Friday, January 29, 2010

கடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி

யார் கடவுள்? அவர் கறுப்பா சிவப்பா? திராவிடனா, ஆரியனா? நெட்டையா,குட்டையா? எப்படி இருப்பார். எங்கு இருப்பார் என்பது அனைவரும் அறியா ஒன்று. அவரவர்கள் வழியில் அவரவர்கள் கடவுளை உருவாக்கி, அதற்க்கு பேரும்,ஊரும் தந்து,இருக்க இடமும் தந்து, அவருக்கு ஒரு பிளாஸ் பேக் கதையும் சொல்லி,வழிபாட்டு முறைகளையும் உருவாக்கினார்கள். இது எல்லாம் நம் முன்னேர்களாலும், பெரியேர்களாலும், நம்மை நல்வழிப்படுத்தவும், முறையான, ஒழுக்கமான வாழ்வுக்கும், மன அமைதிக்கும் வழிகாட்டுவையாக உருவாக்கினார்கள். அனால் இது போன்ற முன்னேர்கள் உருவாக்கிய அனைத்தும், அதன் தத்துவங்களை புரிந்து கொள்ளாமல்,அதன் ஆழத்தை அல்லது உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் வெறும் சாரத்தை அல்லது சம்பிரதாயத்தை மட்டும் இன்று பிடித்துக் கொண்டு கொண்டாடுகின்றார்கள்.இதுக்கு ஒரு குட்டி கதை சொல்லலாம்.

ஒரு ஜென் ஞானி தன் சிஷ்யர்களுடன் தினமும் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.அவர் ஒரு பூனை வளர்த்து வந்தார்.அது தியானம் செய்யும் போது மடியில் ஏறி விளையாடி, தியானத்தைக் கலைக்கும். ஆதலால் ஞானி தினமும் தியானம் செய்யும் போது, அந்தப் பூனையை கம்பத்தில் கட்டி வைத்து விட்டு தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். ஒரு நாள் ஜென் ஞானியும், பூனையும் இறந்து விட்டார்கள். அப்போது மூத்த சிஷ்யனின் தலைமையில் தியானம் செய்ய தொடங்கினார்கள். அப்போது அவர் சொன்னார், "தியானம் செய்யும் முன்னர் ஒரு பூனையைப் பிடித்து கம்பத்தில் கட்ட வேண்டும்,போய் ஒரு பூனை பிடித்து வாருங்கள்" என்று. இப்படித்தான் ஒரு சவுகரியத்துக்காக செய்த விசயம் சம்பிரதாயமாக மாறிவிட்டது. நம்ம ஆளுக பூனையை கம்பத்தில் கட்டுவதைக் கூட ஒரு கதை சொல்லி, அதைக் கட்டுவதுக்கு டேக்கன் போட்டுக் காசு பார்த்து விடுவார்கள். நாம் கடைப்பிடிக்கும் வழக்கம் எல்லாம் இது போலத்தான். முன் காலத்தில் பொங்கலின் போது வீட்டை அலங்கரிக்க மஞ்சள் மலர்களையும்,இலைகளையும் வைத்த வழக்கம், இப்போது காப்பு கட்டுதல் சம்பிரதாயமாக மாறிவிட்டது.

