Tuesday, February 9, 2010

பிள்ளையாரும்,சனியீஸ்வரரும் ஒரு கதை


பார்வதி தான் குளிக்கப் போறதுக்காக மண்ணுல ஒரு உருவத்தை செய்து அதற்க்கு உயிரைக் கொடுத்து, பாதுகாப்பாக நிறுத்தியதாகவும், ஈஸ்வரன் வந்த போது அவரை அனுமதிக்காமல் சண்டை போட்டதால் அவரின் தலை போனதாகவும், பின்னர் அவருக்கு யானைத் தலை வந்ததாக ஒரு கதை உள்ளது. ஆனால் இந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதும், பார்வதி தன் கனவனுக்குத் தெரியாமல் அல்லது அனுமதி பெறாமல் ஒரு பாலகன் அல்லது சிருஷ்டியில் இறங்குவாள் என்பதும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் பாட்டி சொன்னதும், பின்னாளில் நான் ஒரு ஆண்டு மலரில் படித்த, இந்த சுவையான கதையை உங்களிடம் எனது நடையில் பகிர்ந்து கொள்கின்றேன்.

பிள்ளையார், பார்வதி பரமேஸ்வரனுக்கு பிறந்த குழந்தை. (எந்த ஹாஸ்ப்பிடல்?, நார்மலா?,சிஸ்ஸேரியன்னா? எல்லாம் கேக்கக்கூடாது). ஆதலால் மிக அழகாகச் செக்கச் சிவப்புடன் குண்டாக, கொழு,கொழு என்று இருப்பார். பார்வதின் செல்லக்குழந்தை என்பதால் அந்தம்மாவும் நியூட்ரமுல், செரல்லாக்,ஹார்லிக்ஸ் காம்ப்ளான் எல்லாம் கலந்து கொடுத்து அழகா,குண்டாக வளர்த்து இருந்தார்.பார்த்தால் பரவசமும்,ஆனந்தம் கொள்ள வைக்கும் அழகு குழந்தை. ஆதாலால் பார்வதியும்,பிள்ளையைப் பார்த்து பார்த்துப் பூரித்துப் போவாள். ஒரு வருடம் முடிந்து கையிலையில் பிள்ளையாருக்கு ஆயுஸ்ஹேமம் மற்றும் விழா நடந்தது. அனைத்து மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கலந்து சிறப்பித்த விழா அது. அதில் சூரியனின் மனைவியும், நிழலுக்கு தேவதையும் ஆன சாயாவும், அவர்களின் பிள்ளை சனியும் கலந்து கொண்டார். சனி சூரியன் புத்திரன் ஆனதால் அவரிடம் ஒரு விசேச குணம் இருந்தது. அது என்ன என்றால் அவர் யாரையாது நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தால் அவர் தலை வெடித்துச் சிதறிவிடும். ஆதலால் சனி எப்போது தலை குனிந்து இருப்பார். சனியின் பார்வை அவ்வளவு பவர். (ஆதலால் தான் நவக்கிரங்களில் சனியை மட்டும் பக்க வாட்டில் நின்று வழிபட வேண்டும். நேருக்கு நேர் நின்று வணங்குதல் கூடாது). விழா நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போது பார்வதிக்கு பெருமை தாங்கவில்லை. அந்த பெருமையின் காரணமாய் கொஞ்சம் ஆணவமும் தலைதூக்கியது.


சனிக்கு குழந்தையைப் பார்க்க ஆர்வம்,ஆனால் தன் சக்தியின் காரணமாக தலை குனிந்தே இருந்தார். ஆனால் பார்வதி காரணம் கேட்ட போது சாயா,சனியின் பவரைப் பற்றிக் கொஞ்சம் பெருமையாக சொல்லி விட்டாள். இது பார்வதியின் ஆணவத்தை மேலும் கூட்டியது. பார்வதி கொஞ்சம் கர்வத்துடன், சாயா பிள்ளையார் எங்களின் புதல்வன். அகில உலகத்தையும் கட்டிக் காக்கும் சர்வேஸ்வரனின் புதல்வன். ஆகையால் சனியின் சக்தி அவரை ஒன்றும் செய்யாது, ஆதலால் உன் பிள்ளையைப் பார்க்கச் சொல். ஒன்றும் ஆகாது என்றாள் கர்வத்துடன்.ஆனால் சாயா மறுக்க, பார்வதி பிடிவாதமாக இருந்தாள். அவளுக்கு ஈஸ்வரன் மற்றும் தன் சக்தியின் குழந்தை ஆதாலால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை. ஏற்கனவே குழந்தையைப் பார்க்கும் ஆவலில் இருந்த சனியும் குழந்தைதான். ஆசையின் காரணமாக சனி நிமிர்ந்து பார்த்தார். பிள்ளையாரின் தலை வெடித்து சிதறியது. இதைப் பார்த்த பார்வதி செய்வது அறியாது புலம்பினாள். விழா வீடு, இழவு வீடாகியது. நடந்த சம்பவங்களைப் பார்த்த ஈஸ்வரன் வடக்கில் தலை வைத்துப் படுத்து இருந்த யானையின் தலையைக் கொய்து பொருத்தினார். பிள்ளையாருக்கு உயிர் வந்தது. யானை முகத்துடன் மனித உடலுடன் விளங்கினார். அழகாய் இருந்த குழந்தை இப்படி போனதில் பார்வதிக்கு எல்லையற்ற கோபம் பெருகியது. தன் கோபம் மேலிட சனிக்கு சாபம் தந்தாள்.

