின்னப் பையன் சொல்றான்னு.

நான் : பராவயில்லை அக்கா, நான் எங்க வீட்டுல சொல்லிட்டு வரறன்.

வ அம்மா,பி அம்மா : சிரிப்புடன், அப்புறம் என்ன ஜெயா பையன் ரெடி.

ய அக்கா : சும்மா இருங்கடி, அவன் வீட்டுல போயி எதாது உளறி வைக்கப் போறான்.
லஷ்மியக்கா (எங்க அம்மா பெயர்) பெத்த பசங்க ஒன்னு ஒன்னு தங்கம். நல்ல பசங்க.

பி அம்மா : சரி சுதா, முதல்ல நீ போய்ப் படி, அப்புறமா ஜெயாக்காவைக் கல்யாணம் பண்ணிக்கலாம்.

நான் : சரிங்கம்மா. நான் போயிட்டு வறேன்.

ஜெயாக்கா : டேய், என்னை மட்டும் மறந்துடாதடா .

நான் : இல்லையக்கா, மறக்க மாட்டேன். நான் படிச்சு வேலைக்குப் போயிட்டு வந்து , உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

வ அம்மா : என்னது இது, சும்மா சொன்னா, நிஜமாகவே பண்ணிடுவாங்க போல இருக்கே . ரெடியா இருக்காங்க.

ய அம்மா : சும்மா இருங்கப்பா, சுதாக்குட்டி தங்கமான பையன், விட்டாக் கெடுத்துருவீங்க போல.
(பெண்கள் அனைவரும் சிரிக்க, நான் ஒன்னும் புரியாமல் வெட்கத்துடன் ஓடுகின்றேன். )

வ அம்மா : பாருங்கப்பா பையனுக்கு கல்யாணம்ன்னு சொன்னதும் வெட்கம் வந்துருச்சு. என்று கூறி மீண்டும் சிரிக்கின்றார்கள்.

நான் சுறுப்சுறுப்பாக ஓடி அம்மாவிடம் சொல்கின்றேன். அம்மா என் தலையை வருடி, ஆமா இவங்களுக்குப் பொழுது போகலைன்னா என் பையன் தான் கிடைத்தானா என்று சிரிக்கின்றார். இப்படிக் கூடிக் கும்மி அடித்தது ஏராளாம். இப்படிச் சாம்பிளைக் கூறி தொடரை முடிக்கின்றேன். அதுக்காக கும்மி எழுத மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. அப்ப அப்ப நகைச் சுவை பதிவுகளில் எழுதுகின்றேன்.

என்னை மட்டும் இப்படி மாட்டி விட்டா எப்பூடீயீயீயீயி ?. ஆதுனால நான் இந்த தொடரைத் தொடருவதுக்கு அழைப்பது

பெண் பதிவர்களில்

சுசி தங்கை, ஜெலில்லா அக்கா, சாருஸ்ரீராஜ், சித்ரா தங்கை மற்றும் கவிதாயினி ஹேமு.

ஆண் பதிவர்களில்

மங்குனி அமைச்சர், பட்டா பட்டி, ஜெய்லானி, எல் கே மற்றும் சைவ கொத்து பரோட்டா அவர்களையும் அழைக்கின்றேன்.

நான் அழைத்த பதிவர்கள் அனைவரும் ஏற்கனவே இத்தொடரைப் போட்டுருந்தால், அதை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு, விட்டு விடுங்கள், இதுவரை போடவில்லை என்றால் பதிவு இடுங்கள் நன்றி. இனித் தொடராது.

டிஸ்கி : நாளைக்கி இதை வீட சூப்ப்பாரா ஒரு பதிவு போடப் போறேன். அதை நீங்க எல்லாரும் படிச்சித்தான் ஆகனும். இல்லைன்னா என் சாபம் உங்களுக்குக் கிடைக்கும். அது என்னன்னா

காலையில் ஆறு மணிக்கு உங்களுக்கு வயிறு பிசையும்,
எட்டு மணிக்கு பசி எடுக்கும்,
மதியம் பன்னிரேண்டுக்கு வயிறு கப கபன்னு பசி எடுக்கும்,
இராத்திரி தூங்குனத்துக்கு அப்புறம் கண்ணுத் தெரியாது.
கனவுல திரிஷா, ஸ்ரேயா எல்லாம் வருவாங்க, பெண் பதிவர்களுக்கு விஜய்,அஜித்,சல்மான் சாருக் எல்லாம் வருவாங்க.

அதுனால ஒழுங்கா அடுத்த பதிவைப் படிச்சுருங்க. நன்றி.

Monday, March 8, 2010

ஒப்புதல் வாக்கு மூலம் பதின்ம வயது தொடர் - 2


தியேட்டர் உள்ளார வரைக்கும் ஒரு ஆர்வத்துல போயிட்டு, அப்புறம் கட் அடித்து வந்த ஒரு தர்ம சங்கடமும்,குற்ற உணர்வும் என்னை படம் பார்க்க விடவில்லை. நான் மிகவும் அவஸ்த்தையாக, டேய் வாடா வீட்டுக்குப் போகலாம் என்று முனக ஆரம்பித்தேன். கம்மர்கட்டும், மாங்காயும் வேற தீர்ந்து போச்சு,(வந்த வேலை முடிஞ்சுது), நான் நண்பனிடம் வாடா வீட்டுக்குப் போகலாம்(ஆத்தா வையும், வீட்டுக்குப் போகனும் என்று பதினாறு வயதினிலே சப்பானி ஸ்டைலில் ) என்று தொல்லை தர ஆரம்பித்தேன். படத்துல வேற, மந்திரவாதி,பூதம் எல்லாம் வர ஆரம்பிச்சுது,எனக்கு பயம் ஒன்றுக்குக் இரண்டாக சேர்ந்து கொண்டது. நான் தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பித்தேன். என் நண்பன் தொல்லை தாங்க முடியாமல், "நீ வேணா வீட்டுக்குப் போடா" என்றான். என்னை தியேட்டரின் வெளியில் கொணர்ந்து விட்டவன்,உன்னை எல்லாம் கூட்டி வந்தேன், பாரு காசு தண்டம் என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு,திரும்பவும் உள்ளே போய்விட்டான். மீதம் இருந்த ஜவ்வு மிட்டாயை வாயில் அதக்கிய படி வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்தாலும் ஒரு குற்ற உணர்வுடன்,கம்முன்னு திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி இருந்தேன். எப்பவும் பள்ளி விட்டு வந்தா கலகலப்பாக இருக்கும் நான்,சும்மா இருப்பதைப் பார்த்து உடம்பு சரியில்லையா என,என் இரண்டாம் அக்கா விசாரிக்க,நான் கடகடவென நடந்தைச் சொல்லி முடித்தேன்.அவர்களும் சரி இனிமே பள்ளிக்குப் போன பாடம் படித்து வரணும், இப்படி போகக் கூடாது என்றார்கள்.நான் படுக்கென்று,அக்கா நான் கிளாஸிக்கு மட்டம் போடுல,இலக்கிய மன்றக் கூட்டத்தில் தான் போனேன் என்றேன்.என் அக்கா சிரித்துக் கொண்டு,"சரி இனிமே எங்க போனாலும் வீட்டுல சொல்லிட்டுத்தான் போகனும்,இல்லைன்னா எல்லாரும் தேடுவேம் இல்லையா" என்றார்கள். நானும் "சரி இனிமே எங்க போனாலும் சொல்லிட்டுப் போறேன்" என்று சொல்லி, நிம்மதியாக சாப்பிட்டுத் தூங்கினேன்.

இனி நான் மூன்றாவது முறையாக தர்ம அடி வாங்கிய சம்பவம் சொல்கின்றேன். 1983 அப்ப இந்தியா உலக கோப்பை வென்ற சமயம்,நாங்க எல்லாம், பம்பரம், கில்லி,தடி, கபடி போன்ற விளையாட்டுக்களைக் விட்டு, கையில் முள்ளுக்குச்சி ஸ்டெம்பும், ரீப்பர் கட்டை பேட்டும், இரப்பர் பாலுமா, வேகாத வெய்யிலில்,முகம் கருவழியக், காடும், மேடும் கிரிக்கெட் ஆடுன காலம். ஸ்ரீகாந்த்,கபில், விவ் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரினிட்ஜ்(எனக்கு புச்ச ஆளு), டேவிட் பூன், ஆலன் லாம்ப், வாசிம் அக்ரம், மியாண்டட்,வாசிம் பாரி, அஸாருத்தின் போன்ற ஆளுக தான் எங்க கடவுள்கள். எங்க டீமில் எல்லாருக்கும் ஒரு கிரிக்கெட்டர் பெயர் வைத்துக் கொள்வேம். நான் முதலாவதாக இறங்கி, விளையாடுவதால் எனக்கு கார்டன் கிரினிட்ஜ் பெயர் பட்டமாக வந்தது. இப்படி நான் பிளட்சர், கோரி,கீரேக்சாப்பல், ரிச்சி, மல்கம் மார்சல்,ஆண்டி இராபர்ட்ஸ்,வெங்சர்க்கார்,குண்டப்பா விஸ்வனாத், கிர்மானி கூட எல்லாம் கிரிக்கெட் ஆடி இருக்கேன். இப்படி காலம் போயிட்டு இருக்கறப்பதான் பத்தாம் வகுப்பு பரிட்சை வந்ததால், ஸ்டெடி ஹாலிடேஸ் விட்டதுல இருந்து நான் கிரிக்கெட் ஆடவில்லை. பரிட்சைகளும் வந்தது. நான் திங்கள் முதல் வியாழன் வரை தமிழ்,வரலாறு & புவியல் மற்றும் ஆங்கிலப் பரிட்சைகளை எழுதிவிட்டேன். இனி வெள்ளி,சனி முடிந்து திங்களும், செவ்வாயும்தான் பரிட்சை.கணக்கும்,சயின்ஸும் தான் பாக்கி, அப்பத்தான் வியாழன் காலை பரிட்சை எழுதி விட்டு வந்த நான்,நண்பர்கள் ஒரு மேட்ச் இருக்கு,ஓபனிங் விளையாட ஆள் இல்லை என்று வற்ப்புறுத்திக் கூப்பிட்டதால, எனக்கும் டச் விட்டுப் போச்சு என்று ஆடப் போயிட்டேன்.












மாலை ஆறறை மணி இருக்கும், நான் வீட்டுக்குத் திரும்பி வந்த போது, என் பெரிய அண்ணா அலுவலத்தில் இருந்து திரும்பி வந்து இருந்தார். நான் விளையாடப் போனது தெரிந்ததும்,கோபித்தார். நான் பரிட்சை திங்கள்தான்,வெள்ளி மற்றும் சனி,ஞாயிறு படிக்கின்றேன் என்று பதில் சொல்ல,"ஏன் துரை இன்னம் கொஞ்சம் கூடப் படிச்சா குறைஞ்சா போயிடுவிங்கன்னு" உனக்கு கணக்கு வேற வீக்கு,என்று உதைச்சார்.நான்,"இல்லைன்னா ஓபனிங் ஆட ஆள் இல்லைன்னு கூப்பிட்டாங்க அதான் போனேன்னு சொல்ல,ஆமா இவரு துரை போய் விளையாடுல்லைன்னு லார்ட்ஸில் எல்லாரும் கவலைப்பட்டாங்களான்னு கேட்டு உதை விழுந்தது.அப்ப பிலிப்ஸ் ரோடியோ வந்த சமயம், அந்த ரோடியோவின் வயர் பிளக்கை இரண்டையும் கையில் பிடித்துக் கொண்டு, வயரில் அடித்தார். முதுகில் சட்டையும் மீறி வயரின் தடம் பதிந்து விட்டது. அப்போது என் அம்மா ஓடி வந்து அண்ணாவை இப்படியா கண்ணு முன்னு தெரியாம அடிப்பாய் என்று கூறி என்னைத் தடுத்து சமையலறைக்குக் கூட்டிச் சென்றார். (இதுலையும் என்ன கொடுமை என்றால் அப்ப இந்தியா, இங்கிலாந்து மேட்ச் டீ வீ யில ஓடிக்கொண்டு இருந்தது).இப்படி நான் அல்லது என் மூன்றாவது,நாலவது அண்ணா அடி வாங்கினால் வீடு கொஞ்ச நேரம் அமைதியா,இறுக்கமாக இருக்கும். நாங்கள் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிப்பது போல, பாவலா செய்வேம். கொஞ்ச நேரம் கோவத்துடன் அமைதியாயிருக்கும் அண்ணா, பின்னர் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே போய்க், கடையில் வடை, போண்டா எல்லாம் வாங்கி வந்து கொடுப்பார்.சாப்பிடும் போது வருந்திக் கெஞ்சாத குறையா, "ஏண்டா இப்படிப் பண்கின்றீர்கள், உங்களை என்ன வேலைக்குப் போ!, சம்பாரி,லாட்டிரி டிக்கெட் விக்கப் போன்னா சொல்றேம். படிக்கத் தானே சொல்றேம். ஏண்டா புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்க" என்று சொல்வார். இதுதான் நான் வாங்கிய இறுதி தர்ம அடி.

இது எல்லாம் நடந்து முடிந்து நான் கல்லூரி இறுதியாண்டு தொடங்கும் சமயம், எங்க அண்ணாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்க்கு முன்னால் எங்களை அழைத்த அண்ணா, இதுவரைக்கும் உங்களை எல்லாம் கஷ்டப் பட்டு படிக்க வைத்தேம். நீங்களும் நால்லாப் படிக்கின்றீர்கள். விரைவில் வேலைக்கு வந்து விடுவீர்கள். இனி நான் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன். இனியும் இன்னேருத்தி முன்னாள் நான் உங்களை எல்லாம் அடித்துத் திருத்தினால் நல்லா இருக்காது. நீங்களா விரைவில் படித்து, வேலைக்கு வாங்க என்றார். நாங்களும் சரி என்றேம். அதில் இருந்து இன்னை வரைக்கும் எங்க அண்ணா எங்களை திட்டியதே அல்லது அடித்ததே இல்லை. பாசமிக்க எங்க பெரிய அண்ணா சொல்வதை நாங்க நாலு தம்பிகளும் மீறுவது இல்லை. திருமணம் முடிந்த பிறகு எங்க மன்னியிடம் இந்தக் கதைகள் சொல்லப் பட்ட போது, அவர் ஆச்சரியமாக "இப்படி எல்லாமா அடிப்பீங்க" என்றார். அதுக்கு அவர் என்ன பண்றது, பெரிய குடும்பம், அன்றாட வாழ்வும், கல்யாணக் கடனும் இருக்கும் போது கஷ்டப் பட்டு படிக்க வைத்தால் குறும்பு பண்ணுகின்றார்களே என்ற கோபம், ஆத்திரமா வரும். கோபத்தில் அடித்து விடுவேன்,அப்புறம் நானும் வருத்தப் படுவேன் என்றார். ஆனால் என் தம்பிகள் ஒரு நாளும் ஏன் அடிச்சிங்கன்னே அல்லது ஒரு நாளும் எதிர்த்துப் பேசியதே இல்லை என்றார் பெருமையாக. இதுதாங்க எங்க குடும்பம். என் அப்பா,இரண்டாவது அக்கா(டீச்சர்), மற்றும் என் அண்ணாக்கள் இருவரின் உழைப்பும்,ஊக்கமும்தான் நடுத்தர வர்க்கமான எங்களின் குடும்பத்தை எதே ஊரார் பாராட்டிச் சொல்லும் அளவுக்கு உயர்த்தியது. தொடரை முடிக்கலாம்ன்னு பார்த்தா முடியாது போல இருக்கு. பதிவு பெரிதாக இருப்பதால் அடுத்த பதிவில் பெண்கள் என்னை கும்மியடித்த சுவாரஸ்யமான சம்பவத்தைச் சொல்கின்றேன்.

Friday, March 5, 2010

ஒப்புதல் வாக்குமூலம் - பதின்ம வயது தொடர்


எங்க ஊடு ரொம்ப சிறிசு ஆனாலும், எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க. நாலு அண்ணா, மூன்று அக்கா, என நாந்தான் எல்லாருக்கும் ரொம்ப பிரியமான கடைக்குட்டிங்க. எனக்குத் தம்பி, தங்கைகள் கிடையாது. ஆனா நான் பழகிய வெளிவுலகில் எனக்கு ஏகப்பட்ட தம்பிகளும்,அதைவீட அதிகமா தங்கைகளும் இருக்காங்க.அனு,லாவன்யா, தமிழ்ச் செல்வி,கவிதா,ஜாய்க்கவிதா,காஞ்சனா,லதா,அலம்ஸ் என்னும் அலமேலு, மகி, பால சித்ரா,பாரதி என இந்த லிஸ்ட் ரொம்ப நீளமானது. சமிபத்தில் வந்த தங்கைகள்(பதிவர்கள்), சுசி,சித்ரா,திவ்யாஹரி என முடிவில்லாத அன்புப் பயணமிது. என்னை சுசி இரண்டு தொடர்களில்(பிடித்தது,பிடிக்க்காதது மற்றும் போக்குவரத்து)மாட்டி விட்டு, என் செல்லத் தங்கை என நிருபித்தார். நான் மட்டும் என்ன அன்பில் கொறைச்சலான்னு கேட்டுத் திவ்யாத் தங்கையும் என்னை ஏடாகூடமான பதின்ம தொடரில் மாட்டி விட்டார். என்ன பண்றது தங்கை சொல் தட்டா அண்ணனாக, வழக்கம் போல நம்ம பாஷையில் பதிவைப் போட்டறலாம்னு முடிவு பண்ணீட்டேன்.