கடவுள் என்ற பெயரிலேயே நாம் உட்பொருளை அறிய முடியும். கட வுள் அதாவது உள் மறைந்து இருப்பவன் என்று அர்த்தம். அதாவது நம்முள் மறைந்து இருப்பவன். கடவுள் இங்கும், அங்கும்,எங்கும் வியாபித்து,உருவாய்,அருவாய்,திருவாய் ஆக எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கும் சக்திதான் கடவுள். இந்த பிரபஞ்சம் முழுதும் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சக்திதான் கடவுள்.உயிர் சக்தி,உணவு சக்தி,மூல சக்திஎன்று நம்முள்ளும்,ஈர்ப்பு சக்தி,மின் காந்த சக்தி என்று பிரபஞ்சத்திலும் எல்லாம் சக்தி மயம். பிரானன் என்னும் சக்தி இருந்தால்தான் மனிதன் இல்லை என்றால் பிணம், அது போல கடவுளும் சக்தி இருந்தால் தான் கடவுள், இல்லை என்றால் கல்தான். இந்த சக்தியை முறைப் படுத்தி ஓர் இடத்தில் குவித்து, நம்முள் குவிக்கும் ஆன்மீக சக்தி மையம் தான் கோவில். பிரபஞ்ச சக்தியை உள் இழுத்து வாங்கி தன்னுள் பெருக்கி, நமக்கு அளிக்கும் இடம்தான் கோவில். அது போல சக்திகளை வசிகரிக்க செய்ய முறைப்படி உருவாக்கிய சம்பிரதாயம் தான் கோவில் கட்டுமான சாஸ்த்திரங்களும் கோபுரங்களும். நாம் கோவிலாகக் கட்டுவேம்.அதே முக்கோண பரிணாமத்தை எகிப்தியர்கள் பிரமீடாய் கட்டினார்கள். இது மட்டும் இல்லாமல் மக்கள் கூட்டமாய் வழிபடும்(பள்ளிவாசல்,தேவாலயங்கள்) பஜன், மற்றும் தியானம் செய்யும் இடங்களும் சக்தி மையங்களே. ஏன் என்றால் எண்ணற்ற மனிதர்களின் எண்ண அலைகள் அங்கும் ஒரு சக்தி மையத்தை உருவாக்கின்றன.

இப்படி கோவிலைக் கட்டிய மனிதன், பின்னால் அந்தக் கோவிலில் ஒரு சக்திக்கு உருவகமும் கொடுத்தார். அதுதான் கடவுள் சிலை. இந்த சிலை சக்தி மண்டலத்தினுள் இருக்கும் சக்தியை தன்னுள் கிரகித்து வெளிப்படுத்துவதால், நாம் பிரார்த்தனைகள் மூலம் அவரில் இருந்து சக்தியை நாம் கிரகிக்கின்றேம். கருட கம்பமும், மூல ஸ்தானம் மட்டுமே சக்தி மையங்கள். ஏன் என்றால் கருட கம்பம் அடியில் மணிகளும்,பென்னும் போட்டு சக்தியை கிரகிக்கும். மூல ஸ்தானம் முக்கோண கோபுரத்தின் அடியில் இருப்பதால் அங்கும் பெரும் சக்தி கிரகிகப் பட்டுச் சக்தி மையமாக இருக்கும். இந்த இரண்டு இடங்களிலும் சக்தி அலை அல்லது வைபரேஷன் அதிகமா இருக்கும். ஆனால் தஞ்சையில் இருக்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நுழையும் போதே நமது மனம் வைபரேஷனை உணரத் தொடங்கும். இவை சக்தி வாய்ந்த கோவில்கள் என்று அழைக்கப் படும்.மன்னர்கள் தங்கள் வெற்றிகளைக் காட்டவும்,தங்கள் வளத்தைக் காட்டவும் பிரமாண்டமாய்,அடம்பரமாய்க் கட்டிய கோவில்களில் இந்த சக்தி மையம் இருக்காது அல்லது அந்த பிரமாண்ட பிரமிப்பில் நம்மால் உணர முடியாது.உதாரனம் தஞ்சை பெரிய கோவில்.அங்கு நான் பிரமாதமாய் ஒரு சக்தியும் உணரவில்லை.

இப்படி சக்தி மையமாக மன அமைதிக்காக உருவாக்கப் பட்ட கோவில்கள் பின்னாளில் சமுதாய முக்கிய அம்சமாக மாறி, இந்நாளில் வியபார தலங்களாக மாறியது. இதிலும் அதன் தத்துவத்தை உணராமல் சாரத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, வெறும் வழிபாடு இடமாகவும்,கொடுக்கல் வாங்கல் வியபார ஸ்தலமாகவும் மாறிப் போனது கொடுமை. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து அடுத்து கடவுள் எப்படி உருவானார். கோவில்கள் எப்படி கெட்டன என்பதையும் பார்ப்போம். நன்றி.

டிஸ்கி: நான் இதுதான் கடவுள் என்றோ அல்லது இப்படித்தான் வந்தது என்றோ சொல்ல வரவில்லை. இதுதான் கடவுள், இப்படித்தான் வந்துருக்கலாம் என்ற எனது கருத்துக்களை சொல்கின்றேன் அவ்வளவுதான்.மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் கூறவும் ஏற்றுக் கொள்பவையாக இருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்கின்றேன். கடவுள் இருக்காரா எங்க காட்டு, இப்பக் காட்டு என்பது போன்ற வறட்டு வாதங்களைத் தயவு செய்து தவிர்க்கவும். நன்றி.

