Tuesday, December 1, 2009

அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 9


தனியாளாக காட்டுக்குள் மாட்டிக் கொண்டதும், கத்தித் தவித்ததும், பின் என் கண்ணில் சிறிது நீர் முட்ட ஆரம்பித்து விட்டது. (போன தடவை வந்த போதும், இந்த அண்ணா பேச்சுக் கேக்காம ஒரு சிக்கலில் மாட்டினேன்). இந்தத் தடவை ஏடாகூடமாக மாட்டினேன். என்று நினைத்து வருந்திப் பின் நான் சத்தமாக, சரண கோசம் போடத் துவங்கினேன். மூன்று முறை நான் சரணமிட்டு, நாலாவது முறை குரல் கொடுக்கப் போன போது, பளிர் என்று எரிந்தது ஒரு டார்ச் லைட். ஒருவர் கறுப்பாக ஆறடி உயரத்தில், தாட்டியாக ஒரு சாமி, கையில் டார்ச் லைட்டுடன் மாலைக் கடன் கழிக்க ஒதுங்கியவர் போல நான் நின்ற இடத்தில் இருந்து, அருகில் ஒரு மேட்டின் மீது நின்றார். அவர் என்னை நோக்கி, " சாமி அங்க காட்டுக்குள்ள என்ன பண்ணறிங்க " என்றார் . நான் கலங்கிய குரலில்,சாமி நான் என்று ஆரம்பித்து விசயத்தைச் சொன்னேன். அதற்கு அவர் அது முட்டுத் தடம்(பாதை முடியும்), இப்படி மேலே வாங்க" என்றார். நானும் அங்க இருந்து மேட்டின் மீது சென்றேன். பின் அவர் "இங்க பாதை தெரியுது பாருங்க, இதுல போங்க, நான் டார்ச் அடிக்கின்றேன்" என்றார். நான் "சரி சாமி" என்று கூறிவிட்டு அவர் காட்டிய தடத்தில் இறங்கி ஓட ஆராம்பித்தேன். மனதுக்குள் சரணம் அய்யப்பா என்று கூறிக் கொண்டே வளைந்து,வளைந்து இறங்கும் அந்தக் காட்டுத்தடத்தில் ஓடி இறங்கினேன். லைட் வெளிச்சமும் என்னுடன் வந்தது. பின்னர் காட்டின் அடர்த்தியும் குறைந்து, மாலை மங்கிய வெளிச்சமும், பம்பையாறும் என் கண்ணில் பட்டது. நான் உடனே சுறு சுறுப்பாக "சாமி நான் வந்துட்டேன், போதும், ரொம்ப நன்றி" என்று கூற வாய் திறந்து திரும்பினேன். அங்கு மேடு தெரியவில்லை. அடர்த்தியான காடுதான் தெரிந்தது. அங்கு யாரும் இல்லை. நான் ஆச்சரியப் பட்டாலும், அப்போது நான் எந்த சிந்தனையும் இல்லாமல், இன்னமும் ஒரு மணி நேரத்தில் இங்கு யானைகள் வந்து விடும், ஆதலால் அதற்குள் நாம் நம் கூட்டத்தினருடன் இணைய வேண்டும் என ஓடினேன். பம்பையாற்றில் இறங்கிக் கடந்து பெரியானை வட்டத்தில் விரிக்குச் சிறிது தூரம் சென்றவுடந்தான் என் சுய அறிவு, பயம் நீங்கி சிந்திக்க ஆரம்பித்தது. அது :

1.வந்த சாமி ஒதுங்க வந்த சாமியாக இருந்தால், நான் பத்து நிமிஷமாக கத்தியும் வராதவர், மூன்று முறை சரணம் கூப்பிட்டவுடன் ஏன் வரவேண்டும்?.

2. அங்கு தடத்தின் முன்னாலேயே ஒதுங்க இடம் இருக்கும்போது அவர் ஏன் பாதிக்காடு வரை வந்தார்?

3.மேட்டின் மீது நின்று டார்ச் லைட் அடித்தாலும் அது ஒரு வளைவு வரைதான் வரவேண்டும், பின்னர் அது மரக் கூட்டத்தில் மறைத்து விடும். அது எப்படி நான் வளைந்து வளைந்து இறங்கும் போது சூரிய ஒளி கூட நுழைய முடியாத காட்டில் என்னுடன் எப்படி வந்தது?.

4. அப்படியே மேட்டில் இருந்து டார்ச் அடித்தாலும், நான் திரும்பி நன்றி சொல்லும் ஒரு செகண்டில் அவர் மேட்டில் இருந்து போய்விட முடியுமா. மேடு என் கண்களுக்குத் தெரியாமல் மரங்கள் மறைக்கும் போது, விளக்கின் ஒளி மட்டும் எப்படி என்னுடன் வந்தது?.