ஆனா பாருங்க அதுல ஒரு சிக்கல் என்னன்னா இது பதின்ம வயது, உண்மையைச் சொன்னா ரெண்டும் கெட்டான் வயசு, இதுல எல்லாருக்கும் குட் டச், பேட் டச் இருக்கும். ஆனா நம்ம பதிவர்கள் எல்லார் பதின்ம வயதுப் பதிவுகளைப் பேய்ப் பாருங்க, மாம்பழம் பறிச்சேன், கொடுக்காய்ப் புளியங்காய் சாப்பிட்டேன்னு பூசி மொழுகி இருப்பார்கள். ஏன்னா அவங்க எல்லாம் உத்தம புத்திரர்கள் வழி வந்தவர்கள். நாமளும் அதுபோல போடலான்னு பார்த்தா நிறைய அனுவப் பதிவுகளைப் போட்டு,நிறைய விஷயங்களைச் சொல்லி விட்டேன். இரண்டாவது,பெரிசா உண்மைகளைச் சொல்பவன் பித்தன்னு சொல்லி ஒரு கேப்சன் வேற தலைப்புல போட்டு இருக்கேன். அதுனால அதுல சொல்லாத சில விஷயங்களை(உண்மைகளை), இங்கன போட்டு உடைக்கலான்னு முடிவு பண்ணிட்டேன். இலைமறைகாயாய் இருந்தாலும் புரிஞ்சுக்கிறதுல நீங்கதான் கில்லாடி ஆச்சே.எனது இளம் வயதுக் கதைகள் எல்லாம் இன்பமும், நல்ல உறவுகளும் கலர்ந்தவை.சோகம் என்றால் படிப்பும்,மார்க்கும்தான்.இந்த கதைகளைச் சொல்ல ஒரு பதிவு பத்தாது.பல பதிவுகளைப் போட வேண்டும்.அதில் சுவாஸ்யமானது மட்டும் சொல்லி, எதுக்கும் ஒரு ரெண்டு பதிவுல முடிக்க முயச்சிக்கின்றேன்.

எனக்கு நிறைய பெண் தோழிகள்தான்,விளையாட்டுத் தோழிகள். நாலாப்பு படிக்கும் போதே நாலு தோழிகள், கருணா, வெங்கி,மகி மற்றும் சித்ராதான் என் விளையாட்டுத் தோழிகள். இன்னமும் இவர்களில் இருவர் என் தோழிகள்தான். ஒரு முறை நான் இவர்களுடன் தெருவில் சிறுனீர் கழிக்கும் போது, "அய்யோ, நீங்க எல்லாம் சிலோட்டுக் குச்சியைத் தொலைத்து விட்டீர்கள் என கூறியது போது முழித்தார்கள். சும்மா இருப்பனா போய் மிஸ்ஸிடமும் புகார் செய்தபோது,தர்ம சங்கடமாய் எஸ் ஆனார்கள்.இப்படி நான் சின்ன வயதிலேயே ரொம்ப விவரமான ஆளு.அது எல்லாம் ஒன்னும் இல்லைங்க,எனக்கு மனதில் என்ன தோணுதோ,அல்லது என்ன நினைக்கின்றேனோ அதை பட்டு பட்டுன்னு,கிள்ளை மொழியில் கேக்கற ஆளு.இந்த படுக்கு படுக்குன்னு நான் பேசுற அழகுக்கே எங்க தெருவில் பெண் இரசிகர்கள் அதிகம்.அதிலும் குறிப்பாகத் திருமணம் ஆன பெண்கள் இருவர்,மூவராகச் சேர்ந்துகொண்டு என்னைக் கூப்பிட்டு அருகில் அமர வைத்து அடிக்கும் கும்மி இருக்கே, சொல்லி மாளாது, தெரிந்தே தெரியாமலோ, நானும் சரிக்குச் சரி பேசுவேன். விவரம் புரிந்த காலத்தில் இது எல்லாம் நினைவுக்கு வந்த போது வெட்கப்பட்டுச் சிரிப்புத்தான் வருது. தொலைக்காட்சி பொட்டிகள் இல்லாத காலத்தில் நாந்தான் அவர்களுக்கு பொழுது போக்கு.சமிபத்தில் ஒருமுறை நான் கருணாவை, அவள் கணவருடன் சந்தித்த போது, அவள் சிரித்துக் கொண்டு கேட்டாள், "என்ன சுதா சிலோட்டுக் குச்சி எல்லாம் பத்திரமான்னு?". நான் நெளிய,அவளும்,அவள் கணவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்(நல்ல ஜோடி)

நான் பிறக்கும் போது எனக்கு கேது திசை, ஏழாவது வயதில் எல்லாம் எனக்கு சுக்கிர திசை ஆரம்பம் ஆகிவிட்டது. 27 வயது வரை சுக்கிர திசைதான் இருந்தது. குட்டிச் சுக்கிரன் என்ன பண்ணுவார்ன்னு, நீங்க போய் வகுப்பறை வாத்தியார் பதிவில் படித்துக் கொள்ளுங்கள். அதிலும் களத்திரத்தில், பகை வீட்டில் இருக்கும் சுக்கிரன் என்ன,என்ன பண்ணுவார்ன்னு எழுதினா,அப்புறம் ஸ்ரீலஸ்ரீ.பித்தானந்தா போய்ப்,பித்தலாட்டனந்தாவா மாறிவிடுவார். இதுக்கு எல்லாம் பயப்படாதிங்க.இது மாதிரி எல்லாம் நடக்காம எங்க வீட்டுல எங்களைப் பொத்திப் பொத்தி வளர்த்தார்கள்.அதுனால தப்பித்தேன்.நான் நாலப்பு படிக்கும் போது முதலில் வாங்கிய தர்ம அடின்னு ஒரு பதிவு ஏற்கனவே போட்டுட்டேன்.அதுனாலா நான் எங்க வீட்டுல பெரியஅண்ணா கிட்ட இரண்டாவதா வாங்குன தர்ம அடிக் கதையைச் சொல்கின்றேன்.


நான் பதினென்னாம் முடிஞ்சு பன்னிரண்டாம் கிளாஸ் போறேன். அப்ப ஒரு நண்பன் சரோஜா தேவி(ஆபாச புத்தகம்)புஸ்தகம் ஒன்னு கொடுத்து, டேய் எங்க வீட்டுல வைச்சா மாட்டிக்குவேன், அதுனால உங்க வீட்டுல மறைச்சு வைச்சுறான்னு சொல்லிக் கொடுத்தான். எனக்கு முழுசா ஒன்னும் புரியல்லைன்னாலும், எதே படிக்கக் கூடாத புஸ்தகம் அதுன்னு புரிஞ்சுது, அப்படின்னா நம்ம ஆர்வம் கூடும் இல்லையா? அதுன்னால சரின்னு வாங்கி வைச்சேன். இருந்தாலும் பயம், மாட்டிக்குவேன்னு. அதுனால கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை புஸ்தகம் பத்திரமா இருக்கான்னு செக் பண்ணிக்குவேன். நான் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துறதைப் பார்த்த என் நாலாவது அண்ணா,துப்பறியும் ஷெர்லாக் கணக்கா கண்டுபுச்சு, நாரதர் கணக்கா,பெரிய அண்ணாவிடம் போட்டுக் கொடுத்தான்.அப்பத்தாங்க நம்ம மாரோடேன்னா அண்ணா புட்பால் வேர்ல்டு கப்புல நிறைய கோல் எல்லாம் போட்டு தங்க சூ வாங்குனாரு. இந்த போட்டி எல்லாம் நான் பெரிய அண்ணா கூட உக்காந்து பார்த்தேன். அதுனால அதுல வர்ற சந்தோகம் எல்லாம் கேப்பேன். ஆனா இந்த நாரதர் அண்ணன், எங்கிட்ட புக் மாட்டுன விஷயத்தைச் சொல்லவில்லை. அடுத்த நாள் சாப்பிடும் போது போட்டார் பாருங்க ஒரு கோல் என் வயிற்றில், அம்மாஆஆஅ, எனக்கு பின்னால் இருந்த நூதன் ஸ்டவ் என் முதுகைக் காயப்படுத்தி இரத்தம் வந்தது. தொடர்ந்து மேன் ஆப் மேட்ச் அவார்டா தர்ம அடியும் கிடைத்தது. இதுல கொடுமை என்னன்னா கடைசி வரைக்கும் அந்த புஸ்தகத்தை நான் படிக்கவே இல்லை(என்ன கொடுமை சரவணா). எங்க வீட்டில் இருப்பவர்க்கு எதுக்கு அடி விழுதுன்னு புரியல்லை, ஆனா எதே தப்புப் பண்ணிவிட்டேன்னு புரிஞ்சுட்டாங்க. நான் பொய் சொன்னதுக்கு அடிச்சதா எங்க அண்ணா சொல்லி,வீட்டில் மானத்தைக் காப்பத்தினார். அப்ப வாங்கின உதைதான் இதுவரைக்கும் அது மாதிரி புத்தகத்தைப் பார்த்தா போது ஓடிப் போயிடுவேன்.(ஏண்டா ஏமாத்திறே அதுதான் சி.டி வந்துருச்சேன்னு, எல்லாம் கேக்கக்கூடாது). இதுதாங்க நான் இரண்டாவதா வாங்கின தர்ம அடி. இதுக்கு அப்புறம் நான் ஒரு தடவைதான் அடி வாங்கினேன். அதுக்கும் அப்புறம் நான் ரொம்ப சமர்த்தாயிட்டேன், அதுனால அடி வாங்க வில்லை.












நான் படித்த பள்ளி- தாராபுரம் அரசினர் மேல்னிலைப் பள்ளியின் முகப்புப் படம்.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, எங்க ஸ்கூலில் ஒரு இலக்கிய மன்றக் கூட்டம் நடந்தது. பொதுவா இந்தக் கூட்டங்கள் எல்லாம் மாலை நாலு மணிக்கு ஆரம்பித்து ஆறு மணிக்கு முடியும், ஆனா அப்ப கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற வந்த பேராசிரியர். சிலம்பொலி.செல்லப்பா அவர்கள் சென்னை செல்ல வேண்டி இருப்பதால், மதியம் மூணு மணிக்கு ஆரம்பம்ன்னு சொல்லி,இரண்டரைக்கே வகுப்பில் இருந்து கிரவுண்டுக்கு போகச் சொல்லிவிட்டார்கள். எனக்கு எல்லாத் தப்பையும் சொல்லிக் கொடுக்கும் முரளி, (ஜயப்ப சாமி பதிவிலும், வெள்ளையங்கிரி பதிவிலும் இவன் போட்டா இருக்கும்) வாடா சினிமாக்குப் போகலாம் என்றான். நான் அதுவரை கிளாசுக்கு கட் அடித்துப் படத்திற்க்கு போனது இல்லை. நான் கட் அடிச்சுப் போகக்கூடாது என்று சொல்ல, அவனோ டேய் கிளாஸா போகுது, கூட்டம் தானே, அறுப்பானுக வாட என்றான். நானும் இரசினி இரசிகன் ஆனதால் அவர் பட ஆசையில் போய்விட்டேன். எங்க ஸ்கூலு மூலையில் இருக்குற கக்கூஸ் ரூமில் காம்பவுண்ட் சுவரில் ஒரு ஓட்டைஇருக்கும். அதனை முள்ளைப் போட்டு மூடி வைத்து இருப்பார்கள். அதை விலக்கி விட்டு,ஏஸ் ஆனேம். எனக்கும் ஏன் இந்த சுவர் மட்டும் உடைந்துள்ளது என்ற ரொம்ப நாள் சந்தோகம் விலகியது.டவுசரின் ஒரு பாக்கெட்டில் கம்பர்கட்டும்,ஜவ்வு முட்டாயும் போட்டு,இன்னேரு பாக்கெட்டில் மாங்காயும் வைச்சுக்கிட்டு படத்துக்குப் போனேம்.படம்: அலாவுதீனும் அற்புத விளக்கும். அங்கன போயி,,,,,,,,, இதன் தொடர்ச்சி வரும் திங்களன்று போடுகின்றேன். (வார விடுமுறைக்கு வாழ்த்துக்கள் ) நன்றி.

Thursday, March 4, 2010

சிந்து சமவெளியில் இருவர் - நிறைவுப்பாகம்

இருவரும் தங்கள் வீட்டில் காதலுக்காகப் போராடினார்கள். இருவரின் வீட்டில் மிக்க அன்புடையவர்கள் ஆனாலும் ஊராரை எதிர்க்கத் தயங்கியதால் எதிர்ப்பு மட்டுமே பரிசாகக் கிடைத்தது. இதற்கு இடையில் டைரிஸ் இவர்களுக்கு எதிராக ஊராரின் ஆதரவைப் பெற முயற்ச்சித்தான். பெருந்தனக்காரர்கள், பெரியேர்கள் என அனைவரிடம் ஒன்றுக்கு,இரண்டாக கூறி அவர்களின் மனதில் நஞ்சினைக் கலந்தான். டைரிஸ் முயற்ச்சியால் ஊர் இரண்டு பட்டது. பணக்காரர்கள், பெரிய மனிதர்கள் காதலுக்கு எதிர்ப்பாகவும், பாமரர்கள்,ஏழைகள் ஆதரவாகவும் திரண்டது. காதலர்களின் வாழ்க்கை, வர்க்கப் போராட்டமாக மாறியது. பிரச்சனையை ஊதிப் பெரிதாக்குவதில் டைரிஸ் வெற்றி பெற்றான். ஒரு புனிதமான மொளனிகாவின் காதல், பணக்காரனை வளைத்துப் போட்ட கதையானது. இதில் மொளனிகா மிகவும் மனம் உடைந்தாள். ஆனாலும் மோரிஸிடம் அவள் கொண்ட காதல் மட்டும் குறையவில்லை.தங்களின் காதல் ஊர்ப் பிரச்சனையானது கண்டு இருவரும் மனம் உடைந்தனர். வாழ்வின் விரக்தியின் உச்சத்திற்கே சென்றனர். இளைமையும், குறும்பும் கொண்ட அவர்களின் காதல் வெறும் சோகமும்,அழுகையும் மட்டுமே கண்டது.

அவர்கள் இருவரும் தங்கள் திட்டப்படி சோலையில் சந்தித்தனர். அதே சமயம் மோரிஸின் தந்தையும், ஊர்த்தலைவரான டைரிஸின் தந்தையும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் மனம் விட்டுப் பேசி, இருவரையும் இணைத்து வைப்பது என்று பேசிக் கொண்டார்கள். டைரிஸையும், ஊர்ப் பெரியவர்களையும் பார்த்துப் பேசி சம்மதம் வாங்கும் பொறுப்பை தலைவர் ஏற்றுக் கொண்டார். இவர்களின் திருமணத்தை ஊராரின் முன்னிலையில் பிரமாண்டமாக நடத்த மோரிஸின் தந்தை நினைத்தார். வழக்கம் போல காலம் வேறு நினைக்கும் அல்லவா?. அதுபோலத்தான் நடந்தது. சோலையில் சந்தித்த காதலர் இருவரும் ஊர் தங்களால் பிளவு படுவதை விரும்ப வில்லை. அதே சமயம் தங்களின் காதலையும் துறக்க இயலவில்லை. தங்களால் முடிந்த அளவு ஒருவருக்கு ஒருவர் சமாதானம் கூறிக் கொண்டார்கள். ஆறுதலாய் அனைத்துக் கொண்டார்கள். தங்களின் காதலின் புனிதத்தையும்,உறுதியையும் உலகு அறியச் செய்ய உறுதிபூண்டார்கள்.சோலையில் இறுதியில் உள்ள கடல் அன்னையின் கோயிலில் சென்று மனமுருக பிரார்த்தனை செய்தார்கள்.

மோரிஸ் தான் வாங்கிய தங்க மாலையை அவள் கழுத்தில் இட்டான். காட்டுக் கொடிகளாலும்,மலர்களாலும் செய்யப்பட்ட மலர் மாலைகளை, ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொண்டு, தங்களின் இருவரின் திருமணத்தை உறுதி செய்தனர்.தங்களின் கைகளைக் கேர்த்துக் கொண்டு சோலையை ஆனந்தமாக சுற்றி வந்தார்கள்.இறுதியாக சோலையில் உள்ள மண்டபத்தை அடைந்து அங்கு தங்களின் அன்பைப் பறிமாறிக் கொண்டனர். மோரிஸ் தன் காதலியை ஆதரவாய் அனைத்துக் கொண்டான். மொளனிகாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீரும்,இதழ்களில் மெலிதான புன்னைகையும் ஓடியது. மெல்ல அவளின் அதரங்களை ஆறுதலாய் பற்றிக் கொண்டான். அங்கு தனிமையும் சோகமும் மட்டுமே இருந்தது. மொளனிகா, மோரிஸிடம், "இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது, அந்தக் காலத்தால் கூட நாம் பிரிக்க முடியாத தம்பதிகளாய் இருப்போம்," என்றாள். மோரிஸ் அதற்க்கு மறுமொழி சொல்வதைப் போல அனைத்துக் கொண்டான். இருவரும் தாங்கள் கொண்டு வந்துருந்த பழரசத்தை அருந்தினார்கள். மோரிஸ், மொளனிகாவைத் தன் பக்கமாக இழுத்து அனைத்துக் படுக்க வைத்துக்கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் முகம்பார்த்த வண்ணம் இருந்தார்கள். மொளனிகாவின் முகத்தில் காதலுடன் இணைந்த ஒரு திருப்திப் புன்னகை மலர்ந்து இருந்தது. மோரிஸ் அவளை ஆதரவாய்க் கைளால் அனைத்துக் கொண்டான். மொளனிகாவும் அதற்க்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தன் கால்களை அவன் மீது போட்டுப் படுத்துக் கொண்டான். வானம் மெல்லிய வண்ணங்களுடன் சிவந்து இருந்தது. இருவரின் உடல்களும் மெல்ல நீலம் பூரித்து இருந்தது. ஆம் அவர்கள் பழரசத்தில் கலந்து இருந்த நாக பாஷானம் மெல்ல,மெல்ல அவர்கள் இருவரின் உயிரையும் பறித்து, உடலை மட்டும் நீலமாக்கியது. அந்த நிலையில் கூட அவர்கள் இருவரும் அனைப்பில் இருந்து பிரியவில்லை. இனி டைரிஸால் கூடப் பிரிக்க முடியா வண்ணம் ஒன்றாகச் சுகித்து ஒன்றாக மரணித்து, மரணத்திலும் இணைந்து இருந்தது அந்தக் காதல் ஜோடி.






இந்த மரணச் செய்தி ஊர் முழுக்கக் காட்டுத்தீயாய் பரவியது,ஊர் முழுவதும் அந்தக் காதல் ஜோடியினைப் பார்த்துக் கதறி அழுதார்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சொன்னார்கள். இதைச் சற்றும் எதிர்பாரத டைரிஸ் ஆடிப் போனான். காமத்தை மட்டும் கற்று வைத்திருக்கும் அவன், அன்புக்கு இருக்கும் சக்தினை நினைத்து வருந்தினான். முதன் முதலாக அவன் கண்களில் கூடக் கண்ணீரை வரவழைத்தது அந்தக் காதலர்களின் ஜோடியான மரணக் கோலம். மோரிஸின் தந்தையும், மொளனிகாவின் தந்தையும், இருவரும் அவரசப் பட்டு விட்டார்கள் எனக் கூறித் தலையில் அடித்துக் கொண்டார்கள். பிரச்சனையாய் இருந்த ஊர், இப்போது கண்ணீரும் கம்பலையும் ஆனது. அனைவரும் ஒருமனதாக காதலர்களைப் பிரிப்பது இல்லை,என முடிவு செய்து ஒன்றாகப் புதைத்தனர். அங்கு ஒரு சமாதியும் கட்டிவைத்தனர்.













பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தோண்டிய போதும், அனைத்த நிலையில் தான் இருந்தனர். இன்றும் அவர்கள் அனைத்த நிலையில் காட்சியாகவும், அம்பிகாவதி-அமராவதி போல,ரோமியே-ஜூலியட் போல,சலிம்-அனார்கலி போல,ஒத்தேலோ-டெஸ்டிமேனா போல, தூய காதலுக்குக் சாட்சியாகவும் லோதல் அருங்காட்சியகத்தில் உள்ளார்கள். முற்றும். நன்றி.

டிஸ்கி: இந்த எழும்புக் கூடுகளின் புகைப்படம்தான் இந்தத் தொடரை எழுதத் தூண்டியது. ஒருவரை ஒருவர் அனைத்த நிலையில் தூங்குவது போலக், காலைக் குறுக்காக போட்டுக் கொண்டு, அவனின் முகத்தைப் பார்க்கும் பெண்ணின் முகமும், விஷம் அல்லது மரணத்தின் வீரியம் தாங்காது, முறுக்கித் திரும்பும் ஆணின் முகமும்தான் இப்படி ஒரு காதல் கதையினை எழுத வைத்தது.

இத்தனைக்கும் மேலாக விடாமல் படித்து ஆதரவு அளித்த உங்களின் பின்னூட்டமும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகது. நன்றி எனது அன்பு நெஞ்சங்களே. மிக்க நன்றி.

Wednesday, March 3, 2010

சிந்து சமவெளியில் இருவர் - 4








மோரிஸையும், மொளனிகாவையும் ஒன்றாக கண்ட டைரிஸின் விழிகள் ஆத்திரத்தால் சிவந்தன. கைகள் உடைவாளை நோக்கிச் சென்றன. அந்தக் கோபத்தில் கூட அவனது மூளை சிந்திக்கத் தொடங்கியது. அவரசப்பட்டுப் போரிட்டால் தான் மோரிஸிடம் தோற்று அவமானப்பட நேரிடும். அல்லது இருவரையும் ஊரைக்கூட்டி காட்டிக் கொடுக்கலாம் என்றால், அப்போது காதலும், காந்தர்வ விவாகமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று, ஆதலால் ஊரார் இணைத்து வைத்து விடுவர். நாமே இருவரையும் இணைத்தது போல ஆகிவிடும். தந்திரமாக எதாவது செய்யவேண்டும் என்ற சிந்தனையில் அங்கிருந்து சத்தமில்லாமல் மனதிற்க்குள், தனக்குக் கிடைக்காத மொளனிகா, மோரிஸிக்கும் கிடைக்கக் கூடாது என்ற நினைப்பில் நகர்ந்தான்.

காலம் கடப்பதைக் காதலி நினைவூட்ட மோரிஸ் அவளிடம் விடைபெற்றுத் தன் இல்லம் வந்தடைந்தான். இரவு உண்டு உறங்கச் செல்லும் முன்னர் அவனது தந்தை அவனிடம் யாஹீவின் மகளை மணமுடிக்கும் எண்ணத்தைச் சொன்னார். அதுக்கு அவன் முதலில் மழுப்பலாக பதிலளித்தவன், பின்னர் அவனுக்கும் மொளனிகாவிற்க்கும் இடையிலான காதலைச் சொன்னான். அவன் பதிலால் அதிர்ந்த அவனது தந்தை, அந்தஸ்த்தைக் காரணம் காட்டி நிராகரித்தார். இருவருக்கும் கருத்துக்கள் பரிமாற்றத்தில் வார்த்தைகள் தடித்தன. மோரிஸ் முடிவாக சொல்லிவிட்டான், தான் மொளனிகாவைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மணமுடிக்க விருப்பம் இல்லை என்று.இதுவரை எதுக்கும் எதிர்வாதம் செய்யாத மகன் தன்னை எதிர்த்துப் பேசிய கோபத்தில் அவரும், தான் இருக்கும் வரை மொளனிகா உன்னை திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், நீ யாஹீவின் மகளை மணமுடிக்க வேண்டும் என்றும் கூறிவிட்டார். மோரிஸ் தன் அறைக்குப் போய்விட்டான்.

அதே சமயம் டைரிஸிம் தன் தந்தையிடம் இது பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தான். அவனது தந்தை இதில் என்ன தவறு என்று கூறிக் கொண்டு இருக்க, டைரிஸ் அவருக்கு எதிராக தூபம் போட்டுக் கொண்டு இருந்தான். ஏழைகள் எல்லாருடனும் சம்பந்தம் செய்தால், நாளை மணமகன் கேக்கும் அளவுக்கும், பின்னர் நம்மிடம் பதவியில் உரிமை கேக்கும் அளவுக்கு வளர்ந்து விடுவார்கள். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது நலம் என்பது அவனது வாதம்.பதவிக்கு ஆபத்து என்றவுடன் அவரும் இது குறித்து மோரிஸீன் தந்தையிடம் பேசுவதாகக் கூறினார். இந்த விஷயம் மொளனிகாவின் தந்தையிடமும் பகிரப்பட்டது. அவர் தன் மகளின் விருப்பத்திற்க்கே அல்லது காதலுக்கே எதிரி அல்ல என்றாலும் ஊராரின் அவப்பெயருக்கு அஞ்சி,காதலுக்குத் தடையாக இருந்தார். அந்த நீண்ட இரவில் நிம்மதியாகத் தூங்கியது ஒரு இதயம் மட்டுமே. அது டைரிஸ் மட்டும்தான்.











மறுனாள் மோரிஸ் தன்னைச் சந்தித்த மொனிகாவிடம் தன் வீட்டில் நடந்தவற்றைக் கூறினாள். காதலர் இருவரும் தங்களின் குடும்பத்தார் எதிர்ப்புகளைக் கண்டு வருந்தினர். மோரிஸ் அவளிடம், கண்ணே நான் உன்னை மணக்க என் சொத்துத்தான் தடை என்றால் அந்த சொத்து உற்றார் உறவினர் என எதுவும் தேவையில்லை. வா நாம் காந்தர்வ விவாகம் செய்து,கடல் கடந்து போவேம். கிரேக்கம்,சுமோரியா என நாம் உலகை வலம் வருவேம். யார் குறுக்கே வந்தாலும் இந்த வாளுக்கு இரையாவார்கள் என்றான். ஆனால் மொளனிகா இதை ஏற்கவில்லை. மற்றவர்களுக்குப் பயந்து நாம் பெற்றவர்களை விட்டு ஓடுவதா?. நம் திருமணம் அவர்களின் ஆசியுடன் தான் நடக்கவேண்டும், அப்படி இல்லை என்றால் என்று கூறி நிறுத்தினாள். மோரிஸ் இல்லை என்றால் என்று அவளை நெருங்கிக் கேட்டான். நமக்கு மணமாலை சூடுவதும்,பிணமாலை சூடுவதும் நம் பெற்றவரின் விருப்பம் என்றாள் கண்ணீருடன். மோரிஸ் கலங்கிப் போனான். அவள் கண்ணீரைத் துடைத்த வண்ணம், மொளனிகா உன் விருப்பம் எதுவே அதுவே என் விருப்பமும். நீ எப்படி சொன்னாலும் நான் கட்டுப்படுவேன் என்றான். நாம் மீண்டும் இருவரும் நம் பெற்றவரிடம் மன்றாடுவேம், அப்படி இல்லை என்றால் இன்னமும் பத்து தினங்களில் காந்தர்வ விவாகம் செய்வேம், என்றாள் ஒரு நிபந்தனையுடன். அவனும் சம்மதிக்க, காதலர் இருவரும் வேதனையுடன் அனைத்தனர். தொடரும். நன்றி.

Tuesday, March 2, 2010

சிந்து சமவெளியில் இருவர் - 3

காலம் ஓடிக்கொண்டு இருந்தாலும், இரண்டு தினங்கள் போவது மோரிஸுக்கு இரண்டு யுகங்கள் கழிவது போல வெறுப்பைத் தந்தது. இறுதியாக மரக்கலமும் நதியின் முகத்துவாரத்தை வந்து அடைந்தது. அன்று காலை முழுதும் மோரிஸ் மிகப் பரபரப்பாக இருந்தான். சரக்குப் பொட்டகங்கள், பாரவண்டியில் ஏற்றிக் கொண்டு வணிக வளாகம் அடையவும், நவரத்தினம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் பொட்டகங்களில் பாதுகாக்கப் பட்டு, அவனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகளைப் பண்ணினான். காலை கப்பலில் இருந்து இறங்கியவன் தனக்காக காத்திருந்த தந்தையை ஆரத் தழுவி வணங்கிணான். பின்னர் பணியாளர்களுக்கும், யவண அடிமை வீரர்களுக்கும் கட்டளைகளைப் பணித்துக் கொண்டே இருந்தான். அவன் கண்கள் மட்டும் கரையில் மொளனிகாவைத் தேடிக் கொண்டே இருந்தது. அந்தி மயங்கும் மாலையில் சிவந்த சூரியன் தகிக்காமல் சிவந்து விளங்குவதைப் போல, அழகிய வெட்கத்தால் சிவந்த முகத்துடன் மொளனிகாவும் வந்து கொண்டு இருந்தாள்.











சற்று தூரத்தில் நின்று இருந்த மொளனிகாவைப் பார்த்தவுடன், மோரிஸின் முகம் மலர்ந்தது. இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. பூரண சந்திரனை மேகம் மறைப்பது போல, வெட்கத்தால் கண் தாழ்ந்த மொளனிகாவின் விழிகளை இமைகள் மறைத்தன. மீண்டும் ஆர்வத்தால் மேகம் விலகிய சந்திரனைப் போல, விழிகளைப் பெரிதாக்கிப் பார்த்தாள். மோரிஸின் கண்கள் சற்று மேலே ஏறிப், பின்னர் கண்ஜாடை காட்டுவது போல ஓரமாக சுழன்றது. எதே புரிந்து கொண்டவள் போல சிறிது வெட்கத்துடன் புன்னகை செய்தாள். பின்னர் தலை குனிந்து நின்றாள். மோரிஸின் பணியாள் வந்து ஏற்பாடுகள் யாவும் தயார் என்று சொல்ல, மோரிஸும் தன் வெள்ளைக் குதிரையில் ஏறிப் பொட்டகங்களுடன் இல்லத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். சென்றவன் மெல்லத் திரும்பிப் பார்த்தான். அவன் திரும்பிப் பார்ப்பான் எனவும், திரும்பிப் பார்க்க மாட்டானா எனவும் ஆவலுடன்,காதலுடன் பார்த்துக் கொண்டுருந்த மொளனிகாவும், மெல்ல புன்னகைத்து நடக்கத் தொடங்கினாள்.

வீட்டில் தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு, உணவருந்தி விட்டு, நண்பர்களைப் பார்ப்பதற்க்காக வெளியில் கிளம்பினான். நண்பர்களிடம் காலத்தைச் செலவிட்டுப் பின்னர் அந்தி மாலையில் சோலைப் பக்கம் சென்றான். அங்கு காலையில் கொடுத்த குறிப்பின்படி அவர்கள் சந்திக்கும் சோலையில் அவனுக்குக் காத்துருந்தாள் மொளனிகா. மோரிஸ் வர காலதாமம் ஆகிவிட்டதால் கொஞ்சம் ஊடலும் கொண்டாள். அவளிடம் தன்மையாக நடந்து கொண்ட மோரிஸ் அவளின் ஊடலைக் களைந்து, பின்னர் தான் சென்ற பயண யாத்திரையைப் பற்றிக் கூறினான். அவள் அவனுடன் இல்லாத கவலையைக் கூறியவன். "அன்பே நமது திருமணத்திற்க்குப் பிறகு, நாம் இருவரும் ஒன்றாக, கிரேக்கம்,சுமேரியா போன்ற இடங்களுக்குச் செல்வேம்" என்றான் ஆசையுடன். அவன் கூறியது அவளுக்கு மிக்க மகிழ்வைக் கொடுத்தாலும்,திருமணம் என்றதும் அவள் மனம் வேதனையடைந்தது. நீங்கள் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். நானே ஏழைப் பெண் நம் காதல் நிறைவேறுமா? அல்லது வசதிக்கு ஒருவள், ஆசைக்கு ஒருவள் என்று மாறிவிடுவீர்களா? என்ற அவளுடைய ஆதாங்கத்தைத் தெரிவித்தாள். அவள் மொழிகளைக் கேட்ட மோரிஸ் துடித்துப் போனான். மொளனிகா என் கண்ணே என்ன வார்த்தை சொன்னாய், என் மார்பில் ஆயிரம் ஆயிரம் ஈட்டிகளைக் குத்திவிட்டாய், முழுனிலவு பக்கம் இருக்க, மின்மினியை விரும்புவார் உண்டோ?. உன் அன்பும், காதலும் என்னுடன் இருக்க, நான் மற்று ஒரு பெண்ணை மனதாலும் நினைப்பேனா?. நான் இந்த கடல் அன்னை மீதும், பஞ்ச பூதங்களின் மீதும் ஆணையாகக் கூறுகின்றேன், " இப்பிறவில் மணந்தால் உன்னை மட்டுமே மணப்பேன்,அத்தில்லாமல் போனால் உயிர் துறப்பேன் என்று கூறி முடித்தான். தன் காதல் கண்ணாளனின் அன்பால் திக்கு முக்காடிய மொளனிகா, என் நிலையும் அதுதான் அன்பே, நீங்கள் இல்லா ஒரு வாழ்க்கை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்றாள்.













( படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)

மோரிஸ் அவளை பக்கத்தில் இழுத்து அனைத்து, அன்பே கவலைப்படாதே, நாம் இருவரும் இணைந்து இல்வாழ்வை நடத்துவேம், நாம் கடல் கடந்து பிரயாணங்கள் மேற்க் கொள்வேம். நான் உன்னை அடைவதுக்கு யார் தடையாக வந்தாலும், அதனை தகர்த்து எறிவேம் என்றான். மொளனிகாவும் நம் பெற்றவர்கள் முழு சம்மதத்துடன் நடைபெறுவதுதான் என் விருப்பம் என்று கூறியவள், தன் காதலனின் கை விரல்கள் தன் குறுகிய இடையில் செய்த விஷமங்கள் தாளமால் கூச்சத்தால் நாணிச் சிரித்தாள். அவள் நாணிச் சிரிப்பதைக் கண்ட மோரிஸ், சபதமிட்ட தன்னை பரிகாசம் செய்கின்றான் என்ற நினைப்பில், "அன்பே என் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாது சிரிக்கும், உனக்கு என்ன தண்டனை தரலாம் என்றான். அவளோ "பிரபு தங்களின் வார்த்தைகளில் பூரண நம்பிக்கை இல்லாமலா நான் என் மனதைக் கொடுத்தேன். இது பரிகாசச் சிரிப்பு அல்ல, உங்கள் கைகள் செய்த விஷமத்தால் வந்த நாணச் சிரிப்பு, தண்டனை உங்கள் கைகளுக்த்தான் கொடுக்க வேண்டும்" என்றாள். அவனும் "அப்படியா, சரி ஒன்று செய்யலாம் என் கைகளுக்குத் தண்டனையாக, உன் உடலுடன் சேர்த்துக் கட்டி விடாலம்" என்று கூறிக் கொண்டே அவளை இறுக்கித் தழுவிக் கொண்டான். அவள் உடனே "இதுக்குப் பேரு தண்டனையா,விடுங்கள், பெல்லாத கைகள், விடுங்கள்" எனக் கூறிக் கொண்டே விடுபாடாமல் நின்றாள். அவனும்,என் கைகளுக்குத் தண்டனை கொடுத்தால் மட்டும் போதாது, வர வர அதிகம் பேசும் உன் உதடுகளுக்கும் தண்டனை தரவேண்டும் என்று குனிந்தான். நாணிச் சிவந்து தலையைத் மறுபக்கம் திருப்ப முயற்ச்சித்தவள், அதற்க்குள் அவனது அதரங்கள், அவளின் அதரங்களேடு கவ்விக் கொண்டதால், காற்றில் அசைந்தாடும் முல்லைக் கொடி, பற்றுவதற்க்கு கிடைத்த கொழுவைப் போல அவனது முதுகைச் சுற்றி வளைத்துப் பற்றிக் கொண்டன அவள் கைகள். காதலர் இருவரின் சரஸத்தைப் பார்த்த ஆதவன் வெட்கத்தால் கடலினுள் மறையத் தொடங்கினான். மெல்ல நாணம் வந்த தென்றலும், மலர்களின் மணத்துடன் வீசத் தொடங்கியது.காதலர் இருவரும் கண்கள் மூடி அனைத்து இருந்தனர். ஆனால் ஒரு ஜோடி விழிகள் மட்டும் மூடாமல் தங்களின் சரசத்தைப் பார்ப்பது தெரியாமல் ஆனந்ததில் இருந்தனர். ஆத்திரத்துடன் கன்றிச் சிவந்த அந்த ஒரு ஜோடி விழிகள் டைரிஸிக்குச் சொந்தமானது. தொடரும். நன்றி.

டிஸ்கி : இது இருவரின் காதல் கதை ஆதலால் சிந்து சமவெளியில் ஒருவன் என்ற தலைப்பு, காலத்தால் பிரிக்க முடியாத அந்தக் காதலர்களைப் பிரிப்பது போல ஆகிவிடும். ஆதலால் இந்தப் பதிவில் இருந்து, அனைத்த அந்தக் காதலர்களைப் பிரிக்காமல் சிந்து சமவெளியில் இருவர் ஆக்கிவிட்டேன். மன்னித்து ஆதரவு தாருங்கள். நன்றி.