12 comments:

  1. ஆகா முதல் ஆளா நான் கருத்தை சொல்லிவிடுகிறேன் . நீங்க சொல்றது மிகவும் சரி மாரியம்மன் கோவிலுக்குள் செல்லும் போதே ஒரு வைபிரேஸன் இருக்கும் ,ஆனால் பெரிய கோவில் ஒரு பிக்னிக் ஸ்பாட் மாதிரி தான் போக தோனும் அதன் கட்டட களையை ரசிக்க தோன்றும் ஆனால் கரூரார் சன்னதியில் ஒரு வைபிரேஸன் உண்டாகும் இது என் அனுபவம் .ஆக நீங்க எங்க ஊரையும் விட்டு வைக்கலை.

    ReplyDelete
  2. நல்லதொரு ஆராய்ச்சி. பல விசயங்கள் அறிய ஆவல், தொடருங்கள்.

    ReplyDelete
  3. மாவு கொஞ்சம் பழசா தெரியுது!
    உங்ககிட்ட புதுசா எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  4. நல்லதொரு ஆராய்ச்சி.

    ReplyDelete
  5. உங்கள் ஆய்வு வரவேற்க தக்கதுதான், ஆனால் இதோ ஒரு மகான் மார்தட்டுகிறார், மாட்டிக் கொள்ளாதீர்.

    “நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுத்திவந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரமேதடா..”

    பாதியை தோண்டி இருக்கிறீர்கள் மீதியை தோண்டுங்கள் பார்ப்போம்.

    ReplyDelete
  6. அதன் தத்துவத்தை உணராமல் சாரத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, வெறும் வழிபாடு இடமாகவும்,கொடுக்கல் வாங்கல் வியபார ஸ்தலமாகவும் மாறிப் போனது கொடுமை.

    உண்மை தான். நல்ல பதிவு. முழுவதும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம் அண்ணா..

    ReplyDelete
  7. உள்ளிருக்க புறம் தேட கிடைக்காதது...அது நீ, நீங்கள், நான், நாம் :-)

    ReplyDelete
  8. Hi Piththan
    A good blog on temples and gods. Keep it up.
    Ashwinji
    www.vedantavaibhavam.blogspot.com
    www.frutarians.blogspot.com

    ReplyDelete
  9. நன்றி சாருஸ்ரீராஜ், இது எனக்குத் தோன்றிய கருத்துக்கள் உண்மைதான் எனபதை உறுதிப் படுத்தும் விதமாக அமைந்தது.
    நன்றி இராதாக்கிருஷ்னன் அவர்களே,தங்களின் முதல் வரவுக்கும்,பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
    நன்றி வால்ஸ், உண்மைதான் இது பலரும் அரைச்ச மாவுதான்,நான் என் சிந்தனைகளை அரைக்கின்றேன்.
    நன்றி மேனகாசத்தியா
    நன்றி கேசவன்,உங்களின் ஆதரவுடன் தோண்டுகின்றேன்.
    நன்றி சுவையான சுவை,
    நன்றி திவ்யாஹரி, எனது திருக்கோவில் தரிசன முறை தொடரைப் படிக்கவும்.
    நன்றி சிங்ககுட்டி,உண்மையில் நாமே யாதுமாகி இருக்கின்றேம்.
    வாங்க அஸ்வின்,ரொம்ப நாளைக்கி அப்புறம் என் பிளாக் பக்கம் வருகின்றீர்கள். உங்கள் பிலாக்கில் பின்னூட்டம் இடமுடியவில்லை.சரி பார்க்கவும். நன்றி.

    ReplyDelete
  10. நல்ல அருமையாக சொல்லிட்டிங்க.

    ReplyDelete
  11. ஏன் நிறையா பின்னூட்டத்தை காணோம்!?

    ReplyDelete
  12. இந்த‌ அதிர்வு ப‌ற்றி -‍‍ இதை ப‌ல‌ கோவில்க‌ளில் நான் உண‌ர்ந்த‌தே இல்லை ஆனால் சில‌ இட‌ங்க‌ளில் என்னை அறியாம‌லேயே நான் point blank Empty ஆன‌தை உண‌ர்ந்திருக்கேன்,அது தான் அதிர்வா என்று தெரியாது.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.