இப்படி எனது சிந்தனைகளுடன் நான் யோசிக்கும் போது, அந்த அய்யனின் காவல் தெய்வம் கருப்பு சாமிதான் என்னைக் காப்பாத்தினார் என்பதைத் தவிர வேறு என்ன சிந்திக்க முடியும். (நீங்களும் யோசித்து என்ன தோனுகின்றதோ அதைப் பின்னூட்டம் போடுங்கள்).அந்த ஆபத்பாந்தவன் அய்யன் அரிஹரசுதன் தன்னை நம்பி வரும் பக்தரை என்றும் கைவிட்டதில்லை.

சென்ற முறை நாங்கள் மலைக்கு வந்த போதும், இந்த அண்ணன் என்னைப் பெரியானை வட்டத்திற்கு வந்தவுடன், கிளம்பு நீலி மலைக்குப் போகலாம் என்றான். நான் இப்பதான் கரிமலை இறங்கி வந்துருக்கேம், ஒரு மணி நேரம் கழித்துப் போகலாம் என்றேன். அவன் "பக்தர் கூட்டம் வந்துவிடும், போவது சிரமம் வா அங்க போய் உக்காந்து ரெஸ்ட் எடு" என்றான். நான் "என்னால முடியாது நீ போ நான் பின்னால வருகின்றேன்" என்றேன். அவனும் சரி என்று கூறிவிட்டுப் போய் விட்டான். நான் கொஞ்சம் என் தோள் பையைத் தலைக்கு வைத்து படுத்தவன் நல்லா தூங்கி விட்டேன். மாலை ஒரு சாமி என்னை எழுப்பி, "என்ன சாமி ஜோதி தெரியப் போகுது நீங்க பார்க்கலையா என்றார். நான் அலறிப் புடைத்து எழுந்து, சாமி இது முதல் வருசம் ஜோதி பார்க்கனும் என்றேன்.அவர் உடனே எழுந்து பம்பைக்குப் போ சாமி என்றார். அவர் சொன்னது சொன்னது பம்பையாறு, நான் நினைத்துக் கொண்டது பம்பைக் கரை. நான் ஓடத் தொடங்கினேன். சிறுயானை வட்டம் வந்துருப்பேன், அதற்க்குள் அங்கு சிலர் கூட்டமாக,பரபரப்பாக நின்று இருந்தனர். நானும் அவர்களுடன் நின்று மலை உச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். திடிர் என்று சாமியே சரணம் அய்யப்பா என்ற கோசம், முதல் முறை ஜோதி தெரிந்து விட்டது, எனக்கு தெரியவில்லை, மரம் மறைக்க, எனக்கு உயரம் பத்த வில்லை, நான் கலங்கி அப்படியும், இப்படியும் ஆடி பார்க்க, இரண்டாம் முறை சரண கோசம் எழுந்தது, நானும் பார்க்க எனக்கு மலை மேடுதான் தெரிந்தது, ஜோதி தெரியவில்லை. நான் கலங்கிப் போய் அய்யப்பா எனக் கூறி, எம்பி, எம்பி நின்றேன். மூன்றாவது முறை சரண கோசம் எழவும், என் இடுப்பு இரண்டையும் முரட்டுத்தனமாக பிடித்துத் தூக்கி," பாரு சாமி" என்றார் ஒருவர். நான் மூன்றாம் முறையாக தெரிந்த மூன்றாவது அந்த ஜோதிச் சுடரைக் ஒரு வினாடி மட்டும் பார்த்தேன். சுடர் மறைய அந்த கரம் என்னை இறக்கி விட்டது. நான் "ரொம்ப நன்றி சாமி, நீங்க மட்டும் என்னைத் தூக்க வில்லை என்றால் எனக்கு ஜோதி தரிசனம் தெரிஞ்சுருக்காது" என்றேன்,விழியில் சிறிது நீர் மல்க,அதற்கு அந்த முரட்டுச் சாமி என்னிடம்,"நீங்க ஜோதி தெரியாம தவிக்கறதைப் பார்த்தபோது எனக்குள் தூக்கு என்று ஒரு யோசனை, உடனே நான் தூக்கி விட்டேன், தப்பா எடுத்துக்காதிங்க" என்றார். நான் சாமி "ரொம்ப நன்றி சாமி என்று கூறிவிட்டு, நீங்க எங்க தங்கிருக்கீங்க, எந்த ஊரு என்று கேட்டு," நான் பின்னால் திரும்பினேன், அங்கு யாரும் இல்லை . நான் குழப்பத்துடன் சரி அவர் போய் இருப்பார் என்று முடிவு செய்து நாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்க்கு வந்தேன்.