Monday, March 1, 2010

சிந்து சமவெளியில் ஒருவன் - 2

















லோதல் நகரின் கனவுக்கன்னியான மொளனிகாவிடம், மோரிஸ் தன் உள்ளத்தைப் பறி கொடுத்து இருந்தான். மொளனிகாவை நினைக்கும் போது எல்லாம் அவனின் மனது ஒருவிதமான சந்தோசம் அடைந்தது. இன்னமும் இரு தினங்களில் அந்தக் கட்டழகியைக் காணப் போகின்றேம் என்ற எண்ணம் கூட அவனுக்கு அளவில்லா ஆனந்தம் அளித்தது. முதன் முதலில் அவளைப் பார்த்தது,அவளுடன் பழகியது,பேசியது, அவளின் மடியில் ஆனந்தமாகத் தலை வைத்துப் படுத்து இருந்தது என நினைவலைகள், கடலைலகளுடன் போட்டிப் போட்டது. அவன் மெல்லச் சொருகிய கண்களுடன், காதலியின் நினைவுகளுடன் சல்லாபம் செய்து கொண்டுருந்தான்.

இப்படி மோரிஸைக் கலங்கடித்த மொளனிகா லோதல் நகரத்தின் அற்புதமான அழகி. மருண்ட மானின் பார்வை, சுருண்ட கூந்தல், குழி விழும் கன்னங்கள், குழந்தை போன்ற முகம், அன்று அலர்ந்த ரோஜா மலரின் நிறம். யானையின் நீண்ட தந்தங்களைப் போல நிண்ட கைகளும், செந்தாமரை தண்டு போன்ற, பஞ்சினை ஒத்த அவள் விரல்கள். செம்மாங்கனி அவயங்கள். உடுக்கை போல இருக்கும் இடை என அவள் கவிஞர்கள் வர்ணிக்கும் பேரழகி. மொளனிகாவைப் பார்க்கும் யாரும் அவளுடன் பேசப் பிரியப் படுவார்கள். இனிய யாழின் இசை போன்ற அவளின், குரலில் பாடினால் மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. கொள்ளை அழகுச் செல்வங்கள் யாவற்றையும் இறைவன் அவளுக்கு அள்ளிக் கொடுத்து இருந்தான். இத்தனை அழகும் படைத்த இறைவன் எல்லாருக்கும் ஒரு குறையை வைப்பது போல அவளுக்கும் ஒரு குறையைக் கொடுத்தான்.அவளை ஏழ்மையில் பிறக்க வைத்தான். கடலில் மீன் பிடித்து, அதனை சந்தையில் விற்கும் குடும்பத்தில் பிறந்தவள்.. வறுமை என்பது அவர்களுக்குச் செந்தம். ஆனாலும் தன் ஒரே மகளை அது பாதிக்காமல்தான் அவளின் தந்தை வளர்த்து வந்தார். தந்தை பிடிக்கும் மீன்களைச் கடல்கரையில் விற்பது அவளின் தொழில். அனாலும் கண்ணியத்தையும், ஊரில் மிக நல்ல மரியாதையும், அவள் தந்தையின் செத்தாக இருந்தது. இப்படிப் பட்ட அழகியை மோரிஸ் கடல்கரையில்தான் சந்தித்தான். அவனுக்கும், இவளுக்கும் கடல்தான் வாழ்வு. சந்திக்கும் பொழுதுகள் அதிகம். அது காதலாகி,கனிந்து இருந்தது. மோரிஸும் தன் மனதைப் பறி கொடுத்து இருந்தான். மோரிஸைப் போலவே இன்னெருவனும் அவளின் அழகில் மயங்கி இருந்தான். அவன் தான் டைரிஸ். ஊர்க்காவல் தலைவன் அவன். அந்த லோதல் நகரத் தலைவரின் மகனும் கூட.

கட்டுமஸ்தான உடலும், முரட்டு முகமும்,செந்நிற விழிகளும் கொண்டவன் டைரிஸ், பெண்களும்,சண்டைகளும் அவனுக்குப் பொழுது போக்கும் சாதனங்கள். ஊர்த் தலைவரின் மகனான டைரிஸ்க்கு யவன அடிமைப் பெண்கள் அதிகம் என்றாலும், அவனுக்கு மொளனிகாவின் மீது தீராத மோகம் இருந்தது. அது அவன் மனதில் வன்மமாக மாறியது. அதிலும் மொளனிகா மோரிஸை விரும்புகின்றாள் என அறிந்ததும், அவன் இரத்த நாளங்களில் கோபம் கொப்பளித்தது. தனக்குக் கிடைக்காமல் போனாலும்,அவள் மோரிஸிக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். ஏற்கனவே கடல் அன்னைத் திருவிழாவில் நடை பெற்ற வீரப் போட்டிகளில் அவன் மோரிஸிடம் தேற்ற அனுபவம் இருந்ததால், நேரடியாக மோதப் பயந்து, சந்தர்ப்பத்திற்க்காகக் காத்துருந்தான்.















மரக்கலத்தின் மீது இருந்த மோரிஸ் தன் மொளனிக்காவிற்க்கு வாங்கிய மாலையைப் பார்த்த வண்ணம் இருந்தான். கிரேக்கத்தில் செய்த மாலை. தங்க சரிகைகளால் ஆன மாலை அது. இந்த மாலையை அணியும் மொளனிகாவின் அழகு எவ்வாறு இருக்கும் என்ற கற்பனையில் இருந்தான். அதே சமயத்தில் மொளனிகாவும் மோரிஸின் வருகையை எண்ணித் தூக்கத்தைத் தொலைத்து இருந்தாள். இவர்கள் இருவரும் காதலில் திளைத்த சிந்தனைகளுடன் இருக்ககையில் மோரிஸின் தந்தையோ, ஹராப்பாவின் பெரு வணிகரான யாஹுவின் மகளை மணமுடித்துத் தன் வியாபாரத்தைப் பெருக்கும் சிந்தனையில் இருந்தார். வணிகப் பயணம் முடித்து வரும் தன் மகனிடம் இது குறித்துப்பேச வேண்டும் என அவரும்,மொளனிகாவைப் பற்றிக் கூற வேண்டும் என்ற சிந்தனையில் மோரிஸும் இருந்தார்கள். அனால் காலம் வேறு சிந்தனைகளில் அவன் இருந்த மரக்கலம் போலவே அசைந்தாடிக் கொண்டு ஓடியது. தொடரும். நன்றி.

டிஸ்கி: அது என்னமோ தெரியலை, பதிவு போடலைன்னா பைத்தியம் பிடித்தது போல ஆகிவிடுகின்றது. இது பத்தி சிந்தித்துக் கொண்டு எழுதாமல் இருப்பதை வீட, எழுதிவிட்டு வேலையைப் பார்ப்பது பெஸ்ட் என்று தோன்றியதால், விடுப்பை நாலு நாளில் முடித்துக் கொண்டு வந்து விட்டேன். இனி என் பதிவு அவஸ்த்தைகள் உங்களுக்குத் தொடரும். நன்றி.

Friday, February 26, 2010

லீவு விட்டாச்சு


சென்ற பதிவில் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். தொடருக்குப் படங்கள் கொடுத்து உதவிய துளசி டீச்சர், தலைப்பை கொடுத்த சித்ரா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளைக் காட்டிப் பிடுங்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்து விட்டதின் காரணமாகப் பணியைத் தவிர வேறு எதுவும் சிந்திக்க இயலாத நிலை உள்ளது.

ஆதலால் ஒரு வாரகாலம் எனது பிளாக் பணிகளுக்கு ஓய்வு அளிக்கின்றேன். கடவுள் தொடரும், காதல் கதை தொடரும் மறுபடியும் எழுதுவேன் என உங்களைப் பயமுறுத்தித் தற்காலிக விடுப்பு(நிம்மதியை ) உங்களுக்கு அளிக்கின்றேன். நன்றி.

Wednesday, February 24, 2010

சிந்து சமவெளியில் ஒருவன்

கதை நடக்கும் காலம்- சிந்து சமவெளி நாகரீக காலம்.
இடம்: லோதல்.
கதைக்கான கரு: கற்பனை.
கதைக்கான மூலம்: துளசி டீச்சரின் குஜராத் பயணத் தொடரில் வந்த ஒரு படம்.

அதிகாலைக் குளிரில் சூரிய உதயத்திற்க்காக காத்து இருந்தான் மோரிஸ், இருபத்தி இரண்டு வயது இளைஞன்,திடகாத்திரமான ஆறரை அடி உயர வாலிபன் அவன். செம்பொன் கலரில் கட்டுமஸ்தான தேகமும், வசீகரமான முகமும்,கூரிய நாசியும்,அடர்த்தியான தலைமுடியும் கொண்டவன். கடலில் அடிக்கடி பிராயாணம் செய்யும் தனிமை அவனுக்கு கூர்மையான பார்வையைக் கொடுத்தது. சிறிது சிரித்த, வீரம் கலர்ந்த முகம். ஹராப்பா,மொகஞ்சதாரோ மற்றும் லோதலின் இளம் பெண்களின் தூக்கத்தைக் கெடுத்தது என்றால் அது மிகையாகது. அவன் லோதல் நகரின் வணிகரின் மகன். நாலு கப்பல்களுக்குச் சொந்தக்காரன அவரின் ஒரே மகன். இயல்பாக சுதந்திர வேட்கையுள்ளவன் ஆதலால் கப்பல் பிரயாணத்தில் பல இடங்களையும்,பல்வேறு மக்களையும் சந்திக்கும் ஆவலில் அடிக்கடி அவர்கள் இன மக்களின் இடங்களுக்கு எல்லாம் சென்று வருவான். கிரேக்கத்திற்க்கும், சுமேரியாவிற்க்கும் செல்ல அவனது மனம் துடித்துக் கொண்டு இருந்தது. அதை வீட அதிகமாக அவன் மனம் இன்னேரு விஷயத்திற்க்காவும் அமைதி இழந்து இருந்தது.

ஆறு மாதங்கள் கடலிலும்,நதியிலும் கப்பல் பிரயாணம் செய்து, வணிகத்தை நல்லபடியாக முடித்து விட்டு, அணிகளும்,மணிகளும், முத்துக்கள், பவளங்கள், வெல்லம் மற்றும் தானியங்களாக வாங்கிக் குவித்து இருந்தான். யவனர்களின் குதிரைகள் மற்றும் யவண அடிமைகளும் அவன் கப்பலில் இருந்தன. யவண அடிமைப் பெண்கள் வாங்கும் எண்ணம் அவனுக்கு இல்லையாதலால், பணிக்கு மட்டும் பணிப் பெண்கள் அவனது கப்பலில் இருந்தனர். மாலைவேளைகளில் அந்தப் பெண்களின் பாட்டும், நடனமும் உற்சாகத்தைத் தருவதுக்குப் பதிலாக அவனது வேதனையை அதிகப் படுத்தியது.















மெல்ல உறக்கத்தைத் தொலைத்து கப்பலின் மேல் தளத்தில் இருந்து நட்சத்திரங்களைக் கொண்டு, திசையும், தூரத்தையும் அளக்கத் தொடங்கினான். இன்னமும் இரண்டு நாளில் கப்பல் நதியின் முகத்துவாரத்தை அடைந்து விடும். பின்னர் ஒரு பகல் பொழுதில் துறைமுகத்தை அடைந்து விடலாம். அது மட்டுமா எண்ணற்ற பெண்களின் கனவுக் கண்ணன் ஆன அவனின் கனவுக் கன்னியைக் கூடக் காணலாம். இந்த நினைப்பே அவனது சோகமான முகத்தில் ஒரு மந்தகாசமான புன்னகையைத் தோற்றுவித்தது. மெல்ல அலைகளையும் வானத்தையும் பார்த்தவனுக்கு நிலவு அவனின் காதலியின் முகம் போல தெரிந்தது. கண்களை மூடி ஒரு நிமிடம் அவளின் முகத்தைக் கற்பனை செய்தான். அவனையும் அறியாமல் மோரிஸின் அவன் வாய் முனுமுனுத்தது. " மொளனிகா" என்று. தொடரும்.

டிஸ்கி : இந்தக் கதை துளசி டீச்சரின் கட்டுரையில் வந்த ஒரு படத்தைக் கொண்டு எழுதப் பட்டது. இதற்க்காக டீச்சருக்கு எனது நன்றிகள்.

Monday, February 22, 2010

கடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 9

சென்ற பதிவில்(பாகம் -8) நான் கூறிய பிரபஞ்ச தத்துவத்தை, ஒரு ஆராய்ச்சிப் பார்வைக்காக மட்டும் கடவுளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மையத்தில் உள்ள கருப்பொருளை,சக்தியாக,அதாவது பரம்பொருளாகப் பாருங்கள். அல்லது ஆதிபராசக்தியாகப் பாருங்கள். எதிர்வினையுடைய எலட்க்ரான் களைப் சிவனாகவும்(அழித்தல்), ஆக்க வினையுள்ள புரோட்டான் களை விஷ்னுவாகவும்(காத்தல்), நடுனிலையுள்ள நியுட்ரான் களை பிரம்மாவாகவும்(படைத்தல்) கற்பனை செய்யுங்கள். இது சாத்தியமா என்ற கேள்வி வரலாம். கொஞ்சம் மாற்றி சிந்தியுங்கள். அனுக்கரு வினைகளான, அனுக்கரு பிளவு(ஃபிஸ்சன்) மற்றும் அனுக்கரு இணைவு(பியூஸன்) ஆகிய செயல்களை நாம் இதனுடன் ஒப்பிட்டால் எப்படி?. பிரபஞ்சத்தில் ஓயாமல் அனுக்கரு பிளவு அல்லது இணைவு நடைபெறுகின்றது. அதன் மூலம் சக்தி வெளிப்பட்டு, அனைத்து இயக்கங்களும் நடைபெறுகின்றது. அப்படி நடக்கும் போது அனுக்கருவைத் தாக்கி அழித்து, மீண்டும் நிறைய எலட்ரான் களைத் தோற்றுவிக்கும் போது அதிக வெப்பம், மற்றும் அபாயகரமான கதிர் வீச்சுக்கள் உருவாகின்றன. இந்த எலட்ரான் களின் சக்தி அழிக்கும் சிவம் என்றும், இதிலிருந்து எலட்ரான் களைச் சமன் செய்து கட்டுப்படுத்தும் புரோட்டான் கள், காக்கும் விஷ்னுவாகவும், ஒரு அனுவில் இருந்து தாக்கி, எலட்ரான் களைப் 2,4,8,16,32 என பெருக வைக்கும் நியுட்ரான் கள் படைக்கும் பிரம்மாவாகவும் இருந்தால். இதிலிருந்து வெளிப்படும் கதிர்கள்,உதிரிகள்,குட்டிக் கோள்கள் எல்லாம் தனித்தனி சக்தி மண்டலங்களாக உருவாகின்றன. இது குட்டிக் குட்டி கடவுளாக உருவகம் செய்தால் எப்படி?. இது சும்மா ஒரு சக்திமூலத்தை அறிய உதவும் ஒரு கற்பனைதான். ஆனாலும் பொருந்தும் விதமாக உள்ளது. இதுவும் நம் முன்னோர்கள் கடவுள்களைப் படைத்த விதத்திற்கு ஒரு சான்று ஆகும்.

இந்த பிரபஞ்ச உதாரணத்தை மற்றும் ஒரு மூலத்துடன் ஒப்பிடுவேம். அந்த மூலம், நாம் தான். நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இந்த செல்கள் யாவும் இரத்தம் மற்றும் திசுக்களில் உள்ளது. இவை நரம்பு மண்டலத்தால் பிணைக்கப்பட்டு, நியூரான் கள் வழி தொடர்பில் உள்ளது. இந்த நியூரான் கள் செய்தி மட்டும் கட்டளைகளை மின் காந்த சக்தி மூலம் எடுத்துச் செல்கின்றது. இந்த சக்தி செல்களின் அனுக் கரு விளைவால் உருவாகின்றது. இதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். தந்தை மற்றும் தாயின் செல்களில் இருந்து உயிர் சக்தி உருவாகி அது கருவில் ஒரு செல்லாக உருவெடுக்கின்றது. இது 2,4,8,16,32 எனப் பிரிந்து உயிர் உள்ள ஒரு கரு வளர்கின்றது. இந்த கருவின் செல்களின் எண்ணிக்கைப் பெருகப் பெருக அது உடலுடன் கூடிய உயிரினமாக, அதன் மரபணுவில் உள்ள மூலக்கூறுகள் படி வளர்கின்றது. இப்போது ஒரு சக்தி அனு விளைவால் பிரிந்து பலவாகி, அது சக்தி மூலம் ஆகின்றது. இந்த சக்தி நல்ல ஆரோக்கியமான செயல்கள் மூலம் நல்ல முறையில் உடல் முழுதும் பரவி, நல்ல நோயற்ற சுகத்தைக் கொடுக்கின்றது. தீய செயல்கள் மூலம் சக்தி விரயம் ஆகும் போது, சக்திக் குறைபாடு ஏற்ப்பட்டு, நோய் வருகின்றது. ஆக பிரபஞ்சம், கடவுள், நமது உடல் என்று எல்லா இடத்திலும் சக்திதான் கடவுள் என்று காணலாம். நமது உடல்,உலகம், அண்டம், பேராண்டம், பிரபஞ்சம் என எல்லா இடத்திலும் சக்தி நீக்கமற நிறைந்து இருப்பதை உணரலாம். நமது உடலில் இந்த சக்தி மிகும் போது அது சக்தி மூலங்களில் சேகரிக்கப் படுகின்றது. இதை உணர்ந்து எவன் ஒருவன் தன் சக்தியை அதிகரித்து, சக்தி மூலங்களில் சேகரித்து வைக்கின்றானோ,அவன் தன் சக்தி மூலத்தை பிரபஞ்சத்துடன் இணைக்க வல்ல சக்தியை பெறுகின்றான். அவனுக்கு முக்காலங்களும், சகல சித்துக்களும் கைவசம் ஆகின்றது. எங்கும் இருக்கும் சக்திதான் தன் உடம்பில் உள்ளது என்று அறிந்து அதை வளப்படுத்தி தன் சக்தி மூலங்களில் சேகரிக்கும் ஒருவன், அந்த சக்தியின் நிலையினை உணர்ந்து, சாந்தமைடைகின்றான். தான் வேறு, கடவுள் வேறு அல்ல என்று உணர்ந்தவுடன், அவன் முக்தன் ஆகின்றான். இப்படி நாம் சக்தி மூலத்தில் நமது ஆற்றலைச் சேமிக்கத் தொடங்கினால், அனைத்தும் நம் வசமாகும். பின்னர் நாமும் குதம்பைச் சித்தர் போல

மலையில் ஏறி மாங்காய் பால் உண்டவர்க்கு,
தேங்காய்ப் பால் எதுக்குடி குதம்பாய்.