பார்வதி பெரும் சினத்துடன் " சனியின் பார்வை மந்தமாக போகக் கடவுது. சனியைக் கண்ட மக்கள் பயப்படக் கடவது, என்றும். என் பிள்ளை அவலட்சனமாக இருப்பது போல சனியின் கால்களும் முடமாக போகட்டும் என்றாள். அவளின் கோபமும்,சாபமும் கண்ட சாயா. தான் பலமுறை சொல்லியும் கேளாது பார்க்கச் சொன்னது நீதானே. இப்போது சாபம் கொடுத்தால் எப்படி என்று கோபமுற்ற அவள் பிள்ளையாரை மனிதர்கள் ஆற்று மேட்டிலும், மரத்தடியிலும் காட்டிலும் வைத்து வணங்கட்டும் என்று சாபமிட்டாள். பெண்களின் சண்டை, குழாயடிச் சண்டையானது. இதைக் கண்ணுற்ற சிவபெருமான் இருவரையும் சாந்தப் படுத்தினார். பின்னர் பிள்ளையாரின் தலை மாறியது விதியின் வசத்தால் தான். பிள்ளையார் கஜமுகாசூரன் மற்றும் மேஷிகா சூரனை வதம் செய்யத்தான் இந்த உருவம் கிடைத்தது என்றும் கூறி அவர்களை சமாதனப் படுத்த வரங்களைக் கொடுத்தார். பிள்ளையாரின் வடிவம், நீங்கள் நினைப்பது போல அவலட்சணம் அல்ல. அது ஓம் என்னும் பிரணவ வடிவம் ஆகும், என்றும் இன்றில் இருந்து பிள்ளையாரை மக்கள் விக்கினேஸ்வரன் என்று அழைப்பார்கள். மக்களின் விக்கினங்களைப் போக்கும் தலைவன் என்பதால் விக்கினேஸ்வரன் என்னும் ஈஸ்வரப் பட்டத்தைக் கொடுத்தார். இவருக்கு எல்லா முதல் வழிபாடும், முதல் மரியாதையும் கிடைக்கட்டும். பிள்ளையாரின் பூஜைகள் நடக்காமல் ஒரு வழிபாடு நடந்தால் அதில் பலன் இல்லை என்றும் வரம் கொடுத்தார்.

சாயா மற்றும் சனியைச் சமாதனப் படுத்தும் வண்ணம், இது உலக மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு அமைந்த சாபம் ஆகும். இனி உன் பார்வை படும் பக்தர்கள் பலவித சோதனைகளுக்கு ஆளானலும், முடிவில் எண்ணற்ற பயனை அடைவார்கள். மும்மூர்த்திகள், தேவர்கள்,கிங்கரகர்கள், அனைவரும் உன் பார்வையில் இருந்து தப்ப முடியாது. பிரம்மச்சரியம் காக்கும் முனிவர்கள் தவிர அனைவரும் உன் பார்வைக்குக் கட்டுப்பட்டவர்கள். இனி நீ எனக்கு சமமாக சனியீஸ்வரன் என்று அழைக்கப் படுவாய் என்றும். சனியை தன் ஆலயத்தில் வடக்குப் பக்கம் அல்லது தன் இடப்புறம் அமர்ந்து இருப்பார். என் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சனியை வணங்கிய பின்னர் என்னை வணங்கிணால் தான் முழுப்பயனும் அடைவார்கள் என்று கூறி வரங்கள் தந்தார். சமாதானம் அடைந்த சனியும், பிள்ளையாரைப் போற்றி, என் பார்வை ஏற்கனவே தங்களைப் பாதித்து விட்டதால் இனி என் பார்வை உங்களை ஒன்றும் செய்யாது. தங்களை வணங்கும் பக்தர்களுக்கும், எனது பார்வையின் கடுமை குறையும் என்று வரம் அளித்தார். விழா இனிது நிறைவுற்று அனைவரும் சாப்பிடச் (சுவையான சுவை வீட்டிற்க்கா அல்லது மேனாக சத்தியா வீட்டிற்க்கா எனக் கேக்கக் கூடாது)சென்றனர். நன்றி.