என்னை எழுப்பி விட்ட சாமி, என்ன சாமி ஜோதி பார்த்தீர்களா என்றார். நான் நடந்தைக் கூற, அவர் "ஏன் சாமி நான் இங்க இருக்க பம்பையாற்றில் இறங்கி பாருங்கன்னு சொன்னால், நீங்க ஏன் பம்பைக்கு ஓடினீர்கள்" என்று சொல்லி, "ஒன்னு உங்களுக்குத் தெரியனும், இல்லை தெரிஞ்சவங்க சொன்னாக் கேக்கனும்"என்றார். "சரி விடுங்க அய்யப்பன் புண்ணியத்தில் ஒரு முறையாவது பார்த்திங்களே" என்றார். நானும் அடுத்த முறை, அண்ணா சொன்னாக் கேட்டுக்கனும் என்று முடிவு செய்து, அவனுடன் சென்று, மூன்று முறையும் நல்ல ஜோதி தரிசனம் செய்து, திரும்பி வரும் போதுதான், சொல் பேச்சுக் கேக்காம இப்படிக் காட்டிற்க்குள் மாட்டினேன். அதனால என்ன நம்ம தன்னிச்சையா செயல் பட்டதாலதான இப்படி இரண்டு அனுபவங்கள் கிடைத்தன. ஆனா இப்ப எல்லாம் குருசாமி," சாமி" எனபதற்க்குள் நான் சொல்லுங்க சாமின்னு நிற்க ஆரம்பித்து விடுவேன். அவர் வார்த்தைத் தாண்டிப் போவது இல்லை.
போனாலும் என்ன நம்ம அய்யப்ஸ் இருக்கார். அவருக்கு இதை விட்ட வேற வேலை என்ன? சரிங்களா!. நன்றி. .... அடுத்து நாம் சபரி மலைக்குப் போவேம்.. தொடரும்.


டிஸ்கி : நாங்கள் ஜோதி பார்க்க யாத்திரை செல்லும் போது, பம்பை, சன்னிதானம் என எல்லா இடமும் கூட்டம் இருக்கும் ஆதலால், நாங்கள் பெரியானை வட்டத்தில் தங்கி 14ஆம் தேதி ஜோதி தரிசனம் செய்து 15(பொங்கல்) அன்று பம்பா விளக்கு, பம்பா சக்தி பூஜை செய்து அன்று மாலை சன்னிதானம் அடைவது வழக்கம். ஜோதி தெரியும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நாலு மணியளவில் பெரிய பாதையை மிருங்களுக்காக அடைத்துருக்கும் மந்திரக் கட்டை நீக்கி விடுவார்கள். பின்னர் காளை கட்டி,அழுதா,கரிமலை உச்சி போன்ற இடங்களில் வெடி வழிபாடும், மைக் சவுண்ட் சர்வீஸும் நிறுத்தி விடுவார்கள். ஒரு மாதமாக இந்த தொல்லையினால் காட்டில் உள் சென்று இருக்கும் மிருங்கள் இப்போது சுதந்திரமாக மனித மிருங்கங்கள் தொல்லை இல்லாமல் உலா வரும். அப்போது அந்த பாதையில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடையில் மீதம் உள்ள உப்பைத் தூவிவிட்டு, அவர்கள் விறகுக்காக வெட்டிய மர முட்டிகளை எறிய வைத்து விட்டு வருவார்கள். புகையும் அந்த முட்டிகளின் சாம்பலும், தூவிய உப்பும் யானைகளுக்கு மிகவும் பிரியமாம். இதை தின்று விட்டு தண்ணீர் தாகத்துடன், சுதந்திர ஆசையுடம் கும்மாளமிட்டு வரும் யானைக்கூட்டம் போடும் சத்தமும், பிளிறலும் கேக்க திரில்லாகவும், பயமாகவும் இருக்கும். அவை பம்பையாற்றில் இறங்கி நீர் குடிப்பதுடன், நாங்கள் படுத்து இருக்கும் பெரியானை வட்டம் வரை வந்து கரைஏறும். அப்போது அங்கு கரை ஓரமாக தங்கி இருப்பவர்கள் பட்டாசு மற்றும் தகர டப்பா சத்தம் எழுப்பி விரட்டுவார்கள். நான் கொஞ்சம் தள்ளி இருப்பதாலும்,என்னை சுற்றி பத்தாயிரத்துக்கும் அதிகமாக சாமிகள் இருப்பதாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்கி விடுவேன். இதனால் தான் நான் காட்டில் மாட்டிய போது அவசரமாக ஓடி வந்து எங்கள் குழுவினருடன் இணைந்தேன். நன்றி.

8 comments:

  1. தொடருங்கள் நாங்களும் தெரியாத பலதை தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறோம்

    ReplyDelete
  2. சாமி மலைப் பயணத்திற்கு வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  3. சுவாராஸ்யமா இருக்கு அண்ணா...

    ReplyDelete
  4. //அந்த அய்யனின் காவல் தெய்வம் கருப்பு சாமிதான் என்னைக் காப்பாத்தினார் என்பதைத் தவிர வேறு என்ன சிந்திக்க முடியும்.//

    அதேதான் அண்ணா.... சாமி சரணம்.

    ஜோதிய பார்த்ததும் என்னையறியாம வணங்கின கைகள்.... நன்றி அண்ணா.

    ReplyDelete
  5. எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஆனாலும் உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் தரும் ஊக்கம் தான் என்னை இடுகையிட வைக்கும் விருதுகள். நன்றி.

    ReplyDelete
  6. தோழமையே இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
    http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

    ReplyDelete
  7. உங்கள் பயணம் சுவாரசியமாக இருக்கிறது.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.