என்று பாடத் தொடங்கி விடுவேம். இந்த சக்தி மூலங்கள் என்று அழைக்கப் படுவன நம் உடலில் பல்வேறு பாகங்களிலும் உள்ளன.













அவை யாவும் முறையான வழிகாட்டியுடன், நல்லா கற்றறிந்த குருவின் துணையுடன் மேம்படுத்துதல் வேண்டும்.தன்னிச்சையாக மேம்படுத்துதல் எதிர்வினைகளுக்கு ஆளாக்கும். நாம் முதலில் பிரபஞ்சத்தையும்,பின்னர் கடவுளிடமும் சக்தி மூலத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். இனி இதனை தத்துவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதுவும் சரியாக வரும். முதலில் உள்ள உயிர் சக்தியை நாம் பரமாத்மா அல்லது பரம்பொருள் எனலாம். நம் உடலில் உள்ள உயிர் சக்தியில் இருந்து பிரிந்து செயலாற்றும் சக்திகளை ஜீவாத்மா எனவும் கொள்ளலாம். சக்தி பெருகப் பெருக அதிகரிக்கும் சக்தி மூலங்கள் இறுதியில் பரமாத்மாவான உயிர் சக்தி மூலத்தில் இணைதல் முக்தி எனலாம். நல்ல செயல்கள் மூலம் தான் இந்த சக்தியை அதிகரிக்கின்றேம். ஆகவே செயல்களை கர்மா எனலாம். சக்தியின் மீள் பிறப்பை பிறவி எனலாம். ஆகவே நல்ல கர்மங்கள் நம்மை பரமாத்மாவிடமும், தீய கர்மங்கள் நம்மை நோய் என்ற மீள் பிறப்பில் ஆழ்த்தும் என்றும் கொள்ளலாம் அல்லவா. இப்படி நம்மைச் சுற்றியுள்ள எதனுடன் ஒப்பிட்டாலும் நாம் இறுதியில் வருவது பரம்பொருள் எண்ணும் சக்தி மூலம் தான். எல்லாம் இதனின் பிரிவுகள் தான் என்பது தெளிவு.இந்தப் பரம்பொருள்தான், பரமபிதா எனக் கிறித்துவர்களும், அல்லா என இஸ்லாமியர்களும்,பராசக்தி என இந்துக்களும்,ஜோதி என தியானிப்பவர்களும், பரமாத்மா என வேதாந்திகளும் அழைக்கின்றார்கள். இது எப்படி சாத்தியம். எப்படி ஒன்றாக முடியும் என நினைப்பவர்களும், ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்களும், ஒரு சிறு கற்பனை செய்யுங்கள். ஒரு சிறிய வெள்ளைத்தாளில் ஒரு பெரிய பூஜ்ஜியம் வரையுங்கள். அந்த பூஜ்ஜியத்துக்குள்ளும், வெளியிலும் நிறைய பூஜ்ஜியங்களை சிறியதும், பெரியதுமாக வரையுங்கள். இப்போது பெரிய பூஜ்ஜியம், பரம்பொருள் எனவும், கொஞ்சம் பெரிய பூஜ்ஜியங்களைக் கடவுளின் அவதாரங்கள் எனவும், சிறிய பூஜ்ஜியங்களைக் குட்டிக் கடவுள்கள் எனவும் கொள்ளுங்கள். இப்போது சொல்லுங்கள் அந்தத் தாளில் எந்த பூஜ்ஜியத்துக்கு மதிப்பு அதிகம் என்று. இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில். நன்றி.

டிஸ்கி: இந்தச் சக்தி மூலங்களின் படம் ஒரு பதிவரின் பதிவில் இருந்து சுட்டு விட்டேன். பதிவரின் பெயர் மறந்து விட்டது. அவருக்கும் எனது நன்றிகள். (பட உதவி என்று டைட்டில் போட்டு விடலாம்)

Friday, February 19, 2010

வாங்க சிரிக்கலாம்.... வாங்க

2036 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்தேன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய இருவர் என்னிடம் வந்தார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி என்னைத் தர தரவென இழுத்துச் சென்றார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).

காட்சி-1 (வானவீதியில்)

நான்: ஆமாஆஆஆ நீங்க யாரு?

கிங்கரர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம்.

நான் : என்னது உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை.

கிங்கரர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க.

நான் : ஆமா, ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் நல்லா இருக்காங்களா.

கிங்கரர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா?

நான் : என்னது நீங்க வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் வராதா?

கிங்கரர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா.

நான்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?.நான் இன்னமும் கடவுளும் கோவில்களும் கட்டுரை கூட எழுதி முடிக்க வில்லையே.

கிங்கரர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வா.

நான்: போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை.

கிங்கரர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்படி வசதி.

நான் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப்.

















காட்சி - 2 (எமலோகத்தில் எனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது).

சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும்.

யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி.

நான் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?.

கிங்கரர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும்.

நான் : சரி அப்பு.

சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது.....

யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம்.

நான் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாது போட்டுக்குவேம்.

கிங்கரர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா.

சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் சென்னையில் குடித்துவிட்டு, ஒருமுறை.......

யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி,டாமர் உன்னை....

சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள்.

யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,சென்னை என்றவுடன் அதன் பாஷை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு கிங்கரர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள்.

சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,கல்பாக்கத்தில் இவன்........

யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும்.

சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, சிங்கப்பூரில் இவன் பதிவு என்ற பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் பதிவர்களிடம்......

யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் சுக்கா வறுவல் பண்ணுங்கள்.

நான்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,கைமா போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்.

யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

கிங்கரன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா?

நான் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம்.

சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள்.

யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன்.

நான்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய்.

சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம்.

நான்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவே பார்த்துட்டேம்,இது என்ன..

யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது.

நான் : .... நாட்டுல ... ஆட்சியில அமைச்சரா போடுவாரா? வாயைத் திறக்காமல் இருக்க...

கிங்கரன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு.

யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை.

சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள்.

நான்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க.

யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய்.

நான் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.

யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை.

நான் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கினேன்.அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்தி கண்விழிக்கின்றேன்.

(பக்கத்தில் படுத்துருக்கும் தங்கமணி, அப்பப்பா!! தூக்கத்தில் கூட பதிவா? உங்களுக்கு பைத்தியம்தான் போங்க என்று அங்காலாய்த்துத் திரும்பிப் படுக்கின்றார்).

டிஸ்கி: சும்மா கடவுள்,கோவில் குளம்ன்னு போடாம. நகைச்சுவையா ஒரு சின்ன பதிவா
போடலாம்ன்னு பார்த்தா! அப்படியே எனது கற்பனை வளம் ஊறிப் பெருக்கு எடுத்ததில் பெரிதாகி விட்டது. எனக்காக எவ்வளவே சகிச்சுக்கிற நீங்க, இதையும் சகிக்க மாட்டீர்களா?. ஆனா ஒன்னுங்க, என் பதிவை விடாம படிக்கின்ற, நீங்க எல்லாரும் ரொம்பாஆஆஆ நல்லவங்க......... நன்றி. தொடராது. (ஹி ஹி தொடரும் போட்டு பழக்க தோசம்தான் )

Thursday, February 18, 2010

கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 8

எனது முந்தைய பதிவுகளின் சுருக்கமாக சாராம்சத்தைக் கூறி, நாம் முக்கியமான கட்டத்தில் நுழைவேம். முதலில் நான் கடவுள் என்பது மனிதனின் பயம் மற்றும் தேவைகளின் அடிப்படையில் அமைந்தது என்று கூறினேன். இது ஆதிமனிதனின் சித்தாந்தம். பின்னர் கடவுள் என்பது ஒரு சக்தி என்று கூறினேன்.இது தத்துவ ஞானிகளின் கருத்து.இது தான் நாம் விவாதிக்கும் விஷயம். அதன் பின் கடவுளின் வடிவம் மற்றும் புறத்தோற்றங்களைப் பற்றிக் கூறினேன். இது காலம் மாற, மாறக் கூடிய ஒரு விஷயமாகக் கருதலாம்.
கடவுளின் வழிபடும் வடிவங்கள், காலம்,இடம்,சூழல் மற்றும் மனிதர்களின் குணாதியசங்களுக்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது என்பது ஒரு கருத்து. இந்த கட்டுரையில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் என்பது வேறு, வழிபடும் கடவுள் என்பது வேறு. கடவுள் என்பது எங்கும் நிறை சக்தி,வழிபடும் கடவுள் என்பது அவரவர் மன நிலைக்கு ஏற்ப மாறுபடும் ஒரு தன்மை, அல்லது பழக்கவழக்கள் காரணமாய் அமைந்த விஷயம். ஆனால் ஒன்றை நாம் கண்டிப்பாய் உணர்தல் வேண்டும். கடவுளும்,வழிபாடுகளும் வேறு வேறாய் இருக்கலாம். ஆனால் பரம்பொருள் என்ற சக்திமூலம் ஒன்றுதான், அது அல்லா,பரமபிதா அல்லது பராசக்தியாகக் கூட இருக்கலாம். சக்தி ஒன்றே எனத் தெரிதல் வேண்டும். சக்தி என்பது அம்சம், வழிபாடு என்பது சாரம், இரண்டும் இணைந்தது நம் நம்பிக்கை என்பதின் சாராம்சம்.








எந்த சக்தியாக இருந்தால் கூட நமது நம்பிக்கை இல்லை என்றால் அது வீணாய்ப் போகும். ஒரு இறை சக்தியை நாம் நம்புகின்றேம் என்றால் அதன் மீது நமது பூரண நம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும். நம்பிக்கை மட்டும் இல்லாது நமது செயலும் அர்ப்பணிக்க வேண்டும். நாம் நம் கடமையை அவனிடம் பூரண நம்பிக்கையை வைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அதன் பரிபூரண பலன் நமக்கு கிட்டும். எந்த சிலை வடிவம் ஆனாலும் சரி, எந்தக் கடவுள் ஆனாலும் சரி,தேவதைகள் ஆனாலும் சரி, மகான் கள் ஆனாலும் சரி, இறை சக்தி ஒன்றே, அது இங்கும்,எங்கும் ஏன் நமக்குள்ளும் வியாப்பித்து இருக்கின்றது என்பதுதான் உண்மை. ஒரு சக்தியின் அம்சங்கள்தான் இவை எல்லாம். இந்த பிரபஞ்சம் முழுதும் சக்தியால் பின்னப்பட்டுள்ளது. ஒரு சக்தி மறு சக்தியாக மாறுகின்றது. அது அழிவதில்லை. குறைவது இல்லை. செயல், சக்தி இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக பின்னப் பட்டுள்ளது. செயலின் விளைவு சக்தி, சக்தியின் விளைவு செயல். பூமி,சூரியன்,கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்,காலக்ஸிகள், பால்வெளிகள் ஆகியன யாவும் சுழற்ச்சி என்னும் செயலில் ஈடுபடுவதால், ஈர்ப்பு மற்றும் மின் காந்த சக்திகள் தோன்றுகின்றன.இந்த சக்தி மற்றவைகளின் சுழற்ச்சிக்கு ஆதாரமாய் விளங்குகின்றது. ஆகவே செயல்,சக்திக்கும்,சக்தி செயலுக்கும் ஆதாரமாய் விளங்குகின்றது. இதை நாம் நம் பரிமாணத்தில் பார்த்தால், நம் செயல்கள் தான்,நமது வாழ்க்கைச் சுழற்ச்சிக்கு ஆதராமாய் விளங்குகின்றது. நல்ல செயல்கள், நல்ல சக்திக்கும், தீய செயல்கள் தீய சக்திக்கும் துணை போகின்றது. இங்கு தீய சக்தி என்பது சக்திக் குறைபாடு என்று கொள்ளலாம். நமது உடலின் சக்திக் குறைபாடு என்பது நோய் என்று கொள்ளப்படுகின்றது. நல்ல செயலின் மூலம் கிடைக்கும் சக்தி,நல்ல வளர்ச்சி. நல்ல சக்திமேன்மையடையும் போது உடல் ஆரோக்கியமாய் உள்ளது. தீய செயல்களின் காரணமாய் சக்தி விரயமாகி உயிர் சக்தியின் ஆதாரம் குறைந்து சக்திக் குறைபாடு (நோய்கள்) வந்தடைகின்றன. ஆக நல்ல செயல்கள் தான் சக்தி மிக வழியாகும்.இந்த நல்ல செயல்களைக் கூட்ட நமக்கு வழிபாடுகள் துணை புரிகின்றன. ஆக செயல் என்பது வழிபாடு, அதன் விளைவாய் வரும் சக்தி இறைநிலை என்று கொள்ளலாம்.

இந்த வழிபாட்டில் நிறைய நிறைகள், குறைகள் உள்ளன. அது அவரவர் மனநிலை, வாழிடம்,சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். கோடைவெப்பம் நிலவும் இந்தியாவில் பானகமும், நீர்மோரும் தாக சாந்திக்காய், உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்த வழிபாட்டுப் பொருளாய் உள்ளது. குளிர் நாடுகளான மேலை நாடுகளில் உடல் உஷ்ணத்தைக் கூட்ட வைன் வழிபாட்டில் பயன்படு பொருளாய் உள்ளது. இதில் வித்தியாசம் பார்ப்பது பேதமை. அது போலத்தான் கடவுள்களில் வித்தியாசமும், ஏற்றத்தாழ்வும் பார்ப்பது பேதமை. எல்லாக் கடவுளும் ஒரு சக்தி மூலத்தின் வடிவங்கள் என்ற உண்மை புரிந்தால் இந்தப் பேதமை விலகும். இதுதான் இந்தக் கட்டுரையின் சாராம்சம். இதை எப்படி நிறுப்பிப்பது? அல்லது இதை எப்படி புரியவைப்பது? என்ற கேள்விகளைப் புறந்தள்ளி, நாம் இதை எப்படி உணருவது என்று சிந்தியுங்கள். பரமபிதாவும் அல்லாவும் ஒன்றா?. சிவனும் ஏசுவும் ஒன்றா என்று கேட்டு நாம் சிந்திக்கத் தொடங்கினால் நாமும்,கடவுளும் ஒன்றே என்ற உண்மை புரியும். நான் கடவுள், நீங்கள் கடவுள். ஆனால் புரிதலும், செயலும் தான் வித்தியாசம். யேசுவின் செயல் அவரைக் கடவுள் ஆக்கியது,யூதாஸின் செயல் அவனைத் தூரோகியாக்கியது. ஆக நமது செயல் தான் நம்மைக் கடவுள் மற்றும் சக்தி மூலத்திடம் இருந்து தனிமைப் படுத்துகின்றது. இதை நாம் எவ்வாறு உணர முடியும். இதை நான் விளக்குகின்றேன். நீங்கள் கவனமாக உங்களுக்குள், கேள்விகள் கேட்டு உணருங்கள். உணர்ந்தவைகளை உங்களிடமும்,என்னிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் கூறியவற்றில் எதோனும் மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள், நானும் திருத்திக் கொள்கின்றேன். இப்போது நாம் சக்தி ஒன்றுதான் என்பதுக்கு ஆதராமாய் பல தகவல்களைக் கூறுகின்றேன். இதை நீங்கள் சிந்தித்து, புரிந்து உணருங்கள்.






இந்த பிரபஞ்சம் முழுதும் சக்தி மயமாய் ஆனது. ஒரு சக்தி,பல சக்தியாய் மாறுகின்றது. ஒன்று பலவேறாய் விளங்குகின்றது. பொளதீக அடிப்படையில் பார்த்தால், அனுக்கருவில் உள்ள நியூட்ரான் கள்,எலட்ரான் கள் மற்றும் புரோட்டான் கள் சுழற்ச்சியால்,சக்தி உருவாகி அது பிரபஞ்சத்தில் ஈர்ப்பு சக்தியாய் மாறி, பல பால்வெளிகளைச் சுழல வைக்கின்றது. இந்த பால்வெளிகளின் சுழற்ச்சி,ஈர்ப்பு சக்திக்கு காரணமாய்ப் பல சூரியன் கள் மற்றும் நட்சத்திர சுழற்ச்சிக்கு ஆதாரமாய் உள்ளது. இந்த சூரியனின் சுழற்ச்சி ஈர்ப்பு சக்தி, பல கோள்களின் சுழற்ச்சிக்கு ஆதராமாய் உள்ளது. கோள்களில் பூமியை எடுத்துக் கொண்டால், அதன் சுழற்ச்சி,நமக்கு பருவ காலங்கள், உயிரியல் சூழ்நிலை ஆகியவற்றைக் கொடுக்கின்றது. ஆக எல்லா மட்டத்திலும் சக்தி பூரணமாய் உள்ளது. இவற்றின் ஆக்கமும்,அழிவும் சக்திதான் காரணம் ஆகும். இதன் பெயர்கள் வேறு, வேறாய் கொள்ளப் படுகின்றது. ஈர்ப்பு சக்தி, அயன சக்தி, மின் சக்தி என்றும் இந்த சக்தியால் வெளிப்படும் அலைகள் அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப,ஆல்பா,பீட்டா,காமா என்று அழைக்கப் படுகின்றது. இந்த சக்தி வெளிப்படும் அலைகள் கதிர்வீச்சு எனவும், அதன் தன்மை,நிறம், குணாதியசங்கள் ஆகியனவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர்கள் வேறு, ஆனால் மூலம், சக்தி ஒன்றுதான். இதன் மூலசக்தி நாம் எலட்க்ரான், நியூட்ரான் மற்றும் புரோட்டான் கள் சுழற்ச்சி என்று பார்த்தோம் அல்லவா, அதன் மூலசக்தி நியூக்கியேலஸ் என்னும் அனுக்கருப்பொருள். இந்த அனுக்கருப்பொருள் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலங்களும் உட்பொருளாக மறுபடியும் இந்த அனுக் கொள்கையைச் சார்ந்துள்ளது. இதில் இருந்து பிரபஞ்சம் முழுதும் சக்தி என்னும் மூலங்களால் ஆனது என்றும்,அது செயலின் விளைவு என்றும் பார்த்தோம் அல்லவா? இந்தக் காட்சியை அப்படியே வழிபாட்டுக்கடவுளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது வழிபாட்டுக்கடவுள் என்பது ஒரு மூலத்தின் அம்சம் என்பது போலக் கொண்டால் எல்லா வழிபாட்டுக் கடவுளும் ஒரு மூலத்தின் அம்சமாகத் தான் இருக்க முடியும். இந்த மூலங்களின் அம்சம் பரம்பொருள் என்னும் சக்தி மூலமாகக் கொள்ளலாம். இந்த பிரபஞ்ச ஆதரத்தை நன்றாகக் கவனத்தில் கொள்ளுங்கள். இதுதான் மூலமும், நம் உடலின் செயல்பாடும் ஆகும். இதை நான் பின்னால் விளக்குகின்றேன்.இதை ஒவ்வெரு ஆதராத்தின் போதும் பார்ப்போம். நன்றி தொடரும்.