டிஸ்கி: இந்திரனின் வஜ்ராயுதத்தால் அடிபட்ட அனுமனை எடுத்துக் கொண்டு வாயுபகவான் ஒரு குகையில் முடங்கிய போது, சனி இதே வரத்தை அனுமாருக்கும், என் பார்வை ஒரு முறை மட்டும் தான் உன்னைத் தீண்டும், என்றும் உன்னை வணங்கும் பக்தர்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் எனவும் வரம் அளித்தார். சனியின் பார்வையின் போது, சனி பகவான் அனுமாரை வணங்கி, தான் பிடிக்கும் காலம் வந்து விட்டது எனவும், எனது பார்வை எங்கு பார்க்கட்டும் என்ற போது அனுமார், குரங்குக்கு வால் தான் அழகு. நீ எனது வாலைப் பார் என்றார். அப்போதுதான் அவரின் வாலில் தீ வைத்து இலங்கை எரிந்தது. சனியின் பார்வை பெற்ற வாலும் கருகியது. நன்றி. ஈஸ்வரன் என்பது கடவுள் அல்ல அது தலைவர் என்று பொருள் படும் பட்டம் இது, விக்னேஸ்வரன், சனியீஸ்வரன், தட்சினாமூர்த்திஸ்வர், இராவனேஸ்வரன்,முனிஸ்வரன் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டது.

8 comments:

  1. ஈஸ்வரன் என்பது கடவுள் அல்ல அது தலைவர் என்று பொருள் படும் பட்டம் இது, விக்னேஸ்வரன், சனியீஸ்வரன், தட்சினாமூர்த்திஸ்வர், இராவனேஸ்வரன்,முனிஸ்வரன் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டது.

    ............. அடேங்கப்பா. தகவல் ஒவ்வொன்றும் ஆச்சர்ய பட வைக்குது, அண்ணாச்சி.

    ReplyDelete
  2. //தங்களை வணங்கும் பக்தர்களுக்கும், எனது பார்வையின் கடுமை குறையும் என்று வரம் அளித்தார். விழா இனிது நிறைவுற்று அனைவரும் சாப்பிடச் (சுவையான சுவை வீட்டிற்க்கா அல்லது மேனாக சத்தியா வீட்டிற்க்கா எனக் கேக்கக் கூடாது)சென்றனர். நன்றி. // வாங்க எல்லோரும் எங்க வீட்டுக்கு...

    இவ்வளவு இருக்கா..தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா!!

    ReplyDelete
  3. தெரியாத கதை அண்ணா.. நன்றி..

    ReplyDelete
  4. ஏற்கனவே படிச்சதா இருந்தாலும் நல்லா இருக்கு அருமையான பதிவு

    ReplyDelete
  5. அருமை அண்ணா..

    கேட்ட கதைதான்னாலும் நீங்க உங்க பாணியில வித்யாசமா சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
  6. நன்றி சித்ரா,
    நன்றி மேனகா சத்தியா,கண்டிப்பா ஒரு நாள் சாப்பிட வருகின்றேம், ஜோடியா....
    நன்றி திவ்யாஹரி,
    நன்றி சதீஷ்குமார்,
    நன்றி ஜெய்லானி,
    நன்றி சுசி,
    இப்ப எனக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை,நான் எது சொன்னாலும் அது தவறாக புரியப்படுகின்றது. நான் சொல்லும் விதம் சரியில்லையா? அல்லது என்னைப் பற்றி மற்றவர்கள் புரிந்துணர்தல் சரியில்லையா? எனக் குழப்பத்தில் அடக்கி வாசிக்கின்றேன். ஆதலால் சக பதிவர்களின் விளையாட்டை கொஞ்சம் நிறுத்தி வைக்கின்றேன். பின்னால் கண்டிப்பாக வெளியிடுகின்றேன். நன்றி.

    ReplyDelete
  7. ஜோடியா வாங்க,எதிர்ப்பார்க்கிறோம் அண்ணா....

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.