டிஸ்கி: நான் கூறுவதைப் போல சக்தி, மற்றும் கடவுளை மட்டும் பகுத்து உணருங்கள். மாறாக மனம்,ஆன்மா, வாழ்க்கை ஆகியவனவற்றை புரிதலோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இவற்றை வாழும் சூழ்நிலையில் ஒப்பீடு செய்தால் அது நம் வாழ்வின் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடும். மனம்,செயல் தன்மை போன்றவற்றை இனி வரும் பதிவுகளில் கூறும் போது, அதை மேம்போக்காக மட்டும் பார்க்கவும்.உங்களிடமும்,உங்களை சுற்றி உள்ளவர்களிடம், உறவுகளிடமும் கூர்ந்து கவனிக்காதீர்கள். இது வாழ்க்கைக்கு ஆபத்து. ஆகவே கடவுள், நம் வாழும் முறை ஆகியனவற்றை மட்டும் உணருங்கள். நன்றி, மொத்த யோசித்தால் வெறுமை மட்டும் தட்டும். இது நல்லது அல்ல. ஆகவே இதை நாம் விவேகமாக மாற்றி வாழும் முறைக்காக சொல்கின்றேன். நன்றி.

Wednesday, February 17, 2010

கடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 7

நான் முன்னேர்களின் இந்த ஆழ்ந்த அறிவைப் பற்றிக் கூறினால் அதற்கு ஒரு சில பதிவுகள் பத்தாது. நிறைய எழுத வேண்டும். அதில் பல உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகின்றேன். ஆதலால் சிலவற்றை மட்டும் கூறி கட்டுரையைத் தொடங்குகின்றேன். அறுபதுகளில் இந்தியாவைக் காலரா,பிளேக் மற்றும் பெரியம்மை பரவிய சமயம்,அப்போதுதான் நம் எல்லைக் காவல் தெய்வங்களான மாரியம்மன்,காளியம்மன் போன்றவைகளின் பூஜை வழிபாடுகள் மிண்டும் பிரபலமடைந்தன. இது ஏன் என்றால் சக்தி என்பது மருத்துவ குணம் மிக்க வேப்பிலை மற்றும் மா இலைகளில் உள்ளது. தொற்று நோய்க் கிருமிகள் அண்டாமல் நம்மைக் காத்தன. இன்றைய தினம் மர்மக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் மருத்துவர்கள்,சுற்றுப்புற ஆர்வலர்கள் பலரும் கொசுக்கள் மற்றும் கிருமிகள் அண்டாமல் இருக்க வேப்பிலை, மாம்பூ,வசம்பு கலந்த புகையை, மாலைவேளையில் போடச் சொல்கின்றார்கள். மாவிலை மற்றும் வேப்பிலையில் வரும் நுட்பமான வாசனை,கொசுக்களை விரட்டும் என்று சொல்கின்றார்கள். அம்மை,காலரா மற்றும் உஷ்ண சம்பந்தமான நோய்கள் பரவும் கோடைகாலத்தில் தான் இந்த அம்மன் பண்டிகைகள் வருகின்றது என்பதும் கவனிக்கத் தக்கது. நல்ல விஷயங்களை, மருத்துவக் குணங்களைப் பக்தியுடன் கலந்து கொடுத்தார்கள்,அப்போதுதான் மனிதன் பயத்துடன் ஒழுங்காக கடைப்பிடிப்பான் என்பது அவர்கள் எண்ணம்.

கிருமினாசிகள் கலந்த சானியை மொழுகுவது,மணம் பரப்பும் மலர்கள்,வீட்டின் வர்ணம் வெப்பம் இழுக்காத வெள்ளை, கூரையின் ஓடுகள்,பூஜைகள் மற்றும் சமையலில் மஞ்சளின் பயன்பாடு ஆகியன போன்றவை எல்லாம் அவர்கள் அனுவபப் பூர்வாய் கண்டு பிடித்த விடயங்கள் ஆக இருக்கலாம். ஆனால் உடல் உறுப்புகள் மற்றும் புறக்காரணிகள், சக்தி,கோவில்,சிலை வழிபாடு, கோள்களின் இயக்கங்கள் மற்றும் தன்மைகள் எவ்வாறு அறிந்தான் எனபது புதிர்.இது பற்றிப் பின்னர் பார்ப்போம். ஆனால் கடவுள் பற்றிய சில நம்பிக்கைகள்,வழிபாடுகள் யாவும் நமது மனதின் தண்மை மற்றும் பழக்க வழக்கங்கள் மூலம் தான் அமைகின்றன. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அல்லது வழிமுறையில் நாம் பழகும் பழக்கங்கள் தான் நமது கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கைக்கு வழிவகுக்கின்றன. நமது மதம்,கடவுள்,வழிபாடு யாவும் பழக்கத்தால் வருவபை. இந்த உணர்வினை நான் பெறுவதுக்கு காரணமாக ஒரு சம்பவத்தை நான் கூறுகின்றேன். என் அம்மா மிகவும் தெய்வ பக்தி மிக்கவர். பேருந்தில் பயணம் செய்யும் போது கூட ஜன்னல் வழியாக வழியில் வரும் கோயில்கள் எல்லாம் கும்பிட்டுக் கொண்டே வருவார். இந்தப் பழக்கம் கோவில்களைப் பற்றிய உண்மைகள் அறியாத வரை எனக்கும் இருந்தது. பேருந்தில் அமர்ந்தால் மரங்களையும்,வயல்களையும் வேடிக்கை பார்க்கும் நான் வழியில் எந்தக் கோவில்,சர்ச்,பள்ளிவாசல்,தர்க்கா வந்தாலும் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்வது வழக்கம்.

எங்கள் ஊர் முருகன் கோவில்,காவல் நிலையத்தின் எதிரில் அமைந்துள்ளது. நான் இந்த இடத்தைக் கடக்கும் போது எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வது வழக்கம். பின்னர் நான் சென்னை வந்த போது, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தின் அருகில் இருக்கும் அனுமார் கோவிலும், எலிபெண்ட் கேட் ரோட்டில் காவல் நிலையத்தின் அருகில் இருக்கும் கிருஷ்னன் கோவிலில் பேருந்தில் இருந்தவாறே கன்னத்தில் போட்டுக் கொள்வது தொடர்ந்தது. ஒரு முறை ஒரு காவல் நிலையத்தைக் கடக்கும் போது, நான் என்னை அறியாமல் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். உடனே நான் ஒரு நிமிடம் கூர்ந்து யோசிக்கத் தொடங்கினேன். அங்கு எந்தக் கோவிலும் இல்லை, ஆனால் நான் ஏன் வணக்கம் போட்டேன் என்று. பின்னர்தான் தெரிந்தது நான் செய்தது பழக்கத்தின் காரணமாக வந்த அனிச்சைச் செயல் என்று. (இது பின்னர் கோவில்கள் பற்றி ஆராயத் தொடங்கியது. இதுவும் சக்தி மூலங்களைப் பற்றி எழுதும் போது சொல்கின்றேன்). இந்த நிகழ்வு எனக்குள் ஒரு பெரிய மாற்றம் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தியது.பின்னர் தான் கடவுள் நம்பிக்கை என்பது வேறு, வழிபாடுகள் என்பது வேறு. நம் ஆழ்மனதில் கொண்ட நம்பிக்கைதான் கடவுள். அதன் மீது கொள்ளும் தொடர்புகள் தான் வழிபாடு. ஆனால் இந்த வழிபாடு என்பது பழக்கத்தால்,ஆழ் மனதுடன் தொடர்பு இல்லாமல் போய்,வெறும் அனிச்சைச் செயல் ஆகின்றது. வெறும் அனிச்சையாக மனதுடன் தொடர்பு இல்லாமல் செய்யும் போது,அது பயனற்ற ஒன்றாக ஆகிவிடுகின்றது. இப்போது நாகரீக உலகில் இந்த வழிபாடுகள் யாவும் கட்டாய முறைகள் ஆகி அது சடங்காக ஆகிவிட்டதால்,அதுவும் அனிச்சையாக செய்யும் பூஜைகள்,வழிபாடுகள்,தொழுகைகள் ஆகி அதில் பலனே அல்லது மன நிறைவே கிட்டுவது இல்லை. எனவே முன்னேர்கள் சொல்லிய மாதிரி முழு மனதுடன் அமைதியாக, வழிபடுவது,தொழுகை செய்வது ஆயிரம் மடங்கு பலனும்,மன அமைதியும் கிட்டும். நீங்கள் எப்போது எல்லாம்,சந்தோசம்,துயரம் போன்ற ஆழ்ந்த மன நிலையினை அடைகின்றீர்களே அப்போது எல்லாம் கடவுளை நினையுங்கள்,வணங்குங்கள் மன அமைதி கூடும். நாம் முன்னர் விட்ட இடத்திற்குச் செல்வேம். இனி கடவுள் என்பவர் பயத்தால்,ஆசையால் மனிதனுக்கு வந்த நம்பிக்கை என்று தொடரின் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா. அது ஆரம்ப கால கட்டத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் ஆன தொடர்புகள். பின்னாளில் இயற்கை,விலங்குகள் போன்ற அபாயங்களில் இருந்து தற்க்காத்துக் கொண்ட மனிதனின் சிந்தனைகள் விரிவடையத் தொடங்கின. பின்னர் அவன் தன்னை சுற்றியுள்ள இயற்கை, படைப்புக்கள் போன்றவற்றிக்கு மூலத்தைத் தேடத் துவங்கினான். இதுதான் கடவுளைத் தேடுதல் ஆரம்பமாகவும் இருந்தது. இந்தக் கடவுளைத் தேடும் போது ஒரு சக்தி மூலத்தைக் கண்டவுடன் அதுதான் கடவுள் என்றான்.பின்னர் அதன் சக்தி மூலம் வேறு ஒன்று என்று அறியும் போது அதுதான் கடவுள் என்றான். இப்படி அவன் சக்தி மூலங்களைத் தேடிக் கொண்டே செல்கையில் பல கடவுள்கள் தோன்றினர். இந்த வரிசையைப் பார்ப்போம். தொடரும். நன்றி.

டிஸ்கி: வேப்பிலை,மாம்பூ,வசம்பு கலந்த தூளை குமுட்டி அடுப்பில் போட்டு எரித்தாலும்(புகைப் போடுவது). அல்லது மாம்பூ,வேப்பிலை,வசம்பூ ஆகியவற்றைக் காயவைத்து பொடி செய்து சாம்பிராணித்தூளுடன் கலந்து,வெள்ளை மண்ணெய் அல்லது நல்ல எண்ணெய்யில் கலந்து, இரண்டு அல்லது மூன்று சொட் நறுமண பசை(செண்ட்)யும் கலந்து, பழைய ஆல் அவுட் அல்லது குட்னைட் ரீபீள் காலி குடுவையில் ஊற்றி வைத்தால், நல்ல உடலைக் கொடுக்காத கொசுவத்தி ரெடீ.(நன்றி ஜூ வீகடன்)

Friday, February 12, 2010

கடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 6

நான் ஆரம்பத்தில் இருந்து ஒரு விஷயத்தைக் கூறி வருகின்றேன். நமது கடவுள் நம்பிக்கை என்பது நம்பிக்கை மற்றும் பயம் காரணமாய்த் தோன்றும் ஒரு விசயம். இதை நீங்கள் ஒரு கோவிலில் முதன் முதலில் நுழையும் போது உணரலாம். முதலில் ஒரு பயம் கலர்ந்த திகைப்பு, பின் கடவுளிடம் நம்பிக்கை கொண்ட வணக்கம். பின்னர் தான் கோவில் மற்றும் அமைப்பு பற்றியும், மற்ற விசயங்களைக் கவனிக்கின்றேம். முதலில் வரும் இரண்டு உணர்வுகளும் காலம் காலமாய் நம் மரபு அனுக்களில் தீட்டப்பட்ட விசயம். இது நம்மையும் அறியாமல் வருவது. சில சமயம் பழக்கத்தால் வருவது, குழந்தையில் இருந்து நாம் பெரியோர்களைப் பார்த்துப் பழகிய பழக்கம் நம்மையும் அறியாமல் வரும். இந்த எனது கருத்துக்களுக்கு நான் இரண்டு உதாரனங்களைக் கொடுக்க விரும்புகின்றேன். ஒரு சமயம் நான் சென்னையில் இருந்து மூன்று மணி நேரப் பயணம் மேற்க் கொண்டேன். என்னுடன் கிறித்துவ நண்பன் டி.பி நாயகம் உடன் வந்தான். பேசிக் கொண்டு இருக்கும் போது, கடவுளைப் பத்தி பேச்சு வந்தது. நான் எனது கருத்துக்களைப் பற்றிக் கூறிக் கொண்டு இருந்தேன். ஊரும் வந்து இறங்கும் போது, எங்கள் அருகில் பக்கீர் போல இருந்த, முஸ்லிம் பெரியவர் ஒருவர் எனது தோளில் கைவத்து, இவ்வளவு சின்ன வயதில், எவ்வளவு யோசனை செய்கின்றாய் என்று சொல்லி, அல்லா உன்னைக் காப்பாற்றுவார் என்று கூறிச் சென்றார். அப்போது எனக்கு வயது 21.

எங்களின் பேச்சு கடவுள் பக்கம் வந்த போது கடவுள் என்பவர்,பயம் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் தான் வந்ததது என்று நான் விவாதிக்க, நாம் தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று நம்புவதும் ஒரு காரணம் ஆகும். அதற்கு ஒரு உதாரணம் சொன்னேன். அது என்ன என்றால், நம் நாட்டில் எல்லாரும் நாகப்பாம்பை, நல்ல பாம்பு எனவும், நாகம் தேவர்களில் ஒன்று எனவும். அம்மன் கையிலும், ஈசனின் தலையிலும், விஷ்னுவின் படுக்கையாகவும் இருக்கும். நிறையக் கடவுள்களுக்கு பாம்பு அருகாமையில் இருக்கும். இதில் கிறிஸ்த்தவர்களும் விதிவிலக்கு இல்லை. ஜரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் மக்களைக் கடிக்கும் வைப்பர் என்னும் விரியன் பாம்புகளை மேரி மாதா மற்றும் சூசையப்பரின் மீது போட்டு நடக்கும் ஊர்வலம் ஒன்று, இன்றும் நடக்கின்றது. ஆனால் பெரும்பாலும் அவர்கள் பாம்பை சாத்தானின் அம்சமாகப் பார்ப்பார்கள். இது ஆதாம், ஏவாளின் கதையால் விளைந்தது. இதுக்குக் காரணம் என்னவாக இருக்கும்? இது பற்றிய அலசல்தான் விவாதம். பாம்பு என்பது விஷம் கொண்ட பிராணி. கடித்தால் மரணம் நிச்சயம் என்பதும் உண்மை. ஆகவே பாம்பு அச்சத்தைக் கொடுக்கும் பிராணி என்பதில் சந்தோகம் இல்லை. ஆனால் கடவுளாக ஆக்கப் பட்டது எப்படி? சில சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.

பாம்பு இரவு, பின் மாலைப் பொழுது, அதிகாலைப் பொழுது மட்டும் உலாவும் அல்லது இரை தேடும் பிராணி. பகலில் பெரும்பாலும் உறங்கும். மனிதர்கள் பெரும் பாலும் விளக்கு வசதி இல்லாத அந்தக் காலத்தில் பொழுது விடிந்தவுடன் வயல் மற்றும் வேலைக்குச் சென்று, பொழுது சாயும் சமயம் திரும்பி விடுவார்கள். பெரும்பாலும் மனிதர்கள் அந்தக் காலத்தில் இரவில் வெளி வரமாட்டார்கள். அனால் பாம்பு இரவில் நடமாடும். அப்போது மனிதர்களைக் கடிக்கின்றது என்றால் எப்படி?. அந்தக் காலத்தில் இரவில் நடமாடுவர்கள் பெரும்பாலும், திருடர்கள், தகாத உறவு கொள்வேர், குடிப்பழக்கம் உடையவர்கள் மற்றும் சூதடுவர்கள் தான் ஊருக்கு வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்க்கு செல்வார்கள். அப்போது அங்கு இரை தேடும் பாம்புகளின் கடிக்கு ஆளாகி உயிரை விடுவார்கள். இதனால் அவன் தவறு செய்தான் அதான் அவனைக் கடவுள் தண்டித்தார். தவறான பாதையில் செல்லும் ஒருவனைக் கடவுள் இப்படித் தண்டிப்பர் என்னும் நம்பிக்கை உருவாகி இருக்க வேண்டும். மனிதர்களில் ஒரு சிலரை அதிகாலையில் அது புத்தில் தஞ்சம் அடையும் சமயம் மக்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும். ஆக வயல் வேளைக்கு சென்ற நல்ல மனிதர்களை ஒன்றும் செய்ய வில்லை, ஆனால் இரவில் நடமாடும் தீயவர்களைக் கொன்று விட்டது. நல்ல ஒழுக்கங்களைக் கொண்டவர்கள் அல்லாது, தீய பாதையில் செல்வேரைத் தண்டித்ததால் அது நல்ல பாம்பு ஆயிற்று.ஆகவே இது கடவுளின் வடிவம் அல்லது தூதனாக்கப் பட்டது. புத்துக்கு அபிஷேகமும், நாகர் வடிவங்களும் கொடுக்கப் பட்டிருக்கலாம். இது ஒரு விதமான சிந்தனை.

ஆனால் இதுவே பின்னாளில் நம் முன்னேர்கள் இந்த பாம்புகள் பிண்ணிப் பிணைந்து காதல் செய்யும் வகையை உருவமாகச் செய்து, அதை அரச மரத்தின் அடியில் வைத்து வணங்கினால், பிள்ளைப் பேறு கிட்டும் என்றான். இது கொஞ்சம் திகைப்பு மற்றும் ஆச்சரியமான விசயம்தான். அவர்களின் அறிவுத்திறன் கட்டாயமாக நம்மை வீட மேம்பட்டதாகத்தான் இருக்கும். நம் முன்னேர்கள் நாம் நினைப்பதைப் போல முட்டாள் அல்லது பிற்ப்போக்கு வாதிகள் அல்ல.இந்த பிணைப்பு உருவத்திற்க்கு வணங்குதல் வேண்டும் என்று கூறி வணங்கச் சொன்னார்கள். இந்த விசயத்தில் தான் ஒரு ஆச்சரியம் என்ன என்றால் குழந்தை பிறப்பை ஏற்ப்படுத்தும் ஆர் எச் பேக்டர்கள், மற்றும் டி.என்.ஏ, ஆர்,என் ஏ மூலக்கூறுகள் யாவும் இந்த சிலை வடிவில் தான் பிண்ணிப் பினைந்துள்ளன.
















இது மட்டும் அல்ல,முன்னேர்கள் தொலைநேக்கி போன்றவை இல்லாக் காலத்தில், குரு பெரிய கிரகம் என்றனர்,சனி நீல நிறமுடையவன் என்றனர், புதனுக்கு பச்சையும்,சூரியனுக்கும்,செவ்வாய்க்கும் சிவப்பையும் கொடுத்தனர். இராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் என்றனர். எதிர்புற இயக்கம் என்றனர். ஆனால் விஞ்ஞானம் இதை இப்போது உண்மை என்று கண்டுபிடித்தனர். சனி மந்தன் என்றும் மந்தமான கிரகம் என்றனர். ஆதுபோல ஆய்வாளர்களும் சனி ஒரு மந்த வாயுக்கள்,தூசுக்களால் சுற்றப் பட்டு நீல நிறமாக காட்சியளிக்கும் என்று அதன் படத்தையும் கொடுத்தனர். ஜீபிடர் பெரியது என்றும், செவ்வாய் சிவப்பு,சூரியன் நெருப்பு, புதன் கரும் பச்சை என படம் காட்டினர்.நெப்டீயூனும்,புளூட்டேவும் மற்ற கோள்களுக்கு எதிர் திசையில் சுற்றும் மறைவுக் கோள்கள் என்றார்கள். இது போன்ற ஒத்துமைகளைப் பார்க்கும் போது அவர்களின் அறிவு வியக்க வைக்கும். இல்லை நாம் நமது முன்னேர்கள் சொன்னதை இதனுடன் சம்பந்தப் படுத்தி ஒப்புமை கொள்கின்றேமா என்ற சந்தோகம் வரும். ஆனால் முன்னேர்கள் பல காலத்த்துக்கு முன்னரே இதை சொல்லி விட்டதால் இதை ஒப்புமை என்று சொல்ல முடியாது. பின்னர் எப்படிச் சாத்தியம் ஆகும்?, சிந்திப்போம், பின்னர் தீர்வும் காண்போம். தொடரும், நன்றி.

டிஸ்கி : வரும் ஞாயிறன்று சீனர்களின் புலிப் புத்தாண்டு பிறக்கின்றது. ஆதலால் எனக்கு அலுவலகம் வரும் செவ்வாய் வரை விடுமுறை. மீண்டும் உங்கள் அனைவரையும் புதன் அன்று சந்திக்கின்றேன். இனிய சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

Thursday, February 11, 2010

மஞ்சள் கிழங்கு பச்சடி (அ) சப்ஜி

முன் குறிப்பு : சமையல் பதிவுகள் போட்டு மிக நீண்ட நாட்கள் ஆகின்றன, ஆதலால் மீண்டும் ஒரு வித்தியாசமான சமையல் பதிவு. இந்தப் பதிவைப் படிப்பவர்கள், படித்துப் பாருங்கள்,ஆனா சமைத்துப் பார்க்காதீர்கள், சமைத்தாலும் இரங்க மணிக்குக் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுத்தால் முன்...பின் .... விளைவுகளுக்கு நான் கண்டிப்பாய்ப் பொறுப்பு அல்ல. (சும்மா ஒரு பில் டப்புதான் பயப்படாதீர்கள்.)

நான் திருப்போருரில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்த சமயம், என்னுடன் பணி புரிந்த பல இராஜஸ்தான் பணியாளர்கள்,மிக விரும்பி சமைத்துக் கொடுத்தது இது. நிறைய நெய் தடவப்பட்ட அவர்களின் சுக்கா ரொட்டிக்கு இது சரியான சப்ஜியாக அமைந்தது. சுவையும் அருமை. அதை நான் உங்களுக்குச் சொல்கின்றேன். நானும் இதை முதலில் கேள்விப்பட்ட போது, இதையா என்று ஆச்சரியப் பட்டேன். ஆனால் நன்றாக இருந்தது.
















நாம் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பானையில் கட்டி விட்டுத் தூக்கிப் போடும் பச்சை(இளம்) மஞ்சள் கிழங்குதான் இதில் முக்கிய அயிட்டம். இந்த பச்சை மஞ்சள் கிழங்கைப் பலர் தூக்கிப் போடுவார்கள்.சிலர் காய வைத்து அல்லது அப்படியே தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்துவார்கள். இந்த மஞ்சளில் தயிர்ப் பச்சடி மாதிரி செய்யும் சப்ஜிதான் இந்த பதிவு.பச்சை என்றால் காய வைக்காத மஞ்சள் கிழங்கு(நிறம் அல்ல)

தேவையான பொருட்கள் :

1.பச்சை அல்லது காயவைக்கதாத புதிய மஞ்சள் கிழங்கு 150 அல்லது 200 கிராம்,
2.பெரிய வெங்காயம் மூன்று,
3.தக்காளி மூன்று,
4.எண்ணெய் 5(அ)4 ஸ்பூன்,
5,சீரகம் ஒரு கைப் பிடி,
6.தாளிக்கும் பொருட்கள்,கறிவேப்பிலை.
7.வரமிளகாய்(அ)மிளகாய்ப் பொடி மூன்று (காரத்திற்க்கு ஏற்ப),
8.உப்பு (தேவைக்கு ஏற்ப),
9.தயிர் ஒரு கப்.
இதில் ஸ்பிரிங் ஆனியன் லீவ்ஸ்,பேபீ கார்ன், போன்றவை, பிரியப் படுவர்கள் ஒரு ரிச்சனஸ் ஆக சேர்க்கலாம்.

செய்முறை : முதலில் பச்சை (இளம்) மஞ்சள் கிழங்கைத் தோலுரித்துப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்,பின்னர் வெங்காயத்தைப் பச்சடிக்கு ஏற்றார்ப் போல நீளமாகவே அல்லது சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.பின்னர் தக்காளியை எட்டுத் துண்டங்கள் அல்லது பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயமும்,தக்காளியும் உங்களுக்கு எப்படி பிடிக்குமே அப்படி வதங்கும் வண்ணம் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு,சூடானதும் சிறிது கடுகு,வெள்ளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்,கருவேப்பிலை,மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் போட்டுத் தாளித்து,அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்,வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன், மஞ்சள் கிழங்கு துண்டுகளை எண்ணெய்யில் சிறிது வதங்க விடுங்கள்,இதில் தக்காளி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும். நல்லா வதக்கவும். எண்ணெய் மற்றும் தக்களி விடும் தண்ணீரில் மஞ்சள் கிழங்கை நல்லா வதக்க வேண்டும், இது நல்லா வதங்கி சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்துச் சூட்டில் சிறிது வேக விடுங்கள். தயிர் இல்லாமல் சப்ஜியாகச் சாப்பிடுவர்கள் இரண்டு ஸ்பூன் நெய் விட்டும் வதக்கலாம், சுவை,மணம் கிட்டும்.

இது அடுப்பின் சூட்டில் இருக்கும் போது, கப் தயிரில் சிறிது தண்ணீர் விட்டு தளர்க்கமாக செய்து கொள்ளுங்கள்.அதிக தண்ணீர் இல்லாமல் அதே சமயம் கெட்டியாக இல்லாமலும் இருக்கட்டும். கைப் பிடி சீரகத்தை இரு கைகளிலும் நல்லா திருகி அல்லது தேய்த்து அதன் மேல் நார் இருந்தால் ஊதி அப்புறப் படுத்தி விட்டு, தயிரில் போடவும். ஆறிய சப்ஜியை தயிரில் போட்டுக் கலந்தால் மஞ்சள் கிழங்கு பச்சடி ரெடீய்ய்ய்ய்ய்ய்.சுவைக்கு ஏற்றவாறு பச்சடியில் உப்புப் போட்டுக் கொள்ளுங்கள்.

இதை ரொட்டி, மற்றும் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். ஒரு சாப்பாட்டுத் தட்டின் அளவு இருக்கும் இராஜஸ்தான் சுக்கா ரொட்டியின் மீது இரண்டு ஸ்பூன் நெய் தடவி, சூடாக இதனுடன் தொட்டு சாப்பிட்டால் ஆலாதியாக இருக்கும். எனது நண்பர்கள் நாலு அல்லது ஜந்து ரொட்டிகளை பிய்த்துப் போட்டு அதனில் பச்சடியை கொட்டிப் பிசைந்து உண்பார்கள். என்னால் இரண்டு அல்லது மூன்று ரொட்டி சாப்பிடுவது சிரமம்.

பின் குறிப்பு : இந்த மஞ்சள் கிழங்கு மிகவும் சூடாண அயிட்டம்.அதாவது உடலுக்கு உஷ்ணம் என்று சொல்வார்கள்.அந்த உஷ்ணம் தணிக்கத்தான் நாம் தயிர், மற்றும் சீரகத்தைச் சேர்க்கின்றேம். இந்த கிழங்கு சப்ஜி அல்லது பச்சடி உடலின் உஷ்ணத்தையும், இரங்க மணிகளின் மூடையும் கிளப்பி விட வல்ல வயாக்கிரா பச்சடி. இப்ப எதுக்கும் முன் குறிப்பில் உள்ள கடைசி வரிகளைப் படித்துப் பார்த்து விட்டு, சமைப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
நன்றி.

Wednesday, February 10, 2010

நாயின் மீது நாய் வண்டி ஏற்றிய கதை

சாலைப் போக்குவரத்து பற்றிய தொடருக்கு சுசி அழைத்துள்ளார். நமக்கு இது பத்தி ஒன்னும் தெரியாது என்றாலும் தங்கை சொன்னா செய்து தான ஆகவேண்டும். ஆதலால் இந்தப் பதிவு. இது உங்களில் பலருக்கும் அனுபவம் இருக்கும்,ஆனாலும் எனது கருத்துக்களைச் சொல்கின்றேன். நம்ம கிட்ட காரு,பைக் எல்லாம் கிடையாது. இந்தியாவில் அதிகம் வசிக்கும் நடுத்தர வர்க்கத்து ஏழைகளில் நானும் ஒருவன். மாதச்சம்பளம் வாங்கி கணக்குப் பார்த்து செலவு செய்யும் வர்க்கம். சுருக்கமாக சொன்னால் அன்றாடம் காய்ச்சி. மாதத்தின் முதல் பதினைந்து நாள் நான் ஜதிராபாத் நிஜாம், மீதீ நாள் பரதேசி(பிச்சைக்காரனுங்க,சுசி ஒரு நூறு ரூபாய் இருக்குமா ஒன்னாம் தேதி தருகின்றேன் என்ற கட்சி). இதுதான் நம்ம லைப் ஸ்டைல். ஆனாலும் இந்தியாவில் இருக்கும் போது, என் அண்ணாவின் 1991 மாடல் பழைய கேபி 100 தான் நம்ம ஏரோப்பிளைன்ங்க. ரொம்ப அதிர்ஷ்டமான வண்டி என்னும் செண்டிமெண்ட் காரணமாக இன்னும் மாத்தாம வைச்சிருக்கோம். நான் முதலில் ஓட்டிப் பழகியதும் இந்த வண்டியில் தான். ஒரு முறை தவிர எப்போதும் இந்த வண்டி கீழ விழுந்தது இல்லை. பிரேக் அடிச்சா,அடித்த இடத்தில் அப்படியே நிற்க்கும். ஆனா பாருங்க நமக்கு எப்போதும் பிடித்தது,இப்போதும் போவது நடராஜா சர்வீஸ்தான்,அதுதாங்க கால் நடை.

எனக்கு நடப்பது ரொம்ப பிடிக்கும்,விட்டா இரண்டு, மூன்று கிலோமீட்டர் கூட நிற்காம நடப்பேன். அதுவும் எதாவது கற்பனை பண்ணிக் கொண்டு நடப்பதில் ஒரு சுகம்தான்.மத்த எல்லாரையும் வீட நடராஜ சர்வீஸ்ல போறவங்களுக்கு கொஞ்சம் சொளரியங்கள் அதிகம். சாலையில் பராக்குப் பார்த்துக் கொண்டு,கடை மற்றும் போற,வர்றவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஜாலியா போலாம்.எங்க வேணாலும் நின்னு,பானிபூரி,பேல்பூரி,மசால் கடலை,வேர்க்கடலை,உப்புக்கடலை,மாங்காய்,காரப்பொரி,சுண்டல்ன்னு எதுவேணா கொறித்துக் கொண்டு நிற்கலாம்,நடக்கலாம்.நான் சிறுவயதில் இருந்து தெருசுத்தி நல்ல அனுபவம் இருக்குங்க.அதுனால தான் எனக்கு மார்க்கெட்டிங் துறையில் வேலை கிடைத்த ஆரம்ப காலங்களில் கால்நடையாக (எருமை இல்லிங்க) சென்னை முழுதும் சுத்தி இருக்கங்க.மவுண்ட் ரோடு ஆரம்பம் சிம்சன் முதல் தேனாம்பேட்டை வரைக்கும் நடந்தே கஸ்டமர் கவர் பண்ணிய காலமும் உண்டு. தேனாம்பேட்டை,ஆழ்வார்பேட்டை,மயிலை,அடையார்,பெசண்ட நகர்.பாரிஸ் என சென்னையில் என் கால் படாத இடம் இல்லை. அண்ணா நகர்,அம்பத்துர் தொழில்பேட்டை,ஆவடி எல்லாம் சுத்தி இருக்கின்றேன்.ஆந்திராவில் ஜெடிமெட்லா,விஜயவாடா,பாண்டி, பெங்களுர்,கேரளாவில் பாலக்காடு,திருச்சூர்,எர்ணாகுளம், கொச்சின் என அனைத்து தொழிற்பேட்டைகளும் நான் நடந்த இடங்கள்.தமிழ் நாட்டில் திருச்சி,கோவை, மதுரை,தஞ்சை,திருநெல்வேலி,நாகர்கோவில் ஊட்டி என சுத்தாத ஊர்கள் இல்லை. எல்லாம் தொழில்முறைப் பயணத்துடன் இணைந்த கோவில்கள் பயணமும் ஆகும்.


அப்புறம் சில காலம் நான் என் நண்பன் டி.பி.நாயகம்(டூ வீலருக்கு டிரைவர் வச்ச ஆளு நான்) உடன் இணைந்து ஸ்பெண்டர் பிளஸ்ஸில் சென்னை முழுதும் சுத்திய அனுவம் உண்டு.அவனும் நல்லா பொறுமையா ஓட்டுவான்.என்ன ஒன்னு பக்கத்தில ஒரு பிகர் ஸ்கூட்டியில் போனா வண்டி தான வேகமா போக ஆரம்பிச்சுடும்.நானும் அவனைத் திட்டி நிதானத்துக்கு கொண்டு வருவேன்."அவன் நான் ஓட்டவில்லை,வண்டி அப்படி பழகிவிட்டது" எனக் கிண்டல் அடிப்பான்.இப்படி எத்திராஜ்,ஸ்டெல்லாமேரிஸ்,குயின்மேரிஸ் பெண்ணுக எல்லாருக்கும் எஸ்கார்டு டூட்டீ கூட பார்த்துருக்கேம். (எல்லாம் பழைய கதைடா பேராண்டி).

எனக்கு வேகமாக நடப்பது என்பது இயல்பான விஷயம்.பெரும்பாலும் நான் நடக்கும் போது செய்வது எல்லாம் அனிச்சை செயல்தான்.மனம் ஒரு இடத்திலும்,கால்கள் ஒரு இடத்திலும் இருக்கும். பல சமயங்களில் பழகிய முகங்கள் வந்தாலும், என்னைப் பார்த்துச் சிரித்தால் கூட,நானும் அவர்களின் முகத்தைப் பார்த்து இருப்பேன். ஆனால் சிந்தனை வேறு இடத்தில் இருப்பதால்,கவனத்தில் இல்லாது போய்விடுவேன்.வணக்கம் சொன்னாக் கூட கண்டுக்காம போகின்றாய் என்று நண்பர்களின் குறைபாட்டுக் ஆளானதும்,பின் என் நிலையைக் கூறியதும் சமாதானம் ஆனதும் உண்டு.என்னுடன் நடக்கும் நண்பர்கள் பலரும் என்னை அப்போதுக்கு அப்போ "ஓடாதட நில்லு" என்று கையைப் பிடித்து நிறுத்துவது உண்டு.தங்கமணி வந்தா பாவம், எப்படி நடப்பான்னு தெரியலை.பலர் உன் துணைவி பாவம் என்று கிண்டலடித்தும் உண்டு.பேசாம தங்கமணி கையைப் பிடித்துக் கொண்டு நடந்தா கொஞ்சம் மெதுவா நடப்பேன் என்று நினைக்கின்றேன்.சரிங்க விஷயத்துக்கு வருவேம்.


நடக்கும் போது என்னை மாதிரி இல்லாம,சாலையில் கவனம் தேவை.எதிரில் வருவர்களைப் பார்த்தும்,ஒதுங்கியும் கவனமாக நடக்க வேண்டும்.வேகமாக இல்லாமலும்,மெதுவாக இல்லாமலும்,மிதமான வேகத்தில் நடப்பது,இதயத்திற்க்கு நல்லது.சாலையைக் கடக்கும் போது குறிப்பாக சிக்னலில் கடப்பது மிகவும் நல்லது.இருபுறமும் கவனித்து வாகனங்கள் வந்தால் கடந்து செல்லும் வரை,அல்லது அதன் வேகத்தை அனுசரித்துக் கடப்பது மிகவும் நல்லது.பெரும்பாலும் வாகனங்களை முதலில் செல்லவிட்டுக் கடப்பது நன்மை பயக்கும். ரோட்டில் நடக்கும் போது இடதுபுறம் செல்வது நண்மை பயக்கும். செல்லும் இடம்,பாதை மற்றும் பயணிக்கும் இலக்கு ஆகியனவற்றில் கவனத்தில் கொள்வது நலம்.நடக்கும் போது எதாவது பிடித்த பாட்டை மனதுக்குள் ஹம் செய்து நடப்பது,நம் களைப்பைப் போக்கும். அதுக்காக சத்தமா பாடி தர்ம அடி வாங்கக் கூடாது.எனக்கு மெலோடியான சோகப் பாடல்களை ஹம் செய்து தனிமையான இரவு ரோட்டில் நடக்கப் பிடிக்கும். ஈராமான ரோஜவே,ஓராயிரம் பார்வையிலே,நான் பாடும் மொளன ராகம்,மன்றம் வந்த தென்றலுக்கு,நான் ஒரு இராசியில்லா ராஜா,வசந்த ஊஞ்சலில்லே(இரயில் பயணங்களில்) போன்ற மொலோடிப் பாடல்கள் தான் என் ஹம்மிங்கில் இடம் பெறும்.


இரண்டு சக்ர வாகனங்களில் பயணிக்கும் போது அத்தியாவசியமான காரணங்கள் இன்றி 60 கிலோமீட்டர் வேகத்திற்க்கு மேல் போகக் கூடாது.55 கிலோமீட்டர் வேகம் சரியானது.இது மைலேஜ் அளவையும்,வண்டியின் மீதான நமது கட்டுப்பாட்டையும் அதிகரிக்கும்.நான் கல்பாக்கத்தில் இருந்து திருப்பேரூர் சென்று வேலை பார்த்த போது,தினமும் கிழக்கு கடற்கரை சாலையில் முப்பது கிலோமீட்டர் பயணம் செய்வேன்.(போகவர 60) காலையில் அலுவலகம் செல்லும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும்,மாலையில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிப்பது வழக்கம்.ஒருமுறை எனக்கு இரண்டாம் சுற்று ஏழரை சனிதிசை ஆரம்பித்த போது,ஒரு தெரு நாய் குறுக்கில் வந்து, நாயின் மீது ஏறி கீழே விழுந்தேன்.வண்டியுடன் நானும் சில அடி தூரங்கள் இழுத்துச் செல்லப் பட்டேன்.என் அதிர்ஷ்ட வண்டி,அடி முழுவதையும் தான் வாங்கி என்னைக் காப்பாற்றியது.வண்டியில் பெட்ரோல் டாங்க் கவரில் வைத்து இருந்த ரெயின் கோட்,என் மார்பில் விழுந்த பலமான அடியைத் தாங்கியது.வண்டி சிராய்த்துக் கொண்டு போகும் போது நான் வண்டியின் மேல் படுத்த நிலையில் ஹாண்டில் பாரைக் கெட்டியாக பிடித்த நிலையில் பெரும் பாலும் இருந்தால் எனக்கு சிராய்ப்புக்கள் கம்மி. வண்டி சேப்டி கார்டு முற்றிலுமாக தேய்ந்து வளைந்து போனது.எனது பேண்ட் தேய்ந்து கிழிந்து நூலாகப் போனாலும் என் தொடையில் சிறிய சிராய்ப்புக்கு காயம்தான்.



கண்ணாடி, இண்டிகேட்டர்கள்,முகப்பு விளக்கு என அனைத்தும் நெறுங்கியது.எனது செருப்பு என் காலை விட்டு அகலாமல்,அது முற்றிலும் தேய்ந்து, பிரஷ் மாதிரி ஆனாலும்,என் கால் பாதத்தில் ஒரு அடி கூட படாமல் காப்பாற்றியது.பின்னாலும்,முன்னாலும் வாகனங்கள் வராமல் இருந்தது என் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும்.எல்லாம் வல்ல கடவுள் செயல் என்பதைக் காட்டிலும் வேறு என்ன சொல்ல முடியும்.நான் வண்டியை சரி செய்து வளைந்த ஹேண்டில் பாரை அதன் போக்கில் ஓட்டி, பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்குப் போனதும், என் நடுக்கம், மற்றும் வண்டியைப் பார்த்தவர் கேட்டார்,நீங்க அங்கயா விழுந்தீர்கள் என்றார்.நானும் ஆமாம் என்று சொல்ல,அவர் அங்க கடைக்காரர்கள் கோழிக்கழிவுகள் கொட்டுவதால் நாய்கள் தொல்லை என்றும் அந்த மாதத்தில் நான் ஏழாவது அள் என்றும், இரண்டு பேர் ஸ்பாட் அவுட், ஒருத்தன் கால் போயிவிட்டது.இரண்டு பேர் ஹாஸ்பிட்டலில் இருக்கின்றார்கள்.எனக்கு தெரிந்து கீழ விழுந்து,எழுந்து வந்து டீக்குடிப்பவர் நீங்கள் தான்.கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் என்றார்.


நானும் கடவுள் அன்றி வேறு என்ன என்றும், எல்லாம் நம்மைப் பெற்றவர்கள் செய்த புண்ணியம் என்றும் நினைத்துக் கொண்டேன்.வீடு சென்று குளித்ததும்,பிள்ளையார் கோவில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டேன். இரவு முழுதும் கொஞ்சம் இலோசான நெஞ்சு வலி மற்றும் தொடையில்,முழங்கையில்,முழங்காலில் இருந்த சிறிய சிராய்ப்புகளின் வலி இருந்தது.எனக்கு நமக்கே இவ்வளவு வலி இருக்கே, வயிற்றின் குறுக்கே ஏறிய அந்த வாயில்லா ஜீவன் என்ன செய்யும் என்று கவலை கொண்டேன். அப்போது அது எழுந்து ஓடினாலும்,உயிருடன் இருக்கோ இல்லையோ என்ற கவலையும் வேறு.கடவுளே நாயிக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். மறுனாள் வண்டி எல்லாம் சரி செய்தவுடன் விழுந்த இடத்தில் போய்ப் பார்த்தேன்.நாயைக் காணவில்லை,ஆக நாய் சாகவில்லை என்ற நிம்மதியில் வீடு வந்தேன். அதற்க்கு மறுனாள் அலுவலகம் செல்லும் போது நாய் கொஞ்சம் விந்தி விந்தி நடப்பது கண்டு வேதனை அடைந்தேன். மறுவாரம் நாய் முழுக்க குணம் அடைந்தவுடன்,அப்பாடா ரெண்டு நாய்க்கும் ஒன்றும் ஆகவில்லை என்று திருப்திப் பட்டேன்.அதிலிருந்து நான் காலை அலுவலகம் செல்லும் போது 55 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும்,மாலை வீடு திரும்பும் போது 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இரசித்து நிதானமாக ஓட்ட ஆரம்பித்தேன்.உங்களுக்கு இப்படிப்பட்ட அனுவபம் எல்லாம் வேண்டாம்.எப்போதும் உங்கள் வண்டியை உங்களின் முழுகட்டுப்பாட்டு வேகம் என்னவே, அதில் சாலை விதிகளை அனுசரித்து ஓட்டுங்கள். நன்றி.


டிஸ்கி : நான் ஊர் சுத்தின அனுபவங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் பல பதிவுகள் வரும். அது வேணாங்க. இதற்க்கு அப்புறம் நான் வண்டியை மிதவேகத்தில் ஓட்டிய போது இரண்டு மூன்று முறைகள், நாகப் பாம்பு, சாரைப் பாம்பு,கண்ணாடி விரியன் மற்றும் ஒரு ஆட்டுக் குட்டி வந்த போது வண்டியை நிறுத்தி,அவற்றின் மீது ஏற்றாமல் ஓட்டி வந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 9, 2010

பிள்ளையாரும்,சனியீஸ்வரரும் ஒரு கதை


பார்வதி தான் குளிக்கப் போறதுக்காக மண்ணுல ஒரு உருவத்தை செய்து அதற்க்கு உயிரைக் கொடுத்து, பாதுகாப்பாக நிறுத்தியதாகவும், ஈஸ்வரன் வந்த போது அவரை அனுமதிக்காமல் சண்டை போட்டதால் அவரின் தலை போனதாகவும், பின்னர் அவருக்கு யானைத் தலை வந்ததாக ஒரு கதை உள்ளது. ஆனால் இந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதும், பார்வதி தன் கனவனுக்குத் தெரியாமல் அல்லது அனுமதி பெறாமல் ஒரு பாலகன் அல்லது சிருஷ்டியில் இறங்குவாள் என்பதும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் பாட்டி சொன்னதும், பின்னாளில் நான் ஒரு ஆண்டு மலரில் படித்த, இந்த சுவையான கதையை உங்களிடம் எனது நடையில் பகிர்ந்து கொள்கின்றேன்.

பிள்ளையார், பார்வதி பரமேஸ்வரனுக்கு பிறந்த குழந்தை. (எந்த ஹாஸ்ப்பிடல்?, நார்மலா?,சிஸ்ஸேரியன்னா? எல்லாம் கேக்கக்கூடாது). ஆதலால் மிக அழகாகச் செக்கச் சிவப்புடன் குண்டாக, கொழு,கொழு என்று இருப்பார். பார்வதின் செல்லக்குழந்தை என்பதால் அந்தம்மாவும் நியூட்ரமுல், செரல்லாக்,ஹார்லிக்ஸ் காம்ப்ளான் எல்லாம் கலந்து கொடுத்து அழகா,குண்டாக வளர்த்து இருந்தார்.பார்த்தால் பரவசமும்,ஆனந்தம் கொள்ள வைக்கும் அழகு குழந்தை. ஆதாலால் பார்வதியும்,பிள்ளையைப் பார்த்து பார்த்துப் பூரித்துப் போவாள். ஒரு வருடம் முடிந்து கையிலையில் பிள்ளையாருக்கு ஆயுஸ்ஹேமம் மற்றும் விழா நடந்தது. அனைத்து மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கலந்து சிறப்பித்த விழா அது. அதில் சூரியனின் மனைவியும், நிழலுக்கு தேவதையும் ஆன சாயாவும், அவர்களின் பிள்ளை சனியும் கலந்து கொண்டார். சனி சூரியன் புத்திரன் ஆனதால் அவரிடம் ஒரு விசேச குணம் இருந்தது. அது என்ன என்றால் அவர் யாரையாது நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தால் அவர் தலை வெடித்துச் சிதறிவிடும். ஆதலால் சனி எப்போது தலை குனிந்து இருப்பார். சனியின் பார்வை அவ்வளவு பவர். (ஆதலால் தான் நவக்கிரங்களில் சனியை மட்டும் பக்க வாட்டில் நின்று வழிபட வேண்டும். நேருக்கு நேர் நின்று வணங்குதல் கூடாது). விழா நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போது பார்வதிக்கு பெருமை தாங்கவில்லை. அந்த பெருமையின் காரணமாய் கொஞ்சம் ஆணவமும் தலைதூக்கியது.


சனிக்கு குழந்தையைப் பார்க்க ஆர்வம்,ஆனால் தன் சக்தியின் காரணமாக தலை குனிந்தே இருந்தார். ஆனால் பார்வதி காரணம் கேட்ட போது சாயா,சனியின் பவரைப் பற்றிக் கொஞ்சம் பெருமையாக சொல்லி விட்டாள். இது பார்வதியின் ஆணவத்தை மேலும் கூட்டியது. பார்வதி கொஞ்சம் கர்வத்துடன், சாயா பிள்ளையார் எங்களின் புதல்வன். அகில உலகத்தையும் கட்டிக் காக்கும் சர்வேஸ்வரனின் புதல்வன். ஆகையால் சனியின் சக்தி அவரை ஒன்றும் செய்யாது, ஆதலால் உன் பிள்ளையைப் பார்க்கச் சொல். ஒன்றும் ஆகாது என்றாள் கர்வத்துடன்.ஆனால் சாயா மறுக்க, பார்வதி பிடிவாதமாக இருந்தாள். அவளுக்கு ஈஸ்வரன் மற்றும் தன் சக்தியின் குழந்தை ஆதாலால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை. ஏற்கனவே குழந்தையைப் பார்க்கும் ஆவலில் இருந்த சனியும் குழந்தைதான். ஆசையின் காரணமாக சனி நிமிர்ந்து பார்த்தார். பிள்ளையாரின் தலை வெடித்து சிதறியது. இதைப் பார்த்த பார்வதி செய்வது அறியாது புலம்பினாள். விழா வீடு, இழவு வீடாகியது. நடந்த சம்பவங்களைப் பார்த்த ஈஸ்வரன் வடக்கில் தலை வைத்துப் படுத்து இருந்த யானையின் தலையைக் கொய்து பொருத்தினார். பிள்ளையாருக்கு உயிர் வந்தது. யானை முகத்துடன் மனித உடலுடன் விளங்கினார். அழகாய் இருந்த குழந்தை இப்படி போனதில் பார்வதிக்கு எல்லையற்ற கோபம் பெருகியது. தன் கோபம் மேலிட சனிக்கு சாபம் தந்தாள்.

பார்வதி பெரும் சினத்துடன் " சனியின் பார்வை மந்தமாக போகக் கடவுது. சனியைக் கண்ட மக்கள் பயப்படக் கடவது, என்றும். என் பிள்ளை அவலட்சனமாக இருப்பது போல சனியின் கால்களும் முடமாக போகட்டும் என்றாள். அவளின் கோபமும்,சாபமும் கண்ட சாயா. தான் பலமுறை சொல்லியும் கேளாது பார்க்கச் சொன்னது நீதானே. இப்போது சாபம் கொடுத்தால் எப்படி என்று கோபமுற்ற அவள் பிள்ளையாரை மனிதர்கள் ஆற்று மேட்டிலும், மரத்தடியிலும் காட்டிலும் வைத்து வணங்கட்டும் என்று சாபமிட்டாள். பெண்களின் சண்டை, குழாயடிச் சண்டையானது. இதைக் கண்ணுற்ற சிவபெருமான் இருவரையும் சாந்தப் படுத்தினார். பின்னர் பிள்ளையாரின் தலை மாறியது விதியின் வசத்தால் தான். பிள்ளையார் கஜமுகாசூரன் மற்றும் மேஷிகா சூரனை வதம் செய்யத்தான் இந்த உருவம் கிடைத்தது என்றும் கூறி அவர்களை சமாதனப் படுத்த வரங்களைக் கொடுத்தார். பிள்ளையாரின் வடிவம், நீங்கள் நினைப்பது போல அவலட்சணம் அல்ல. அது ஓம் என்னும் பிரணவ வடிவம் ஆகும், என்றும் இன்றில் இருந்து பிள்ளையாரை மக்கள் விக்கினேஸ்வரன் என்று அழைப்பார்கள். மக்களின் விக்கினங்களைப் போக்கும் தலைவன் என்பதால் விக்கினேஸ்வரன் என்னும் ஈஸ்வரப் பட்டத்தைக் கொடுத்தார். இவருக்கு எல்லா முதல் வழிபாடும், முதல் மரியாதையும் கிடைக்கட்டும். பிள்ளையாரின் பூஜைகள் நடக்காமல் ஒரு வழிபாடு நடந்தால் அதில் பலன் இல்லை என்றும் வரம் கொடுத்தார்.

சாயா மற்றும் சனியைச் சமாதனப் படுத்தும் வண்ணம், இது உலக மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு அமைந்த சாபம் ஆகும். இனி உன் பார்வை படும் பக்தர்கள் பலவித சோதனைகளுக்கு ஆளானலும், முடிவில் எண்ணற்ற பயனை அடைவார்கள். மும்மூர்த்திகள், தேவர்கள்,கிங்கரகர்கள், அனைவரும் உன் பார்வையில் இருந்து தப்ப முடியாது. பிரம்மச்சரியம் காக்கும் முனிவர்கள் தவிர அனைவரும் உன் பார்வைக்குக் கட்டுப்பட்டவர்கள். இனி நீ எனக்கு சமமாக சனியீஸ்வரன் என்று அழைக்கப் படுவாய் என்றும். சனியை தன் ஆலயத்தில் வடக்குப் பக்கம் அல்லது தன் இடப்புறம் அமர்ந்து இருப்பார். என் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சனியை வணங்கிய பின்னர் என்னை வணங்கிணால் தான் முழுப்பயனும் அடைவார்கள் என்று கூறி வரங்கள் தந்தார். சமாதானம் அடைந்த சனியும், பிள்ளையாரைப் போற்றி, என் பார்வை ஏற்கனவே தங்களைப் பாதித்து விட்டதால் இனி என் பார்வை உங்களை ஒன்றும் செய்யாது. தங்களை வணங்கும் பக்தர்களுக்கும், எனது பார்வையின் கடுமை குறையும் என்று வரம் அளித்தார். விழா இனிது நிறைவுற்று அனைவரும் சாப்பிடச் (சுவையான சுவை வீட்டிற்க்கா அல்லது மேனாக சத்தியா வீட்டிற்க்கா எனக் கேக்கக் கூடாது)சென்றனர். நன்றி.

டிஸ்கி: இந்திரனின் வஜ்ராயுதத்தால் அடிபட்ட அனுமனை எடுத்துக் கொண்டு வாயுபகவான் ஒரு குகையில் முடங்கிய போது, சனி இதே வரத்தை அனுமாருக்கும், என் பார்வை ஒரு முறை மட்டும் தான் உன்னைத் தீண்டும், என்றும் உன்னை வணங்கும் பக்தர்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் எனவும் வரம் அளித்தார். சனியின் பார்வையின் போது, சனி பகவான் அனுமாரை வணங்கி, தான் பிடிக்கும் காலம் வந்து விட்டது எனவும், எனது பார்வை எங்கு பார்க்கட்டும் என்ற போது அனுமார், குரங்குக்கு வால் தான் அழகு. நீ எனது வாலைப் பார் என்றார். அப்போதுதான் அவரின் வாலில் தீ வைத்து இலங்கை எரிந்தது. சனியின் பார்வை பெற்ற வாலும் கருகியது. நன்றி. ஈஸ்வரன் என்பது கடவுள் அல்ல அது தலைவர் என்று பொருள் படும் பட்டம் இது, விக்னேஸ்வரன், சனியீஸ்வரன், தட்சினாமூர்த்திஸ்வர், இராவனேஸ்வரன்,முனிஸ்வரன் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டது.